Friday, February 14, 2020

பஹாங் மாநில அரசாங்கமே நிலத்தை வழங்க வேண்டும்..




தனியார் நிறுவனங்கள் தலையீடு வேண்டாம்!
பஹாங் மாநில அரசாங்கமே நிலத்தை வழங்கலாம்..
-பிஎஸ்எம் வலியுறுத்துகிறது

கோலாலம்பூர்: பிப்ரவரி 14

அண்மையில் கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள்  அழிக்கப்பட்டது தொடர்பான விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததுதான். அந்த சம்பவத்தை முன்னிட்டு பல எதிர்வினைகளையும் மனக் குமறல்களையும் பலதரப்பினர் வெளிப்படுத்தியிருந்தனர். மலேசிய சோசலிசக் கட்சியும் தனது எதிர்வினையை பதிவு செய்திருந்தது.

தற்போது மாநில மந்திரி பெசார்  வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கேமரன் மலையில் உள்ள விவசாய நிலங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டத்தை கூறியுள்ளார். இத்திட்டதின் வழி 1018 காய்கறி விவசாயிகளிடம்  TOL உரிமத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றும் இனி விவசாயிகளின் TOL உரிமம் ரத்து செய்யப்பட்டு அது வாடகை ரீதியாக செயற்படவுள்ளது என்றும் அறிவித்தார்.



இதற்கு முன்பு இந்த TOL உரிமம் வருடத்திற்கு ஒரு முறைதான் வழங்கப்பட்டு வந்தது. அந்த வருடாந்திர முறையில்  ஒரு காய்கறி பயிரிடும் விவசாயிக்கு அந்த நிலம் நிரந்தரமில்லாத சூழலையும் அச்சத்தையும் ஏற்படுதியது. மேலும், அவர்கள் பெரிய அளவில் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பு முறையிலான  விவசாயத்தை நடைமுறைப்படுத்தவும் மேலும், விவசாயத்தில் ஏற்படும் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்வதற்கான பொருளாதார வசதியை செய்ய முடியாமலும் இருந்தது. காரணம் நிரந்தரமில்லாத ஓராண்டு உரிமத்தில் அவர்கள் துணிந்து பணத்தை முதலீடு செய்வதற்கு சாத்தியமில்லாமல் இருந்தனர்.  

தற்போது மாநில மந்திரி பெசார் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த வாடகை முறையிலான புதிய திட்டம், மூன்றாண்டுக்கு நீட்டித்திருப்பது வரவேற்கவேண்டிய ஒன்று. அந்த வகையில்  கேமரன்மலையில் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய நிலம் 5526.219 ஹெக்டராக இருக்கிறது. மாநில மந்திரி பெசாரின் அறிவிப்பின்படி இந்த நிலங்கள் மொத்தம் 78 தொகுதியாக பிரிக்கவிருக்கிறார்கள். அதாவது உலு தெலும்கில் 58 தொகுதிகளையும், ரிங்லெட்டில் 14 தொகுதிகளையும், தானா ராத்தாவில் 6 தொகுதிகளையும் பிரிக்கவிருக்கிறார்கள். நிலங்களைப் பிரித்தப் பிறகு இந்த நிலங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும்.




இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசாங்கம் எவ்வாறு முனைகிறது என்றால் இவர்களுக்கு இடையில் புதிய நிறுவனமான மாநில அரசு செயலக வாரியம் (perbadanan setiusaha kerajaan) நியமித்து அவர்களிடம் இந்த விவசாய நிலங்களின் உரிமத்தை ஒப்படைப்பார்கள். அதன் பிறகு இந்த மாநில அரசு செயலக வாரிய நிறுவனம், வேறொரு நிறுவனமான கேமரன் மலை மேம்பாடு/ வளர்ச்சி வாரியத்திடம்(perbadanan kemajuan cameron highland)  குறிப்பிட்ட நிலம் சம்பந்தபட்ட உரிமத்தை வழங்கும். அதன்பிறகு இவர்கள் பஹாங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் அந்த உரிமத்தை வழங்குவார்கள். இந்த நிறுவனம்தான் விவசாயிகளுக்கு நிலத்தை பிரித்து வழங்கும் பணியை செய்வார்கள்.     

