Wednesday, June 16, 2021

கவனம் செலுத்தப்பட வேண்டியது பொருளாதார மீட்சியில், LGBT மறுவாழ்வில் அல்ல!

 மலேசிய சோசலிசக் கட்சி ஊடக அறிக்கை - 15 ஜூன் 2021 


கடந்த ஜூன்-12, 2021 அன்று Kaukus Kesejahteraan Rakyat Dewan Negara டத்தோ ரசாலி இட்ரிஸ் அவர்கள் அகனள் (Lesbian), அகனன் (Gay), ஈரர் அல்லது இருபால் (Bisexual) மற்றும் திருனர் (Transgender) ஆகிய மாற்று பாலின இயல்புகளைக் கொண்ட மக்களுக்காக சிறப்பு தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை உருவாக்குதல் வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) வன்மையாக கண்டிக்கிறது. 

மேல் குறிப்பிடப்பட்ட கோரிக்கையானது வயது குறைந்த இளைஞர்கள் மீதான பாலியல் சீண்டல்கள் உட்படுத்திய செயல்களில் ஈடுபட்ட தொழில்முனைவோர் (திருநங்கையர்) இருவரை அடிப்படையாக கொண்டு எழுந்ததாகும். இதில் தொடர்புடைய அந்த இரண்டு தொழில் முனைவோர் ஏற்கனவே போலீஸ் விசாரணையில் உள்ளனர். வயது குறைந்த சிறார்கள் மீதான எந்த வித பாலியல் சீண்டல்களுக்கும் மலேசிய சோசலிசக் கட்சி எதிரானதே. 

இருப்பினும், ஒரு சில தனி நபர்களின் செயல்களை மேற்கோள் காட்டி அரசியல் ஆக்க முயலும் டத்தோ ரசாலி இட்ரிஸின் இந்த கோரிக்கையானது மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் 5, 8 மற்றும் 10-ஆம் விதிகளுக்கு எதிரானது. அதாவது, மலேசிய அரசியலமைப்பு சட்டமானது அனைவருக்குமான உரிமை உண்டு என்கிறது. சமாதானமாக வாழ்வதற்கும், பாகுபாடின்றி சமமாக நடத்தப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதே போல் கருத்து  சுதந்திரம், தன்னை வெளிப்படுத்தும் உரிமை என்பது உள்ளிட்ட பல அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்கிறது. இத்தகைய முன்மொழிவுகள்  அந்த அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைகின்றது.

இது தவிர, மாற்று பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT) மக்களுக்கு சிறப்பு மறுவாழ்வு மையம் மற்றும் மாற்று சிகிச்சை செய்வதற்கான முன்மொழிவையும் பி.எஸ்.எம் கண்டிக்கின்றது. எல்.ஜி.பி.டி சமூகத்தின் மீதான மறுவாழ்வு திட்டம் பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இதனை மேலும் விரிவாக உலக மனநல சம்மேலனம் (WPA) மாற்று பாலின இயல்புகளைக் கொண்ட மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பதனால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

மேலும், நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எல்.ஜி.பி.டி சமூகத்திற்கான புனர்வாழ்வு திட்டங்களில் 940 பேர் கலந்து கொண்டனர். இதில் 98% மக்கள் தாங்கள் பல இன்னல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தவிர, புனர்வாழ்வு செயல்முறைகளுக்குள் உட்படுத்தப்பட்டவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், அவர்களில் பெரும்பாலோர் சம்பந்தப்பட்ட திட்டத்தின் போதும் அதற்குப் பிறகும், தற்கொலை முயற்சிகள், மனச்சோர்வு, பதட்டம் போன்ற பாதகமான விளைவுகளை அனுபவித்து இருப்பதாகவும் கூறினார்.

இந்த கோரிக்கை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது ஏற்கனவே ஆபத்தான சூழ்நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் உருவாக்க வல்லது .

தற்போதைய இக்கட்டான இந்த காலச்சூழலில் Kaukus Kesejahteraan Rakyat Dewan Negara பொறுப்பு வகிக்கும் டத்தோ ரசாலி இட்ரிஸ், , Kaukus Kesejahteraan Rakyat Dewan Negara- வின் வேலையை சிதைப்பதற்கு பதிலாக மலேசியாவில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் வேலை இழந்த மக்களுக்கு உதவ பொருளாதார மீட்பு, பாதுகாப்பற்ற ஏழைகளை கவனிக்கும் திட்டங்கள் மற்றும் உதவி, தடுப்பூசிகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் போன்றவற்றை களைவதில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும்.

மேலவையின்  பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் எல்.ஜி.பி.டி என்னும் மாற்று பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும் புரிந்து கொள்ள அவர்களின் பிரதிநிதிகளுடன் நிகழ்ச்சிகள் மற்றும் உரையாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். போதிய புரிதலுடன் எல்.ஜி.பி.டி சமூகத்திற்கு மறுவாழ்வு அளிப்பதை விட சம உரிமைகள் அளிப்பதே மிகவும் தேவை.

CHONG YEE SHAN 

பாலின பணியகம், (Biro Gender Parti Sosialis Malaysia)

மலேசிய சோசலிசக் கட்சி

(தமிழில் பிரிவின் குமார்)

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...