Wednesday, August 20, 2025

தோழர் அருளின் கைதும் விடுதலையும்

கோலாலம்பூர்: மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன்  நேற்று மாலை 6 மணிக்கு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில், கடந்த வாரம் பாராளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

போலீசார் போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிட்டதால் அருட்செல்வன் தானாகவே சென்று சரணடைந்தார் என்று PSM பொதுச்செயலாளர் எம். சிவரஞ்சனி  இதனை உறுதி படுத்தினார்.

"இந்த கைது சட்டவிரோதமானது, மேலும் இது போலீசாரின் ஆகும்," என்றும் FTM-க்கு ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.


கடந்த புதன்கிழமை 13/8/2015 அன்று நடைபெற்ற தோட்ட மக்கள் வீட்டுடமை தொடர்பான போராட்டத்தில், பேராக், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கெடா மற்றும் ஜொகூர் மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் தாமான் துகுவில் இருந்து பாராளுமன்றம் வரை பேரணியாக வந்து, உள்ளூர் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி கட்டாயம் சட்டமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மகஜர்  மற்றும் மசோதா வரைவு ஒன்றை அரசு அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.

ஆரம்பத்தில் போலீசார் பாராளுமன்ற வாயிலுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை தடுக்க முயன்றனர். பின்னர் அவர்கள் ஆவணங்களை பிரதமர் துறை துணை அமைச்சரான (சட்டம்-மறுசீரமைப்பு) எம். குலசேகரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைமை ஒழுங்குமுறைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசானிடம் ஒப்படைக்க அனுமதித்தனர்.


அந்த வாயிலில் போலீசாருக்கும் போராட்டவாதிகளுக்கும் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக  கோலாலம்பூர் போலீஸ் துறைத் தலைவர் டத்தோ Fadil Marsus, “அந்த ஆவணங்களை ஒப்படைக்கும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு  சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்ததாக கூறப்பட்டதால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353 (அரசுப் பணியாளரை கடமையாற்றுவதை தடுக்க வன்முறையைப் பயன்படுத்துதல்) மற்றும் பிரிவு 427 (சேதப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

டத்தோ Fadil  மேலும் டிக்-டாக்-இல் பதிவேற்றப்பட்ட வீடியோவையும் சுட்டிக்காட்டினார். அதில் போராட்டக்காரர்கள் " தூண்டுதல் மற்றும் வலுக்கட்டாயமாக அத்துமீறல்" காட்சி இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, போலீசார் மறுநாள் அருட்செல்வனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பாராளுமன்றம் வெளியே அருட்செல்வன் மற்றும்  போராட்டக்காரர்கள் மேற்கொண்ட பேரணியில் போலீஸ்க்காரர்களுக்கும் போராட்டக்காரர்கலுக்கும் "தவறான புரிதல்" ஏற்பட்டது என்று அவர் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த தள்ளுமுள்ளின் போது அருட்செல்வன்,கீழே விழுந்தார். ஆனால் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 


நடத்தப்பட்ட அமைதி பேரணியில் கூட, மக்களின் அமைதியை குலைக்கும் எவ்வித அசம்பாவிதத்தையும் தோட்ட மக்களோ சோசலிசவாதிகளோ செய்யவில்லை. வழக்கமாக பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் கூட அனுமதிக்கப்பட்ட வளாகத்தை நோக்கித்தான் மக்கள் சென்றனர். ஆனால், அந்த இலக்கை அடையவிடாமல் தடுத்து, சாலையிலேயே தோட்ட பாட்டாளிகளை நிற்க வைப்பது நியாயமற்றது ஆகும். பாராளுமன்றம் மக்களுக்கானதல்லவா? அங்கே கூடிக் கொண்டிருப்பவர்கள் யார்? அந்த மக்கள் தானே! அப்படியிருக்க, "மக்களுக்கான காவல்துறை, மக்களுக்கான அமைச்சர்கள், மக்களுக்கான பாராளுமன்றம்" என்ற சொல்லாடல்கள் வெறும் புகழ்ச்சிக் கோஷங்களாகவே மாறிவிட்டன.

உண்மையில், அவை அனைத்தும் மக்களை அச்சுறுத்தும் கருவிகளாகவே செயல்படுகின்றன என்பதை இந்தச் சம்பவம் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளது.

