Wednesday, December 22, 2021

கந்தான் விவசாயிகளை வெளியேற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பேராக் மாநிலத்தின் சந்தேகத்திற்குரிய நில பேரங்கள்: 

கந்தான் விவசாயிகளை வெளியேற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!


சில நாட்களுக்கு முன்பு பேராக் மாநிலம் கந்தானில் உள்ள 132 சிறு விவசாயிகளுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்துள்ளது. டிசம்பர் 2, 2021 தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், பி.கே.என்.பி (PKNP) எனப்படும் பெர்பாடானான் கெமாஜுவான் நெகிரி பேராக்கிற்குச் சொந்தமான நிலத்தை அவர்கள் உரிமையாளரின் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பி.கே.என்.பி  எனப்படுவது, 1967-ல் பேராக் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஜி.எல்.சி. (GLC) எனப்படும் அரசு சார்புடைய நிறுவனமாகும். இது எஸ்.எஸ்.எம் (SSM) எனப்படும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல ஆனால் அதன் நிதிக் கணக்குகளை ஒவ்வொரு வருடமும் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமீபத்தில் பி.கே.என்.பி  இணையதளத்தில் 2017-வது வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 132 விவசாயிகளும் விவசாயம் செய்து வரும் நிலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சற்றே சந்தேகத்திற்குரிய ஒப்பந்தம் மூலம் பி.கே.என்.பி.க்கு அந்நியப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நிலம் என்பது மாநில விவகாரமாகும். எனவே அரசு நிலத்தை அந்நியப்படுத்துவது தொடர்பான அனைத்து அதிகாரமும் "மாநில ஆணையத்திற்கு" கீழ் ஒதுக்கப்படுகிறது.  மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாநிலத்தின் மந்திரி  பெசாரால் செயல்படுத்தப்படுகிறது. பதவியில் இருக்கும் மந்திரி பெசார் பி.கே.என்.பி. இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார். எனவே நிலம் அந்நியப்படுத்தும் ஒப்புதல் அளிக்கும் மாநிலக் குழுவின் தலைவரான மந்திரி பெசார் 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அவர் தலைவராக இருக்கும் பி.கே.என்.பி.க்கு வழங்கியுள்ளார்.



பாதிக்கப்பட்ட 132 விவசாயிகளும் மூன்றாம் தலைமுறை விவசாயிகள். இந்த நிலம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் அவர்களின் தாத்தா பாட்டிகளால் ஆரம்பிக்கப்பட்டது. 1950-ம் ஆண்டில், காலனித்துவ அதிகாரிகளால் அவர்கள் பண்ணைகளில் இருந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய கிராமங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அருகாமையில் இருந்த 3 இடங்களான - குவாலா குவாங், கந்தான் மற்றும் ரிம்பா பாஞ்சாங் ஆகிய இடங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், உள்ளூர் மக்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கான விநியோக வழிகளைத் துண்டிக்கவே பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால் இந்த பிரிக்ஸ் (Briggs) திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. அப்போதிலிருந்து, விவசாயிகள் புதிய கிராமங்களில் வசிக்கிறார்கள். அதோடு அவர்களின் புதிய கிராமத்திலிருந்து 3 மைல் சுற்றளவில் அமைந்துள்ள தங்கள் பண்ணைகளுக்கும் சென்று வருகிறார்கள். 

