தீபாவளி என்பது இருளை விரட்டும் ஒளி விழா. இது துன்பங்களை வென்று மகிழ்ச்சி கொண்டு வாழ்வதற்கான ஓர் அடையாளம். ஆனால் இன்று, நம் சமூகத்தில் பலரும் — குறிப்பாக உழைக்கும் மக்கள், ஏழைகள், தொழிலாளர்கள் — அந்த ஒளியை உணர முடியாமல், அதிகாரம் மற்றும் பெரும்பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட இருளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மடானி அரசாங்கம், நியாயம், நம்பிக்கை, நல்லாட்சி போன்ற வார்த்தைகளோடு உருவானது. மக்கள் நம்பிக்கையுடன் ஓட்டு
போட்டனர். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை ஒரு
கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஆண்டுகள் கடந்தும், மக்களின்
அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு
இல்லாமை, குறைந்த சம்பளம், நியாயமற்ற
கல்வி கட்டணங்கள், தனியாராக்கப்பட்ட சுகாதார வசதிகள்,
இயற்கை பேரிடர்களின் பின்விளைவுகள் – இவை அனைத்தும் உழைக்கும்
மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன.
இஃது ஓர் அரசியலமைப்பின் பிரச்சனை…
இன்று அரசாங்கம் செய்யும் செயல் என்னவென்றால், சிறு தொகை நிவாரணங்கள், ஒரு வேளைக்குச் சலுகைகள்,
அல்லது பண்டிகை காலத்தில் கொடுக்கப்படும் ‘சின்ன சந்தோஷம்’. ஆனால் இது
ஒரு நிஜமான நிரந்தரமான தீர்வல்ல. அவ்வப்போதான சந்தோசங்கள் மட்டுமே. ஆட்சி மாறியும்,
சிந்தனை மாறவில்லை. அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்களும் இதே சிந்தனை, இதே யுக்தி. இன்றைக்கு
மடானியும் அதே யுக்தி.
நியாயமான வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம், வாங்க முடியும் விலையில் வீடு, கல்வி-சுகாதாரம்,
வேலைவாய்ப்பு – இவை அனைவருக்கும் சென்று சேருவதோடு அவர்களின்
உரிமையாக மாற வேண்டும். இந்த நிலை இல்லாத போது, அரசியலமைப்பில் பிரச்சனை இருக்கும்
நிலையில், மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும், குரல் எழுப்ப வேண்டும், தட்டிக்
கேட்க வேண்டும்.
தீபாவளி ஒளி வீசும் இந்த நேரத்தில், ஒரு கேள்வியை நாம் மறந்துவிடக்கூடாது:
“இந்த அமைப்பை மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதா?”
“பணக்காரருக்கு இடம் கொடுக்கும் அரசியலைவிட, உழைக்கும் மக்களுக்கு உரிமை தரும் அரசியலை நாம் கட்டமைக்க வேண்டிய நேரமா இதுவல்லவா?’
இன்றைய மடானி அரசாங்கமும் கடந்த கால அரசுகளும் ஒரே கோட்பாட்டில்
இயங்குகின்றன. பெரிய முதலாளிகளுக்கும் தனியாருக்கும் சாதகமாக, மக்களை
பின்புறத்தில் தள்ளும் கோட்பாடு. இதில் உண்மையான ஒளி கிடைக்காது.
நாம்
தேடும் ஒளிக்கு தீபாவளி ஒரு சின்னமாக இருக்கட்டும். சமுதாயத்தின்
நம்பிக்கை சின்னமாக இருக்கட்டும். தீப ஒளி மக்களின் ஒற்றுமையில்,
குரலில், போராட்டத்தில் இருந்து தான்
பிறக்கும்.
நம்பிக்கையுடன் தீப ஒளியை ஏற்றுவோம் – சமத்துவத்திற்கான தீப ஒளி!
சிவரஞ்சனி மலேசிய சோசலிசக் கட்சி தேசிய பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment