Friday, August 5, 2022


         மலேசிய சோசலிசக் கட்சி

            தேசியத் தலைவரின்

           24-வது  மாநாட்டு உரை



வணக்கம். 24-ஆம் பி.எஸ். எம் [PSM] காங்ரஸ்  கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இரண்டு ஆண்டுகளாக நாம் பி.எஸ். எம் [PSM] காங்கரஸ்  கூட்டத்தை நேரடியாக நடத்தாமல்  இயங்கலையில் நடத்தியதால் நம்மால் நேரடியாக   சந்திக்க முடியாமல் போனது.

நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலையில் கோவிட் தொற்று முழுமையாக குணமடையாத நிலையில் பாரமர மக்கள் உணவு பொருள்கள் தட்டுபாடு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தால் அவதிபட்டுக் கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் இரண்டு நாட்களில் இப்பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ந்து நல்ல தீர்வுகாண முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதலில் சில சர்வதேச நிகழ்வுகளைப் பற்றிய எனது கருத்துகளை தங்களிடம் பகிர்ந்துக் கொள்ள அனுமதி கேட்டுக்கொள்கிறேன்


 சர்வதேச நிலவரம்

கடந்த  24/2/2022 நாள் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான  போர் உலக பொருளாதார வீழ்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததை யாரும் மறுக்க முடியாது. இப்போரில் உயிர் சேதம்  [ இதுவரைக்கும் 8000தையும் தாண்டியுள்ளாதாக நம்மப்படுகிறது] மட்டுமில்லாமல் கட்டடம், தொழிற்சாலை மற்றும் உக்ரேனில் உள்ள பொருள் சேதங்கள் ‘நேட்டோவில் ‘ உறுப்பியம் பெற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. மேலும் இராசாயண அனுவாய்த தாக்குதலுக்கும் இப்போர் வழிவகுக்க வாய்ப்பிருக்கிறது.

 

மேலும், உக்ரேனின் போரினால் சில நாடுகள் உணவு தட்டுப்பாடு பிரச்சனையை எதிர் நோக்கியுள்ளது. உக்ரேனும் ரஷ்யாவும் உலகளவில் 30% கோதுமை சாகுபடியையும் 19% சோள சாகுபடியையும் செய்து வருகிறது. இப்போரினால் தாணிய ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டதால் சில நாடுகளில் உணவுப் பொருள்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டில் ஆஸ்ராலியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து1.6 லட்சம் டன் கோதுமையும் 3.8 லட்சம் டன் சோளம் கால்நடை பிராணிக்களின் உணவிற்காக இறக்குமதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்து கோதுமையும் சோளமும் குறைவாக இறக்குமதி செய்யப்படுவதால் இவ்விரண்டு தாணியங்கள் மட்டுமில்லாமல் அரிசியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கோதுமையின் விலை ஏற்றத்தால் பலர் அரிசியை அதிகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

 

உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரின் தாக்கம் உணவுப் பொருளில் மட்டுமில்லாமல் பெட்ரோல் எண்ணையிலும் உள்ளது. ஒரு நாளில் ரஷ்யா 11.5 லட்சம்  கலன் பெட்ரோல் அதாவது உலக பெட்ரோலியத்தில் 12% பெட்ரோல் வெளியீடு செய்கிறது. ரஷ்யா குறைவாக பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்வதால் எண்ணெய் விலை மட்டுமில்லாமல் போக்குவரத்து மற்றும் உரத்தின் விலையிலும் ஏற்றம் காண வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்சனைகள் வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் நம் நாட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பாமரமக்களையும் பெரிதும் பாதிக்க வாய்ப்புண்டு.

 

 

அமெரிக்காவின் கொடூர தன்மை

 

 

நவீன ஆயுதங்களைத் தயாரித்து வெளியிடும் தரப்பினரான ரஷ்யா, சீனா, ஈரான், கூபா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் அமெரிக்காவால் ஈர்க்கப்படுகின்றனர். ஏய்சென் ஓவர் அதிபர் 1060ஆம் ஆண்டு தனது பணிஓய்வு விழாவில் அமெரிக்கா மக்களை  நவீன ஆயுதங்களை வெளியிடும் தரப்பினர்என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் எச்சரிக்கை தற்பொழுது நிஜமாகி இருக்கிறது. Industrial-military complex (IMC) தனது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஒரு சந்தை தேவைப்படுகிறது. உலக நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டால் அதில் இலாபம் அடைவது IMC தான். இவ்வேளையில் உக்ரேன் போர் IMC க்கு அதிக இலாபம் அடைந்தது. இப்போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியன் யூனியன் IMC இடமிருந்து ஆயுதங்களை வாங்கியதோடு மட்டுமில்லாமல் எல்லைகளைக் கடப்பதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன.