இந்நிலையில் பிஎஸ்எம் வழியுறுத்துவது என்னவென்றால், மாநில அரசு நிலத்தை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கும் அதே வேளையில், எதற்காக விவசாயிகளை தனியார் நிறுவனங்களின் வழியாக நிலத்தை பெற வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண விரும்புகிறது.
அதுமட்டுமின்றி ஏன் - எதற்காக இத்தனை நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் உள் நுழைகின்றன? இத்தனை நிறுவங்கள் ஈடுபடுவதற்கான காரணம்தான் என்ன? அரசாங்க நிலத்தை, உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு எதற்காக இத்தனை நிறுவங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டும்? இந்நிறுவங்கள் அனைத்தும் அரசு சார்ந்தவைதானா? 



பிஎஸ்எம் பார்வைக்கும் பொது மக்களின் பார்வைக்கும் அவை தனியார் நிறுவங்களாக தெரிவதால்தான் இக்கேள்வியினை நாங்கள் முன்வைக்கிறோம். ஏன் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு இடம்மாறி இறுதியாக விவசாயிகளின் கைகளில் இந்தத் திட்டம் சேர்கிறது. ஏன் நேரடியாகவே இத்திட்டமானது விவசாயிகளிடம் வரக்கூடாது? மேலும், பல நிறுவங்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் வாடகைப்பணம் அதிகமாகத்தானே இருக்கும்? இது எப்படி சிறு தொழில் விவசாயிகளுக்கு லாபகரமாக அமையும்? விவசாயத்தை மற்ற தொழில்களோடு ஒப்பிடுவது சரியானதில்ல. 

நாட்டிற்கு முதுகெழும்பாகவும் நாட்டு மக்களின் உணவுக்கு காப்பாளர்களாகவும் இருக்ககூடிய விவசாயுகளுக்கும் கால்நடை விவசாயிகளுக்கும் ஏன் அரசு வசதியான சலுகையினை வழங்கக்கூடாது?.   தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடுவது எவ்வகையிலும் விவசாயிகளுக்கு பிரச்னையான ஒன்றாக அமையும் என்று பிஎஸ்எம் கருதுகிறது.  

சிவராஜன் ஆறுமுகம்
தேசியத் தலைமைச் செயலாளர்
மலேசிய சோசலிசக் கட்சி
      

Thursday, February 13, 2020

டத்தோ பண்டார் பதில் சொல்ல வேண்டும். -ஜின்ஜாங் உத்தாரா மக்கள் மறியல்!




 1990-ஆம் ஆண்டு ஆரம்பித்த ரூமா பஞ்சாங் ஜின்ஜாங் உத்தாரா வீடமைப்பு விவகாரம் இன்று அம்மக்களை மாநகர மன்றத்தின் முன்பு நிறுத்தியுள்ளது. பதாதைகளையும் அறிவிப்பு அட்டைகளையும் ஏந்தி அவர்கள் தங்களுக்கு ஞாயம் வேண்டும் என நேற்று காலை மாநகர மன்றத்தின் முன்பு அமைதி மறியலை மேற்கொண்டனர்.


1990-ஆம் ஆண்டு  ஜின்ஜாங் உத்தாராவில் வசித்திருந்த இவர்களுக்கு, மாற்று இடமாக ஶ்ரீ அமானில் உள்ள டிபிகேஎள் மலிவு விலை வீட்டை ஒரு லாபகரமான நிமந்தனையுடன் வழங்கி இட மாற்றம் செய்திருக்கிறது மாநகரமன்றம். அதாவது மூன்றிலிருந்து ஐந்த ஆண்டுகளுக்குள் மலிவு விலை வீட்டைக் கட்டிகொடுத்து கொடுப்பதாக வாக்குறுதி அப்போது வழங்கப்பட்டது. தற்போது அந்த வாக்குறுதிக்கான ஆயூல்காலம் 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஜின்ஜாங் உத்தாரா மக்களுக்கு நல்ல செய்தி செல்லவிருப்பதாக மாநகர மன்றம் கூறியது. அவர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் அங்கு இடம் பெயரலாம் என்று மநகர மன்றம் கூறிய நம்பிகை வார்த்தைகளை நம்பி, சொந்த வீடு கிடைக்கப்போகும் கனவோடு சந்தோஷமாக இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.




