Monday, March 10, 2025

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உயிர் பிரிந்தது, பி.எஸ்.எம் குடும்பத்தை தாளாத துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  

சாந்தா ஒரு துணிச்சலான போராளியாவார். எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தனது முடிவில் உறுதியுடனும் இருக்கும் ஒரு தோழர். தமிழ் மொழி ஆழுமையை பெற்ற சாந்தா, அவரின் எழுத்துப் பணியின் மூலம் கட்சியில் பல படைப்புகளை எழுதியுள்ளார். கட்சியில் தமிழ் மொழி படைப்புகளை எழுதுவது மட்டுமல்லாமல், தமிழ் மொழிபெயர்ப்பாளாராகவும், தமிழ்ப் படைப்புகளை திருத்துபவராகவும் தனிச்சிறந்து விளங்கியவர். 

அவரும் அவரது இணையர் மோகனும் ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தை 2006-ஆம் ஆண்டில் உருவாக்கினர். மேலும், சாந்தா மலேசியக்கினி (Malaysiakini) தமிழ் பிரிவில் பணியாற்றியும் உள்ளார். 2009-ஆம் ஆண்டு, அவர் மோகனுடன் ஜொகூரில் பி.எஸ்.எம் கிளையைத் தொடங்கினார். அங்கு அவர் செயலாளராக பதவி வகுத்தார். 2020-ஆம் ஆண்டு, காரைநகர் நட்புறவு மையம் தொடங்கப்பட்ட போது சாந்தா அந்த முயற்சிக்கு முன்னோடியாகவும் முதுகெலும்பாகவும் விளங்கினார். இந்த மையம் மாணவர்களுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய களமாக கங்கார் பூலாயில் இன்றுவரை  செயல்பட்டு வருகிறது.

மேலும், இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு நம் நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர் அகதிகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதிலும், இங்கு சோஸ்மா கைதிகளுக்கான நீதி போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற உன்னத சேவைகளிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தி கொண்டவர். இப்படித்தான், மோகனையும் 1999-ஆம் ஆண்டு, சாந்தா ஜொகூரில் ஆசிரியர் பயிற்சியிலிருந்த போது சந்தித்தார். போராட்ட களபணியில்தான் இவர்களின் காதலும் பூத்தது. 



சாந்தா, 16 ஜூன் 1975-இல் தெலுக் இந்தானில் பிறந்தார். அவரின் தகப்பனார் பெருமாள், வீட்டுக் கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் அவரின் தாயார் லீலாவதி. இத்தம்பதியருக்கு பிறந்த மூத்த மகள்தான் சாந்தா. அவருக்கு 4 உடன்பிறப்புகள் இருந்தனர், துரதஷ்டவசமாக அவர்களில் மூன்று பேர் இவருக்கு முன்பே காலமாகிவிட்டனர். 

சாந்தா தனது ஆரம்பக் கல்வியை எஸ்.ஆர்.ஜே.கே லாடாங் சசெக்ஸ் (Ladang Sussex), தெலுக் இந்தான் மற்றும் எஸ்.எம்.கே டத்தோ சாகோர் லங்காப்பில் (Sagor Langkap) அவரது இடைநிலைக் கல்வியையும் பெற்றார். அவர் ஜொகூர் பாருவில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியான மொஹமட் காலித்தில் (Mohd Khalid) படித்து பட்டம் பெற்றார். இங்குதான் அவர் மோகனைச் சந்தித்தார், இறுதியில் இருவரும் 27-5-2001 அன்று மென்டகாப் பஹாங்கில் திருமணம் செய்து கொண்டனர்.

சாந்தா பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவைகளில் எஸ்.ஆர்.ஜே.கே கங்கர் புலாய் ஜொகூர், எஸ்.கே. சுங்காய் மற்றும் எஸ்.கே. சிலிம் ரீவர் அவரின் கடைசி பள்ளியாக அமைந்தது. அங்கு மே 2023-இல் தனக்கு புற்றுநோய் கொண்டிருப்பது தெரியவரும்வரை ஆசிரியர் பணியில் இருந்தார். படிப்பு சொல்லிக் கொடுக்கும் சக ஆசிரியர்கள் போலில்லாமல், தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் பாடுபட்டார்.