 

வெளி நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்க இராணுவத்தைப் பயன்படுத்துவது அமெரிக்காவின் வழக்கமாக இருந்தது. இருப்பினும் அமெரிக்கா அதிபர் George Bush ,  Gorbachev க்கு இராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று வாக்கு கொடுத்த போதும் 1990 இல் இருந்து இம்முறையையே நாட்டோ [NATO] உம் பின்பற்றி தனது சாம்ராஜ்யத்தை ரஷ்யா எல்லை வரை நீட்டியது. இராணுவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவின் போக்கு உக்ரேனில் அமைதி நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான உக்ரெனிய மக்களையும் பலிகொண்டது.

 

 

சீனா மீது முற்றுகை


 உலகளவில் நிகழும் மற்றுமொறு பிரச்சனையாக சீனா மீது அமெரிக்காவின் முற்றுகை கருதப்படுகிறது. சீனாவை முற்றுகை இடுவதற்கும் , பொருளாதார நெருக்குதல் ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா பல முயற்சிகள் செய்து வருகின்றது. சீனாவின் அதிகமான மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியும் அமெரிக்கா சீனாவை தனது போட்டியாக நினைக்க  வழிவகுக்கின்றன. இந்நிலையில் முன்னால் அதிபர் சீனாவின் மீது ஏற்படுத்திய பொருளாதார நெருக்குதல் தற்போதைய அதிபர் பைடன் காலத்திலும் தொடர்கிறது. மேலும் அமெரிக்காவின்  இராணுவ விமானங்கள் இன்னும் சீனக் கடலோரப் பகுதிகளில் பறந்துக்கொண்டிருக்கின்றன.

 

சர்வதேச பொருளாதார வீழ்ச்சி

வரும் மாதங்களில் உலகப் பொருளாதாரம் கடுமையான சரிவைச் எதிர்நோக்கும் வாய்ப்புக்கள் அதிகம். கோவிட் வருவதற்கு முன்பே, உலகப் பொருளாதாரம் மொத்த தேவையில் மந்தநிலையை எதிர்கொண்டது. பாரபட்சமான வருமானப் பங்கீடு காரணமாக, முதலாளிகள் சந்தையில் பரிவர்த்தனை செய்யும் பொருட்களை வாங்குவதற்குப் போதுமான பொருளாதாரம் சாதாரண மக்களிடம் இல்லை. இதுவே சந்தையில் மொத்த தேவையின்ஒட்டுமொத்த தேவைவீழ்ச்சியின் அர்த்தம், இதன் விளைவாக உழைக்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் விற்கப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை. எனவே முதலாளிகள் தங்கள் பணத்தை உற்பத்திப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதை விடநிதிசார்ந்த நடவடிக்கைகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஊக நடவடிக்கைகள் மூலம் உடனடி லாபம் சம்பாதிப்பதிலும், சொத்து விலைகள் உயர்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்..

 

சீனாவில் இன்னும் செயல்படுத்தப்படும் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுகள், அத்தோடு உக்ரைன் போர் மோதல்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போன்றவைகளால், பொருட்களின் விநியோகத்தில் தடைகளை ஏற்பட்டு உள்ளது (விநியோக சங்கிலி இடையூறுகள்). அதனால் பல வணிகர்கள் தங்கள் செயல்பாடுகளை குறைக்க அல்லது நிறுத்தியும் உள்ளனர். உதாரணமாக, கோழி தவிடு விலை உயரும் போது, கோழிகளைப் பராமரித்து வளர்க்கும் நிறுவனங்கள் விலைவாசி உயர்வுக்கும் அரசு விதித்துள்ள விலைக் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றன. எனவே கோழிகளை பராமரித்து வளர்க்கும் வரும் சில நிறுவனங்கள், தற்போதைக்கு கோழிகளின் விநியோகத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளானது சந்தையில் கோழிகளின் விலையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், கோழி உற்பத்தித் தொழிலின் வேலை வாய்ப்புகளையும் குறைக்கின்றது. இதேபோன்ற செயல்முறைகள் இன்னும் பலவிதமான பொருட்களின் விநியோகச் சங்கிலிகளில் நிகழும்போது, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.. 

 

உலகம் தற்போது "தேக்கநிலை"யை எதிர்கொண்டுள்ளது, பொருளாதாரம் உறையவும் தொடங்கி உள்ளது. சராசரி மொத்த தேவை மற்றும் வேலை வாய்ப்புகள் குறைவதால் "தேக்கநிலை" ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளால், பணவீக்கம் ஏற்பட்டு அடிப்படைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கம் போல், நிலையான பொருளாதாரங்கள் இல்லாத மார்ஹைன் மக்கள், மிகவும் மோசமான 'தேக்கநிலை' நெருக்கடியை எதிர்கொள்கிரார்கள். பணவீக்கம் அதிகரித்து உள்ளதால் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. 

மலேசியாவின் நிலைமை

உணவு விநியோக நெருக்கடி மலேசியாவை ஆட்கொண்டுள்ளது. சமையல் எண்ணெய், கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் இன்னும் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன -  மக்கள் கோபமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையை கையாள 3 அணுகுமுறைகளைப் பயன்படுத்த அரசாங்கம்  முயற்சிக்கின்றது..