👉 மக்களுக்கெதிராக நிற்கும் அதிகாரமே அநீதியானது!
👉 மக்களை அடக்கும் ஆட்சி ஒருபோதும் மக்களுக்கான ஆட்சி அல்ல!
👉 பாராளுமன்றம் மக்களின் உரிமையை மறுக்கும் இடமல்ல—மக்கள் தங்கள் குரலை எட்டச் செய்யும் போராட்ட மேடை!

தோழர் அருளின் கைது நடவடிக்கை உண்மையில் அடிப்படையற்றது. அவர் போலீசாருக்கும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தார். முதல்முறை அவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டபோதே மிக நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் விடுவிக்கப்பட்டார். 5 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அவர் மீது மேற்கொண்டிருக்கும் இந்த கைது நடவடிக்கை நிச்சயமாக அதிகார துஷ்பிரயோகம் என்பதில் எந்த சந்தேகமும் அல்ல.

தோழர் அருளின் கைது நடவடிக்கைக்குப் பிறகு சோசலிசக் கட்சியின் தோழர்களும் ஆதரவாளர்களும், டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு முன் தோழர் அருளுக்கு ஆதரவாக ஒன்று கூடினர்.



அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் கண்டனம் தெரிவித்தனர். நீதிக்கும் மக்களின் உரிமைக்கும் மெழுகுவர்த்தி ஒளி ஏற்றிக்கொண்டிருந்தது. மக்கள் வழக்கறிஞர்களான தோழர் பவானி மற்றும் தோழர் சசி தேவன் ஆகியோர் தோழர் அருளுக்கான முதன்மை வழக்கறிஞர்களாக செயல்பட்டனர். நீதியின் குரலாக அருளின் பக்கம் அவர்கள் இறுதிவரை நின்றனர். 20/8/2015 மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படும் தோழர் அருள், இரவு 10.50 மணியளவில் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தகவல் வந்தது. சுமார் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் தோழர் அருள் விடுவிக்கப்பட்டார்.  தமக்கு ஆதரவாக டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு முன்பு கூடியிருந்த தோழர்களைப் பார்த்து கை உயர்த்தினார் தோழர் அருள்செல்வன். மக்களுக்கான போராட்டம் தோல்வியில் முடியாது என்பதனை  அது உணர்த்தியுள்ளது.


13/8/2025 –தேதி முதல் 20/8/2025 தேதி வரை
பொருள் : தோட்டத் தொழிலாளர் சமூக ஆதரவு குழு (JSML) ஏற்பாடு செய்த அமைதி பேரணி,  வீட்டுடமை சட்ட வரைவு  ஒப்படைப்பு மற்றும் அது தொடர்புடைய போலீஸ் நடவடிக்கைகள்


13 ஆகஸ்ட் 2025 – காலை

  1. தோட்டத் தொழிலாளர்கள் சமூக ஆதரவு குழு (JSML) ஏற்பாடு செய்திருந்த பேரணி  Tugu Negara அருகில் ஆரம்பமானது.

  2. நாடு முழுவதிலுமிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள், JSML  செயற்குழு, நிபுணர்களை வைத்து தயாரித்த தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி சட்ட வரைவை சமர்ப்பிக்கக் அங்கு கூடினர்.

  3. பின்னர், JSML மற்றும் PSM செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தனர் (சுமார் 300 மீட்டர் தொலைவு). எனினும், பாராளுமன்றத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு 200 மீட்டர் முன்னரே (டாங் வாங்கி போலீஸ் எல்லைப் பகுதியில்), போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

  4. JSML, முன்பே போலீசாருக்கும், பிரதமருக்கும் தகவல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டு, முக்கிய நுழைவாயிலின் முன்பாகச்  செல்ல அனுமதி கோரினர். ஆனால், போலீசார் கடுமையாக நடந்து கொண்டு, செயற்பாட்டாளர்களைத் தள்ளியும், சிலரை அடித்தும், முன்னேற விடாமல் மறுத்தனர்.

  5. JSML பங்கேற்பாளர்களின் பெரும்பான்மையினர், முன்னேறி பாராளுமன்ற முக்கிய நுழைவாயிலின் முன் சென்றுவிட்டு, அங்கு பேரணியைத் தொடர்ந்து, பேரணிக்கான நோக்கத்தை நிறைவு செய்தனர்.


