Friday, October 4, 2024

33 வருட போராட்ட வெற்றியின் சாவிகள்

தாமன் ஸ்ரீ ராயா, செராஸ் கைவிடப்பட்ட வீட்டமைப்பு திட்டம்

இன்று மதியம், நான் 5 முதியவர்களுடன் சேர்ந்து, மெனரா நாசா, TTDI, ஷா ஆலமில் உள்ள பி.என்.எஸ்.பி (PNSB) கட்டிடத்திற்கு, பங்சாபுரி தாமன் ஹார்மோனி, செராஸில் உள்ள கட்டிட வீடுகளின் சாவியைப் பெறச் சென்றிருந்தோம். இந்த நிகழ்வில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த மக்கள் 1989-ஆம் ஆண்டின் மத்தியில் தாமன் ஸ்ரீ ராயா, 9வது மைல், செராஸ் என்ற திட்டத்தில் குறைந்த விலையில் வீடுகளை வாங்கினார்கள். கட்டமைப்பு திட்டம் கௌசர் கார்ப்பரேஷன் (Kausar Corporation Sdn. Bhd. ) மூலம் உருவாக்கப்பட்டது, மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்க அமைப்பான பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (PNSB) க்கு சொந்தமானது. இந்தக் குடும்பங்கள் RM 6,000 வைப்புத் தொகையாகவும், கௌசர் கார்ப்பரேஷனின் வழக்கறிஞருக்கு RM 200 சட்டக் கட்டணமாகவும், RM 127 நில வரியாகவும், RM 264 வயரிங் செலவுகளாகவும் செலுத்தியுள்ளனர். அவர்கள் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (SnP) கையொப்பமிட்ட பொழுது வீடுகள் 30 ஜூன் 1991-ஆம் திகதி முடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இன்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழு குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்குத் தாமான் ஹார்மோனியில், மாற்று வீடாக, குறைந்த விலை பிளாட் கட்டிட வீடுகளுக்கான சாவியைப் பெற்றனர். சட்டக் கட்டணம், நில வாரியம், போன்றவற்றிற்கு முன்பு அவர்கள் செலுத்திய அனைத்து பணமும் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளும் வழங்கப்பட்டது. மக்கள் என்னிடம் எப்போதும் கேட்பார்கள் பி.எஸ்.எம்-மால் எப்படி இதைச் செய்ய முடிகிறது? பதில் எப்போதும் எளிதானதல்ல. விடாமுயற்சியும் கடின உழைப்பும் சேர்ந்து, மக்களும் தொடர்ந்து உரிமைகளுக்காகப் போராடத் தூண்டுகிறார்கள்.

நீண்ட சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சத்தை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போலச் சம்பந்தப்பட்டவர்களின் முகங்களில் சாதித்த இன்பத்தைக் காண்பதும் அளப்பரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.

இந்த அற்புதமான கதையைச் சுருக்கமாக எழுதுகிறேன்.


2007-இல், வீட்டை வாங்கி 17 ஆண்டுகள் கழித்து, முருகா என்ற சிறுவன் அவனது தந்தை சுப்பிரமணியத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள். என்னிடம் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தைக் காட்டி கைவிடப்பட்ட இந்த வீடமைப்பு திட்டத்தைப் பற்றிச் சொன்னார்கள். நாங்கள் அவ்விடத்தைப் பார்வையிட்டபோது அங்கு வெறும் காடு மட்டுமே இருந்தது. பணம் படைத்தவர்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது, அதிலும் சிலர் குடியிருந்தார்கள். கட்டமைப்பு மேம்பாட்டாளர்கள் லாபம் ஈட்டக்கூடிய வீட்டு திட்டங்களை முதலில் உருவாக்கிவிட்டு, மீத பணமும் விருப்பமும் இருந்தால் மட்டுமே குறைந்த விலை வீடுகளை உருவாக்கத் தொடங்குவார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது சிலாங்கூரில் மாற்றப்பட்டு, குறைந்த விலை வீடுகள் முதலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பி.எஸ்.எம் காஜாங் குழுவினர் மற்றும் சிலர் இணைந்து கைவிடப்பட்ட திட்டத்தின் பகுதியில் ஒரு பதாகை வைத்தோம். ஒரு மாதம் கழித்து அதே தளத்தில் ஒரு சிறு கூட்டத்தைத் தொடங்கி நடவடிக்கைக்குழு அமைத்து மற்றொரு போராட்டத்தைத் தொடங்க முற்பட்டோம்.

