Sunday, May 30, 2021

வெளிநாட்டினருக்குப் பொது மன்னிப்பு திட்டத்தைச் செயல்படுத்துக- ஷரன் ராஜ்



முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, முறையான ஆவணம் இல்லாத வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கும் திட்டத்தைக் குடிநுழைவுத் திணைக்களம் இரத்து செய்ய வேண்டுமென, மலேசியச் சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியச் செயற்குழு உறுப்பினரான ஷரன் ராஜ், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடினைக் கேட்டுக்கொண்டார்.

தடுத்து வைப்பதைவிட, அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும், ஏனெனில் தடுப்புக்காவல் மையங்களில் நெரிசலை அது கூட்டும் என்று ஷரன் ராஜ் கூறினார்.

“சிறைச்சாலைத் துறை கூடுதல் தடுப்பு மையங்களை ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஹம்ஸா கூறினார், ஆனால் சுஹாகாமின் கூற்றுப்படி, மலேசியச் சிறைச்சாலைகள் ஏற்கனவே மிகவும் நெரிசலில் இருக்கின்றன, மேலும் இது கோவிட் -19 பரவும் அபாயத்திற்கும் வித்திடும்.

“ஆவணமற்ற வெளிநாட்டினரைச் சிறைகளில் அடைப்பது கோவிட் -19 நேர்வுகளை அதிகரிக்கும், மேலும் கைதிகள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து பொது மக்களை விட 5.5 மடங்கு அதிகம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, தொற்றுநோய்களுக்கு மத்தியில், கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மேலும் சிக்கல் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிறைச்சாலையின் நெரிசலைக் குறைப்பதே ஹம்ஸாவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

“உள்துறை அமைச்சு கைதிகளின் எண்ணிக்கையை 80 விழுக்காடு குறைக்க முடியும், ஏனெனில் 25 விழுக்காடு கைதிகள் விசாரணைக்குக் காத்திருக்கிறார்கள், 55 விழுக்காடு கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பிரச்சினையைக் குற்றச்செயலாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை, போதைக்கு அடிமையாகியவர்களை நோயாளிகளாகக் கருதி சிகிச்சை அளிக்கலாம், அவர்கள் குற்றவாளிகள் அல்ல.


“பதிவு செய்யப்படாத வெளிநாட்டவர்கள் மீது வழக்குத் தொடராமல், அவர்களுக்குப்  பொது மன்னிப்பு வழங்கி, அவரவர் நாட்டிற்கேத் திருப்பி அனுப்பும் திட்டத்தை உள்துறை அமைச்சு செயல்படுத்தினால், அவர்கள் தயக்கமில்லாமல் முன்வருவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 1 முதல், முழு கதவடைப்பு அமலில் இருக்கும் இரண்டு வாரங்களில், கோவிட்-19 எஸ்ஓபி-க்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருவதாக நேற்று ஹம்சா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆவணமற்றப் புதிய வெளிநாட்டினரின் நுழைவைத் தடுப்பதற்காக, சட்டவிரோத பாதைகள் மற்றும் நீர் நிலைகளில் தடுத்து வைக்கப்படுவதும், நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டினர் குடியிருப்புகளில் சோதனைகள் நடத்துவதும் இதில் அடங்கும் என்று ஹம்சா கூறினார்.

“அனைத்து எஸ்ஓபி-க்களும் இறுக்கப்பட வேண்டும், குறிப்பாக வெளிநாட்டினர் தரையிறங்கும் முக்கிய இடங்கள்.

“நாங்கள் மலேசியக் குடிநுழைவுத் துறையுடன் நாங்கள் கலந்து பேசிவிட்டோம், தேசியப் பதிவுத் துறையுடன் இணைந்து சில நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். ஏனென்றால் எஸ்ஓபி, பி.கே.பி., எல்லாம் நடைமுறைக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது, முதல் கட்டத்தில் இருந்து, கட்டங் கட்டமாக, இருப்பினும் மக்கள், அதாவது வெளிநாட்டினர் இன்னும் பிடிவாதமான இருந்தால் நாம் அவர்களைக் கைது செய்வோம், சிறைச்சாலைகள் தயாராக இருப்பதை நாம் உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பி.கே.பி.யின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறித்த தகவலைத் தெரிவித்த ஹம்ஸா, இந்த முறை தனது தரப்பு சிறைச்சாலை மற்றும் செயற்கைக்கோள் கிடங்குகளுடன் தயாராக இருப்பதாகக் கூறினார்.