 

கோழிகள் மற்றும் கோழி முட்டைகள் போன்ற சில உணவுப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலையை நிர்ணயிக்கும் நடைமுறை முதல் அணுகுமுறை. ஆனால் இந்த அணுகுமுறை உற்பத்தியாளர்களின் லாபத்தை குறைக்கலாம், குறைந்த லாபம் காரணமாக அவற்றை உற்பத்தி செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதும் குறையலாம். எடுத்துக்காட்டாக, கோழி - ஒரு கிலோகிராம் கோழி உற்பத்தியின் உண்மையான விலை (கோழித் தொழிற்சாலைகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 10% லாபம் உட்பட) RM 10.00 ஆக இருந்தால், விற்பனை உச்சவரம்பு விலை RM 8.90 ஆக இருந்தால், நிச்சயமாக அவர்கள் லாபத்தை இழக்கிறார்கள். ஆகவே கோழி விநியோக சங்கிலி சீர்குலையலாம். உச்சவரம்பு விலையை மீறி அதிக விலைக்கு விற்றால், வியாபாரிகள் அரசு அமலாக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம், எனவே தற்போதைக்கு கோழி வியாபாரத்தில் இருந்து ஒதுங்கியிருப்பது நல்லது.

 

கோழி தவிடு விலை உயர்வு, கோழிகளுக்கான மருந்து விலை மற்றும் பல பிரச்சனைகளை சமாளிக்க, அரசாங்கம் இரண்டாவது அணுகுமுறையை கடைபிடித்துள்ளது - அதாவது கோழி விநியோகஸ்தர்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் கோழிகளை பராமரித்து வளர்க்கும் செலவை ஈடுகட்ட உதவலாம். பிப்ரவரி 2022- ல்  அரசாங்கம் ஒரு கிலோ கோழிக்கு RM0.60 மானியம் வழங்கியது. ஆனால் பல கோழி வளர்ப்பவர்கள் கோழிகளைப் பராமரித்து வளர்ப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட இது போதுமானதாக இல்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

 

கோழி இறைச்சி விலை மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசை வற்புறுத்துபவர்களும் உண்டு. இந்த மானியம் உண்மையில் பணக்காரர்களால் அனுபவிக்கப்பட்டு அவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுடன் ஒப்பிடும்போது பணக்காரர்களே கோழியை தொடர்ந்து சாப்பிட முடியும் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இரண்டாவது தரப்பு கோழிகளின் உச்சவரம்பு விலையை கிலோ ஒன்றுக்கு RM10.00 ஆக அதிகரிக்க அனுமதிப்பதோடு கோழி மானியம் ஒரு கிலோவிற்கு RM 0.60 ஆக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். மேலும், மலேசிய குடும்ப உதவி பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தினசரி உணவின் அதிகரிப்பு செலவை ஈடுகட்ட, அடுத்த 6 மாதங்களுக்கு மாதத்திற்கு RM 200 கூடுதலாக வழங்கப்பட வேண்டும். விலையுயர்ந்த கோழிகளை வாங்குவதற்கோ அல்லது மற்ற உணவுப் பொருட்களை வாங்குவதற்கோ உதவித்தொகையைப் பயன்படுத்துவது என்பது அவரவர்களின் விருப்பம். 

 

அமைச்சின் தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை செயலைவைக்கு 5 மே 2022இல் பி.எஸ்.எம் சமர்ப்பித்த மனுவில் பி.எஸ்.எம் பரிந்துரைத்த மூன்றாவது அணுகுமுறை. மனுவில் எழுப்பப்பட்ட பிற கோரிக்கைகள்:– 

1.    நாட்டின் நில பயன்பாட்டு தேசியத் திட்டம்.

 இதுவரையில், மலேசிய நிலபரப்பில் 32.865 மில்லியன் ஹெக்டர், 55% காடுகள் நிலமாக அரசிதழிடப்பட்டுள்ளது (இருப்பினும் இதில் மூன்றில் இரண்டு பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன), 23% அல்லது 7.6 மில்லியன் ஹெக்டர் மலேசிய நிலப்பரப்பு விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் மீதமுள்ள 22% நிலப்பரப்பு நகரம், வீடமைப்பு, சாலை, கழிவுநீர் ஆலை போன்றவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் 7.6 ஹெக்டரில் 1.5 மில்லியன் ஹெக்டர் மட்டுமே நம் நாட்டு மக்களின் உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் நெல் பயிரிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 0.7 மில்லியன் ஹெக்டரும் அடக்கம். செம்பனை நடுவதற்காக் 5 மில்லியன் ஹெக்டரும் இரப்பர் மரம் நடுவதற்காக 1.1 மில்லியன் ஹெக்டரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய நில பயன்பாட்டு விகிதம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். காரணம் நமது உணவு கையிருப்பிற்கு ஆபத்தை விளைவிப்பது உக்ரைனில் நடைபெறும் போர் மட்டுமல்ல பருவநிலை மாற்றமும்தான். ஆகையால், காடுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் பராமரிக்கப்பட வேண்டுமென பி.எஸ். எம் (PSM) பரிந்துரைக்கிறது. ஆனால் செம்பனைக்கும் இரப்பருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளை நெல், சோளம், சோயா மற்றும் பல உணவு பொருள்கள் உற்பத்திக்கு மாற்றியமைக்க வேண்டும். தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலப்பகுதிகளில் குறைந்தது 10% விழுக்காட்டை நெல், சோளம் மற்றும் பிற உணவு பொருள்கள் பயிர் செய்வதற்கு பயன்படுத்த வேண்டுமென சட்டம் இயற்றப்பட வேண்டும். அவர் குறிப்பிட்ட ஒரு காலக்கெடுக்குள் அவ்வாறு செய்யத் தவறினால், அரசாங்கம் அவர்களின் உணவு உற்பத்திக்கேற்ற நிலங்களில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதை விவசாயிகளுக்குக் குத்தகை விடவேண்டும்.