இவர்கள் சிறு விவசாய சமூகமாவர். பி.கே.என்.பி.  சமீபத்தில் 132 பண்ணைகளில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. 24 பண்ணைகள் (18%) 2 ஏக்கருக்கும் குறைவாகவும், 41 பண்ணைகள் (31%) 2 முதல் 4 ஏக்கர் வரையிலும், 27 பண்ணைகள் (20%) 4 முதல் 6 ஏக்கர் வரையிலும், 19 பண்ணைகள் (14%) 6 முதல் 8 ஏக்கர் வரையிலும் வைத்துள்ளனர். 17% பண்ணைகள் மட்டுமே 8 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கின்றன, இவற்றில் மீன் வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் பழைய சுரங்கக் குளங்களும் அடங்கும். இருப்பினும் இந்த விவசாயிகள் நிலத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 50 முதல் 60 டன் சோளம், கத்தரி, வெண்டை, நீண்ட பீன்ஸ், தண்ணீர் லில்லி, பல்வேறு  கீரைகள், மீன் மற்றும் எண்ணெய் பனை போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு வெளியேற்றுகிறார்கள். இவைகள் அனைத்தும் எந்தவித அரசாங்க ஆதரவோ அல்லது மானியமோ இல்லாமல் உருவாக்கப்படுகின்றன. பேராக் மாநிலத்தின் மிகப்பெரிய ஒற்றைச் சந்தை தோட்டக்கலைத் தளமாக கந்தான் பகுதி உள்ளது, இங்குள்ள மண் மற்றும் நிலம், வானிலை நிலைமைகளைக் கையாள்வதில் கிட்டத்தட்ட 100 வருட அனுபவமுள்ள சமூகத்தினரால் நிலையான முறையில்  நிர்வகிக்கப்படுகிறது. கந்தான் சந்தை தோட்டக்கலை சமூகம் தேசத்திற்கு ஒரு பொருளாதார மற்றும் மூலோபாய சொத்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

பி.கே.என்.பி. அதன் இணையதளத்தின்படி, மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்துவதற்கும், மாநிலப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும் ஒரு நீண்ட கால உத்தியை செயல்படுத்த உருவாக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில், கந்தான் பகுதி முழுவதையும் விவசாயத்திலிருந்து வேரறுத்து  குடியிருப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு (சில்வர் வேலி டெக்னாலஜி பார்க்) மாற்ற மாநில முடிவு செய்துள்ளது. கந்தான் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்புள்ள மூன்று நிலங்கள் ஏற்கனவே தனியார் மேம்பாட்டாளர்களாகிய  புக்கிட் அனேக்கா சென்டிரியான் பெர்ஹாட் (Bukit Aneka Sdn Bhd), கே.எம். மாஜூபீனா சென்டிரியான் பெர்ஹாட் (KM Majubina Sdn Bhd) மற்றும் பஞ்ஜாரான் பாராத் சென்டிரியான் பெர்ஹாட் (Banjaran Barat Sdn Bhd)  ஆகிய 3 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல் மேம்பாட்டாளர் "அதன்" நிலத்தில் 8 விவசாயிகளுக்கு எதிராக, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னிட்டு அறிக்கை தாக்கல் செய்தார். அவர்கள் ஆர்டர் 89 (Order 89) விண்ணப்பத்தின் மூலம் தாக்கல் செய்தனர். அதனை எங்களால் முறியடிக்க முடிந்தது - நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தோற்றாலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் அந்த முடிவை ரத்து செய்தோம். புக்கிட் அனேக்கா நிறுவனம் ரிட் சம்மன் (Writ Summons) தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டாவது மேம்பாட்டு நிறுவனமான கே.எம். மாஜூபீனா மேம்பாட்டாளர் ஏப்ரல் 2021-ல் 12 மலாய் இளைஞர்களைக் கொண்ட குழுவை, இரண்டு பேக்ஹோக்குகள் (backhoes) எனப்படும் அள்ளுவாளி அல்லது பின்புற மண்வாரி இயந்திர வண்டிகளோடு மாஜூபீனாவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தம் செய்ய அனுப்பி வைத்தனர். விவசாயிகள் அந்த நிலத்தை ஆக்கிரமித்ததோடு பல போலீஸ் புகார்களையும் செய்தனர். பேராக் தலைமைக் காவல்துறை அதிகாரியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்றனர். மேம்பாட்டாளர்களின் இந்த முயற்சியைத் தடுக்க பி.எஸ்.எம்.(PSM) விவசாயிகளுக்கு உதவியது.  சீன விவசாயிகளின் சமூகத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மலாய் ஆடவர்களின் குழுவை ஈடுபடுத்துவதில் மாஜூபீனாவின் (சீனர்களுக்கு சொந்தமான மேம்பாட்டு நிறுவனம்) முற்றிலும் பொறுப்பற்ற தன்மையை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். 