13 ஆகஸ்ட் 2025 – பாராளுமன்ற நடவடிக்கை

  1. அரசு மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட வரைவு பதிவைப் பெற்றனர்.

    • சட்ட அமைச்சரின் பிரதிநிதி : YB குலசேகரன்

    • எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி YB டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோர் தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி சட்ட வரைவு அடங்கிய முழுமையான சட்ட வரைவை பெற்றனர்.

  2. வந்திருந்த எம்.பி.க்கள் அனைவரும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, பாராளுமன்றத்தில் எடுத்துச் செல்ல உறுதியளித்தனர்.

  3. பிரதமரின் பிரதிநிதி வர இயலாததால், மக்களவை சபாநாயகர் Tan Sri Dato' (Dr.) Johari bin Abdul, பிரதமரின் சார்பில் வரைவைப் பெற்றார்.

    • JSML சார்பில் தோழர் அருள் மற்றும் தோழர் கார்த்திக் நேரடியாக அவரைச் சந்தித்து வரைவை ஒப்படைத்தனர்.

  4. பேரணி அமைதியாக நிறைவு பெற்று, பங்கேற்பாளர்கள் கலைந்து சென்றனர்.


13 ஆகஸ்ட் 2025 – இரவு

  1. IPK KL இன்ஸ்பெக்டர் ஷா, தொலைபேசியில் அருளை அழைத்து, போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க அழைத்தார்.

  2. காரணம் : பேரணியின் போது ஒரு போலீசார் காயமடைந்ததாகவும், கைப்பேசி சேதமடைந்ததாகவும் புகார் செய்யப்பட்டிருந்தது.

  3. வராவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர்.

  4. JSML வழக்கறிஞர் சசியுடன் ஆலோசித்தபின், அருள் 14/8/2025 அன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முடிவு செய்யப்பட்டது.

  5. IO (Investigation Officer) தெரிவித்தபடி, அருள்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 353க்குள் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.


14 ஆகஸ்ட் 2025 – விசாரணை

  1. அருள் மதியம் 2 மணிக்கு, இரண்டு வழக்கறிஞர்களுடன் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஆஜரானார்.

  2. 13 ஆகஸ்ட் பேரணியின் போது நடந்த தள்ளுமுள்ளுக்காக அவர் விசாரிக்கப்பட்டார்.

  3. PSM, JSML, SUARAM, Gabungan Marhaen, MANDIRI போன்ற அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், அருளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தலைமையகத்தின் முன் கூடினர்.

  4. அருளிடம் சம்பவம் குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டது.  அவர் முழுமையான ஒத்துழைப்பை போலீசாருக்கு வழங்கினார்.

  5. பின்னர், அருள் வெளியே வந்தபோது, செய்தியாளர்களுக்கு விசாரணை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


15 ஆகஸ்ட் 2025 – புகார்

  1. ஆகஸ்ட் 13 அன்று பாராளுமன்றத்தில் சட்ட வரைவை சமர்ப்பிக்கும் போது, ​​JSML செயற்பாட்டாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினருக்கு எதிராக 10 JSML செயற்பாட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.


19 ஆகஸ்ட் 2025 – கைது உத்தரவு

  1. IO, JSML வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு, 13 ஆகஸ்ட் சம்பவத்திற்காக குற்றப்பிரிவு போலீஸ், அருளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என அறிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

20 ஆகஸ்ட் 2025 – கைதும் விடுதலையும்

     22. அன்றைய தினம் போலீசாரின் இந்த அதிகார  துஷ்பிரயோகம்  தொடர்பான கண்டனத்தை தெரிவிக்க காலை 11.00 மணியளவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மலேசிய சோசலிசக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. 

   23. மாலை 6 மணிக்கு காவல் துறை கேட்டுக்கொண்டபடி அருள் காவல் நிலையம் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

--------------------------------------------------------------------------------------------------------------------

முடிவு

மேற்கண்ட விவரங்கள், 13/8/2025 முதல் 20/8/2025 வரை JSML பேரணி, வீட்டுடமை சட்ட வரைவு பத்திரம் ஒப்படைப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையாக பதிவு செய்யப்படுகிறது.

எழுத்து : யோகி

தோழர் அருளின் கைதும் விடுதலையும்

கோலாலம்பூர் : மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ் . அருட்செல்வன்   நேற்று மாலை 6 மணிக்கு டாங் வாங்கி போலீஸ் தலைமை...