கடந்த இரண்டு ஆண்டு, சாந்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார், அவரின் எல்லா நற்செயல்களும் செயலற்று போனது. அவரது உடல்நிலை குறைவின்போது அவரது இணையரான மோகன் மற்றும் சகோதரி ஜெயாவின் சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவு இருந்த போதிலும், சாந்தாவின் உடல்நலம் சரிந்து பல நாட்கள் அவர் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய மரணம் அவரை வேதனையிலிருந்து விடுவித்து இருக்கலாம். சாந்தா துணிச்சலாக  மரணப் படுக்கையிலும் போராட்டத்தை தொடர்ந்தாலும், அனைத்தும் இன்று காலை 11:44 மணிக்கு சிலிம் ரிவர் மருத்துவமனையில் ஒரு முடிவிற்கு வந்தது. 

போராட்டவாதிகள் எப்போதும் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். அவ்வகையில் சாந்தாவும் நமது நினைவில் விதைக்கப்படுவார். எங்கள் போராட்டத்தில் அவர் ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார். வாழ்க்கை அவருக்குக் குறுகியதாகிவிட்டது. ஆனால் அவருடைய செயல்பாட்டை அறிந்தவர்கள், தொடர்ந்து சாந்தாவின் களவேலைகளைப்பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். 

தோழர் சாந்தாவிற்கும் எங்களின் வீரவணக்கங்கள். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உதவியாக இருந்து, சிறப்பாக கவனித்துக் கொண்ட அவரது இணையர் மோகன், சகோதரி ஜெயா மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் போராட்டங்களை நாங்கள் தொடர்வோம், ஓய்வெடுங்கள் தோழரே.


S Arutchelvan

5.23pm 9-3-2025

தமிழில் : சிவரஞ்சனி

சர்வதேச பெண்கள் நன்னாள்– ஒரு சுருக்கமான வரலாறு

                                            


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8, சர்வதேச பெண்கள் நன்னாளைக் குறிக்கிறது. இந்த அர்த்தமுள்ள நாள் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தப் போராடிய அனைத்து பெண்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் நன்னாள் ஒரு தீவிர மற்றும் புரட்சிகர வரலாற்றைக் கொண்டுள்ளது. பெண்கள் நன்னாள் உண்மையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சோசலிச இயக்கத்திலிருந்து பிறந்தது.


தீவிர தோற்றம்

                                         

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், விரைவான முதலாளித்துவ பொருளாதார அமைப்புகளின் விரிவாக்கத்திற்காகவும் லாபத்திற்காகவும் அதிகமான பெண்கள், தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். விரிவான பெண் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றம் அவர்கள் பெண் சுதந்திரத்தைக் கோர வழியமைத்தது. ஐரோப்பாவில் அந்த நேரத்தில் இடதுசாரி தொழிலாளர் கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி (எஸ்.பி.டி) ஜெர்மனியில் உள்ள சோசலிச பெண்கள் இயக்கத்தை உருவாக்கியது. பெண்கள் தலைமையிலான எஸ்.பி.டி பணியகம் 1891 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஜெர்மன் இடதுசாரி நபரான கிளாரா ஜெட்கின் இந்த அமைப்பின் முக்கிய தலைவராக ஆனார். எஸ்.பி.டி மகளிர் பணியகம் நிறுவப்பட்ட போது பிரஷ்யன் மற்றும் ஜெர்மனியில் உள்ள பெண்கள் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவோ அல்லது கட்சிகளில் சேரவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சமூக பேரணியில் கிளாரா ஜெட்கின் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் வர்க்க அடக்கு முறையிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி போராட்டத்தை வெல்ல இயலாது என்று வாதிட்டார். கிளாரா தலைமையில், ஜெர்மன் பெண்கள் இயக்கம் விரிவடைந்தது. எஸ். பி.டி குழு 1907-களில் 10500 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 1913-களில் 150,000 மேற்பட்ட பெண்கள் எஸ்.பி.டி இணைந்தார்கள். கிளாரா ஜெட்கின் வழி நடத்திய எஸ்.பி.டி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதா அல்லது அரசாங்கத்திற்குத் துணை நிற்பதா என்ற கேள்வியினால் பிளவு ஏற்பட்டது. ஜெட்கின், கார்ல் லிப்க்னெக்ட், ரோசா லக்சம்பர்க், லூயிஸ் கோஹ்லர் மற்றும் பல எஸ்.பி.டி தலைவர்கள்  தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களும் இருக்காது என எஸ்.பி.டி அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்ததை இவர்கள் நிராகரித்தனர். ஏக பத்திய போரில் ஜெர்மனியின் ஈடுபாட்டை எதிர்த்தார். மேலும் முதலாம் ஆண்டு அனைத்துலக சோசலிச பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.

