நெல்லின் அடக்கவிலையின் விலையை உயர்த்தி, விதை தர மசோதாவை அரசு நிராகரிக்க வேண்டும்..
புத்ரஜெயா – 27 ஜனவரி 2025
நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான நெல் பயிற்செய்யும் விவசாயிகள் இன்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் ஒன்று திரண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். நெல்லின் அடிப்படை விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும், சிறு விவசாயிகளைப் பாதிக்கும், பயிர்களுக்கான விதை தர மசோதாவுக்கு (RUU) தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் அவர்கள் அங்கு ஒன்று கூடினர்.
நெல்லின் விலையை மெட்ரிக் டன்னுக்கு RM1,300 லிருந்து RM1,800 ஆக அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.
"இக்காலக்கட்டத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு RM1,300 என்ற அடிப்படை விலை நியாயமற்றது மற்றும் இனி அது பொருந்தாது என்றும், ஏனெனில் டீசல் மற்றும் விதை உள்ளிட்டச் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து நெல் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் யதார்த்தத்தை இது பிரதிபலிக்கவில்லை," என்றும் Pertubuhan Persaudaraan Pesawah Malaysia (PESAWAH) இயக்கத்தின் தலைவர் அப்துல் ரஷீத் யோப் கூறினார்.
"நெல் விவசாயிகளின் பிழைப்பை உறுதி செய்வதற்கும், நாட்டின் உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்கும் நெல்லின் அடிப்படை விலையை அதிகரிப்பது முக்கியமானது." என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது நடப்பில் இருக்கும் நெல்லின் அடக்கவிலை 2023 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதாகும். இருந்தபோதிலும், 2023 முதல், விவசாயிகள் சுமக்க வேண்டிய பல்வேறு செலவுகள் கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளன. 2023 ஆம் ஆண்டிலிருந்து நெல் விதைகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, அதாவது, 2023 -ல் 20 கிலோவிற்கு RM45 வெள்ளியிலிருந்து தற்போது 20 கிலோவிற்கு RM58 ஆக சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதோடு, டீசல் மானியங்கள் அகற்றப்பட்டதால் உழவு மற்றும் அறுவடை செலவுகளும் அதிகரித்துள்ளன. இதனால் விவசாயிகள் டீசல் மானியங்கள் (fleet cards) பெறாததால், இயந்திர உரிமையாளர்களால் வசூலிக்கப்படும் உழவு இயந்திரங்களின் செலவுகளை அதிகமாகச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில், நில வாடகை செலவுகளும் மொத்த விகிதத்தில் அதிகரித்துள்ளன, இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விலையும் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளன. அதைத் தவிர, நெல் வயல் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.
"நாங்கள் இன்று இங்கு கோரி நிற்பது நியாயமானது மற்றும் பொருத்தமானது" என்று அப்துல் ரஷீத் யோப் செய்தியாளர்களை சந்திக்கும்போது கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது
"நெல்லின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு RM1,800 ஆக அதிகரிப்பது, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் தொடர்ந்து பயிரிடவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஊக்கத்தை அளிக்கும். எங்களின் இந்தக் கோரிக்கையின்படி, நெல் விலையை RM1,800 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்க முடியாவிட்டால், PeSAWAH அமைப்பு மாற்று வழிகளை முன்மொழிகிறது.
- நெல் உற்பத்தியின் அதிக செலவை ஈடுசெய்ய நெல் விலை மானியத்தை டன்னுக்கு RM500 அதிகரிக்க வேண்டும்.
- உழவு மற்றும் அறுவடை இயந்திர சேவைகளின் விலையைக் குறைத்தல்
- நெல் விவசாய இடுபொருட்களின் செலவையும் குறைத்தல்
- விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்களின் விலையைக் குறைத்தல்
- விவசாயிகள் நெல் விதைகளைச் சேமிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், விற்கவும் அனுமதித்தல்.
மேற்கூறிய இந்த 5 நடவடிக்கைகளால், அதிக விலையை வசூலிக்கும் சப்ளையர்களை விவசாயிகள் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பயிர்கள் தொடர்பான விதை தர மசோதாவிற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவின்படி, தாவர விதைகளை பதப்படுத்தி விநியோகிக்கும் ஒவ்வொரு நபரும் உரிமம் பெற்று, விதை மாதிரிகளை சரிபார்ப்பு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். உரிமம் இல்லாமல் விதைகளை சேமித்து விநியோகிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை RM100,000 வெள்ளி அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வகை செய்கிறது.
"இந்த மசோதா இந்த நாட்டில் உள்ள விவசாயிகளுடன் எந்த ஆலோசனையும், கருத்து பறிமாற்றங்களும் இல்லாமல் வரைவு செய்யப்பட்டுள்ளது. விதை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் இந்த மசோதாவின் நோக்கம் பாராட்டத்தக்கது தான். இருப்பினும், சிறு விவசாயிகள் உட்பட விதைகளை சேமித்து விநியோகிக்கும் அனைத்து தனிநபர்களுக்கும் உரிமம் வழங்குவதும், வேளாண்மைத் துறைக்கு அறிவிப்பதும் மிகையான செயலாகும், மேலும் இந்த மசோதாவால் பெருநிறுவனங்கள் ஏகபோகத்துக்கு வலுசேர்க்கும்" இவ்வாறு அப்துல் ரஷீத் யோப் தெளிவு படுத்தினார்.
முன்மொழியப்படவுள்ள விதை தர மசோதாவை நெல் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்த மசோதா அவர்களைப் போன்ற சிறு விவசாயிகளுக்கு மிக சுமையாக அமையும் என்றும் அவர்கள் உறுதியாகக் கூறினார்.
"நாங்கள் அரசின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கும் இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி, நெல் விவசாயிகளின் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இன்றைய போராட்டம் முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தோனேசிய ஜனாதிபதியின் பிரதமர் அலுவலகத்திற்கான அதிகாரப்பூர்வ வருகைக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதமரின் அரசியல் செயலாளராக இருக்கும் சான் மிங் காய்-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று விவசாயிகளுடன் இந்தப் போராட்டத்தில் மர்ஹைன் ஆர்வலர்கள் மற்றும் மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணை தலைவர் S. அருட்செல்வன் மற்றும் PSM -இன் தேசிய பொருளாளர் சோஹ் சூக் ஹ்வா உட்பட பல தன்னார்வளர்கள் விவசாயிகளுக்காக களம் இறங்கினர்.
No comments:
Post a Comment