 

 

2.    2. உள்நாட்டு உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.. 

 

நெல் விவசாயிகளுக்காக அரசாங்கம் கொடுக்கும்  உதவித்தொகைகளை பெர்னாஸ் மற்றும் உரம் நிறுவனங்களும் பறித்துக் கொள்வதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர்.

தற்போது மாநில அரசாங்கங்கள் காய்கறி விவசாயிகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அவர்களை விவசாய நிலங்களிலிருந்து விரட்டியடித்து அவ்விவசாயிகளால் உருவாக்கப்பட்ட நிலங்களை உடனடி இலாபத்திற்காக மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயன்று வருகின்றது. இதுவரையில், பேராக் மாநிலத்தில் பி.எஸ்.எம்  400 சிறு விவசாயிகளையும் 3000 ஏக்கர் காய்கறி தோட்ட நிலப்பரப்பையும் உட்படுத்தியுள்ள 12 விவசாய நிலங்களின் விவசாயிகளுக்கு  உதவிபுரிந்து வருகிறது. பேராக் மாநிலத்தில் அம்னோ அரசியல் கட்சியினர் நிலங்களை பெரும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்கின்றனர், ஆனால் இதன் வருமானத்தின் பெரும்பங்கு மாநில அரசாங்க நிதிக்குச் செல்வதில்லை!

பினாங்கு மாநிலத்திலும் சில இடங்களில் நடைபெரும் கடல் மணல் சுரண்டலினாலும் செயற்கைத் தீவு உருவாக்கத்தினாலும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். இந்நடவடிக்கை மீன்வளங்களையும் நம் மக்களுக்கான உணவையும் பாதிப்படையச் செய்கிறது.

கால்நடை (மாடு) வளர்ப்பவர்கள் நகர மேம்பாட்டினால் பாதிப்படைகின்றனர் அதோடு கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடுவதற்கான சிக்கலையும் எதிர்நோக்குகின்றனர். சைம் டார்பி (Sime Darby) கால்நடை வளர்ப்பவர்களைத் தனது ஆர்.எஸ்.பி. (RSPO) சான்றிதழ் பாதிக்கப்படுவதாகக் கூறி அதனது தோட்ட நிலங்களிலிருந்து விரட்டியடிக்க முயலுகிறது.

அனைத்துவகை உள்நாட்டு உணவு உற்பத்தியாளர்களும் எவ்வித சிக்கலும் தொந்தரவும் இல்லாமல் நம் மக்களுக்காண உணவுகளை உற்பத்தி செய்வதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உணவு உற்பத்தியாளர்கள் வலுகட்டாயமாக விரட்டியடிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உணவு உற்பத்திக்கு எதிர்மறை தாக்கத்தையளிக்கும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிறுத்தப்பட வேண்டும்.

 

3. இம்மனுவில் உணவு தேவையுள்ளவர்களுக்கான சமைக்கப்பட்ட உணவு தயாரிக்கும் சமையலறைகளை ஒவ்வொரு நகரங்களிலும் அரசு சார இயக்கங்களுடனும் மத குழுவினருடனும் சேர்ந்து உருவாக்கும்படியும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

இம்மனுவிற்கு 37 அரசு சாரா இயக்கங்களினாலும் சங்கத்தினாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 அரசு சாரா இயக்கங்கள் பி.எஸ்.எம் உடன் இணைந்து இந்த மனுவை வேளாண்மை அமைச்சிடம் ( தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை செயலவையின் செயலகமாகவும் விளங்குகிறது) 5/4/2022 ஆம் திகதி ஒப்படைத்தது. நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடல் செய்ய ஏற்ற ஒரு தேதியை விண்ணப்பித்து அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

 

 

இனங்களிடையேயான உறவி வீழ்ச்சி  

 

நம்பிக்கை கூட்டணியால் (பக்காதான் ஹாராப்பான்) முன்னிறுத்தப்பட்ட மறுமலர்ச்சி இயக்கம் (கெராக்கான் ரேபோர்மாசி)  முற்போக்கான அடையாளங்களுடைய ஒர் அரசியல் நகர்வாகும். ஏனென்றால் அது இன அடிப்படையிலான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, சமத்துவமான, இணக்கமான, ஊழலற்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகயிருந்தது. இந்த மறுமலர்ச்சி இயக்கம் மலேசிய அரசியல் பாதையில் ஒரு நேர்மறையான முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வளர்ச்சியாகும்.

