Wednesday, December 22, 2021

கந்தான் விவசாயிகளை வெளியேற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பேராக் மாநிலத்தின் சந்தேகத்திற்குரிய நில பேரங்கள்: 

கந்தான் விவசாயிகளை வெளியேற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!


சில நாட்களுக்கு முன்பு பேராக் மாநிலம் கந்தானில் உள்ள 132 சிறு விவசாயிகளுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்துள்ளது. டிசம்பர் 2, 2021 தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், பி.கே.என்.பி (PKNP) எனப்படும் பெர்பாடானான் கெமாஜுவான் நெகிரி பேராக்கிற்குச் சொந்தமான நிலத்தை அவர்கள் உரிமையாளரின் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பி.கே.என்.பி  எனப்படுவது, 1967-ல் பேராக் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஜி.எல்.சி. (GLC) எனப்படும் அரசு சார்புடைய நிறுவனமாகும். இது எஸ்.எஸ்.எம் (SSM) எனப்படும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல ஆனால் அதன் நிதிக் கணக்குகளை ஒவ்வொரு வருடமும் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமீபத்தில் பி.கே.என்.பி  இணையதளத்தில் 2017-வது வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 132 விவசாயிகளும் விவசாயம் செய்து வரும் நிலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சற்றே சந்தேகத்திற்குரிய ஒப்பந்தம் மூலம் பி.கே.என்.பி.க்கு அந்நியப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நிலம் என்பது மாநில விவகாரமாகும். எனவே அரசு நிலத்தை அந்நியப்படுத்துவது தொடர்பான அனைத்து அதிகாரமும் "மாநில ஆணையத்திற்கு" கீழ் ஒதுக்கப்படுகிறது.  மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாநிலத்தின் மந்திரி  பெசாரால் செயல்படுத்தப்படுகிறது. பதவியில் இருக்கும் மந்திரி பெசார் பி.கே.என்.பி. இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார். எனவே நிலம் அந்நியப்படுத்தும் ஒப்புதல் அளிக்கும் மாநிலக் குழுவின் தலைவரான மந்திரி பெசார் 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அவர் தலைவராக இருக்கும் பி.கே.என்.பி.க்கு வழங்கியுள்ளார்.



பாதிக்கப்பட்ட 132 விவசாயிகளும் மூன்றாம் தலைமுறை விவசாயிகள். இந்த நிலம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் அவர்களின் தாத்தா பாட்டிகளால் ஆரம்பிக்கப்பட்டது. 1950-ம் ஆண்டில், காலனித்துவ அதிகாரிகளால் அவர்கள் பண்ணைகளில் இருந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய கிராமங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அருகாமையில் இருந்த 3 இடங்களான - குவாலா குவாங், கந்தான் மற்றும் ரிம்பா பாஞ்சாங் ஆகிய இடங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், உள்ளூர் மக்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கான விநியோக வழிகளைத் துண்டிக்கவே பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால் இந்த பிரிக்ஸ் (Briggs) திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. அப்போதிலிருந்து, விவசாயிகள் புதிய கிராமங்களில் வசிக்கிறார்கள். அதோடு அவர்களின் புதிய கிராமத்திலிருந்து 3 மைல் சுற்றளவில் அமைந்துள்ள தங்கள் பண்ணைகளுக்கும் சென்று வருகிறார்கள். 

இவர்கள் சிறு விவசாய சமூகமாவர். பி.கே.என்.பி.  சமீபத்தில் 132 பண்ணைகளில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. 24 பண்ணைகள் (18%) 2 ஏக்கருக்கும் குறைவாகவும், 41 பண்ணைகள் (31%) 2 முதல் 4 ஏக்கர் வரையிலும், 27 பண்ணைகள் (20%) 4 முதல் 6 ஏக்கர் வரையிலும், 19 பண்ணைகள் (14%) 6 முதல் 8 ஏக்கர் வரையிலும் வைத்துள்ளனர். 17% பண்ணைகள் மட்டுமே 8 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கின்றன, இவற்றில் மீன் வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் பழைய சுரங்கக் குளங்களும் அடங்கும். இருப்பினும் இந்த விவசாயிகள் நிலத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 50 முதல் 60 டன் சோளம், கத்தரி, வெண்டை, நீண்ட பீன்ஸ், தண்ணீர் லில்லி, பல்வேறு  கீரைகள், மீன் மற்றும் எண்ணெய் பனை போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு வெளியேற்றுகிறார்கள். இவைகள் அனைத்தும் எந்தவித அரசாங்க ஆதரவோ அல்லது மானியமோ இல்லாமல் உருவாக்கப்படுகின்றன. பேராக் மாநிலத்தின் மிகப்பெரிய ஒற்றைச் சந்தை தோட்டக்கலைத் தளமாக கந்தான் பகுதி உள்ளது, இங்குள்ள மண் மற்றும் நிலம், வானிலை நிலைமைகளைக் கையாள்வதில் கிட்டத்தட்ட 100 வருட அனுபவமுள்ள சமூகத்தினரால் நிலையான முறையில்  நிர்வகிக்கப்படுகிறது. கந்தான் சந்தை தோட்டக்கலை சமூகம் தேசத்திற்கு ஒரு பொருளாதார மற்றும் மூலோபாய சொத்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

