Friday, October 18, 2024

அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகள் – பரிதாபகரமான மொண்ணை பதில்!

 “ரக்கான் எம்ஓஹெச்” எனும் புதிய திட்டமாக, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகளை உருவாக்க மடானி அரசு யோசித்து வருவதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி  அஹ்மட் கூறியதை கேட்டு பிஎஸ்எம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.

 முழு கட்டணத்தைச் செலுத்தும் நோயாளி திட்டம் என்று அழைக்கப்பட்ட (எஃப்பிபி) 2007 இல் அப்போதைய அரசாங்கமான பிஎன்-னால் அறிவிக்கப்பட்டது. பின்னர், பிஎஸ்எம் இத்திட்டத்திற்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்க, 2011இல் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மருத்துவமனைகளில் அரசு சார்பற்ற  செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பைத் திரட்டி  பி.எஸ்.எம் கண்டனத்தைத் தெரிவித்தோம்.

பிஎஸ்எமின் உரிமையியல் சமூகம் போராட்டத்தினால் இத்திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், அதன்பின், நாடு முழுவதும் உள்ள 11 பொது மருத்துவமனைகளில் ஆரவாரமின்றி முழு கட்டணம் செலுத்தும் நோயாளி திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது.

முழு கட்டணம் செலுத்தும் நோயாளி திட்டத்திற்கு எதிராக பிஎஸ்எம் மக்களை திரட்டியது. ஏனெனில், ஒரு சாதாரண குடிமகனுக்கு இத்தகைய திட்டம் அபத்தமாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் பிரச்சனை என்னவென்றால் மிகவும் சிக்கலான நோயிற்குச் சிகிச்சை அளிப்பதற்கும், இளைய மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் போதுமான மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் குறைபாடு இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்ற 75% நிபுணர்கள் நாடு முழுவதும் வளர்ந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ளனர்.  மேலும், மூத்த நிபுணர்களின் குழுவில் 25% மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். அவர்கள் உள்நோயாளிகளில் 75% மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மற்றும் புது மருத்துவர்களுக்கு தக்க பயிற்சிகளை வழங்க முடியாமலும் போகிறது.

 அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையின் விளைவால், சிக்கலான நிலையில் உள்ள நோயறிதலில் மற்றும் சிகிச்சையில் தாமதம், தவறான நோயறிதல், நிபுணத்துவம் பெற முயற்சிக்கும் இளைய மருத்துவர்களின் பயிற்சி திட்டங்களில் போதாமை மற்றும் அதிக மன அழுத்தத்துடன் கூடிய நோயாளிகளின் நீண்ட நேரக் காத்திருப்பு எனப் பல சிக்கல்களை நோயாளிகளும் இளமருத்துவர்களும் சந்திக்க நேரிடுகிறது. இதனால்தான் 2011ல் எஃப்பிபி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

 அடுத்தடுத்த ஆண்டுகளில் 11 மருத்துவமனைகளில் ரகசியமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அதைப்பற்றிய பெரும்பாலான அச்சங்கள் சரியானவை என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. எஃப்பிபி திட்டமானது மூத்த மருத்துவர்களை அரசு மருத்துவமனை வலாகத்தின் அலுவலக நேரத்திற்குப் பிறகு தனியார் நோயாளிகளைப் பார்க்கவும் அவர்களுக்குத் தனிப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அனுமதிக்கிறது. பல மூத்த அரசாங்க வல்லுநர்கள் எஃப்பிபியில் நியாயமான முறையில் பங்கு கொண்டனர்.

மேலும், அவர்களது தனிப்பட்ட நோயாளி நேரத்தை வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் குறைவாகக் கட்டுப்படுத்தினர். ஆனால், கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதிக ஆர்வமுள்ள வல்லுநர்கள் இத்திட்டத்தின் மூலம் தங்களின் அரசாங்க வேலையை விட இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடிந்தது. ஆனால், சாதாரண கட்டணம் செலுத்த முடியாத நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பைச் சுமக்கும் மற்ற நிபுணர்களின் மன உறுதியில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தியது. இவை இளம் நிபுணர்களின் பயிற்சியையும் பாதித்தது.

நீங்கள் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் எஃப்பிபி திட்டம் உண்மையில் அதில் பங்கேற்கும் நிபுணர்களுக்குள் ஒரு தீவிரமான மோதலை உருவாக்குகிறது. இலவச பொது கிளினிக்கில் காத்திருப்போர் பட்டியல் மிக நீளமாக இருந்தால் மட்டுமே நோயாளிகள் எஃப்பிபி கிளினிகளுக்கு வருவார்கள். பெரும்பாலும் அந்தந்த துறைகளில் மூத்த அரசாங்க நிபுணர்களாக இருப்பவர்களின் பொறுப்புகளில் ஒன்று தங்களின் செயல் திறனை மேம்படுத்துவதாகும்- அதாவது, காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை பொருத்த மாட்டிலும். மேலும், தங்கள் துறையில் உள்ள இளநிலை நிபுணர்களைத் திறன் பெறச் செய்வதாகும். ஆகவே சிறப்பாக நடத்தப்படும் பொது மருத்துவமனைகளில் எஃப்பிபி கிளினிக்கு குறைவான நோயாளிகளையே வருவார்கள்.