1908-களில் அமெரிக்காவின் நியூயார்க்கில் 30,000 வேலை நிறுத்த போராட்டத்தில் துணி உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள், பெரும்பாலும் புலம் பெயர்ந்த பெண்கள் வேலை நேரங்களைக் குறைக்க, ஊதிய உயர்வு மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் கோரி நகரத்தில் அணிவகுத்துச் சென்றனர். வேலை நிறுத்த போராட்டம் மூன்று மாதங்களுக்கு நீடித்தது, தொழிலாளர்கள் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை வென்றனர். அமெரிக்கா சோசலிசக் கட்சி (எஸ்பிஏ)ஆல் நிறுவப்பட்ட மகளிர் தேசிய குழு அந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பெண் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தது. பிப்ரவரி 28, 1909 அன்று எஸ்பிஏ "தேசிய பெண்கள் நாள்" நடவடிக்கையை ஏற்பாடு செய்தது.  அந்த நேரத்தில் வேலை நிறுத்தம்  மற்றும் வாக்குரிமை கோரி போராடிய பெண்களின் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலைகளின் மீது எதிர்ப்பு வெடித்தது.

அமெரிக்காவில் நடந்த எதிர்ப்பு போராட்டம் ஐரோப்பாவில் சோசலிச தலைவர்களை சர்வதேச பெண்கள் நன்னாளை வழிநடத்த ஊக்கப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 26-27, 1910 அன்று, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடத்திய இரண்டாவது சர்வதேச சோசலிச மகளிர் மாநாட்டின் போது, ​​ஜெர்மன் சோசலிச தலைவர் லூயிஸ் ஜீட்ஸ் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச பெண்கள் நன்னாள் " கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார் அதை கிளாரா ஜெட்கின் ஆதரித்தார். 17 நாடுகளைச் சேர்ந்த 100 இடதுசாரி பெண் ஆர்வலர்கள் கலந்து கொண்ட மாநாட்டில், பெண்கள் உட்பட அனைவருக்கும் சமத்துவம் மற்றும் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடுவதற்கான இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் சர்வதேச மகளிர் தினத்திற்குப் பயன்படுத்தப்படும் முழக்கம் "பெண்களுக்கு வாக்களிப்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் எங்கள் பலத்தை ஒன்றிணைக்கும்" என்பதாகும்.