பி.கே.என்.பி. அதன் இணையதளத்தின்படி, மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்துவதற்கும், மாநிலப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும் ஒரு நீண்ட கால உத்தியை செயல்படுத்த உருவாக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில், கந்தான் பகுதி முழுவதையும் விவசாயத்திலிருந்து வேரறுத்து  குடியிருப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு (சில்வர் வேலி டெக்னாலஜி பார்க்) மாற்ற மாநில முடிவு செய்துள்ளது. கந்தான் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்புள்ள மூன்று நிலங்கள் ஏற்கனவே தனியார் மேம்பாட்டாளர்களாகிய  புக்கிட் அனேக்கா சென்டிரியான் பெர்ஹாட் (Bukit Aneka Sdn Bhd), கே.எம். மாஜூபீனா சென்டிரியான் பெர்ஹாட் (KM Majubina Sdn Bhd) மற்றும் பஞ்ஜாரான் பாராத் சென்டிரியான் பெர்ஹாட் (Banjaran Barat Sdn Bhd)  ஆகிய 3 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல் மேம்பாட்டாளர் "அதன்" நிலத்தில் 8 விவசாயிகளுக்கு எதிராக, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னிட்டு அறிக்கை தாக்கல் செய்தார். அவர்கள் ஆர்டர் 89 (Order 89) விண்ணப்பத்தின் மூலம் தாக்கல் செய்தனர். அதனை எங்களால் முறியடிக்க முடிந்தது - நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தோற்றாலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் அந்த முடிவை ரத்து செய்தோம். புக்கிட் அனேக்கா நிறுவனம் ரிட் சம்மன் (Writ Summons) தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டாவது மேம்பாட்டு நிறுவனமான கே.எம். மாஜூபீனா மேம்பாட்டாளர் ஏப்ரல் 2021-ல் 12 மலாய் இளைஞர்களைக் கொண்ட குழுவை, இரண்டு பேக்ஹோக்குகள் (backhoes) எனப்படும் அள்ளுவாளி அல்லது பின்புற மண்வாரி இயந்திர வண்டிகளோடு மாஜூபீனாவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தம் செய்ய அனுப்பி வைத்தனர். விவசாயிகள் அந்த நிலத்தை ஆக்கிரமித்ததோடு பல போலீஸ் புகார்களையும் செய்தனர். பேராக் தலைமைக் காவல்துறை அதிகாரியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்றனர். மேம்பாட்டாளர்களின் இந்த முயற்சியைத் தடுக்க பி.எஸ்.எம்.(PSM) விவசாயிகளுக்கு உதவியது.  சீன விவசாயிகளின் சமூகத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மலாய் ஆடவர்களின் குழுவை ஈடுபடுத்துவதில் மாஜூபீனாவின் (சீனர்களுக்கு சொந்தமான மேம்பாட்டு நிறுவனம்) முற்றிலும் பொறுப்பற்ற தன்மையை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். 

கே.எம். மாஜூபீனாவின் ஆட்களில் சிலர் ஆக்ரோஷமாக இருந்ததால் 3 நாட்களுக்கு மிகவும் பதற்றமான ஒரு நிலைமை  உருவானது – அவர்கள் எம்.சீ.ஓ. (MCO) எனப்படும் இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாக வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடித்தவுடன் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்பதால் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். நமது வழக்கறிஞர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 99(1) பிரிவின் கீழ் ஒரு உத்தரவைப் பெற முடிந்தது, அது அடிப்படை நிலப் பிரச்சினையில் நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை (அதாவது விவசாயிகள் நிலத்தை உடமையாக வைத்திருக்க வேண்டும்) தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையை பெற்றனர். கே.எம். மாஜூபீனாவின் கடுமையான அணுகுமுறையை 3 வது நாளில் நிறுத்திவிட்டனர். பின்னர் சட்ட நடவடிக்கையைத் தொடங்கினர் - ஒரு தொடக்க சம்மன் தாக்கல் செய்யப்பட்டது.மூன்றாவது மேம்பாட்டாளர் தனது நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்.