ஆனாலும், பதாகை வைத்து ஒரு மாதம் கழித்து, வீடுகளை வாங்கி ஏமாற்றப்பட்ட ஏழு பேர் மட்டுமே முன்வந்தனர். மீதம் உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் வீடுகளை வாங்காமலும் இருந்திருக்கலாம். எனவே அவர்களின் உறுதிமொழி கிடைத்ததும் குழு அமைத்து பணிகளைத் தொடங்கினோம்.

அணிதிரண்ட ஏழு பேரும் சுமார் 40 யூனிட் குறைந்த விலை இரட்டை  அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினர். மற்ற ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது இத்திட்டம் தாமான் ஸ்ரீ ராயாமைல் 9, PT14689 - 14722 மற்றும் PT 10224-10228-இல்  மொத்தம் 407 யூனிட்குறைந்த நடுத்தர விலை வீடுகள் மற்றும் கடை வீடுகள் கட்டப்படவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

வீடமைச்சு துறை முன்னே எதிர்ப்பு


எனவே ஏழு குடும்பங்களுடன் நாங்கள் போராட்ட பயணத்தைத் தொடங்கினோம். நான்கு க்டோபர் 2007 அன்றுநாங்கள் வீடமைச்சு துறையில்  எங்கள் முதல் எதிர்ப்பு மற்றும் புகார்களைத் தாக்கல் செய்தோம். அமைச்சகம் உடனடியாக மாநில அரசைச் சுட்டிக்காட்டி அவர்களுடன் இரண்டு வாரங்களுக்குள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம் என்று உறுதி கூறியது. இரண்டு வாரங்கள் ஒரு வருடமாக மாறியது. இத்திட்டத்தின் மேம்பாட்டாளர்கள் அம்னோவில் (UMNO) இணைந்துள்ளதாகவும் மேலும் அக்கட்சி அவர்களைப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது என்றதையும் புரிந்து கொண்டோம்.

2008-ல் பாரிசான் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது மற்றும் பக்கத்தான் க்யாட் வெற்றியால் புதிய அரசாங்கம் மாறியது. எனவே அக்டோபரில் சிலாங்கூரில் கைவிடப்பட்ட திட்டங்களுக்கான பணிக்குழுவின் தலைவராக இருந்த மதிப்பிற்குறிய ஷாரி சுங்கிப் அவர்களை சந்தித்து சிக்கலைக் கொண்டு சேர்த்தோம். ஷாரி, ரெபோமாசி இயக்கத்தில் செயல்பட்டவர், மேலும் முன்னாள் .எஸ். கைதியாகவும் இருந்தவர். அவர் எங்கள் வேண்டுகோளுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

மதிப்பிற்குறிய ஷாரி சுங்கிப் பின்னர் ஆலோசித்து மூன்று செயல்திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார். 1989-ஆம் ஆண்டு வாங்குபவர் கையொப்பமிட்ட அசல் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விலைக்கு அதே இடத்தில் அடுக்குமாடி வீடுஅதாவது மாற்று வீடுகளைக் கட்டி முடிக்க சிலாங்கூர் மாநில அரசு ஒரு புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் என்று அவர் கூறினார்இரண்டாவதாகஅடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கான புதிய ஒப்பந்தக்காரருடன் கலந்துரையாடுவதற்காகப் பணிக்குழு கட்டுமான பகுதிக்குச் செல்லும். மூன்றாவதாக, மேம்பாட்டாளர் வீடுகளைக் கட்டத் தவறியதால்கௌசர் கார்ப்பரேஷன் சென். பெர்ஹாட் மற்றும் பி.என்.எஸ்.பி ஆகியவற்றிடம் சேதம் மற்றும் இழப்பீடு கோருவதாக அவர் உறுதியளித்தார்.

நவம்பர் 24, 2008 அன்று, மதிப்பிற்குறிய ஷாரி அந்த இடத்தைப் பார்வையிட்டுவீடுகளைக் கட்ட ஒப்பந்ததாரருடன் மாநில அரசு விவாதித்ததாக எங்களிடம் கூறினார். இது நம்பிக்கையைத் தந்தாலும்ஒவ்வொரு முறையும் எங்கள் குழு தளத்தைப் பார்வையிடும் போதுஎந்தவொரு மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும்மாற்று வீடுகளில்  கட்டுமான முன்னேற்றத்தைப் பின் தொடர்வதற்கு சந்திப்புகளை உறுதிப்படுத்துதலும் மற்றும் எக்சிகோவிடமிருந்து கருத்துகளை பெறுவதும் கடினமாகத் தொடங்கியது.

