சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர், முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உயிர் பிரிந்தது, பி.எஸ்.எம் குடும்பத்தை தாளாத துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாந்தா ஒரு துணிச்சலான போராளியாவார். எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தனது முடிவில் உறுதியுடனும் இருக்கும் ஒரு தோழர். தமிழ் மொழி ஆழுமையை பெற்ற சாந்தா, அவரின் எழுத்துப் பணியின் மூலம் கட்சியில் பல படைப்புகளை எழுதியுள்ளார். கட்சியில் தமிழ் மொழி படைப்புகளை எழுதுவது மட்டுமல்லாமல், தமிழ் மொழிபெயர்ப்பாளாராகவும், தமிழ்ப் படைப்புகளை திருத்துபவராகவும் தனிச்சிறந்து விளங்கியவர்.
அவரும் அவரது இணையர் மோகனும் ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தை 2006-ஆம் ஆண்டில் உருவாக்கினர். மேலும், சாந்தா மலேசியக்கினி (Malaysiakini) தமிழ் பிரிவில் பணியாற்றியும் உள்ளார். 2009-ஆம் ஆண்டு, அவர் மோகனுடன் ஜொகூரில் பி.எஸ்.எம் கிளையைத் தொடங்கினார். அங்கு அவர் செயலாளராக பதவி வகுத்தார். 2020-ஆம் ஆண்டு, காரைநகர் நட்புறவு மையம் தொடங்கப்பட்ட போது சாந்தா அந்த முயற்சிக்கு முன்னோடியாகவும் முதுகெலும்பாகவும் விளங்கினார். இந்த மையம் மாணவர்களுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய களமாக கங்கார் பூலாயில் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
மேலும், இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு நம் நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர் அகதிகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதிலும், இங்கு சோஸ்மா கைதிகளுக்கான நீதி போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற உன்னத சேவைகளிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தி கொண்டவர். இப்படித்தான், மோகனையும் 1999-ஆம் ஆண்டு, சாந்தா ஜொகூரில் ஆசிரியர் பயிற்சியிலிருந்த போது சந்தித்தார். போராட்ட களபணியில்தான் இவர்களின் காதலும் பூத்தது.
சாந்தா, 16 ஜூன் 1975-இல் தெலுக் இந்தானில் பிறந்தார். அவரின் தகப்பனார் பெருமாள், வீட்டுக் கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் அவரின் தாயார் லீலாவதி. இத்தம்பதியருக்கு பிறந்த மூத்த மகள்தான் சாந்தா. அவருக்கு 4 உடன்பிறப்புகள் இருந்தனர், துரதஷ்டவசமாக அவர்களில் மூன்று பேர் இவருக்கு முன்பே காலமாகிவிட்டனர்.
சாந்தா தனது ஆரம்பக் கல்வியை எஸ்.ஆர்.ஜே.கே லாடாங் சசெக்ஸ் (Ladang Sussex), தெலுக் இந்தான் மற்றும் எஸ்.எம்.கே டத்தோ சாகோர் லங்காப்பில் (Sagor Langkap) அவரது இடைநிலைக் கல்வியையும் பெற்றார். அவர் ஜொகூர் பாருவில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியான மொஹமட் காலித்தில் (Mohd Khalid) படித்து பட்டம் பெற்றார். இங்குதான் அவர் மோகனைச் சந்தித்தார், இறுதியில் இருவரும் 27-5-2001 அன்று மென்டகாப் பஹாங்கில் திருமணம் செய்து கொண்டனர்.
சாந்தா பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவைகளில் எஸ்.ஆர்.ஜே.கே கங்கர் புலாய் ஜொகூர், எஸ்.கே. சுங்காய் மற்றும் எஸ்.கே. சிலிம் ரீவர் அவரின் கடைசி பள்ளியாக அமைந்தது. அங்கு மே 2023-இல் தனக்கு புற்றுநோய் கொண்டிருப்பது தெரியவரும்வரை ஆசிரியர் பணியில் இருந்தார். படிப்பு சொல்லிக் கொடுக்கும் சக ஆசிரியர்கள் போலில்லாமல், தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் பாடுபட்டார்.
கடந்த இரண்டு ஆண்டு, சாந்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார், அவரின் எல்லா நற்செயல்களும் செயலற்று போனது. அவரது உடல்நிலை குறைவின்போது அவரது இணையரான மோகன் மற்றும் சகோதரி ஜெயாவின் சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவு இருந்த போதிலும், சாந்தாவின் உடல்நலம் சரிந்து பல நாட்கள் அவர் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய மரணம் அவரை வேதனையிலிருந்து விடுவித்து இருக்கலாம். சாந்தா துணிச்சலாக மரணப் படுக்கையிலும் போராட்டத்தை தொடர்ந்தாலும், அனைத்தும் இன்று காலை 11:44 மணிக்கு சிலிம் ரிவர் மருத்துவமனையில் ஒரு முடிவிற்கு வந்தது.
போராட்டவாதிகள் எப்போதும் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். அவ்வகையில் சாந்தாவும் நமது நினைவில் விதைக்கப்படுவார். எங்கள் போராட்டத்தில் அவர் ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார். வாழ்க்கை அவருக்குக் குறுகியதாகிவிட்டது. ஆனால் அவருடைய செயல்பாட்டை அறிந்தவர்கள், தொடர்ந்து சாந்தாவின் களவேலைகளைப்பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.
தோழர் சாந்தாவிற்கும் எங்களின் வீரவணக்கங்கள். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உதவியாக இருந்து, சிறப்பாக கவனித்துக் கொண்ட அவரது இணையர் மோகன், சகோதரி ஜெயா மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் போராட்டங்களை நாங்கள் தொடர்வோம், ஓய்வெடுங்கள் தோழரே.
S Arutchelvan
5.23pm 9-3-2025
தமிழில் : சிவரஞ்சனி
No comments:
Post a Comment