கே.எம். மாஜூபீனாவின் அத்தியாயம் சில குழப்பமான தகவல்களைத் தந்துள்ளது. இந்த 48.23 ஏக்கரை பி.கே.என்.பி நேரடியாக மாஜூபீனாவுக்கு விற்கவில்லை என்பதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து கண்டுபிடித்தோம். அதற்கு பதிலாக பி.கே.என்.பி நிலத்தை 4.823 மில்லியன் ரிங்கிட் மலேசியாவிற்கு மாத்தாங் சேண்ட்ஸ் சென்டிரியான்  பெர்ஹாட்டிற்கு (Matang Sands Sdn Bhd) விற்றுள்ளது. மாத்தாங் சேண்ட்ஸ் சென்டிரியான்  பெர்ஹாட் ஒரு நாள் கழித்து மாஜூபீனாவுக்கு 5.823 மில்லியன் ரிங்கிட் மலேசியாவிற்கு நிலத்தை விற்றுள்ளது. பி.கே.என்.பி ஏன் மாஜூபீனாவுக்கு நேரடியாக விற்று கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் மலேசியாவை வசூலிக்கவில்லை?

48.23 ஏக்கருக்கு ரி.ம. 4.823 மில்லியன் என்றால் ஒரு சதுர அடிக்கு ரி.ம. 2.30. ஆனால் இப்பகுதியில் நிலத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரி.ம. 15 ஆகும். பி.கே.என்.பி ஏன் அரசின் நிலச் சொத்துக்களை இவ்வளவு தள்ளுபடி விலையில் பணமாக்கியது? நிலத்தின் உண்மையான மதிப்பு ரி.ம. 30 மில்லியனாக இருக்கும் போது பி.கே.என்.பி விற்ற 50 ஏக்கருக்கு ரி.ம. 4.823 மில்லியன் மட்டுமே பெற்றது. - மேம்பாட்டாருக்கான தொண்டு செயலா? அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா?

வெளியேற்ற அறிவிப்பைப் பெற்ற பிறகு கந்தான் விவசாயிகள் பிஎஸ்எம்மிடம் ஒரு கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். நாங்களும் அதை நேற்று டிசம்பர் 11, 2021 அன்று நடத்தினோம். நீதிமன்றத்தில் ஒரு வாதப் பிரதிவாதத்தையும் எதிர் மனுவையும் தாக்கல் செய்ய உதவுவோம் என்று அவர்களிடம் கூறினோம். ஆனால் நாங்கள் அவர்களுக்கு உண்மையைச் சொன்னோம் - மலேசியாவில் நிலச் சட்டம் மிகவும் ஒருதலைப்பட்சமானது. நில மானியமானது. மானியம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு மொத்த உரிமைகளை வழங்குகிறது. இது தான் தோரன்ஸ் (Torrens) அமைப்பு. கடந்த 80 முதல் 100 ஆண்டுகளாக நிலத்தை உழவு செய்து வரும் விவசாயிகளுக்கு ஏன் மாநில அதிகாரசபை நிலத்தை ஒதுக்கித் தரவில்லை என்ற கேள்விகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல தேசிய நிலச் சட்டத்தில் எந்த ஒரு விதியும் கிடையாது. பருவநிலை மாற்றம் என்பது உண்மையானதாகவும், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகவும் இருக்கும் காலகட்டத்தில், வளர்ச்சியடைந்து வரும் உணவு உற்பத்திப் பகுதியை அழிப்பதன் புத்திசாலித்தனத்தை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கும் எந்தவொரு விதியும் கிடையாது. சட்டத்தின்படி அரசு நிலத்தை அன்னியமாக்குவதற்கான முழு உரிமையும் அரசு அதிகாரசபையிடம் உள்ளது.



சுருக்கமான தீர்ப்பைத் தடுக்க நீதிமன்றத்தில் ஒரு வாதத்தைத் தாக்கல் செய்வது முக்கியம் என்றாலும், நீதிமன்ற செயல்முறையின் மூலம் சாதகமான முடிவை எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல என்றும் நாங்கள் விவசாயிகளிடம் கூறினோம். நீதிபதி அனுதாபப்பட்டாலும், அவரின் தீர்ப்பு தற்போதைய சட்டங்களின் வரம்பிற்குள்தான் இருக்கும். விவசாயிகள் தங்கள் பண்ணைகளைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் பொதுமக்களின் அபிப்பிராயத்தைத் திசைதிருப்ப வேண்டும். எனவே கந்தான் பகுதியை தொழில் பூங்காவாக மேம்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு அதிகாரசபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் விவசாயிகளிடம் கூறினோம். பேராக்கில் தற்போதுள்ள காய்கறி விவசாயப் பகுதிகளை நிரந்தர உணவு உற்பத்திப் பகுதிகளாக அரசிதழில் வெளியிடவும், இந்தப் பகுதிகளில் நிலத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் நிலத்தை உணவுப் பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன்  கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினோம். கூட்டத்தில் கலந்து கொண்ட 50 விவசாயிகள் ஒப்புக்கொண்டனர், நாங்கள் 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். ஆனால் இது ஒரு பெரும் போருக்கு சமமான போராட்டமாக இருக்கும்!

சிறு விவசாயிகளின் குழுவிற்கு உதவுவதற்கும் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களே நீங்கள் பங்களிக்க முடியுமா? நமது நிலச் சொத்துக்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்பதை சாதாரண மலேசியர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது அல்லவா? உணவுப் பாதுகாப்பு, நமது நீர் பிடிப்புப் பகுதிகளின் நிலைத்தன்மை மற்றும் நமது காடுகளைப் பராமரித்தல் போன்ற விஷயங்களில் மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. குறுகிய கால நிதி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசையால் அவர்கள் உந்தப்பட்டதாகத் தெரிகிறது. சாதாரண குடிமக்கள் நமது அரசாங்கத் தலைவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். நாம் அவர்களிடம் ஒப்படைக்கும் முழு அதிகாரங்களையும் அவர்கள் பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஜெயக்குமார் தேவராஜ்

தலைவர்

மலேசிய சோசியலிஸ் கட்சி 

(PSM)12/12/2021


Sunday, December 19, 2021

INS செய்தி நிறுவனத்துடனான, பி.எஸ்.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராஜனின் நேர்காணல்


மலேசிய
சோசலிசக்  கட்சி (சுருக்கமாக, பார்ட்டி சோசியலிஸ் மலேசியா அல்லது பி.எஸ்.எம்), மலேசியாவில் செயலாற்றிவரும் ஒரே இடதுசாரி அரசியல் கட்சியாகும்.  நாட்டின் சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து சமூக சமத்துவத்திற்காகப் போராடிய பல்வேறு ஒத்த சிந்தனைக் கொண்ட அமைப்புகளின் கூட்டணியால் வளமான மற்றும் அவர்களின் ஆரோக்கியமான போராட்ட கதைக்கள் வரலாற்றிலிருந்து ஒன்றினையப்பட்டதாகும்.

இன மற்றும் தேசியவாதக் கதைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அதோடு அடக்குமுறை ஏற்படுத்தும் அரசாங்கத்தால் பல தடைகள் சோசலிசக் கட்சியை நோக்கி எறியப்பட்ட போதிலும், பி.எஸ்.எம் அத்தடைகளைத் தாண்டி வர்க்க வேறுபாடுகளை முன்னணியில் வைக்கும் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.

INS செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில்  பேசிய  பி.எஸ்.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராஜன்  சோசலிச தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சவால்கள் அச்சுறுத்தலாக இருந்தாலும், கட்சி அதன் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாது.  மில்லியன் கணக்கான உரிமையற்ற மலேசியர்கள் இன அடிப்படையிலான அரசியலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் இருக்கிறார்கள்.  ஊழல் அற்ற அரசியல், பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தேசத்தை நாம் உருவாக்க வேண்டும். பி.எஸ்.எம் பல தசாப்தங்களாக அத்தயாரிப்பில்தான் இருக்கிறது.

(INS இணைய செய்தி நிறுவனம் மற்றும் தோழர் சிவராஜனுடனான நேர்காணலிலிருந்து…)

INS: மலேசியா இடதுசாரி பொதுடைமை அரசியல் இயக்கங்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மலேசியாவில் இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தின் வரலாறு இன்று எங்களுக்கு அறிமுகமாகியுள்ள PSM-யின் மீட்சியை எவ்வாறு அமைத்துக்கொண்டது என்ற சுருக்கமான வரலாற்று பார்வையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sivarajan A: நம் நாட்டை பொருத்தமட்டில் இடதுசாரி இயக்கங்கள் என்றவுடன் சில அரசியல் சார்புடையவர்கள் சொல்வதைப் போல பலவாறான புனைவு வரலாறுகள் வளமாக கூறப்பட்டிருக்கும். ஆனால் நிதர்சனத்தில் அவ்வாறு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலேசியாவில் (அன்றைய மலாயாவில்) ஆரம்பகால அரசியல் இயக்கங்களில் ஒன்றாகவும் முதன்மையான இடதுச்சாரி கட்சியாகவும் 1930-இல் நிறுவப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (MCP) விளங்கியது.

