Wednesday, September 9, 2020

சொந்த வீடு வாங்கும் கனவு, கனவாகவே போய்விடுமா?


பாட்டாளிகளின் வாழ்வியல் முன்னேற்றம் என்பது அன்றாடங்காட்சியாகவே ஆகிவிடுமோ என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு இன்றும் நிலைமை இருப்பது வருத்ததை ஏற்படுத்துகிறது. நாட்டில் பல தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கேமரன்மலை விவசாயிகளும் சொந்த வீடு வாங்க முடியாத அவர்களின் பிரச்னையை தொடர்ந்து பேசி வருகின்றன.

காலகாலமாக விவசாயிகளாக இருக்கும் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கும் கனவு இதுவரை நிறைவேறாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினர். பாமர மக்களான இந்த விவசாய பாட்டாளிகள் பலர் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கலின் பொருளாதார நிலை அவர்களை ஒரு சொந்த வீடு வாங்குவதற்கு வசதியளிக்கவில்லை.

கேமரன்மலையில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதால் சாதாரணமாக ஒரு பாட்டாளியால் வீடு வாங்கமுடியாமல் இருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அப்போதைய மாநில அரசாங்கம் மலிவு விலை வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. குறைந்த வருமானம் கொண்ட அவர்களுக்கு வசதியாக குறைந்த அளவில் வாடகையை நிர்ணயித்து 30 ஆண்டுகளுக்குப் பின் அவ்வீட்டை வாங்கவும் சலுகையளித்தது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக கேமரன் மலையில் பாட்டாளிகளுக்காக மலிவு விலை வீடுகள் கட்டப்படவில்லை. கேமரன்மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் மக்கள் இருக்கின்றனர். அவர்களால் சொந்த வீடு வாங்குவது ஒரு கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவு கனவாகவே ஆகிவிடுமோ என விவசாயப் பாட்டாளிகள் அச்சம் கொள்கின்றனர்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி பி.எஸ்.எம் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், மனித உரிமை ஆணையமான சுவாராமைச் சேர்ந்த சுரேஸ் குமார் ஆகியோரின்  உதவியுடன்,  புத்ராஜெயாவிலுள்ள தேசிய வீடமைப்பு இலாகாவின் இயக்குநர் ஜெயசீலனை கேமரன்மலை பாட்டாளிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தினர். 1,500 வெள்ளிக்கு குறைவான மாதச் சம்பளம் பெறும் கேமரன்மலை விவசாயிகளுக்கு பிபிஆர் மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

உணவுக்கு ஆதாரமாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வியல் போராட்டம் வளர்ந்த நாடு என சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில் மிக மோசமாக போய்கொண்டிருப்பது வருத்ததிற்குறிய ஒன்றாகும்.

        


சொக்சோவை எதிர்த்து, தொடுத்த வழக்கில் வளர்மதி வெற்றி பெற்றார்.

 


தொடர்ந்து இரு வருடங்களாக நடந்த துப்புரவு தொழிலாளரான வளர்மதி மற்றும் சொக்சோ வாரியத்திற்கு எதிரான வழக்கு கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு வளர்மதிக்கு சாதகமாக அமைந்தது.   

தொழிலாளர் நலனை காக்க வேண்டிய சொக்சோ  வாரியமே தொழிலாளர் ஒருவரின் பாதுகாப்பு உரிமையை மறுத்திருந்தது. அதோடு அவருக்கு கிடைக்க வேண்டிய ஊக்க தொகையையும் அது மறுத்திருந்தது.  

அதை எதிர்த்து வளர்மதி சொக்சோ வாரியத்தின் மீது வழக்கு தொடக்க எண்ணியிருந்தார். வளர்மதியின் அவ்வழக்கை பி.எஸ்.எம் முன்னெடுத்து சென்றது. நியாயமாக வளர்மதிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சொக்சோ பாதுகாப்பு நிதி சொக்சோ வாரியத்தின் வெளிப்படையற்ற சட்டத்திட்டத்தால் அது புறக்கணிக்கப்பட்டிருந்தது.



வளர்மதி வழக்கின் ஒரு முன்னோட்டம்....

துன் உசேன் ஓன் 1, தேசியப்பள்ளியில் துப்பரவுப் பணியாளரான 47 வயது அடங்கிய வளர்மதி ஷா இன்டெகிரிட்டி ரெசோர்செஷ் நிறுவனத்தின் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20-ஆம் தேதி முதல் பணியை தொடங்கியுள்ளார். அவருக்கு அப்பள்ளியில் கழிப்பறை சுத்தம் செய்தல், மேசை-நாற்காலியை அடுக்குதல் மற்றும் பூச்செடிகளை பராமறித்தம், பள்ளியைச் சுற்றிலும் துப்புரவு செய்தல் போன்ற பணிகள் வழக்கமானதாகும்.  .