கிடைக்கப்போகும் வீட்டுக்காக எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் மாநகர மன்றம் எல்லா உதவிகளையும் மக்களுக்குச் செய்யும் என்றும், வயது வரம்பின்றி உங்களுக்கு வங்கியில் கடனுதவி பெற்றுத் தருவதற்கும் மாநகர மன்றம் உதவும் என்றும் வாக்குறுதிகள் வழங்கியதின் பேரில் அவர்கள் நம்பைகையுடம் இருந்திருக்கின்றனர். மேலும், மாநகர மன்றம் கொடுத்த ஒப்பந்த கடிதத்தில் அவர்கள் 6 மாதகாலத் தவணை வாடகையை செலுத்தினால் போதும் என்றும் இந்தக் கால இடைவெளியில் வங்கியில் கடனுதவி பெற்று தந்துவிடுவோம் என்று மாநகர மன்ற அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதற்கான எல்லா ஆவணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் நடந்தது என்ன? 

அதுக்குறித்து விவரிக்கிறார் சீலா..

மாநகர மன்றத்தினர் கூறிய புதிய வாக்குறுதி இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், சிலருக்கு வங்கிக் கடனுதவி உறுதியானது. ஆனால், அதை என்னக்காரணம் என்று கூறாமல் SPWP அதிகாரிகள் நிராகரித்துவிட்டார்கள். சில குடும்பங்களுக்கு வீடு குறித்த எந்தக் கடிதமும் அனுப்பப்படவில்லை. உரிமப் பத்திரம், எஸ்எம்பி என எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், குடியிருப்பாளர்களான நாங்களோ வீடு தொடர்பான  வழக்கறிஞர் பத்திரத்தில் கையப்பமிட்டதுடன், வங்கியில் வீட்டிற்கான பணமும் செலுத்த தொடங்கினோம். சிலர் முழுப்பணத்தையுமே செலுத்தினார்கள். ஏதோ நம்பிகையுடன் தொடர்ந்த எங்களின் சொந்த வீட்டுக் கனவின்மீது  10 மாதங்களில் மண் விழுந்தது. .நாங்கள் மாநகர மன்றத்திடம் 3000 ரிங்கிட் கடன் கொண்டிருப்பதாக நீதிமன்ற கடிதம் எங்களைத் தேடி வந்தது. ஏன் என்ற கேள்வியை குடியிருப்பாளர்கள் கேட்டதற்கு, எங்களின்…. ரத்து செய்துவிட்டதாக கூறினார்கள்.

நாங்கள் மொத்தமாக 1,600 குடும்பங்கள் இந்த வீட்டிற்காக காத்திருந்தோம். தற்போது 991 குடும்பம்தான் எஞ்சி இருக்கிறோம். எங்களுக்கு வழங்கிய உடன்படிக்கையின் வழி நாங்கள் 6 மாதங்கள் புதிய வீட்டிற்கான தவணைப் பணத்தை செலுத்துகிறோம். அதற்கு மேல் எங்களை செலுத்தச் சொல்லும் பணத்தை அகற்றியாக வேண்டும். SPWP எங்களுக்கு அதிகமான வட்டியை விதிக்கிறார்கள். 6.5 விழுக்காடு வட்டிப்பணத்தை பி40-கீழ் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தைக் கொண்டிருக்கும் எங்களால் அவ்வளவு பெரிய அளவிலான வட்டியை செலுத்த சாத்தியப்படுமா என அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். இயலாததால்தானே நாங்கள் மாநகர மன்றத்தின் மலிவு விலை வீட்டில் வசிக்கிறோம். இன்றும் நாங்கள் மாநகர மன்றத்தை நம்பித்தான் வாழ வேண்டிய நிர்பந்ததில் இருக்கிறோம்.