முழு கதவடைப்பின் போது, நாடு முழுவதும் 55,000 காவல்துறையினர் பணியில் நிறுத்தப்படுவார்கள், தற்போது 37,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

நேற்று, வடக்கு-தெற்கு முன்முயற்சி நிர்வாக இயக்குநர் அட்ரியன் பெரேரா, இக்காலகட்டத்தில் ஆவணமற்ற வெளிநாட்டினரை இலக்காகக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையும், நடப்பில் இருக்கும் தடுப்பூசி திட்டத்தைப் பாதிக்கும் என்று கூறினார்.

-நன்றி மலேசியாகினி


Sunday, May 23, 2021

டாக்டர் ஜெயகுமார் ஊத்தான் மெலிந்தாங்கில் போட்டியிடுவதை ஆதரிக்கிறோம்...

சுங்கை சிப்புட் கிளையின் செய்தி அறிக்கை


கடந்த 16/5/2021, தமிழ் மலர் நாளிதல் செய்தியில், முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய சோசலீஸ்ட் கட்சியின் தேசிய தலைவருமான டாக்டர் ஜெயகுமாருக்கு ஊத்தான் மெலிந்தாங் மக்களின் ஆதரவும், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் போட்டியிட கோரிக்கை விட்டது வரவேற்க்கத்தக்கது. டாக்டர் குமாரின் மக்கள் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம். இதற்கு பி.எஸ். எம் கட்சி  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பி.எஸ்.எம், வான்குடை வேட்பாளரை ஆதரிப்பதில்லை. ஒரு தொகுதியில் போட்டியிடும் முன் அந்த தொகுதியில் குறைந்தப்பட்ச காலம்  சேவையாற்றி, அத்தொகுதி மக்களின் தேவையறிந்த ஒருவரை வேட்பாளரை நிறுத்தவதை பி.எஸ்.எம் கட்சி நம்புகிறது. அதையே இன்று வரை செயல்படுத்துகிறது. ஆகவே, ஊத்தான் மெலிந்தாங் மக்களின் தேவை இதுவென்றால், அங்கே பி.எஸ்.எம் கட்சியின் கிளை தொடங்கி மக்கள் சேவையில் ஈடுபாட சம்பந்தப்பட்ட மக்கள் முன்வர வேண்டும். இதுவே ஜனநாயத்தை நிலைநிறுத்தும், அதே வேளையில் கட்சி தாவலை தடுக்கும்.

கடந்த பொது தேர்தலில் பரிசான் நேசனல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையில், தனித்து நின்ற பி.எஸ்.எம் கட்சியின் டாக்டர் குமார் தோல்வியுற்றார், ஆனால் இன்னமும் சுங்கை சிப்புடில் சேவையாற்றி வருகிறார். சுங்கை சிப்புட் பி.எஸ்.எம் கிளை இன்றளவும் திறம்பட துடிதுடிப்புடன் மக்கள் சேவையாற்றிவருகிறது. இத்தொகுதியில் டாக்டர் குமாரின் சேவையை மக்கள் நாடும் அதே வேளையில் டாக்டர் குமார் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பாப்பு தொகுதி மக்களிடையே உயர்ந்துள்ள வேளையில், நம்பிக்கை கூட்டணி பி.எஸ்.எம் கட்சிக்கு வழி விட்டு பொது தேர்தலில் தொகுதியின் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேச்சும் மக்களிடையே காணப்படுகிறது. 


இறுதியாக, தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நம்பிக்கை கூட்டணியுடன் பி.எஸ்.எம் கட்சியின் மத்திய செயலவை தொடங்கியிருக்கும் வேளையில், சுங்கை சிப்புட் தொகுதியின் பி.எஸ்.எம் கட்சி, சுங்கை சிப்புட் கிளை கடந்த 30 ஆண்டுகளாக இந்த மண்ணில் தனது சேவையைத் தொடரும் என கிளைத் தலைவர் திரு மா.அகஸ்தியன் தெரிவித்தார்.