பெண்களுக்கு உலகளாவிய வாக்களிப்புக்காகப் போராடுவதற்கான உத்திகளைப் பற்றி விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், கோபன்ஹேகனில் உள்ள சோசலிச பெண்கள் மாநாட்டில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பையும் விவாதித்தது. இதில் மகப்பேறு மற்றும் சுகாதார பாதுகாப்பு, போர் மற்றும் சமாதான பிரச்சினைகள், பேரினவாதத்திற்கு எதிரான பெண்களின் கடமைகள், ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலைக்கான கோரிக்கைகள் மற்றும் இரவு வேலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


ரஷ்ய புரட்சி

                         

அந்த நேரத்தில் கோபன்ஹேகனில் நடந்த சோசலிச மகளிர் மாநாட்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஜவுளி தொழிலாளர்களின் பிரதிநிதியாக இருந்த ரஷ்யப் புரட்சிகர நபரான அலெக்ஸாண்டரா கொல்லோன்டாய் எழுதினார், “கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி கோபன்ஹேகன் மாநாட்டின் தொடக்கத்தில் கணிசமாகக் காணப்பட்டது. ஸ்டட்கார்ட்டில் (அதாவது, 1907 ஆம் ஆண்டில் முதல் சோசலிச மகளிர் மாநாடு நடைபெற்றது), பிரதிநிதிகளின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது, ஆனால் இன்று, கோபன்ஹேகனில் சுமார் 100 பேர் இருந்தனர் மற்றும் 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். சோசலிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகள், சங்கங்கள் மற்றும் பெண் சங்கங்களுடன் வர்க்கமாக ஒன்றிணைந்தனர்.”

பாலின-வர்க்கத்தின் கேள்வியில் ஜெட்கின் மற்றும் கொலோன்டாய் எடுத்த அரசியல் நிலைப்பாடு, அந்த நேரத்தில் அவர்களின் கட்சித் தலைமைக்கு முரணானது. காரணம் அவர்கள் வர்க்க போராட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்த இரண்டு இடதுசாரி நபர்களும் பெண்களின் சுதந்திரம் ஒரு பரந்த வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு வருடம் கழித்து, 1911 இல், சர்வதேச பெண்கள் நன்னாள் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. முதல் சர்வதேச பெண்கள் நன்னாள் மார்ச் 19, 1911 அன்று கொண்டாடப்பட்டது. இந்த தேதி ஜெர்மன் பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் 1848 ஆம் ஆண்டில் அதே நாளில், அந்த நேரத்தில் ஜெர்மன் ஆயுதக் கிளர்ச்சியை எதிர்கொண்ட பிரஷ்யன் ராஜா, பல சமூக சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்திருந்தார், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இதில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 1911 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் நன்னாள்ற்கு முன்னர் ஜெர்மனி முழுவதும் ஒரு மில்லியன் சிற்றேடுகள் விநியோகிக்கப்பட்டன. முதல் சர்வதேச பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்டாடினர். அந்த நாளில் அணிவகுத்துச் செல்வோர் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, பெண்களுக்கான உரிமை, பொது பதவிகளை வகிக்கும் உரிமை, வேலை செய்வதற்கான உரிமை, பாலியல் அடிப்படையிலான பாகுபாட்டை நிறுத்துவது போன்ற கூற்றுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆரம்பத்தில், சர்வதேச பெண்கள் நன்னாள்  வேலைநிறுத்த போராட்டங்கள் , அணிவகுப்புகள் மற்றும் உரிமைகோரல்களுடன் ஆர்ப்பாட்டங்களுடன் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட்டது.

1917 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் ரஷ்ய தலைநகரில் ஒரு பெண் தொழிலாளி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (அந்த நேரத்தில் பெட்ரோகிராட் என்று அழைக்கப்படுகிறது), சர்வதேச பெண்கள் நன்னாளை வேலைநிறுத்த போராட்டங்களுக்காகவும் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காகவும் நடத்தினார். உலகப் போரில் ரஷ்ய ஜார் பேரரசின் ஈடுபாட்டையும், அந்த நேரத்தில் ஜார் அரசாங்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோரிக்கைகள் "ரொட்டி மற்றும் அமைதி". ரஷ்ய பெண் தொழிலாளர்கள் 1913 முதல் சர்வதேச பெண்கள் நன்னாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள்.

1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த பெண்கள் நன்னாள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 23 அன்று ஜூலியன் நாட்காட்டியின்படி (இது கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச் 8) கூறியது, அங்குப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இறுதியாக ஜார் அரசாங்கத்தைக் கைவிட்டு பிப்ரவரி புரட்சியைத் தூண்டின. துணி நிறுவன தொழிலாளர்கள், பெரும்பாலும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பெண்கள், மற்ற தொழிலாளர்களின் ஆதரவைப் பெறப் பிரதிநிதிகளை அனுப்பத் தொடங்கினார்கள். இதனால் வெகுஜன வேலைநிறுத்தங்களைத் தூண்டினார்கள், பின்னர் அனைத்து தொழிலாளர்களும் ஜார் ஆட்சி விழும் வரை தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் அரசாங்கத்தைக் கைவிட்டு, அமைப்புக்கு எதிரான பெண்கள் போராட்டத்தின் சக்தியைக் காட்டிய பெரும் அரசியல் நடவடிக்கை.

சர்வதேச பெண்கள் நன்னாள் கொண்டாட்டம் ஒரு புரட்சியைத் தூண்டியது, இது தன்னலக்குழுக்களின் சக்தியை உடைத்து, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைத் தூண்டியது, இது சர்வதேச பெண்கள் நன்னாளின் அசல் ஊக்கமாகும்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் பெண்களின் உரிமைகள் உணரப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், உலக பெண்கள் நன்னாள் கொண்டாட்டம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான போராட்டத்தில் பெண்களுக்கு ஒரு சர்வதேச ஒற்றுமை நாளாகத் தொடர்கிறது.

பெண்களின் புரட்சிகர கொண்டாட்டம்

                               

அக்டோபர் 1917 புரட்சியின் பின்னர் மார்ச் 8 ரஷ்யாவால் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது. ரஷ்ய புரட்சியின் தலைவரான விளாடிமிர் லெனின், 1922 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் நன்னாளை விடுமுறை என்று அறிவித்து ஜெட்கின் அழைப்பிற்கு பதிலளித்தார்.

ஸ்பெயினில், பிப்ரவரி 1936 இல் தேர்தலில் ஒரு பிரபலமான வெற்றியைத் தொடர்ந்து, அப்போதைய வளமான ஸ்பானிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இசிடோரா டோலோரஸ் இபிரூரி கோமேஸ், மார்ச் 8, 1936 அன்று மாட்ரிட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாசிச அச்சுறுத்தலை எதிர்த்து இரண்டாவது ஸ்பானிஷ் குடியரசை நிலை நாட்ட ஒன்று கூடினர்.

சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் 1922 இல் பெண்கள் நன்னாள் கொண்டாடத் தொடங்கினர், பின்னர் 1949 இல் சீன மக்கள் குடியரசு உருவான பிறகு, மார்ச் 8 ஒரு முறையான விடுமுறையாக அறிவிக்கப்பட்டது, பெண் தொழிலாளர்கள் அரை நாள் விடுமுறையைப் பெறுகிறார்கள்.

1960களில் மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய இயக்கத்தின் இரண்டாவது ஆலையின் போது, பல இடதுசாரி மற்றும் ஆர்வலர்கள் பாலிய பாகுபாடு மற்றும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக உரிமைக்குரலை எழுப்பினார்கள். அதே நேரத்தில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது சர்வதேச பிரதான அரசியலின் ஒரு பகுதியாக மாறியது.


சர்வதேச பெண்கள் நன்னாள் அங்கீகரிக்கப்பட்டது

1975களில் சர்வதேச பெண்கள் நன்னாள் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அறிவித்தது.அந்த ஆண்டு, மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ நகரில் முதல் உலக மகளிர் மாநாடு நடைபெற்றது, மேலும் "பெண்களின் சமத்துவம் குறித்த மெக்சிகன் பிரகடனத்திற்கும் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புக்கும்" ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டில், ஐ.நா. அதிகாரப்பூர்வமாக மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது, மேலும் அதன் உறுப்பினர்களை அந்நாளைக் கொண்டாட அழைத்தது. 1979 ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை பெண்களின் உரிமைகளைக் கோடிட்டுக் காட்டிய ஒரு முக்கியமான சர்வதேச ஆவணமான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவது குறித்த மாநாட்டை (CEDAW) நடைபெற்றது. மலேசியா நாடு 1995 இல் (CEDAW) கையெழுத்திட்டது.

1980 ஆம் ஆண்டில், இரண்டாவது உலக மகளிர் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான வரலாற்று குறிப்பானை CEDAW என்று மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது. 3 துறைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்றும் மாநாடு ஒப்புக்கொண்டது: 


i.       கல்விக்கான எளிய அணுகல்;

ii.     பெண்களுக்கு வேலை வாய்ப்புகள்;

iii. சுகாதார சேவைகள் மெக்சிகோவில் நடந்த முதல் மாநாட்டில் 

கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடையப் பெண்களுக்கு முக்கியம். 

மூன்றாம் உலக மகளிர் மாநாடு 1985 ஆம் ஆண்டில் கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. அரசியலமைப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் போன்ற பெண்களின் சமத்துவத்தை அளவிடக்கூடிய பகுதிகளை மாநாடு கோடிட்டுக் காட்டியது; சமூக பங்கேற்பில் சமத்துவம்; அரசியல் பங்கேற்பில் சமத்துவம்; மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை. பாலினத்துடன் தொடர்புடைய பகுதிகள் மட்டுமல்லாமல், மனித நடவடிக்கைகளின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மாநாடு ஒப்புக்கொண்டது.

1995 ஆம் ஆண்டில், நான்காவது உலக மகளிர் மாநாடு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தின் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டும் ஐ.நா. தீர்மானம் பெய்ஜிங் பிரகடனத்திற்கு மாநாடு ஒப்புதல் அளித்தது. செயலுக்கான தளம், ஒரு வரலாற்றுச் செயல் திட்டமும் உலகின் 189 அரசாங்கங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது, 12 முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்தியது, மேலும் ஒவ்வொரு பெண்ணும் அரசியல், கல்வி, வருமானம் கிடைக்கப் பெறவும் மற்றும் வன்முறை மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தில் கூட வாழ்வது போன்ற சுயாதீனமான தேர்வுகளைச் செய்யக்கூடிய ஒரு உலகத்தைக் கற்பனை செய்தனர்.

சர்வதேச பெண்கள் நன்னாளின் தீவிர உணர்வை மீட்டெடுக்க இது நேரம்

உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 27 நாடுகள் சர்வதேச மகளிர் தினத்தை ஆப்கானிஸ்தான், கியூபா, கம்போடியா, நேபாளம், ரஷ்யா, வியட்நாம் மற்றும் சாம்பியா உள்ளிட்ட பொது விடுமுறை நாட்களாக அமைத்தன.

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் அதன் தீவிர அரசியல் தோற்றத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது, பாலின சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தின் அடிப்படையில் தொடாமல் "பெண்களின் தியாகத்தைப் பாராட்ட" இன்று அதை மாற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச பெண்கள் நன்னாளின் தீவிர உணர்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியை நாம் காணலாம், குறிப்பாகப் பெண்கள் தினத்தில் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

பெண்ணிய இயக்கத்தில் அலைகளின் புதிய அலை வளர்ந்து வருகிறது, பாலின வன்முறைகளான மீ.டு பிரச்சாரம் மற்றும் மெனோஸ் இயக்கம் (யாரும் குறைவாக இருக்க முடியாது) போன்றவற்றுடன், பெருகிய முறையில் கடுமையான அரசியலின் சகாப்தத்தில் பெண்கள் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. சர்வதேச மகளிர் தினத்தின் அடிப்படை உணர்வை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது, இது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை அணிதிரட்டுவதாகும்.


கட்டுரையாளர்: தோழர் சொன் காய்

தமிழில் : தோழர் மோகனா

                     





களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...