இங்களின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுக் காணும் நோக்கில் டத்தோ பண்டாரை சந்தித்து ஒரு கடிதத்தை கொடுக்க நாங்கள் மாநகர மன்றத்தின் முன்பு கூடியிருக்கிறோம். எங்கள் கடிததைக் கண்டு நல்லதொரு பதிலை அவர் கொடுப்பார் என்று நம்பைகையுடம் இருக்கிறோம்.. இவ்வாறு ஸ்ரீ ஆமான் ஜின்ஜாங் உத்தாரா பிபிஆர் வீடமைப்பின் பொதுநல இயக்க துணை செயலாளர் சீலா கூறினார்.  


இவர்களின் இந்தப் போரட்டத்திற்கு ஆதாரவளித்திருக்கும் பிஎஸ்எம்-சேர்ந்த அருட்செல்வன், மக்களுக்கான இந்தப் பிரச்சனையை மநகர மன்ற அதிகாரிகள் விரைந்து தீர்வுக் காண வேண்டும் என்று பிஎஸ்எம் எதிர்பார்ப்பதாக கூறினார். இந்த மக்களின் மறியலுக்குப் பிறகு, மாநகர மன்றத்தின் அதிகாரி முகமட் ஜஸ்னி பெற்றுக்கொண்டார். ஆனால், அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

  


Wednesday, February 12, 2020

தைப்பூசத்தில் பிஎஸ்எம்





இடதுச்சாரிச்  சிந்தனை கொண்டவர்களுக்கு கடவுள் பக்தி குறைவாகவே இருக்கிறது என்ற சிந்தனை பொதுவாக இருந்தாலும், பக்தி கொண்டாடும் இடங்களில் இடதுச்சாரிச் சிந்தனை கொண்டவர்களின் செயற்பாடுகள் என்னவாக இருக்கிறது என்ற வெளிப்படையான தகவல் முக்கியமாக பேசவேண்டியிருக்கிறது.

இம்முறை பிஎஸ்எம் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு எல்லா மாநிலங்களிலும் தன் செயற்பாடுகளை துரிதப்படுத்தியது. கடவுள் இல்லை என்றும் பக்தி இல்லையென்றும் தைப்பூசம் அவசியமான ஒன்றா என்ற கேள்விகளை மக்களிடம் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது சோசலிச பணியல்ல. மாறாக, மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில், அவர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சில விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பணியை பிஎஸ்எம் இம்முறை மேற்கொண்டது. குறிப்பாக காடுகளை பாதுகாத்தல், பருவநிலை நெருக்கடி பிரகடனம், சோஸ்மாவுக்கு எதிரான கையெலுத்துப் பிரச்சாரம் என மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 



சிலாங்கூர் பத்துமலையில் சோஸ்மாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் தோழர் சிவரஞ்சனியுடன் தோழர் யோகியும் களமிரங்கினார். சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களின் விடுதலைக்கு  ஒரு மில்லியன் கையெழுத்து சேமிக்க வேண்டிய நெருக்கடியில் தற்போது இப்பிரச்னை இருக்கிறது. ஒரு வாரமாக கூடாரம் அமைத்து கையெழுத்து பிரச்சாரம் செய்துக்கொண்ட குழுவினருக்கு சில மணி நேரங்கள், சோசலிச கட்சியை சேர்ந்த  அவ்விரு தோழர்களும் பிரச்சாரம் செய்து கையெலுத்தினை பெற்றுத்தந்தனர். மேலும், மலேசிய சோசலிச தமிழ் சஞ்சிகை அங்கு மக்களுக்கு அறிமிகப்படுத்தப்பட்டது.  

பேராக் சுங்கை சிப்புட் பகுதியில் மக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக மரங்களை வேட்டையாடும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு முகாமாகவும் அது அமைந்தது.