Sunday, May 2, 2021

ஊதியம் வழங்காததால் பாகிஸ்தான் தொழிலாளி மரணம் – கொலையா? தற்கொலையா?

 

கடிதம் | ஓர் இளைஞன் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டான், இயற்கை காரணங்களால் அவன் இறக்கவில்லை; ஒரு விபத்தில் அவன் பலியாகவில்லை, கோவிட்-19 பெருந்தொற்று அவனைக் கொல்லவில்லை; ஊதியம் வழங்கப்படாததால் அவன் தனது உயிரை மாய்த்து கொண்டான். அதை அவன் தனது வீடியோ பதிவில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளான், அதில் அவன் தனது முதலாளி யார் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளான்.

அந்த வீடியோ பதிவு இரண்டு உலகங்களுக்கு இடையிலான – தொழிலாளி மற்றும் முதலாளி – வேற்றுமையையும் வர்க்க முரண்பாட்டையும் காட்டியுள்ளது.

முதலாளி இதுவரை செலுத்தப்படாத ஊதியத்தை இப்போது செலுத்தியுள்ளதாகவும், இறந்தவரின் உடலை தன் சொந்தப் பணத்தில் அவர் நாட்டுக்கு அனுப்பியதாகவும், உடன் ‘நல்லெண்ணப் பணம்’-ஐயும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது அவரின் குடும்பத்தார் அமைதி காக்கவும் சமாதானமாகப் போகவும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தக் கதை இங்கேயே இப்படியே முடிய வேண்டுமா?

நாம் அமைதியாக இருக்க முடியுமா? மத்திய அரசியலமைப்பின் 5-வது பிரிவின் கீழ், ஊதியம் வழங்காதது வாழ்வாதாரத்திற்கான உரிமையை மீறுவதாகும். இந்த வழக்கில், குற்றவியல் மீறல் காரணமாக ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாக்கிஸ்தானியத் தொழிலாளி ஷாஜாத் அகமது, அவரது முதலாளி லேண்ட்சீல் சென். பெர். (Landseal Sdn Bhd) நிறுவனம் ஐந்து மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் தூக்கில் தொங்கிவிட்டார். முன்னதாக, அத்தொழிலாளி மோசமான நிதி சுமையிலிருந்து விடுபட, தான் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதாகக் கூறி, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.



அரசாங்கத்திடம் பதில்களைக் கோரும் பல கேள்விகள் நம்மிடம் உள்ளன.

புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, வாங்கியக் கடன்களைத் – பெரும்பாலும் பேராசை கொண்ட இடைத்தரகர்களுக்கு – திருப்பிச் செலுத்த, சம்பாதிக்க இங்கு வந்துள்ளனர், குறைந்த வருமானம் பெறும் அவர்களால், ஒரு மாதத்தைக் கடக்கும் அளவிற்குக்கூட சேமிக்க முடிவதில்லை.

ஐந்து மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல், தனது நாட்களைக் கடக்க வேண்டிய ஒரு தொழிலாளியின் மன அழுத்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள். ஒன்றும் இல்லாமல் வாழ, அவரை எந்தவொரு ஆலோசனையும் வற்புறுத்த முடியாது, எதுவும் இந்தத் தொழிலாளிக்கு உதவியிருக்க முடியாது : அவருடைய ஊதியம் மட்டுமே அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஒரு முதலாளி தனது தொழிலாளிக்கு இத்தனை மாதங்கள் சம்பளம் வழங்காமல் தப்பிப்பது எப்படி சாத்தியமானது? நாட்டில், ஊதியம் வழங்கப்படாதச் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன, ஊதியம் வழங்குபவர் அரசாங்கமாக இருப்பினும், பள்ளி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் போல. பலமுறை இச்சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், அதில் தீவிரக் கவனம் செலுத்தப்படுவதில்லை. பெரும்பாலான முதலாளிகள் தப்பித்துக்கொள்கிறார்கள், குற்றத்தில் இருந்து விலகிச் சென்று, மீண்டும் அதனைச் செய்கிறார்கள்.

இப்போது மனிதவள அமைப்புகளின் மோசமான அமலாக்கத்தால் ஓர் உயிர் பலியாகிவிட்டது, மனிதவள அமைச்சு இனி இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமா?

இந்தச் சம்பவத்திற்கு ஒரு பொதுவான எதிர்வினை என்னவென்றால், மனிதவள இலாகா அலுவலகத்தில் புகார் அளிக்காமல், அத்தொழிலாளி ஏன் இவ்வளவு தீவிரமான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான்.

தொழிலாளர்கள் தங்கள் புகார்களைத் தொழிலாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல உரிமை உள்ளதா? துரதிர்ஷ்டவசமாக, இந்த உரிமை காகிதத்தில் மட்டுமே உள்ளது; உண்மையில் புகார் அளிப்பவர்கள் வேலையிடத்தில் பழிவாங்கல் மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.

பாதுகாப்பற்றச் சட்டத்தால், இந்த இளம் பாகிஸ்தான் தொழிலாளி பலியானார். அரசாங்கம் தனது வணிகச் சார்பு நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், அமலாக்கக் குறைவுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் மிதிபடவும், தங்கள் குறைகளை வெளிகாட்ட முடியாமல் தவிக்கவும் அனுமதிக்கக்கூடாது.

இந்தத் துயரச் சம்பவம், மலேசியாவில், நாம் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களை நிர்வகிக்கும் முறையில் உள்ள மோசமான நிலையைக் குறிக்கிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கான சுயாதீனக் குழுவின் அறிக்கை மற்றும் மலேசியாவில் தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான ஒரு விரிவான தேசியக் கொள்கையை நோக்கிய MWR2R அறிக்கை போன்றவற்றில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நல்லதொரு மாற்றத்தை நாம் காண முடியாது.

அரசாங்கம், இந்தத் துறையை ஒழுங்குபடுத்தாமல், முதலாளிகளின் எண்ணம் மற்றும் விருப்பப்படி விட்டுவிடுவதை ஏற்க முடியாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தொழில்கள் மோசமடைவதைத் தடுக்கக் கடுமையான கோரிக்கைகள் இருந்தபோதிலும், அவர்களின் உரிமைகளுக்கு உரிய மரியாதையை முதலாளிகள் கொடுக்க மறுக்கின்றனர்.

ஊதியம் வழங்குவதைத் தவிர்க்கும் முதலாளிகள் மீது, எந்தவொரு சாக்கு போக்கும் சொல்லாமல் அரசாங்கம் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாக்கிஸ்தானியத் தொழிலாளியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த முதலாளி மீது உடனடியாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) அரசாங்கத்தைக் கோருகிறது.

- மோகனராணி இராசையா, புலம்பெயர் தொழிலாளர் நலப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், பி.எஸ்.எம்.

மே 1, 2021 – பணி உத்தரவாதமே வாழ்க்கைக்கானத் தடுப்பூசி

 


நாட்டில், இவ்வாண்டு மே தினக் கொண்டாட்டம், பேரணிகள் ஏதுமின்றி அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றும் அவசரகாலப் பிரகடனமும் இக்கொண்டாட்டத்தை முழுவதுமாகத் தடைசெய்யவில்லை எனலாம். கோலாலம்பூர், பேராக், ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில், சிறிய அளவிலான குழுவினர் ஒன்றுகூடி மே தினக் கோரிக்கைகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேவேளை, ஆண்டு தோறும் இத்தினத்தை மிக விமரிசையாக, தலைநகரில் பேரணி நடத்தி கொண்டாடி வரும் மே தினச் செயற்குழு இம்முறை இயங்கலையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாண்டு மே தின அணுசரிப்பில், அவர்கள் வெளியிட்ட 2021 மே தினப் பிரகடனம் அறிக்கையின் சாரம் பின்வருமாறு :-

இவ்வாண்டு, நாம் மே தினக் கொண்டாட்டத்தில் இணைந்திருக்கும் போது, கோவிட் -19 தொற்று, அவசரகாலச் சட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நம் கண் முன்னே மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. கோவிட்-19 தொற்றின் விளைவு, பொது சுகாதார நெருக்கடியாக மட்டுமல்லாமல், பொருளாதாரம், தொழில் பாதுகாப்பு, வேலையின்மை, உணவு பாதுகாப்பு மற்றும் பசி போன்ற பல தாக்கங்களை உருவாக்கியுள்ளது.

முறைசாரா துறை சார்ந்த தொழிலாளர்கள், அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணிநீக்கம், ஊதியம் வழங்காமை, ஆட்குறைப்பு, ஒடுக்குமுறை போன்ற பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர். இந்தத் தொற்றுநோய் காலகட்டத்திலும், முதலாளிகள் தொடர்ந்து இலாபத்தை ஈட்டிவருகின்றனர், ஆட்சியாளர்கள் அவசரகாலப் பிரகடனத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். தொழிலாளர்களைப் பொறுத்தவரை, வேலை பாதுகாப்பு மட்டுமே வாழ்க்கைக்கானத் தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. குடும்பத்தை வழிநடத்தி செல்வதென்பது தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.

வேலை பாதுகாப்பு என்பது மத்திய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உரிமையாகும், இதுவே தொழிலாளரகளின் வாழ்வாதாரத்திற்கான தடுப்பூசி. மாறுபட்ட வகையில் கொண்டாடவிருக்கும் இந்த 2021-ன் தொழிலாளர் தினத்தில் நாங்கள் 15 கோரிக்கைகளை முன்வைக்கிறோம் :-

1.  வேலை உத்தரவாதத் திட்டத்தை அரசு நிறுவ வேண்டும்

-தேவையான பொது பயன்பாட்டு திட்டங்களை உருவாக்குங்கள், தரிசு நிலங்களைப் பயிரிட அனுமதியுங்கள், திவாலாகிவிட்ட தொழிற்சாலைகளைக் கையகப்படுத்துங்கள்.

-வருமானமே இல்லாதக் குடும்பங்களுக்கு, மாதத்திற்கு 1000 ரிங்கிட் என்ற அடிப்படை மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்.

-ஒப்பந்த முறையை நீக்கி, நிரந்தரப் பணி பாதுகாப்பு முறையை ஏற்படுத்துங்கள்.

- ‘GIG’ பொருளாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்குப், பாதுகாப்பு வழங்க தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சொக்சோவில் திருத்தங்களைச் செய்யுங்கள்.

-வேலை இழப்பு நேரத்தில் தொழிலாளர்களின் சுமைகளைக் குறைக்க, தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தில் (sip) அவர்கள் பயன்பெரும் வகையில் நிபந்தனையற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவாருங்கள்.

-அனைவருக்கும் உலகலாவியச் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதத்தை அமல்படுத்துங்கள், ஓய்வூதியத் திட்டம், முதியோருக்கான வசதிகள் உட்பட, மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

-முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய, கோவிட்-19 பாதுகாப்பு குழுவைப் பணியிடத்தில் செயல்படுத்த வேண்டும். சுகாதார அமைச்சின் நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

2. அவசரகாலப் பிரகடனத்தை இரத்து செய்து, நாடாளுமன்றத்தைக் கூட்ட வெண்டும்

தற்போதுள்ள சுகாதார நடைமுறை சட்டங்களில், கோவிட் -19 தொற்றுநோய்க்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருப்பதையும் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

3. அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, சிறந்த மற்றும் இலவச சேவையைப் பராமரிக்க, அதிக நிதி கொடுங்கள். பாரபட்சமின்றி அனைவருக்கும் சிறந்த சுகாதாரச் சிகிச்சை கிடைக்க தனியார் சுகாதார மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தி தேசியமயமாக்குங்கள். மருத்துவமனையின் முனைமுகத் ஊழியர்களுக்கான சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அடங்கும்.

4. அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல்

புலம்பெயர்ந்தோர் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்களின் கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கான வேலைவாய்ப்பு உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், சுரண்டல் இல்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். புலம்பெயர்ந்து அல்லது அகதிகளாக இங்கு வந்த தொழிலாளர்களை கைது செய்வதையோ அல்லது வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதையோ நிறுத்துவதோடு, அவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


5. தொழிலாளர் சங்கங்களுக்கு உரிமை

தொழிற்சங்கங்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில்துறை நல்லிணக்கத்தின் உணர்வை மதிக்க வேண்டும். தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் உறுதி செய்யப்படுவதற்கு வசதிகள் செய்துத்தரப்பட வேண்டும்.

6. பாலினம், பாலியல் சார்ந்த பாகுபாட்டை நிறுத்தவும். பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவும்.