. 

 

14- ஆவது தேர்தலில் தோல்வியடைந்தப் பிறகு, அம்னோ இன அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு, நம்பிக்கை கூட்டணி(பக்காதான் ஹாராப்பான்) மலாய் சமூகத்தினரின் தேவைகளைப் புறக்கணிக்கப்பதாகக் கூறி மலாய் மக்களிடையே பதற்றநிலையை உருவாக்கியது. நம்பிக்கை கூட்டணி (பக்காதான் ஹாராப்பான்)- பாஸ் செய்த தவறுகளும் அம்னோ கூறுவதையே உறுதி செய்தன. உதாரணமாக மீனவர் மற்றும் இரப்பர் தோட்ட தொழிலாளர்களின் உதவித் தொகையை ரத்து செய்தது, நெல் விவசாயிகளின் உதவித் தொகையைக் குறைத்தது, தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் பிரிம்(BRIM) உதவித்தொகையை நிறுத்தியது. நம்பிக்கை கூட்டணி மே 2018இல் அரசாங்கத்தைக் கைப்பற்றி வெறும் 22 மாதங்களிலேயே கவிழ்ந்ததற்கு மலாய் சமூகத்தினரின் நம்ம்பிக்கையை இழந்ததே மிக முக்கியக் காரணமாகும்.

 

நம்பிக்கை கூட்டணி(பக்காதான் ஹாராப்பான்) தலைவர்கள் இப்போது உதவித் தொகையைக் குறைத்தது தவறு எண்பதை உணர்கின்றனர். ஆனாலும் அவர்கள் மலேசிய நாட்டைப் புரிந்து கொள்வதில் முரண்பாடு இருக்கிறது. அதுதான் மலாய் ஆதரவாளர்களை நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகி நிற்கச் செய்கிறது என்பதை இதுவரை அவர்கள் உணரவேயில்லை. ‘மலேசியா மலேசியர்களுக்கேஎனும் ஜனநாயக செயல் கட்சியின்(DAP) முழக்க வார்த்தைகள் மலாய்காரர் அல்லாதவர்களுக்கு ஒரு முற்போக்கான முழக்கமாகும். அவர்களைப் பொறுத்தவரை, மலேசியாவைக் கட்டியெழுப்ப பல்வேறு இன மக்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டார்கள்/செயல்படுகிறார்கள் என்ற கருத்தை இது கொண்டு வருகிறது. ஆனால், அம்முழக்கதிற்குள் மறைந்திருக்கும் அர்த்தம்நாம் அனைவரும் வந்தேறிகள், நீங்கள்(மலாய்காரர்கள்) சுமத்ராவிலிருந்து வந்தவர்கள், நாங்கள்(இந்தியர்கள்/சீனர்கள்) இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வந்தோம். பழங்குடியினர் மட்டுமே மலேசிய நாட்டின் ஆதிமக்கள்என பொருள்படுகிறது.

 

நாம் அனைவரும் வந்தேறிகள்எனும் உள் அர்த்தத்தை மலாய்காரர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் பட்டானி முதல் கிழக்கு லெஸ்தே வரையிலான பகுதி மலாய் தீவுக்கூட்டம், மலாய்மொழி மலேசிய அதிகார மொழி, இஸ்லாம் கூட்டாட்சியின் மதம், அரச நிறுவனம் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் நிலைநிறுத்தப்படுதல் ஆகிய கருத்துகளுக்கு அது எதிரானது

 

ஆகையால், உதவித்தொகை இரத்து செய்தல்/குறைத்தல் மற்றும் மலேசியா எனும் கருத்துக்கு எதிரான கதைகள் போன்றவை மே 2018 இல் நம்மிக்கை கூட்டணியை  தரித்த மலாய் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 70% மக்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறச் செய்தது. மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

 

 

 

 

    

 

 

 

தொகுதி

 

மலாய் வாக்கா-ளர்கள்

 

2018-ல் பெற்ற வாக்குகள் (%)

 

  பி.என்.    பி.எச்.   பாஸ்

 

2021-ல் பெற்ற வாக்குகள் (%)

 

பி.என்.      பி.எச்.  பாஸ்

 

பி.எச். வாக்குகளில் மாற்றம்

N2. தஞ்சோங் பிடாரா

 

93.9%

 

  58.2   23.9    17.9

 

  49.1      6.75     44.111

 

– 17.15

N3. ஆயேர் லிமாவ்

 

91.3%

 

  51.6    35.4    13.0

 

  51.9      10.8    37.31

 

– 24.6

N11. சுங்கை ஊடாங்

 

79.7%

 

  56.2   43.8   

 

  40.2   13.1   43.71

 

– 30.7

N20.