அதே காலகட்டங்களில் தான் உள்ளூர் மக்கள் அனைவரும் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (ICP) எழுச்சியால் ஈர்க்கப்பட்டு, அதே வழியில் ஒரு தேசியவாத போராட்டத்தை வளர்க்க முயன்றனர். இதன் நீட்சியாக 1938-இல் இப்ராஹிம் யாக்கோப் மற்றும் ஈஷாக் ஹாஜி முஹம்மத்தின் கூட்டு முயற்சியால் இளம் மலாய்காரர்கள் கூட்டமைப்பு (Kesatuan Melayu Muda) தோற்றுவிக்கப்பட்டது. இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய பெரிய இடதுச்சாரி தேசியவாத இயக்கமாக விளங்கியது.

பின்னாளில், போரும் காலனித்துவத்தின் முடிவும் நாட்டில் அரசியல் சித்தாந்தங்களையும் இயக்கங்களையும் வினையூக்கியது. இது API, BATAS, AWAS, MATA போன்ற சில முக்கியமான இயக்கங்களுடன் மலாயாவில் இடதுசாரி பொதுவுடைமை சார்பு கொண்ட இன்னப்பிற அரசியல் இயக்கங்களின் முழுப் பெருக்கத்தைக் கண்டது. மலாய்க்காரர் அல்லாத இடதுசாரி அரசியல் சித்தாந்தகளுடன் கைகோர்த்ததின் பலனாக பான் மலாயன் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (Pan Malayan Federation of Trades Union), மலாயன் ஜனநாயக ஒன்றியம் (Malayan Democratic Union) போன்ற மாபெரும் சக்திகள் உருப்பெற்றன. 

அப்போதைய மலாயாவின் காலனித்துவ எஜமானர்களாக இருந்த ஆங்கிலேயர்கள், உண்மையிலேயே பல இனக் கூட்டணி மக்கள் அரசியலமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடது PUTERA-AMCJA கூட்டணியை புறக்கணித்து, மலாய் தீவிர தேசியவாதிகள் மற்றும் அரச சார்புடையவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து சுதந்திரத்தை அவர்களின் கைகளில் ஒப்படைத்தனர். எனவே புதிய சுதந்திர நாட்டில் பல தசாப்தங்களாக தங்கள் நலன்களைப் பாதுகாக்கின்ற பிரித்து ஆட்சி செய்யும் (divide-and-rule) கொள்கையை அவர்கள் மலாயாவில் காலணியத்துக்கு பின்பும் தொடர செய்தனர். இதனால் மலாயா இடதுசாரி வழியில் தொடர்ந்து செல்ல தவறவிட்டது.

இந்தக் கொள்கையுடன் இணைந்து, ஆங்கிலேயர்கள் 1948 முதல் 1960 வரை மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (Malayan Communist Party)-க்கு எதிராக "மலாயன் எமர்ஜென்சி" என்ற பெயரில் ஆயுத மோதலில் ஈடுபட்டனர். இது ஒரு அறிவிக்கப்படாத போராக இருந்தபோதிலும் பிரிட்டிஷாரும் அவர்களது உள்ளூர் நேச சக்திகளும் போரின் போது காப்பீட்டாளர்கள் பணம் செலுத்த மறுத்ததால் இதனை போர் என்று வகைப்படுத்த மறுத்தனர்.

எமர்ஜென்சிக்கு பிந்தைய காலக்கட்டத்தில் உள்ளூர் அரசாங்கம், முதலில் பெரிகாத்தான் நேஷனல் பின்னர் பாரிசான் நேஷனல் (BN), என இன அரசியலில் கட்டமைக்கப்பட்ட இரண்டு அரசியல் கூட்டணிகளும் மாறி மாறி இடதுசாரி இயக்கங்களை ஒடுக்குவதைத் தொடர்ந்தன. மேலும் மாற்று அரசியல் கட்டமைப்புகளின் அனைத்து கூறுகளையும் அகற்றும் விதமாக வரலாற்றை மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தது இன்னும் மோசமாக இருந்தது.

ஆனால், மலாயா/மலேசியா மக்கள் மாற்று அரசியல் கட்டமைப்பு என்ற எண்ணத்தை விடவில்லை. பல்வேறு இடதுசாரிகள் சிவில் சமூக அமைப்பு(CSOs)களாகவும், ஆர்வலர்களாகவும், செயல்பாட்டாளர்களாகவும், பொதுவுடைமை ஒளியை முழுவதுமாக அணைந்துவிடாமல் பாதுகாத்தனர். இறுதியாக 1990-களில் பனிப்போர் முடிவுக்கு வந்தபோது, இந்த பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை PSM-ஆக மறுசீரமைத்துக் கொண்டனர். 