கே.எம். மாஜூபீனாவின் ஆட்களில் சிலர் ஆக்ரோஷமாக இருந்ததால் 3 நாட்களுக்கு மிகவும் பதற்றமான ஒரு நிலைமை  உருவானது – அவர்கள் எம்.சீ.ஓ. (MCO) எனப்படும் இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாக வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடித்தவுடன் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்பதால் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். நமது வழக்கறிஞர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 99(1) பிரிவின் கீழ் ஒரு உத்தரவைப் பெற முடிந்தது, அது அடிப்படை நிலப் பிரச்சினையில் நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை (அதாவது விவசாயிகள் நிலத்தை உடமையாக வைத்திருக்க வேண்டும்) தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையை பெற்றனர். கே.எம். மாஜூபீனாவின் கடுமையான அணுகுமுறையை 3 வது நாளில் நிறுத்திவிட்டனர். பின்னர் சட்ட நடவடிக்கையைத் தொடங்கினர் - ஒரு தொடக்க சம்மன் தாக்கல் செய்யப்பட்டது.மூன்றாவது மேம்பாட்டாளர் தனது நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்.

கே.எம். மாஜூபீனாவின் அத்தியாயம் சில குழப்பமான தகவல்களைத் தந்துள்ளது. இந்த 48.23 ஏக்கரை பி.கே.என்.பி நேரடியாக மாஜூபீனாவுக்கு விற்கவில்லை என்பதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து கண்டுபிடித்தோம். அதற்கு பதிலாக பி.கே.என்.பி நிலத்தை 4.823 மில்லியன் ரிங்கிட் மலேசியாவிற்கு மாத்தாங் சேண்ட்ஸ் சென்டிரியான்  பெர்ஹாட்டிற்கு (Matang Sands Sdn Bhd) விற்றுள்ளது. மாத்தாங் சேண்ட்ஸ் சென்டிரியான்  பெர்ஹாட் ஒரு நாள் கழித்து மாஜூபீனாவுக்கு 5.823 மில்லியன் ரிங்கிட் மலேசியாவிற்கு நிலத்தை விற்றுள்ளது. பி.கே.என்.பி ஏன் மாஜூபீனாவுக்கு நேரடியாக விற்று கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் மலேசியாவை வசூலிக்கவில்லை?

48.23 ஏக்கருக்கு ரி.ம. 4.823 மில்லியன் என்றால் ஒரு சதுர அடிக்கு ரி.ம. 2.30. ஆனால் இப்பகுதியில் நிலத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரி.ம. 15 ஆகும். பி.கே.என்.பி ஏன் அரசின் நிலச் சொத்துக்களை இவ்வளவு தள்ளுபடி விலையில் பணமாக்கியது? நிலத்தின் உண்மையான மதிப்பு ரி.ம. 30 மில்லியனாக இருக்கும் போது பி.கே.என்.பி விற்ற 50 ஏக்கருக்கு ரி.ம. 4.823 மில்லியன் மட்டுமே பெற்றது. - மேம்பாட்டாருக்கான தொண்டு செயலா? அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா?