பின்னர் இறுதியாக மே 2010 இல்ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுசிலாங்கூர் அரசாங்கத்தால் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக அதே இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தைப் புதுப்பிக்க முடியவில்லை என்று இறுதியாக எங்களிடம் கூறினார்கள். கட்டிடம் போடுவதற்கு மண் சரியில்லை என்று கூறப்பட்டது. எங்கள் கோபத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் பி.என்.எச்.பி-க்கு மாற்று வீடு வடிவில் புதிய திட்டம் உள்ளது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

பின்னர் ஜூன் 21, 2011 அன்றுபி.எஸ்.எம் குழுவுடன்மாநில வீட்டுவசதி நிர்வாகி மதிப்பிற்குறிய இஸ்கந்தரை சந்தித்து விளக்கினோம். அதிகாரிகளைக் கூட்டத்திற்கு அழைத்து ஆலோசிப்பதாக அவர் உறுதியளித்தார்ஆனால் எதுவும் தகவலும் இல்லை. செப்டம்பர் 7, 2011 அன்றுசிலாங்கூர் மாநில வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் புகார் செய்தோம். எனினும், அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க எதுவும் செய்யவில்லை. டாக்டர். நசீர் ஹாஷிம்பி.எஸ்.எம் தலைவரும் சிலாங்கூர் மாநில சட்டசபையில் பிரச்சினையை எழுப்பினார்ஏனெனில் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2012 பிப்ரவரி முதல், பிரச்சினைகளைத் தீர்க்க மாநில மந்திரி பெசாரை சந்திக்க அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தோம். அப்போது மந்திரி பெசாராக இருந்தவர் டான்ஸ்ரீ காலித் இப்ராஹிம். பல மாதங்களுக்குப் பிறகு, அவரது செயலாளரின் சந்திப்பு பெற முயன்று, இறுதியாக 1 ஜூன் 2012 அன்று அவரைச் சந்தித்தோம். அதைத் தொடர்ந்து, சிக்கலின் தீர்வைக் கண்டறியவும் பி.என்.எஸ்.பி-க்கு அறிவுறுத்தியது.


11hb அக்டோபர், 2013 அன்று, பி.என்.எஸ்.பி எங்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். பி.என்.எஸ்.பி மேம்பாட்டாளருக்கு செலுத்தப்பட்ட பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூட்டத்தில் உறுதியளித்தது. ஆனால் இழப்பீடு அல்லது மாற்று வீடு போன்ற பிற விஷயங்களில் உடன்படவில்லை. இதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை, இது எங்களுக்கு முதலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பதால் மாற்று வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

 பின்னர், மதிப்பிற்குறிய அஸ்மின் அலி புதிய மந்திரி பெசாரக ஆனார்; மற்றும் வான் அசிசா இந்த திட்டம் அமைந்துள்ள காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  நாங்கள் வான் அசிசாவுக்குக் கடிதம் அனுப்பினோம்; இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை அழைக்கவும், புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு 28 அக்டோபர் 2014 அன்று ஒரு திறந்த கடிதம் அனுப்பினோம்.

 7-ஆம் திகதி ஜனவரி 2015, சிலாங்கூர் வீட்டுவசதி வாரியம் இப்போது உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்கியது மற்றும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் RM2,500 கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறியது. இந்தச் சலுகை மீண்டும் மாற்று வீடு என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

திருப்புமுனை

இறுதியாக 18 நவம்பர் 2016, பி.என்.எஸ்.பி இரண்டு முக்கிய ஒருமித்த கருத்துகளை முன்மொழிந்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. முதலாவதாகமைன்ஸுக்கு அருகாமையில் உள்ள தாமான் ஹார்மோனியில் ஒரு மாற்று வீடு முன்மொழியப்பட்டதுஇரண்டாவதாகமுன்பணம்சட்டக் கட்டணம் மற்றும் வாங்கும் போதும் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் ஆகியவை இழப்பீடு தொகையாக கொடுக்கப்படும் என்பதாகும். நாங்கள் ஒப்புக்கொண்டால், பி.என்.எஸ்.பி வாரியம் டிசம்பரில் இது குறித்து முடிவெடுக்கும் என்றார்கள்.

