Tuesday, August 2, 2022

எல்மினா தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வெற்றி

 

இறுதியாக, எல்மினா  தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

8/7/2022- ஆம் தேதியன்று  பிற்பகல் 3 மணியளவில், சுங்கை புலோ எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் வீடு வாங்குவதற்கான விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், 3 தலைமுறைகளாக எல்மினா தோட்டத் தொழிலாளிகள் வாழ்ந்த, அவர்களின் உழைப்பிற்கும் வாழ்வுக்கும்  முதுகெலும்பாக இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டு வரும் Selangor ku Jenis C, Pangsapuri Harmoni Elmina ஆகிய வீடமைப்புப் பகுதிகளில் அவர்களுக்கு வீடு கிடைக்கவிருப்பதுதான்.

மற்றொரு சிறப்பு என்னவென்றால், 900 சதுர அடி பரப்பளவில் RM200,000 மதிப்புள்ள வீட்டினை தோட்டத் தொழிலாளர்களுக்கு RM20,000 (அசல் மதிப்பில் 10%) வழங்கப்படுகிறது!

எல்மினா தோட்டத் தொழிலாளர்களை நீண்ட காலமாக பி.எஸ்.எம் அறிந்திருந்தாலும், பலர் வெவ்வேறு காரணங்களால் இந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டனர், சிலத் தொழிலாளர்கள் மரணமடைந்துவிட்டனர், இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுடன் நகரங்களுக்கு மாற்றலாகிவிட்டனர்.  சைம் டார்பி நிறுவனத்தால் தொழிலாளர்களை வெளியேற்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டபோது 14 தொழிலாளர்கள் மட்டுமே உறுதியுடன் தோட்டத்தில் தங்கியிருந்தனர்.

ஆரம்ப கட்டத்தில்,  சைம் டார்பியுடன் ஒப்பந்தம் செய்யும் பணியில் NUPW மற்றும் சுபாங்/சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஈடுபட்டனர். ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் திருப்தியடையாததால் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற சைம் டார்பி நீதிமன்ற உத்தரவை நாடியது.

2017 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் தங்களுக்கு உதவ PSM கோத்தா டாமன்சாரா சுபாங் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். நீதிமன்றத்தில் தொழிளாலர்களைப்  பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞர் ரகுநாத் கேசவனின் உதவியை PSM நாடியதுடன், அந்த 14 தொழிலாளர்களின் சார்பாக சைம் டார்பியுடன் ஒரு கலந்துரையாடலையும் செய்தது. அவர்களின் வீடு கட்டப்படும் வரை தற்காலிக குடியேற்றமாக தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தங்குவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரு கூடுதல் ஒப்பந்தமாக ‘Settlement Agreement’ செய்யப்பட்டது. மேலும் எல்மினா தோட்ட மேம்பாட்டு இடத்தில் கட்டப்படும் RM42,000 வீட்டு விலையில்,  தொழிலாளர்களுக்கும் குறைந்த விலை வீடு வழங்கப்படும் என்றும் அதற்கான விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திடப்படும் என்றும் அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டுவசதிக்கான உறுதி வழங்கப்பட்டது. பின்னர் 14 தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு (அது பொதுவாக ஊழியர்கள் மற்றும் தோட்டத்து கங்காணிகளுக்கு ஒதுக்கப்பட்ட semi D வீடு) குடிபெயர்ந்தனர்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சைம் டார்பி PSM-மைத் தொடர்புகொண்டு, ஒரு புதிய சலுகை இருப்பதாகத் தெரிவித்தது. எல்மினா  சைம் டார்பி நடவடிக்கை தளமான ‘show house’ விற்பனை அலுவலகத்தில் ஒரு சுவாரஸ்யமான power point  பட விளக்கக்காட்சியை அது ஒளியேற்றியது. அதில் எல்மினா தொழிலாளர்கள் 900 சதுர அடியில் Pangsapuri Harmoni Jenis C வீட்டை RM178,000க்கு வாங்குவது அல்லது வீடு இல்லாமல் RM80,000 பண இழப்பீடு பெறுவது என பரிந்துரைக்கப்பட்டது.  

2018-ல் செய்யப்பட்ட தீர்வு ஒப்பந்தத்தில் அவர்களுக்கு RM42,000 வெள்ளிக்கு வீடு வழங்கப்படும் என்றும், Sime Darby வழங்கும் மானியம் RM22,000 வெள்ளி என்றும் தெளிவாகக் கூறுவதால், தொழிலாளர்கள் தங்களின் வீட்டிற்கு RM20,000 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டும்.

எனவே, 20,000 ரிங்கிட் விலையில் வழங்கினால் மட்டுமே Type C Harmony Apartment வீட்டை ஏற்கத் தயார் என்று தொழிலாளர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர்.

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் இடம், அதாவது சைம் டார்பி தொழிற்சாலை தொழிலாளர் குடியிருப்புகள் மேம்பாட்டு வளர்ச்சிக்கு தேவைப்படுவதால், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, ரிம 200,000 மதிப்புள்ள வீட்டை ரிம 20,000 விலையில் வழங்க சைம் டார்பி முடிவு செய்தது.


எல்மினா தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துகள்.


சிவராஜன் ஆறுமுகம்

பி.எஸ்.எம் பொதுச் செயலாளர் & சுபாங் கிளை

(தமிழில் யோகி)


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...