பெண்கள், திருநங்கைககளுக்கு வேலையிடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை நிறுத்த வேண்டும். பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச மாநாட்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பாலினச் சமத்துவச் சட்டம் மற்றும் பாலினத் துன்புறுத்தல் சட்ட வரைவைக் கொண்டுவர வேண்டும். குழந்தைகள் சட்ட மாநாட்டு பரித்துறைகளைப் பின்பற்ற வேண்டும்.

7. பூர்வக் குடியினர் உரிமைகள்

மலேசியாவில், பழங்குடி மக்களின் பூர்வீக நிலங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதோடு, நிரந்தர நில பட்டாவையும் வழங்க வேண்டும். மலேசியாவில் (தீபகற்பம், சபா மற்றும் சரவாக்) பூர்வீக மக்களின் நிலம் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும்.

8. வசதியான குடியிருப்புகள் அமலாக்கம் மற்றும் கட்டாய வெளியேற்றத்தை நிறுத்துங்கள்

மக்கள் வீட்டு வசதி திட்டத்தை மலிவு விலையிலும், மக்களுக்கு வசதியான இடத்திலும் அமைக்க வேண்டும். கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் விளைந்துள்ள சிக்கல்களினால், வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுத்து கடன் ஒத்திவைப்பைச் (மோராதோரியம்) செயல்படுத்த வேண்டும்.


9. விவசாய உரிமைகள் மற்றும் உணவு உத்தரவாதம்

விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகளை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நிறுத்துங்கள். உள்ளூர் உணவு உற்பத்தி திறனை உறுதி செய்வதற்கு நீண்ட காலமாக விவசாயம் செய்து வருபவர்களுக்கு நிலப்பட்டா வழங்கவும் மானியங்களை அங்கீகரிக்கவும் வேண்டும்.


10. பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும்

அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, மக்களுக்கான அரசாங்கத்தின் உதவி பணம் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.


11. ஊடகச் சுதந்திர உத்தரவாதம்

மக்கள் குரலைக் கட்டுப்படுத்தும் தகவல் பல்லூடகம் மற்றும் பொய் பிரசாரச் சட்டம், பொக்கா, பொடா, சோஸ்மா மற்றும் நிந்தனைச்சட்டம் (1948) ஆகியவற்றைத் தடை செய்வதோடு, ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வெளியீட்டு மற்றும் அச்சக பத்திரிகை சட்டம்; மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 மற்றும் விசாரணையின்றி தடுப்புக்காவலை அங்கீகரிக்கும் அனைத்து சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும்.

12. மாணவர் உரிமைகள்

பல்கலைக்கழக, கல்லூரிச் சட்டம் (AUKU), சட்டம் 174, கல்விக் கடனுதவிச் சட்டம், திறன் மேம்பாட்டு நிதி நிறுவனம் (PTPKN) மற்றும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் இரத்துசெய்ய வேண்டும். புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.


13. அடிப்படை சேவைகளைத் தனியார் மயமாக்குதலை நிறுத்துங்கள்


நீர், மின்சாரம், சுகாதாரம், பொது போக்குவரத்து, கல்வி ஆகியவைத் தனியார் மயமாக்கப்படக்கூடாது, இவை ஓர் அரசாங்கம் தனது மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை தேவைகள் ஆகும்.

14. வளங்களைப் பகிர்தல், பன்னாட்டு நிறுவனங்கள் மீது சிறப்பு வரி

பெறுந்தொற்று காலங்களில், வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, ஏழை பணக்கார இடைவெளி அதிகரிக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளுக்கான செலவின் ஒரு பகுதியை ஈடுகட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவசர வரியை விதிக்கலாம்.


15. சுற்றுச் சூழல் அவசரகால நிலையை அறிவிக்கவும்

பாக்சைட் சுரங்கம், எரியூட்டிகள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் மலேசியர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பிறத் திட்டங்களை நிறுத்துங்கள். வெளிநாடுகளில் இருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதையும், விவசாய நிலங்களுக்குத் தீ மூட்டுவதையும் காட்டு மரங்களை வெட்டுவதையும் நிறுத்துங்கள்.  தூய்மையான மற்றும் மலிவான மாற்று ஆற்றலைப் பயன்படுத்துங்கள்.

நன்றி மலேசியாகினி 1/5/2021

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...