மேற்கூறியவற்றை நாங்கள் ஒப்புக்கொண்டோம்ஆகஸ்ட் 5, 2017 அன்றுதான், 7 வாங்குபவர்கள் மற்றும் பி.எஸ்.எம் பிரதிநிதிகளுடன் தாமான் ஹார்மோனியில் உள்ள மாற்று வீடுகளைப் பார்க்கச் சென்றிருந்தோம்.  சில பழுது பார்க்கும் வேலைகள் இருந்ததால் பி.என்.எஸ்.பி அதைச் சரி செய்ய ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவருக்குச் சொத்து பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களில் சிக்கல் இருந்ததாலும் அவர் ஏற்கனவே இழப்பீடு தொகையைப் பெற்றிருப்பதாகக் கூறியதாலும் அவருக்கு மாற்று வீடு வழங்க முடியாது என்ற செய்தி எங்களுக்கு வந்தது. இது தவறான செய்தி என்று பாதிக்கப்பட்டவர் கூறியதால்நாங்கள் இன்னும் இந்த வழக்குகளின் முன்னேற்றத்தைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஆறு பேரின் வீடு பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜூலை 4, 2018 அன்றுமாநில அரசின் செயலாளர் ஏழ்வரில் ஆறு பேருக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார்மேலும் 6 வாங்குபவர்களுக்குச் சலுகைக் கடிதங்களை 22 நவம்பர் 2018 அன்று பி.என்.எஸ்.பி வழங்கியது. கிடைத்த சலுகை கடிதத்தை முழுவதுமாக ஆராய்ந்து தெளிவுபடுத்திய பிறகுநாங்கள் 7 பிப்ரவரி 2019 அன்று பி.என்.எஸ்.பி அலுவலகத்திற்கு ஏற்பு கடிதத்தை அனுப்பினோம்.

பின்னர் கோவிட் தொற்று  பரவலால்,  மேலும் 2 ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2 ஆண்டுகளில்வழக்கறிஞர் அலுவலகமான மாக் ஃபரித் மற்றும் நிறுவனத்தில் வேலை அதிகமாக இருந்ததுஅத்துடன் மாநில அரசு மற்றும் மாவட்ட அலுவலகம் தீர்க்க வேண்டிய சில காலதாமதமான கட்டணங்களும் இருந்தன.

இறுதியாக 26 செப்டம்பர் 2024-ல், ஏழு குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்கு மாற்று வீடுகளின் சாவி வழங்கப்பட்டது. மற்றொரு குடும்பம் அவர்களது அடுத்த வாரிசு தீர்மானித்த பிறகு வீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். சிறுவன் முருகா இப்போது பி.எஸ்.எம் உறுப்பினராக உள்ளார் மற்றும் அவரது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தங்கள் முயற்சி வீண் போகவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பல ஆண்டுகளாகச் செய்த அனைத்து முயற்சிகளுக்கும் தோழர் செல்வம், சிவன் மற்றும் எனக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர். முகமட் யூனுஸ் இஸ்கந்தர் மற்றும் பி.என்.எஸ்.பி அதிகாரி திருமதி நோரைனி ஆகியிருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். அதே போல் மாக் ஃபரித் வழக்கறிஞர் நிறுவனத்திற்கும் எங்களது நன்றிகள்.

இந்த குடும்பங்கள் காலம் கடந்து அவர்களது இழப்பீடு தொகையைப் பெற்றிருந்தாலும்கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு சொத்தைப் பெறுவது எளிதான காரியம் அல்ல. சில வாரங்களுக்கு முன்புஒரு இளைஞர் என்னைச் சந்தித்து எங்கள் போராட்டத்தைப் பற்றி அறிய விரும்பினார். நான் விளக்கிகோப்புகளைக் காண்பித்தபோது... இது 25 வருடப் போராட்டம்இது 20 வருடங்கள்இது 30 வருடங்கள் எனத் தெளிவுபடுத்தினேன். அவர் கவலைப்பட்டார். அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் பி.எஸ்.எம் எப்படித் தொடர் போராட்டத்தைக் கையில் எடுக்கிறது என்று அவர் கேட்டார். வழக்கமான புன்னகையுடன்முதுகில் தட்டிக் கொடுத்தேன். சரியான வெற்றிக்குக் குறுக்குவழிகள் இல்லைஒவ்வொரு வெற்றிக் கதையின் பின்னும்நிறையப் போராட்டமும் கடின உழைப்பும் இருக்கும். போராடுவோம். வெற்றி பெறுவோம்.


எஸ்.அருட்செல்வன்

மலேசிய சோசலிசக் கட்சி துணைத் தலைவர்

தமிழில் தோழர் மோகனா


No comments:

Post a Comment

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...