கோத்தா லக்சமனா

 

16.9%

 

  16.2    81.7    

 

  12.12     80.8   7.13

 

– 0.9

N22.

பண்டார் ஹீலீர்

 

12.8%

 

  16.1    83.1   

 

  11.72     81.2   5.73

 

– 1.9

ஜி.. 2018 -உடன் ஒப்பிடுகையில், ​​மலாக்கா 2021 பி.ஆர்.என் -இல் பாரிசான் நேஷனல்,  பி.எச். & பெரிக்காத்தான் நேஷனல் பெற்ற வாக்குகள்

 

2018 பொதுத் தேர்தலுடன் (ஜி..) ஒப்பிடுகையில், 2021 மாநிலத் தேர்தலில் மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 17 % முதல் 30 வரையில் வாக்குகள் சரிந்துள்ளன. ஆனால், மற்ற இடங்களில் 1% முதல் 2 மட்டுமே குறைந்துள்ளன. 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பி.எச். மலாய் சமூகத்தின் ஆதரவைப் பெருமளவில் இழந்துள்ளதை இது காட்டுகிறது.

மக்கள் கூட்டணியிடம் மாற்றத்திற்கான சில சிறப்பு அம்சங்கள் இருந்தன, இருப்பினும், இனங்களுக்கிடையே ஏற்படும் சிக்கள்களை முறையாகக் கையாள பி.எச். தவறிவிட்டது. எதிர்காலத்தில் அரசாங்கத்தை நிர்வாகிக்க எண்ணம் இருந்தால் இடதுசாரிகளிடம் இப்பிரச்சனை தொடர்பான சரியான புரிதல் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ள தீவிர இன உணர்வு இயற்கையாக ஏற்பட்டதல்ல. அன்றைய காலனித்துவப் பிரித்தானியா மற்றும் மலாயா அரசாங்கங்கள், பாமர மக்களின் போரட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி அரசியல் கடசிகளை அழித்தொழித்ததும் இந்த இன உணர்வு வேறூன்றி வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம். சுதந்திரத்திற்கு பிறகு இன அடிப்படையிலான கட்சிகள் தலைமையேற்றன. 1960-ல், இன அடிப்படையிலான கூட்டணி கட்சிகள் (அம்னோ, மசீச & மஇகா) அரசாங்கம் அமைத்த பின்பு, சோசலிச முன்னணிகள் (பாட்டாளி கட்சி & மக்கள் கட்சி)  தொடர்ந்து இனவாதமற்ற சமூகப் பொருளாதார கட்டுபாடுகளை கொண்ட அரசியல் நீரோட்டத்தைத் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக முன்வைத்தன.





துரதிஷ்டவசமாக
சோசலிச முன்னணி உறுப்பினர்கள் இசா (ISA) சட்டத்தில் கைது செய்யப்பட்டதால், இனவாதத்திற்கு எதிரான அரசியல் அத்தியாயம் ஒரு முடிவுக்கு வந்தது. அந்த வெற்றிடத்தை, ஜசெக மற்றும் பாஸ் கட்சிகள் - ஆளும் கட்சிக்கு இணையாக - இன மற்றும் மத அரசியல் போராட்டக் களமாக மாற்றி அமைத்தன. இந்தச் சிந்தனை மக்கள் மத்தியில் இன்றுவரை ஆழமாகப் புகுத்தப்பட்டு வருகிறது.

 

பூமிபுத்ரா`க்கள் மத்தியில் `சமூக இயக்கம்` - பி.எஸ்.எம். கட்டி எழுப்ப வேண்டும்

 

எதிர்காலத்தில் மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆளுமை கொண்ட ஒரு முற்போக்கான இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றால், பல்லின மக்கள்  அணி உருவாக வேண்டும். மற்றவர்கள் மலாய் சமூக உழைக்கும் மக்கள் இடையே போராட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவார்கள் என்று நாம் காத்திருக்க முடியாது. மற்ற கட்சிகளுக்கு அந்த எண்ணமோ இலக்கோ இருப்பதாகத் தெரியவில்லை.



பூமிபுத்ரா அடித்தட்டு மக்களை அணி   திரட்டுவதற்கான நிலை உருவாகியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மலாய் சமூகத்தினரிடையே வர்க்க முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது. ஏழை மலாய்காரர்களின் மேம்பாட்டுக்குத் தொடங்கப்பட்ட திட்டங்கள், வணிகக் குத்தகையாளர்களாலும் அரசியல் உறவுகளை கொண்ட அம்னோ, பாஸ் மக்கள் பிரதிதிதிகளாலும் பறிக்கப்படுகின்றன.

PPR வீட்டு திட்டம், இரப்பர் மரம் நடவு, விவசாயிகளுக்கான மானிய உரம், பெல்டா நிர்வாகத் திட்டக் குத்தகையாளர்களுக்குச் சேவை மனப்பான்மையை விட இலாப நோக்கமே முன் நிற்கிறது.