ஜொகூர் மாநிலத்தில் இளைஞர் படையின் துணையுடன் தோழர் மோகன், சோஸ்மாவுக்கு எதிரான கையெத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின் அந்தக் கையெழுத்து ஏடுகள் சுவாராம் இயக்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டது. அங்குள்ள மக்களுக்கும் சோசலிச தமிழ் நாளிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.  சினிமா, விளம்பரம், வியாபாரமற்ற அந்த நாளிதழை மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர். 

தைப்பூச விழாவையொட்டி சில பிரச்சார நடவடிகைகளை பிஎஸ்எம் மேற்கொண்டாலும், அதில் அரசியல் நோக்கத்தையோ  சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையையோ  எதையும் கொண்டிருக்கவில்லை. பக்தர்களை எவ்விதத்திலும் பாதிக்காமலும், அவர்களுக்கு இடையூறு செய்யாமலும் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக்கொள்வதும்  இடம் பொருள் ஏவல் குறித்த தெளிவும் பிஎஸ்எம் கொண்டிருக்கிறது.   

குறிப்பு: தைப்பூசத்தில் என்னை சந்தித்த இளம் குறுத்து இப்படி கேட்டான். அக்கா மக்களுக்கு உதவி செய்யனும் என்றால் என்ன செய்யனும். 

யோகி: (வாடா என் தங்கமே...) முதலில் வாசிப்பதை ஏற்படுத்தனும். நாட்டில் நடக்கும் விஷயங்களை நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அது ஏன் நடந்தது நடக்கிறது என்பதற்கான கேள்வியை கேட்கனும். கேள்விகள்தான் பதிலை திறப்பதற்கான ஒரு திறவுக்கோள். எப்போதும் மக்களுக்காக வாதாட துணிந்து வர வேண்டும். இப்போது வாசிக்கனும். 


  

Wednesday, February 5, 2020

பேராக் மாநில புதிய அலுவலகம் திறப்பு விழா (வீடியோ மற்றும் புகைப்படங்கள்)

பேராக் மாநிலத்தின், ஈப்போ நகரில்  பிஎஸ்எம் கட்சியின் மாநில அலுவலகம்  மேடான் இஸ்தானாவில்  பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது. தேசிய ரீதியிலான செயலவை உறுப்பினர்கள், கட்சியின் தேசிய தலைவர், துணை தலைவர், செயலாளர் உட்பட பலர் அந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்து உரையாற்றினர்.

 அந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளை உங்களுக்காக பதிவு செய்திருக்கிறோம்...




பிஎஸ்எம் பேராக் மாநில தலைவர் கே. குணசேகரனை சிங்க நடனம் புரியும் கலைஞர்கள் வரவேற்கின்றனர்.



சிங்க நடனம் புரிந்து நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது



பிஎஸ்எம் தேசியத்தலைவர் உரை நிகழ்த்துகிறார். 




                                     
பிஎஸ்எம் தேசியத்தலைவர் டாக்டர் ஜெயக்குமார் உரை நிகழ்த்துகிறார். 



பிஎஸ்எம் உதவித்தலைவர் அருட்செல்வம் உரை நிகழ்த்துகிறார். 




கே.குணசேகரன்


அருட்செல்வம்


பேரா மாநில பிஎஸ்எம் தோழர்கள்


பிஎஸ்எம் தேசிய பொதுச் செயலாளர் சிவராஜன்


                                      
பிஎஸ்எம் தோழர்கள்


பிஎஸ்எம் தோழர்கள்




பிஎஸ்எம் மற்றும் புக்கிட் செராக்கா தோட்ட கால்நடை விவசாயிகளின் ஏற்பாட்டில் பொங்கல் விழா..


பிப்ரவரி 2,
பிஎஸ்எம் மற்றும் புக்கிட் செராக்கா தோட்ட கால்நடை விவசாயிகளின்  ஏற்பாட்டில், பொங்கல் விழா அவர்களின் தோட்டத்திலேயே மிகச் சிறப்பாக நடைபெற்றது. தற்போது சைம் டர்பி நிறுவன பராமரிப்பில் இருக்கும் தோட்டங்களில், அதன் அதிகாரிகள்  கால்நடைகள் வளர்பதற்கு தடைவிதித்திக்க பரிந்துரைப்பதுடன் அதற்கான காலக்கெடுவையும் வைத்திருக்கிறது சைம் டர்பி நிறுவனம். இதற்காக கால்நடை விவசாயிகள் தங்கள் மனவருத்ததை தெரிவித்திருபதுடன், சைம் நட்பியின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.



இந்த விவகாரத்தை முன்னிருத்தி  புக்கிட் செராக்கா தோட்டத்தில் மக்கள் பொங்கல் செய்யப்பட்டது.   கால்நடை விவசாயிகளின் ஆதரவில் பி எஸ் எம்  முன்னெடுத்த இந்த பொங்கல் விழாவில் நம் பாரம்பரியம் சார்ந்த நிகச்சிகளும் விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.



தொடக்கமாக பறை மற்றும் உருமியடித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடக்க உரையை புக்கிட் செராக்கா தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியர் ஶ்ரீவாசன் வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து பிஎஸ்எம் மார்ஹைண்ட் பிரிவைச் சேர்ந்த தோழர் விஜயகாந்தி தலைமையுரையை வழங்கினார். அதில் அவர் கால்நடை விவாசயிகளின் பிரச்னைக்கு பிஎஸ்எம் என்றும் கைகொடுத்து உடன் நிற்கும் என்று உறுதி கூறினார். அவரைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக அமானா கட்சியை சேர்ந்தவரான ஆசிரியர் ஸம்ரி வாழ்த்துரை வழங்கினார். 


சிறுவயதில் பொங்கல் விழாக்களில் தாம் கலந்துகொண்ட அனுபவம் தொடர்பாக நியாபங்களை அவர் மக்களோடு பகிர்ந்துக்கொண்டார். மேலும், கால்நடை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாம் நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார். அவரைத்தொடர்ந்து கோலசிலங்கூர் பாராளமன்ற உறுப்பினர் அன்பரசன்  வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து பிஎஸ்எம் கட்சியின் தேசிய பொது செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் பேசுகையில், பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும்  தோட்ட தொழிலார்களுக்கு  அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமான  சைம் டர்பி நிறுவனம் தற்போது பெரிய நெருக்குதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கால்நடைகளை தோட்டத்தில்  வளர்க்க கூடாது என்று அறிவித்திருப்பதுடன், 


அத்தொழிலை முழுமையாக தொழிலார்கள் கைவிடக்கூடிய நெருக்கடியை அந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. இம்மாதிரியான விஷயங்கள் நாட்டு மக்களுக்கு பக்கத்தான் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு நேரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு  விவசாய மக்களை விரட்டியடிப்பது, கால்நடை வளர்பவர்களை வாழவிடாமல் துரத்துவதும் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. உழவர்கள் நல்லவிதமாக இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். எனவே விவசாய பிரச்சனையை நாட்டின் அனைத்து மக்களும் தனது சொந்த பிரச்சனையாக கருதி விவாய மக்களுக்காக ஈடுபடும் போராட்டங்களில் கைகொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.


பின் வந்திருந்த பிரமுகர்களுக்கு நினைவு பரிசு வழகப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்கிய பிறகு, பொது மக்களும் பிரமுகர்களும் தங்கள் கோரிக்கைகளை கூறி சட்டியில் அரிசியை  போட்டனர். மக்கள் கூடியிருந்து இந்தப் பொங்கலை வைத்தது பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து தோட்டத்து இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டி விளையாட்டுகள் தொடங்கின. சட்டி உடைத்தல், தோடரணம் பின்னுதல், சரம் தொடுத்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பலூன் வெடித்தல் சிறியவர் முதல் பெரியவர் வரை வந்திருந்த அனைவரும் போட்டிகளில் பங்கெடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் இறுதியில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் உரையாற்றினார். 60 ஆண்டுகளாக தோட்டத்தில் வசிக்கும் ஒரு தாய்.. தற்போது தான் ஓய்வு பெறப்போகும் வேளையில் இந்ததோட்டத்தை விட்டு நான் எங்கே போவது என்ற கேள்வியை அந்த நிகழ்ச்சியில் முன்வைத்தது தொடர்பாக அருட்செல்வம் உரையாற்றினார். இம்மதிரியான உரிமை போராட்டத்தை தோட்ட பாட்டாளிகள் தொடர்ந்து சந்துத்து வரும் வேளையில் உரிமையை போராடிதான் பெற வேண்டும் என்று அருள் தனது உரையில் தெரிவித்தார்.  புக்கிட் செரக்கா தோட்டம், புக்கிட் பெருந்தோங் தோட்டம், நைகல் கார்டன் தோட்டம், மேரி தோட்டம் மற்றும் சுற்று வட்டார மக்கள்  இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Tuesday, February 4, 2020

பிஎஸ்எம் கட்சி ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது…!





ஈப்போ: பிப்ரவரி 2

தேர்தலில் தோல்வி கண்டாலும், மக்கள் நலனுக்கான அரசியலில் பிஎஸ்எம் கட்சி நாட்டில் நிலைத்தன்மையுடன் செயலாற்றி வருகிறது என மலேசியர்கள் உணர தொடங்கிவிட்டனர். இனவாத அரசியல் என்பது தேசிய முன்னனி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளின் அரசியல் என்பதனை மக்கள் உணரத் தொடங்கியிருப்பதால் இன்னும் பத்தாண்டுகளில் பிஎஸ்எம் மலேசிய அரசியலில் பிரதான கட்சியாக மிளிரும். பிஎஸ்எம் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படுமென கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயகுமார் தெரிவித்தார்.

பேராக் மாநில பிஎஸ்எம் கட்சியின் அலுவலகம் ஈப்போவில் மேடான் இஸ்தானாவில் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நிகழ்வில் அவர் பேசினார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் 2018 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏற்படுத்தினர். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனால், அது தேசிய முன்னணி பாணியில் ஆட்சி நடத்துவது கண்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆட்சி மாற்றம் என்பதைவிட யாரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதில் மக்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கிவிட்டனர்.




இனவாதம் மதவாதம் இவை இரண்டை மட்டுமே தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிகள் தொடர்ந்து மூலத்தனமாக கொண்டு செயல்படுகின்றன. இந்த நாட்டில் அதற்கு இடமில்லை. அனைத்து இன மக்களின் நலனுக்கும் அவர்களின் பாதிப்புகளுக்கும் பாடுபட்டு போராட்டங்களை நடத்திவரும் ஒரே கட்சி பிஎஸ்எம் மட்டுமே. பிஎஸ்எம் கட்சியின் கொள்கை உறுதிமிக்கது என டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

இந்நிகழ்வில் பிஎஸ்எம் கட்சியின் பேராக் மாநிலத் தலைவர் கே.குணசேகரன், தேசிய நிலைப் பொறுப்பாளர்கள், அருட்செல்வன், சிவராஜன் உட்பட திரளானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் : எம்.ஏ.அலி

பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை) 
      

மாட்டுப் பண்ணையாளர்கள் குமுறல்..














எங்களுக்கு முறையான இடத்தை வழங்காமல்
வெளியேற்றுவதில் குறியாக இருக்காதீர்
மாட்டுப் பண்ணையாளர்கள் குமுறல்!!