வெளியேற்ற அறிவிப்பைப் பெற்ற பிறகு கந்தான் விவசாயிகள் பிஎஸ்எம்மிடம் ஒரு கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். நாங்களும் அதை நேற்று டிசம்பர் 11, 2021 அன்று நடத்தினோம். நீதிமன்றத்தில் ஒரு வாதப் பிரதிவாதத்தையும் எதிர் மனுவையும் தாக்கல் செய்ய உதவுவோம் என்று அவர்களிடம் கூறினோம். ஆனால் நாங்கள் அவர்களுக்கு உண்மையைச் சொன்னோம் - மலேசியாவில் நிலச் சட்டம் மிகவும் ஒருதலைப்பட்சமானது. நில மானியமானது. மானியம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு மொத்த உரிமைகளை வழங்குகிறது. இது தான் தோரன்ஸ் (Torrens) அமைப்பு. கடந்த 80 முதல் 100 ஆண்டுகளாக நிலத்தை உழவு செய்து வரும் விவசாயிகளுக்கு ஏன் மாநில அதிகாரசபை நிலத்தை ஒதுக்கித் தரவில்லை என்ற கேள்விகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல தேசிய நிலச் சட்டத்தில் எந்த ஒரு விதியும் கிடையாது. பருவநிலை மாற்றம் என்பது உண்மையானதாகவும், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகவும் இருக்கும் காலகட்டத்தில், வளர்ச்சியடைந்து வரும் உணவு உற்பத்திப் பகுதியை அழிப்பதன் புத்திசாலித்தனத்தை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கும் எந்தவொரு விதியும் கிடையாது. சட்டத்தின்படி அரசு நிலத்தை அன்னியமாக்குவதற்கான முழு உரிமையும் அரசு அதிகாரசபையிடம் உள்ளது.



சுருக்கமான தீர்ப்பைத் தடுக்க நீதிமன்றத்தில் ஒரு வாதத்தைத் தாக்கல் செய்வது முக்கியம் என்றாலும், நீதிமன்ற செயல்முறையின் மூலம் சாதகமான முடிவை எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல என்றும் நாங்கள் விவசாயிகளிடம் கூறினோம். நீதிபதி அனுதாபப்பட்டாலும், அவரின் தீர்ப்பு தற்போதைய சட்டங்களின் வரம்பிற்குள்தான் இருக்கும். விவசாயிகள் தங்கள் பண்ணைகளைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் பொதுமக்களின் அபிப்பிராயத்தைத் திசைதிருப்ப வேண்டும். எனவே கந்தான் பகுதியை தொழில் பூங்காவாக மேம்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு அதிகாரசபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் விவசாயிகளிடம் கூறினோம். பேராக்கில் தற்போதுள்ள காய்கறி விவசாயப் பகுதிகளை நிரந்தர உணவு உற்பத்திப் பகுதிகளாக அரசிதழில் வெளியிடவும், இந்தப் பகுதிகளில் நிலத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் நிலத்தை உணவுப் பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன்  கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினோம். கூட்டத்தில் கலந்து கொண்ட 50 விவசாயிகள் ஒப்புக்கொண்டனர், நாங்கள் 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். ஆனால் இது ஒரு பெரும் போருக்கு சமமான போராட்டமாக இருக்கும்!

சிறு விவசாயிகளின் குழுவிற்கு உதவுவதற்கும் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களே நீங்கள் பங்களிக்க முடியுமா? நமது நிலச் சொத்துக்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்பதை சாதாரண மலேசியர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது அல்லவா? உணவுப் பாதுகாப்பு, நமது நீர் பிடிப்புப் பகுதிகளின் நிலைத்தன்மை மற்றும் நமது காடுகளைப் பராமரித்தல் போன்ற விஷயங்களில் மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. குறுகிய கால நிதி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசையால் அவர்கள் உந்தப்பட்டதாகத் தெரிகிறது. சாதாரண குடிமக்கள் நமது அரசாங்கத் தலைவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். நாம் அவர்களிடம் ஒப்படைக்கும் முழு அதிகாரங்களையும் அவர்கள் பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஜெயக்குமார் தேவராஜ்

தலைவர்

மலேசிய சோசியலிஸ் கட்சி 

(PSM)12/12/2021


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...