 

மலாய்க்காரர்களில் 5% பணக்காரர்கள், அதாவது T5 குழுவினர், மலாய்க்காரர்கள் உட்பட அனைத்து ஏழை மக்களுக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டுக்குள் வரவழைக்கும் குத்தகை உள்துறை அமைச்சருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட, ஓர் அரசியல் சார்பு நிறுவனத்திற்கு வழங்குவது. அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவருவம் பணியின் மூலம் இவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகிறார்கள். இதனால் சந்தையில் தேவைக்கு மேலான அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். தற்போது மலேசியாவில் 5 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதில் 2 மில்லியன் பேர் முறையான ஆவணங்களைக் கொண்டுள்ளனர்; மீதம் 3 மில்லியன் பேர் முறையான ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பால் உள்ளூர் பி40 மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவதோடு குறைந்த சம்பள நடைமுறைக்கும் இது இட்டு செல்கிறது.

 

அரசு முதலீட்டு நிறுவனங்கள் (GLC) மூலம், பணக்கார மலாய்க்காரர்கள் தனியார் மருத்துவமனைகளையும் கட்டுப்படுத்துகிறார்கள். சுகாதாரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மேலும் அதிகமான தனியார் மருத்துவமனைகளை உருவாக்குகிறார்கள். இது நிபுணத்துவ மருத்துவர்களை அரசு துறையில் இருந்து தனியார் துறைக்குத் துரிதமாக இட்டு செல்கிறது. இன வேறுபாடின்றி, அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள B40 மற்றும் M40 மக்கள், நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக வகுக்கப்படும் கொள்கைகள் மற்றும் முறைகேடுகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு, உழைக்கும் மலாய் சமூகத்தை அணிதிரட்ட முற்போக்குப் போராட்டவாதிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பாரம்பரிய கிராமம் மற்றும் மலிவுவிலை வீடமைப்பு தொகுதிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிய பி.எஸ்.எம். தோழர்கள் தொடர்ந்து களம் இறங்க வேண்டும்.

இந்தப் பணியைத் திறம்பட செயல்படுத்த  போராட்டவாதிகள் முன்வரவேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக முற்போக்குவாதிகள் உட்பட, அனைத்து மலேசியர்களும் ஜசெக கட்சியின் இனவாதப் பகுப்பாய்வு மற்றும் சிந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலாய் சமூகத்துடன் நாம் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டுமானால் இனப்பிரச்சினை தொடர்பான நமது கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் மீண்டும் மானியம், சுயமுயற்சியின்மை, அரசாங்க உதவிகளை நம்பி இருத்தல் போன்ற அணுகுமுறையைப் பின்பற்றினால், வர்க்கப்போராட்டத்தில் அவர்களை இணைப்பதற்கான நமது முயற்சி தோல்வியடையும்.

 

கிராமம், குடியிறுப்பு பகுதி மற்றும் அடுக்குமாடி வீட்டு தொகுதிகளுக்குப் பி.எஸ்.எம். தோழர்கள் அடிக்கடி சென்று B40 மலாய் சமூகத்தைச் சந்தித்து உரையாட வேண்டும். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு சோசலிச முறையில் பகுப்பாய்வு செய்யுங்கள். அதைத் தொடர்ந்து, அவர்களின் பிரச்சினைகளைக் கலந்துரையாடி  தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். கடைநிலை மக்களின் பிரச்சினைகளை நாம் அணுகும்போது தான் நண்பர் யார் எதிரி யார் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

 

             

PRU17


           

பொது தேர்தலைப் பற்றி PSM பல முறை விவாதித்ததுண்டு. அதன் தொடர்ச்சியாக ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன :

  • 15-ஆம் பொதுதேர்தலில் PSM பெரும்பான்மை வெற்றிப் பெற வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அதிக நம்பிக்கை வைப்பது சாத்தியமற்றது. இதற்கு காரணம் PSM இன்னும் விரிவடையவில்லை மேலும் PSM சின்னம் பரவலாக மலேசிய மக்களிடம் சென்றடையவில்லை என்பதாகும்.
  • 15-ஆம் பொதுதேர்தலை நாம் புறக்கணிக்க முடியாது.
  • 15-ஆம் பொதுதேர்தலில் PSM நம்பிக்கை  கூட்டணியோடு (Pakatan Harapan) நல்லை புரிந்துணர்வை ஏற்படுத்தி தேர்தலை  எதிர்நோக்குவதே நல்ல வாய்ப்பாகும்.
  • சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே PSM சின்னத்தை நாம் விளம்பரப்படுத்த முடியும். அதே சமயம் நாம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் நமக்கு ஒரு மாற்று வழி உண்டு.
  • எதிர்வரும் 10 வருடத்திற்குள் PSM தமது தகுதியையும், சக்தியையும் மேம்படுத்திக் கொண்டு வரும் பொதுதேர்தலில் ஒரு புரட்சி முன்னனி கட்சியாக மூன்றாம் அணியாக திகழ வேண்டும்.