இத்தகைய அரசியல் நிறுவனம் அவர்களுக்கு இணையான பலம் படைத்த எதிர் சித்தாந்த வைரிகளுக்கு எளிதாக வழிவிடவில்லை. அவர்களின் காலனித்துவ எஜமானர்களிடமிருந்து பெறப்பட்ட பிரித்தாளும் கட்டமைப்புக்கு எதிரான சோசலிசத்தின் சக்தி வாய்ந்த ஒருங்கிணைக்கும் சித்தாந்ததை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டினர். இதனால், பி.எஸ்.எம் (PSM)-ஐ பதிவு செய்து ஒப்புதல் பெறுதல் வரை (1998-2008) ஒரு முழு தசாப்தமே எடுத்தது. ஆனால் இறுதியில் அரசியல் அங்கீகாரத்தையும் கருத்தியலை வெளிப்படையாக பேசும் உரிமையைப் பெறவும் நமது நிலையான மற்றும் அர்ப்பணிப்பு உந்துதலால் பி.எஸ்.எம் (PSM) அங்கீகரிக்கப்பட்டது.

புதிய சகாப்தத்திற்கான புதிய வழித்தடம்

INS: BN, PH மற்றும் PN அரசியல்வாதிகளின் தற்போதைய நிலைப்பாடுகளுக்கு எதிராக, பல மலேசியர்கள் குறிப்பாக இளைய வாக்காளர்களின் ஏமாற்றத்தையும் அதிருப்தியும் கருத்தில் கொண்டு, பி.எஸ்.எம்  இதை எவ்வாறு பயன்படுத்தி வாக்குகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

ஆ.சிவராஜன்: சோசலிச மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான BN பிரச்சாரத்தின் கொள்கைகளை இளைய தலைமுறையினர் சுமப்பதில்லை. ஆனால் இதைச் சொல்லும் நேரத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மலேசியர்கள் எவ்வாறு சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் உணர்கிறார்கள் என்பதற்கும் இடையே இன்னும் வேறுபாடு உள்ளது.

எனவே இந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை  21- ஆம் நூற்றாண்டின் சோசலிச சிந்தனைகளாக நாம் தொகுக்க வேண்டும். ஆனால் இதன் முதல் பணி வாக்காளர்களை, குறிப்பாக 18-21 வயதுக்குட்பட்ட வாக்காளர்களை, அவர்களின் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அது கட்சியின்  சின்னம் மற்றும் அதன் சொல்லாட்சியின் அடிப்படையில் இருக்ககூடாது.

2008, 2013 அல்லது 2018 பொதுத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் மேற்கொள்ளும் இந்தப் பணி இப்போது மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது, ஏனெனில் இரண்டு அரசியல் பிளவுகளிலிருந்தும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன வழங்குகிறார்கள் என்பதை மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். மலேசிய சமூகம் (மக்கள்) BN –PN மற்றும்  அவர்களது கூட்டணிகளின் குணாதிசயங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக  பிளவுபடுத்தும் இன மற்றும் நவ-தாராளவாத கொள்கை நிரலுடன் ஆட்சி செய்கின்றன.

 பக்காத்தான் ஹராப்பான் (PH) அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலையும் ஒரு கேலிக்கூத்தாகதான் அம்பலப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலதன சார்பு, முதலீட்டு உந்துதல் மற்றும் வணிக-நட்பு நிர்வாகத்தின் காரணமாக,  PH கோட்டையான பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய இரண்டு மாநிலங்கள் 2008 முதல் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றன. பல சமயங்களில் அவர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது. பினாங்கு கடல் மீட்புத் திட்டம், சிலாங்கூர் வடக்கு கோலா லங்காட் வனப் பகுதி அழிப்பு போன்ற சமீபகாலமாக சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இரண்டு எதிரெதிர் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு இடையில் நமது கருத்தியல் மாற்றத்தை முன் வைப்பதே சவாலாக உள்ளது. அனைத்து விஷயங்களிலும் மக்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பெருவணிகங்களைக் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய 3-வது முற்போக்கு இடது தொகுதிக்கான அவசரத் தேவை இருக்கிறது என்ற கருத்தியலை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே சீர்திருத்தம் மற்றும் உறுதியான கொள்கைகளை நோக்கிய மலேசியாவிற்கு ஒரு புதிய இடதுசாரி சிந்தனைக்கொண்ட ஒப்பந்தத்தை வழங்கும் ஒரு தீவிரமான பிரச்சாரத்துடன் இதைச் செய்ய நாங்கள் உத்தேசித்துள்ளோம். மக்களை அவை திறம்பட சென்றடைய முடிந்தால், நல்ல கொள்கைகளை உருவாக்குவதற்கு சோசலிசவாதிகள் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள தொகுதிகளில் அவர்களுக்கு வாக்குகளை வழங்குவதை இலக்காகக் கொள்ளலாம்.