 நோயாளி பராமரிப்பு, இளநிலை மருத்துவர்களின் பயிற்சி, மற்றும் அரசு  மருத்துவர்களின் மன உறுதி ஆகியவற்றில் இத்திட்டமானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதைச் சுகாதார அமைச்சகம் உள்தணிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதை நாங்கள் உறுதியாக அறிவோம். இந்த உள்தணிக்கைகளில் பல குறைபாடுகளைக் கண்டறிந்து திட்டத்தை விமர்சிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். உள்தணிக்கைகளை தற்போது சுகாதார அமைச்சர் பார்வையிட்டாரா? ஒருவேளை அவர் பிஎஸ்எம் கூறியது போல மோசமாக இல்லை என்றால், எஸ்பிபி திட்டத்தின் மற்றொரு பரிணாமமான பிரைவேட் விங்ஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட வேண்டும்.

 டானி அரசாங்கத்தில் இருக்கும் எங்கள் நண்பர்களுக்கு, சாமானியர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கத்தைச் சீர்திருத்துவோம் என்ற வாக்குறுதியுடன் வந்ததை பிஎஸ்எம் நினைவுபடுத்த விரும்புகிறது. அரசாங்கம் எதிர்கொள்ளும் 1.2 டிரில்லியன் ரிங்கட் கடனைப் பற்றியும் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திலிருந்து மூன்று சதவீதத்திற்கு அல்லது அதற்கும் குறைவான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை குறைக்கும் விருப்பத்தைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம்.

 ஆனால் சாதாரண மனிதர்களிடமிருந்து வளங்களைப் பறிக்கும் எந்த நடவடிக்கையும் நாம் கடுமையாக ஏற்கவில்லை. மூத்த நிபுணர்களின் பற்றாக்குறையால் நமது சுகாதார பாதுகாப்பு அமைப்பு போராடி வருகிறது. மக்களுக்கான நிபுணர்களின் இருப்பை குறைக்கும் இந்த நடவடிக்கையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் இத்திட்டத்தை மிகவும் கண்டிக்கிறோம்.

ஏன் இந்த பொறுப்பற்ற செயல்? ஏனென்றால், நீங்கள் மடானி தற்போதைய அரசாங்கம். பிஎன் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியில் நாம் ஒன்றாகப் பயணித்த போது உங்களிடம் இருந்த பலம் அதிகம். கடந்த 50 ஆண்டுகளில் உண்மையான அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (அதாவது பண வீக்கத்திற்கான தள்ளுபடிக்குப் பிறகு) 25 மடங்கு அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திலிருந்து அதை தற்போதைய 14 சதவீதமாக குறைத்துள்ளது.. இதுதான் பிரச்சனையின் சமாச்சாரம் இல்லையா? இந்த நாடு ஈட்டும் வருமானத்தில் பெருகிய முறையில் சிறு பகுதி மட்டுமே அரசாங்கத்திற்குச் சேருகிறது.

அதனால்தான், சுகாதார பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டத்தை தொடங்குதல், பசுமையாற்றலுக்கு மாற்றத்தை விரும்பப்படுத்துதல், நமது ஆறுகள் மற்றும் காடுகளை மறு சீரமைத்தல், நகராட்சி கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிதிகள் இல்லை. இவை அனைத்தும் லாபகரமான முயற்சிகள் அல்ல. எனவே, தனியார்த் துறையால் மேற்கொள்ளப்படாது. ஒழுங்காகச் செயல்படும் பொருளாதாரத்தில் சமூகத்தால் கூட்டாக உருவாக்கப்படும் செல்வத்தின் நியாயமான விகிதத்தில் தனியார் துறை ஆர்வம் காட்டாத அனைத்து திட்டங்களையும் மற்ற சேவைகளையும் நிதி அளிக்க அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.

 துரதிர்ஷ்டவசமாக, மலேசியாவிலும் பல நாடுகளிலும் அனைத்து குடிமக்களும் வாழ்க்கையும் மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் சமூக செல்வத்தின் விகிதம் காலப்போக்கில் குறைந்து வருகிறது. அது ஏன் இப்படி அதை மாற்ற முடியுமா? அரசு கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் இவையா? மதானி அரசாங்கத்தில் உள்ள நீங்கள் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவீர்களா? போன்ற கேள்விகளின் உள்ளடக்கம்தான் மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ள அதிகாரங்களைப் பொறுப்புடன் செயல்படுத்துவதாக இருக்கும்.

 நாட்டின் வருமானத்தின் தவறான ஒதுக்கீட்டை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் மோசமான சிந்தனையற்ற கொள்கைகளை மதானி அரசாங்கம் தொடர்ந்தால் பிஎஸ்எமின் வேடிக்கை பார்க்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் ஒற்றுமையையும் முன்னிறுத்தி அக்கறையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான எமது மக்களின் விருப்பத்தின் உறுதியான வெளிப்பாடு பொதுச் சுகாதார பாதுகாப்பு முறைமையாகும். நமது பொது சுகாதார அமைப்பு மிகவும் உண்மையான வழியில் தேசத்தின் ஆன்மாவை வரையறுக்கிறது. ஆகவே அதைச் சீரழிக்கும் எந்த நடவடிக்கையும் பிஎஸ்எம் மட்டுமின்றி பல உரிமையியல் சமூக குழுக்களும் சிவப்பு கோடி கட்டி உங்களைத் தடுக்கும். தயவுசெய்து அதைக் கடக்காதீர்கள்.

 

டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்

பி.எஸ்.எம் தேசியத் தலைவர்

தமிழில் தோழர் மோகனா

     

 

No comments:

Post a Comment

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...