எதிர்வரும் 10 வருடத்திற்குள் PSM கட்சி நாட்டில் முழுமையாக விரிவடைய வேண்டுமென்றால் நாம் திடிப்பான உருப்பினர்களை அதிகரிக்க வேண்டும். அதன் மூலமே 50 இருந்து 100 புது கிளைகளை உருவாக்க முடியும்.

அதிகமான சித்தார்ந்த மற்றும் திறமையான உருப்பினரை சேர்க்க நாம் 4 விடயங்களை முன்னெடுக்க வேண்டும் :

  1. தகவல் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் PSM கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகளை மலேசிய மக்களுக்கு காட்ட வேண்டும். ஆனால் சில தலைவர்களின் செயல்கள் உதாரணமாக வெறும் புகைப்படம் எடுத்தல் மற்றும் வியாபார நோக்கத்தோடு தந்திரங்களை கையாளும் முறையை நாம் நம்பியிருக்க முடியாது. கடந்த காலங்களில் PSM கட்சியின் பல நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் பொது மக்களின் கவனத்தை ஈத்ததோடு PSM கட்சியின் தரத்தை உயர்தியது என்றால் அது மிகையாகாது. உதாரணத்திற்கு,

·         மிதிவண்டி பிரச்சாரத்தை மருத்துவமனை குத்தகை தொழிலாளர்கள் சங்கம் முன்னெடுத்தது.

·         CIMB வங்கி ஒரு பெண்மணியின் வீட்டை விற்று மோசடி செய்ததில் 5 நகரங்களிலும் ஒரே சமயத்தில் ஆட்சேப மறியல் செய்தது.

·         அமர்வு மறியலில் (sit-in)   அரசாங்க பள்ளி குத்தகை தொழிலாளர்கள் பிரதமர் அலுவலகம் முன்பு மறியல் செய்தனர்.

·         அத்துமீறி நுழைந்து விவசாயிகளை வெளியேற்ற முயன்ற அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய விவசாயிகள் மற்றும் PSM அங்கத்தினரை கைது செய்தது கண்டித்து அவர்களை விடுவிக்க PSM திரண்டது.

 

  1. அதிகமான PSM உருப்பினர்கள் களத்தில் இறங்க வேண்டும். பொது மக்களோடு இறங்கி அவர்களோடு பழகிய பின்பே நாம் அவர்களின் பிரச்சனையை அடையாளம் காண முடியும். பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விவாதிப்பதோடு பல மக்கள் பிரச்சனையை கையாள்வதில் அவர்களின் பிரச்சனையை ஆலோசித்து அதற்கு தீர்வு காண முடியும்.  சாதாரண மக்களோடு சேர்ந்து பணியாற்றும் போது நாம அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே முதன்மையாக கொள்ள வேண்டும். அதை விடுத்து PSM கட்சியை ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தக் கூடாது.
  2. தேசிய அளவிளான ஆய்வு செய்தல் மற்றும் திட்டங்களை உருவாக்கும் பணி சாதாரண மக்களை ஈர்க்கும் வகையில் அமையவில்லை மாறாக PSM திட்டங்கள் / கொள்கைகள் மற்றும் தேசிய பிரச்சாரங்கள் புதியவர்களைக் கட்சியில் சேர்க்க ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. இதன்பால ஈர்க்கப்பட்டவர்களும் சாதாரண மக்களும் இணையம் மூலம் PSM கட்சியின் போராட்டங்களை தெரிந்துக்கொள்வார்கள்.
  3. நாம் புரிந்துணர்வோடும் முறையாகவும் புதிய உருப்பினர்களை PSM கட்சியில் ஈடுபட செய்ய வேண்டும். புதியவர்களை நமது கட்சியின் செயல்திட்டங்களின் பங்கெடுப்பதின் மூலம் PSM கட்சியின் சோசலிச கொள்கைகளைப் புரிந்துக்கொள்வதோடு ஒரு சிறந்த முற்போக்குவாதியாக வருங்காலத்தில் PSM வேட்பாளராகும் தகுதியும் உண்டு.

 

சகோதர சகோதரிகளே நாம் இரண்டு வருடமாக சுதந்திரமாக செயல்பட முடியாத காரணம் கோவிட் பெருந்தொற்று ஆகும். தற்போது நடமாடும் மற்றும் கூட்டம் நடத்தும் தடை தளர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2020 இல் நான் துரோலகில் முடிவெடுத்த முடிவுகள், திட்டங்கள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் செயல்படுத்த நேரம் கைகூடிவிட்டது. கார்ல் மார்க்ஸ் சொன்னது போல   ‘’வென்றெடுக்க  ஒரு உலகம் உண்டு’’.

அடுத்து வரும் 2 நாட்களில் நாம்  தெளிவான கலந்துரையாடல் மூலம் PSM கட்சியின் திட்டங்களை ஆலோசிப்போம் என்று எதிர்பார்க்கிறேன்

வாழ்க மாநாடு !  வாழ்க போராட்டம்

 

டாக்டர் குமார்

தேசிய தலைவர்

PSM 4/6/2022

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...