INS:  வரவிருக்கும்  15-வது பொதுதேர்தலில் சுயேச்சைகள், சிவில் சமூகம் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சோசலிஸ்டுகள் தலைமையிலான மூன்றாவது சக்தியின் மையத்தை பி.எஸ்.எம்- கட்சியினால் உருவாக்க முடியுமா?

ஆ.சிவராஜன்: ஆம், பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. பிஎஸ்எம் கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல CSO-க்கள் மற்றும் பிற குழுக்களுடன் சந்திப்புகளைத் தொடங்கி நடத்திவருகிறது. 15-வது பொதுதேர்தலில் வேட்பாளர்களை  நிறுத்துவதற்கு இந்த CSO-க்களுக்கு பி.எஸ்.எம்-முடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. என்றபோதிலும் இன்னும் அதற்கான அடித்தளம் அமைக்கப்படவில்லை. ஆனால், மூன்றாம் படை அரசியல் கூட்டணிக்கான மாற்று திட்டம் பலமுறை முயற்சி செய்யப்பட்டுள்ளது.

2014-ல், 13-வது பொதுதேர்தலுக்குப் பிறகு, இடதுசாரிக் கூட்டணி எனப்படும் முற்போக்கான இடதுசாரிக் கூட்டணியைத் தொடங்கினோம். அது இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு நபர்களின் கலவையாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கூட்டணியை  ஒழுங்கமைக்கப்பட்டபோது அதில் ஒரே அரசியல் கட்சியாக இருந்தது  பி.எஸ்.எம் மட்டுமே. மற்றவர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பங்கேற்கிறார்கள் அல்லது அவர்கள் வெறும் NGI மற்றும் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்களாக இல்லை.  எனவே இந்த முயற்சி  14-வது பொதுதேர்தலுக்கான நம்பகமான மூன்றாம் படை அரசியல் கூட்டணியை உருவாக்கத் தவறிவிட்டது.

ஒரு முற்போக்கான கூட்டணியை உருவாக்கும் யோசனைக்கு நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். ஆனால் நியாயமான ஆதரவுடன் வலுவான அமைப்பாக வர எங்களுக்கு தீவிரமாக செயற்படும் தோழர்கள் தேவை. ஆனால் உண்மையில், இந்த யோசனைக்கு ஆர்வமுள்ள பல நல்ல ஆர்வலர்கள் உள்ளனர், என்றாலும் அவர்களுக்கு அமைப்பு  மற்றும் வெகுஜன ஆதரவுகள் இல்லை. 3 -வது நம்பகமான அரசியல் சக்தியாக நம்மை முன்னிறுத்துவதற்கு, நாம் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவையில் பல இடங்களில் போட்டியிடும் கட்சிகளின் கூட்டணியாக இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் நம்மை வீணடிக்கும்  சுயேட்சை வேட்பாளர்களாகத்தான் பார்ப்பார்கள்.

கடந்த  14-வது பொதுதேர்தலின் போது, ​​CSOக்கள் மற்றும் பிற குழுக்கள் பக்காத்தான் ஹரப்பானை (PH) முழுமையாக ஆதரித்து, பி.எஸ்.எம் கட்சியாக தனித்தனியாக தனித்து போட்டியிட்ட  எங்களை கேலி செய்தனர். இப்போது PH -இன் உண்மையான நிறங்களைப் பார்த்த பிறகு, CSO-க்கள் மாற்று மூன்றாவது சக்தியை உருவாக்க தங்களை அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். பி.எஸ்.எம், PH இல் கூட்டணி சேராது என்று திட்டவட்டமான முடிவில் இருக்கிறோம். அரசியலில் மாற்றங்களை உருவாக்குவதில்  தீவிரமாக இருப்பவர்கள், பி.எஸ்.எம்-உடன்தான் இணைய வேண்டுமே தவிர மீண்டும்-மீண்டும் PH-ஐ நம்பி ஆதரிக்ககூடாது. அவர்கள் உறுதியுடன் எங்களுடன் (PSM) இணைவார்கள் என்று நம்புகிறோம்.

 

INS: மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் PSM வெற்றிபெற்றால் PSM கொண்டு வரக்கூடிய சில முக்கிய கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் யாவை?