கிள்ளான், பிப்.2-
   மூன்று தலைமுறையாக மாடுகள் வளர்த்து வரும் எங்களை வெளியேற்றுவதிலே குறியாக இருக்காதீர்கள். எங்களுக்கு முறையான இடத்தை அடையாளம் காட்டுங்கள். ஏதோ ஒரு இடத்தை காட்டிவிட்டு அங்கே போங்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது என மனம் குமுறுகின்றனர் அம்பாங் போட்டானிக் பகுதியில் மாடுகள் வளர்த்து வரும் பண்ணையாளர்கள்.
  முன்பு ஹைலண்ட்ஸ் என்ற தோட்டத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக மாடுகள் வளர்த்து வந்தோம். அப்போது தோட்ட நிர்வாகம் எங்களுக்கு இடையூறு கொடுத்ததில்லை. 2003 ஆண்டு தோட்டம் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொண்ட போது தங்களுக்கு இடம் இல்லாமல் போனதால் தற்காலிகமாக அம்பாங் போட்டானிக் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மாடுகள் வளர்த்து வருவதாக ‘சுசு ரவி’ என்ற தேவேந்திரன் ஆறுமுகம் கூறினார். சுமார் 160 மாடுகளை வளர்த்து வருவதாக குறிப்பிட்ட அவர்,
  கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் அவ்விடத்தை காலி செய்ய இடையூறு கொடுத்து வருகிறது. மாடுகளை வளர்க்க புதிய இடமாக பந்திங் வட்டாரத்தில் உள்ள ஓலாக் லெம்பிட் பகுதியில் வழங்குவதாகவும் அங்கு மாறிச்செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்களின் அன்றாட பால் வியாபாரம் மற்றும் இதர நடவடிக்கைகள் யாவும் கிள்ளான் வட்டாரத்தைச் சுற்றியே இருப்பதால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை அடையாளம் காட்டினாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால்,40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதோடு, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் காடாக இருக்கும் இடத்திற்கு மாறிப்போகச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.
  இதனிடையே, இவர்களின் நிலவரம் குறித்து மாநில மந்திரி பெசாரின் அலுவலகத்துடன் தொடர்புக்கொண்டு நல்ல பதில் கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் குறித்து 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் அனுப்பியும் எந்தவொரு கடிதத்திற்கும் பதிலும் அளிக்காத கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் இவர்களை வெளி அனுப்பவதில் முனைப்பு காட்டுவது ஏன் என பி.எஸ்.எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான சிவரஞ்சனி மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
  கிள்ளான் வட்டாரத்தில் பல இடங்களில் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இன்று தேவேந்திரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை மற்றவர்களுக்கு வராது என யார் சொன்னது. எனவே அவருக்கு ஆதரவு தரும் வகையில் மற்ற பண்ணையாளர்களும் அவருக்கு துணையாக குரல் கொடுத்தனர். புக்கிட் ராஜாவை சேர்ந்த கிருஷ்ணன் ரத்னம் 80 மாடுகளை வளர்த்து வருவதாக குறிப்பிட்டார். ஆனந்தாய் முனியாண்டி 50 மாடுகள் வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
   இந்த மாடு வளர்ப்புக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேண்டும். நினைத்தது போல் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என அம்பாங் போட்டானிக்கைச் சேர்ந்த  நிர்மலாதேவி பரசுராமன் குறிப்பிட்டார். ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கும் புதிய இடம் வாடகை அடிப்படையில் கொடுப்பதால் அதற்கு தாங்கள் சம்மதிக்க மாட்டோம் என கிள்ளான் ஜெயாவைச் சேர்ந்த அஞ்சலைதேவி ஆறுமுகம் தெரிவித்தார். அப்போதும் திடீரென இடத்தை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம். கால்நடை வளர்ப்புகளுக்கு ஆதரவு வழங்கி வரும் விவசாய அமைச்சும் மாநில மந்திரி பெசாரும் தாங்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுவிற்கு நல்ல பதிலை வழங்குவார்கள் என நம்புவதாக குறிப்பிட்ட சித்தி உமா, இன்றைய நவீன காலத்தில் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் குறைந்துக் கொண்டே வருவதால் ஆர்வத்தோடு பண்ணைத் தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் இடையூறு கொடுக்காமல் கைக்கொடுத்து தூக்கிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



செய்தியாளர் : பி.ஆர்.ஜெயசீலன்

பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை) 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...