கடந்த 12.07.2018 ஆம் தேதி,  வழக்கமான பணிகளுக்கு பின்னர் மாலை மணி 4.30 மணி அளவில் வேலை முடிந்து வீடு திரும்புகையில் வளர்மதி விபத்துக்குள்ளானார். வழக்கமாய் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தனது சக பணியாளரான திருமதி.ஜெயாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு திரும்புவது வளர்மதியின் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்தின் காரணியமாய் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வளர்மதி 5 நாள்கல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் அவருக்கு 17.12.2018 வரை மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவரது மருத்துவ விடுப்பையும்  பொறுப்படுத்தாமல் வளர்மதி வேலை செய்த நிறுவனம் துளியும் மனிதாபிமானம் இன்றி வளர்மதியை பணி நீக்கம் செய்தது.

தன்னை வேலையிலிருந்து நீக்கியது சட்டத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்த வளர்மதி தனது வேலை நீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.  தாம் விபத்தில் சிக்கியபோது அது வேலை நேரத்தை சார்ந்ததுதான் என்று அவர் வாதிட்டார்.

ஒரு தொழிலாளி வேலைக்கு வரும் போதும் வேலை முடிந்து செல்லும் போதும் அவருக்கு ஏற்படும் விபத்து அல்லது இதர பாதிப்புகள் சொக்சோ பாதுகாப்புக்கு உட்பட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் வேலை முடிந்து செல்லும் போது ஏற்பட்ட விபத்துக்கு சொக்சோ பாதுகாப்பு அளிக்காது என 18.10.2018 இல் வளர்மதியின் விண்ணப்பத்தை சொக்சோ நிராகரித்தது. தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதன்மீது 17.12.2018 இல் வளர்மதி மேல்முறையீடு செய்தார். அதன் விசாரணை 22.03.2019 இல் நடைபெற்று  கடந்த 04.10.2019 இல் வளர்மதியின் விண்ணப்பத்தை சொக்சோ நிராகரிப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.

வளர்மதியின் வருமானம் மாதம் வெறும் வெ.1100 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் வளர்மதி வீடு திரும்பும் போதும் தனது சக பணியாளரை வீட்டில் விடுவது வழக்கமானது. அதற்காக அப்பணியாளர் வளர்மதிக்கு பெட்ரோல் செலவுக்கு மாதம் 50.00 வெள்ளி தருவார்.  இந்நிலையில்,வளர்மதியின் முதலாளி உட்பட இதர சாட்சியங்களும் ஒரே வாதத்தை முன் வைத்தனர். அதாவது  ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து தனது சக பணியாளரை வீட்டில் விட்டு சென்றதால்தான் விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் ஒருவரை வீட்டில் விடுவதற்காக 50 வெள்ளி பெறும் வளர்மதி அது ஒரு தனி வியாபாரமாக செய்கிறார் என்றும் நிர்வாகம் கூறியது. இக்காரணத்தை சுட்டிக்காட்டி வளர்மதி சொக்சோ இழப்பீட்டை பெற தகுதியற்றவராய் ஆகிறார் என சொக்சோ வாதிட்டது.

இறுதியாக பி.எஸ்.எம் கட்சியின் உதவியோடு வளர்மதி உயர்நீதி மன்றத்தில் கடந்த 12.12.2019 இல் வழக்கொன்றை பதிவு செய்தார். வளர்மதியின் தரப்பில் தன்னார்வளராக வாதாட அமெர் போன்னை (Amer Bon)  சார்ந்த  நியூ சின் யூ, பெட்ரிஷ் ஆகிய வழக்கறிஞர்கள் முன் வந்தனர்.  மாதம் வெ.1100 ரங்கிட்டைப்  பெறும் ஒரு தொழிலாளிக்கு எதிராக சொக்சோ,  காயா ஸ்க்ரின் நிறுவனத்தை இவ்வழக்கின் வழக்கறிஞர்களாக நியமித்தது. பி.எஸ்.எம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வளர்மதிக்காக களத்தில் நின்றது.



வளர்மதிக்கு சாதகமாக தீர்ப்பு

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி டத்தோ ஶ்ரீ மரியானா பிந்தி ஹஜி யாயா, வளர்மதிக்கு சாதகமாக வழங்கினார். மூன்று மாத அவசர கால உதவி நிதியை சொக்சோ வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.     

 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...