ஆ.சிவராஜன்: எங்களின் முக்கிய கவனம் சீர்திருத்தத்தில் மட்டுமல்ல,  மாற்றங்களை கட்டமைப்பது உள்ளிட்ட பலதில் உள்ளன, சிலவற்றை பட்டியலிடுகிறேன்…

-சீர்திருத்தத்தின் முக்கிய பகுதிகள் - உழைக்கும் மக்களுக்கு, வீட்டுடமை, சுகாதாரம், கல்வி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்பு.

- வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தங்கள், தொழில்உறவு சட்டம் மற்றும் தொழிற்சங்க அமைப்பு சட்டம் ஆகியவை தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராக அமலாக்கத்தை அதிகரித்தல்.

- மக்களுக்கான வீடுகள், மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் பங்கை மீண்டும் தொடங்குதல். அரசாங்கம் B40க்கான வீட்டு வசதியை செயல்படுத்த வேண்டும் மற்றும் மேம்பாட்டாளர்களை நம்பி இருக்கக்கூடாது. வாடகைக்கும் விற்பனைக்கும் PPR வீடுகளை மேம்படுத்துதல்.

- பொது சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அதிக பொது மருத்துவமனைகளை உருவாக்குதல் மற்றும் பொது மருத்துவமனைகளின் மருத்துவர்கள் தனியார் துறைக்குச் செல்லுவதை நிறுத்தப்படுதல். புதிய தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சுற்றுலா மீது தடை.

-  அனைவருக்கும் முதற்பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

- வறுமையை நிவர்த்தி செய்வதற்கான இலக்கை அணுகுதல். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களின் தரவுத்தளம் வரைதல். இந்தக் குடும்பங்களைச் சென்றடைய சமூக மற்றும் நலப் பணியாளர்களை அதிகக்படுத்துதல். கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு நேரடி பண உதவி. எளிய பதிவு மற்றும் உதவி தேவைப்படும் அனைத்து ஏழைகளின் தரவுத்தளத்துடன் அனைவருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நலத்திட்டம் வழங்குதல்

-இன வேறுபாடுகளின் இடைவெளியைக் குறைக்க சமூக உள்ளடக்கம் மற்றும் பாகுபாடு இல்லாத சட்டம்.

- உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துதல்; உள்ளூர் தொழில்களில் கவனம் செலுத்துதல், வேலைகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கான திறமைகள் கண்டறிதல். வெளிநாட்டு முதலாளிகளின் வட்டியில்லாத முதலீட்டை திறம்பட கட்டுப்படுத்துதல்.மாநில வருவாயை அதிகரிக்க வெளிநாட்டு முதலாளிகளின் மீது  வரி விதித்தல்.

- செல்வாக்கு உள்ள செல்வந்தர்களின் சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்துதல்

- இளைஞர்கள் மற்றும் வேலையற்றோருக்கான வேலை உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். முக்கிய முதலாளியாக அரசாங்கமே இருத்தல்.

- வன காப்பகங்களில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க உரிமங்கள் மீதான தடை.

 

INS: பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு கட்சி மேற்கொள்ள வேண்டிய சில முயற்சிகள் என்ன மற்றும் கட்சியின் முக்கிய வாக்காளர்கள் யார்?

ஆ.சிவராஜன்: நாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது இரண்டு தரப்பு மக்களை. ஒன்று அடிமட்ட களப்பணி மூலமாகவும் மற்றொன்று நமது தேசிய பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாட்டின் மூலமாகவும். கட்சியினால் அமைக்கப்பட்ட அடிமட்ட இயக்கம் ‘MARHAIN’ (பாமர மக்களுக்கான ஒருங்கிணைப்பு குழு) என்று அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், கால்நடை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புற குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நகர்ப்புற ஏழைகள், பழங்குடியினர் போன்றவர்களுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பு இன்னும் தொடக்க கட்டத்தில்தான் உள்ளது.  எல்லா மாநிலங்களிலும் இந்த அமைப்பை இன்னும் நிறுவவில்லை.

மேலும் தேசிய அரசியல் மற்றும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளில் நாம் எடுக்கும் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிலைப்பாடுகள் மூலம் பெரும்பான்மை மக்களை எங்கள் இலக்கு சென்றடைந்துள்ளது. இதை தொடர்ந்து,காலநிலை மாற்றம், பழங்குடி மக்களுக்கு ஆதரவு மாற்று பாலினத்தவர்களின் மீதான தாக்குதல்களுக்கு குரல் கொடுத்தல்  பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான பிற முயற்சிகள் போன்ற எங்களின் தேசிய பிரச்சாரங்கள் மூலம் பலர் எங்களுடன் இணைந்துள்ளனர்.

 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...