தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், காசாவில் புது வழி ஒன்று பிறந்திருக்கிறது. காசாவில் போர் நிறுத்தம் உடன்படிக்கை ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழு வெற்றி இல்லாவிட்டாலும், இந்த வெற்றி இப்பொழுது தேவைப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இந்தப் போர் நிறுத்தம் உயிர் நீத்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய சாமானிய மக்களுக்கே உரியது. இஸ்ரேல் மற்றும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான போராட்டம் மீண்டும் உயிர் பெற மேலும் பல வழிகள் பிறக்கும் என நம்புகின்றோம்.
பொங்கல் ஓர் உழவர் திருநாள், உழைக்கும் வர்க்கத்தின் திருநாள். இந்தப் பொங்கல் திருநாள், தினம்தோறும் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் ஒத்துமொத்த சமுதாய மேம்பாட்டிற்கும் உழைக்கின்ற தொழிலாளி வர்க்கத்திற்கே உரியது ஆகும். ஆனால், இந்த நாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்கு உரிய அங்கீகாரமும் சலுகைகளும் கிடைக்கின்றனவா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி.
நாம் இப்பொழுது 2025-இல் இருக்கின்றோம். நமது குறைந்தபட்ச சம்பளம் இப்பொழுது தான் RM1500 இருந்து RM1700 ஏற்றம் கண்டுள்ளது. நமது பிரதமர் அறிவித்துள்ள இந்த RM200 ஏற்றம் முந்தைய ஏற்றத்தை காட்டிலும் குறைந்ததே ஆகும். டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி (DS Ismail Sabri) பிரதமராக பணிபுரிந்த காலத்தில் குறைந்தபட்ச சம்பளம் RM300 ஏற்றம் கண்டது. இதில் வருத்தம் என்னவென்றால் இந்த குறைந்த பட்ச சம்பளத்தின் விடயங்களில் இரண்டே வகையான உரையாடல்களே பெரிதாக இடம்பெற்றன.
ஒரு கூட்டம் ஏன் இந்த ஏற்றம் என்று அரசாங்கத்தை கேள்வி கேட்டது.
இன்னொரு கூட்டம் இந்த RM1700 ஏற்றத்தை வைத்து தன்னை தொழிலாளிகளுக்கான அரசு என்ற பிம்பத்தை கட்டி எழுப்ப முற்பட்டது.
ஆனால் யாரும் இந்த வேளையில், குறைந்தபட்ச சம்பளம் எடுக்கும் தொழிலாளிகளிடம் இந்த ஏற்றம் போதுமான ஒன்றாக இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கவில்லை என்பது வருத்தமான ஒரு சூழ்நிலை. அரசாங்கத்தின் சொந்த குறைந்தபட்ச சம்பளம் கணக்கீட்டின் வழி ஒரு தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் RM2,444. மலேசிய சோசலிசக் கட்சி (PSM) RM2000 எனும் கோரிக்கையை முன் வைத்தது. இந்த கோரிக்கையை தொழிற்சங்கங்களும் ஆதரித்தன. அனைத்துலக ஆணையமான, UNICEF, RM2,100 எனும் கோரிக்கையை முன் வைத்தது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படாமல் சொற்பமான ஏற்றத்தையே இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
தொழிலாளிகளின் சம்பளம் ஒரு புறம் இருக்க, நமது உணவு உற்பத்தியோ ஒரு கவலைக்கிடமான சூழ்நிலையில்தான் உள்ளது. 2023-ஆம் ஆண்டில் நமது நாடு இறக்குமதி செய்த உணவு RM75.54 billion ஆகும். இதை நாம் எப்படி எதிர்கொள்ள இருக்கிறோம் என்ற துளி அளவும் அக்கறையில்லாத அரசாங்கத்தைதான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதிகப்படியான இறக்குமதியை நம்பி இருக்கும் நாம், நமது சொந்த சிறு விவசாயிகளை அங்கீகரிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
நமது பிரதமரின் சொந்த நாடாளுமன்ற தொகுதியில், அதிகமான விவசாயிகள் அவர்கள் உழைப்பை செலவிடுகின்ற நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தனது செலவினை குறைத்துக் கொள்ள எண்ணுவதாக ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறு விவசாயிகளை அப்புறப்படுத்துவது எந்த வகையில் அரசாங்கத்தின் இந்த முயற்சியை வெற்றி அடைய செய்யும் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
தொழிலாளியின் சம்பள உயர்வு என்பது அந்தந்த நாட்டில் தொழிற்சங்கங்கள் எவ்வளவு தீவிரமாக செயல்படுகின்றன என்பதை வைத்தே அமைந்துள்ளது. எந்த நாட்டில் தொழிலாளிகள் தொழிற்சங்கத்தின் கீழ் அதிகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனரோ அங்கே சம்பளம் அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது. நமது நாடு தொடர்ந்து குறைந்த அளவிலேயே சொற்பமான சம்பளத்தை வருட கணக்கில் நிலை நிறுத்துவதற்கு காரணம் 6% குறைவான தொழிலாளர்களே தொழிற்சங்கத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் நாட்டம் கொண்டிருப்பதாக கூறி இருந்தாலும் கூட இத்தனை நாட்களாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து இதற்கான என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற கேள்வியை இதன் வழி முன்வைக்க விரும்புகிறோம்.
ஆகவே இந்தப் பொங்கல் ஒரு தொழிலாளியின் உழைப்பை மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதற்கு மட்டும் கொண்டாடாமல் ஒரு தொழிலாளியின் மேல் நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலை எப்படி கையாள வேண்டும் என்ற பார்வையையும் நாம் வளர்த்துக் கொள்ள முன் வரவேண்டும். முதலாளி வர்க்கத்தில் கேட்கப்படும் கேள்விக்கும் முன்னிலைப்படுத்தப்படும் கோரிக்கைகளுக்கும் உடனே செவிசாய்க்கின்ற நிலைமை மாறி, தொழிலாளிகளுக்கான, சாமானிய மக்களுக்கான அரசாங்கம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்தப் பொங்கலை அனைவரும் கொண்டாடி இந்தப் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைப்போம்.
அனைவருக்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் சார்பில் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
காந்திபன்
மலேசிய சோசியலிச கட்சி மத்திய செயற்குழு உறுப்பினர்
3.35am, 16th January 2025
No comments:
Post a Comment