Sunday, February 27, 2022

உழைத்த தோட்டத்தை விட்டு நாங்கள் எங்கே போவது? வின்சர் தோட்டப் பாட்டாளிகள் மறியல்



தைப்பிங் பிப்ரவரி 23

ஒரு தோட்டத்தை விட்டு தொழிலாளர்களை வெளியேற்றும் முன்பு அவர்களுக்கு சொந்த வீடுகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வர வேண்டும் என்று கோரி இங்குள்ள வின்சர் பாட்டாளிகள் மறியலில் இறங்கினர். இங்கு ஜாலான் கோலகிராவ் 7-வது மைலில் உள்ள தோட்டப் பாட்டாளிகள் மாலக்கோஃப் நிறுவனத்திற்கு எதிராக இந்த மறியலில் ஈடுபட்டனர். அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரட்வின்ஸ் பிளாண்டெக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வின்சர் தோட்டத்தில் 25 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூவரும், கடந்த ஆண்டு2021- ல் இருவரும் தங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். பணி ஓய்வு பெற்ற அந்த ஐவரும் தங்கள் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது. இவ்வளவு காலம் தோட்டத்திற்கு மாடாய் உழைத்து தங்களுக்கு ஒரு மாற்று வீடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும், அதுவரை குடியிருப்பை காலி செய்ய முடியாது என்று அவர்கள் கூறி வந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற தண்ணீர்மலை சுப்பிரமணியம் (வயது 67) ஜெயபாலன் குப்பன் (வயது 63) பாலன் காளி (வயது 61) ஆகியோர் வெளியேற மறுத்ததால் அவர்களின் வீடுகளுக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை நிர்வாகம் துண்டித்தது. இந்நிலையில் சுமார் 25 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தோட்டத்திற்காக உழைத்த தங்களுக்கு ஒரு மாற்று விட்டை  ஏற்படுத்தி தரவேண்டும். அல்லது சுயமாக வீடு கட்டிக்கொள்ள லோட் நிலங்களை வழங்க வேண்டும் என கோரி அந்தத் தொழிலாளர்கள் மறியலில் இறங்கியதாக தேசிய தொழிற்சங்கத்தின் ஆதரவு குழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேசு இராசமாணிக்கம் கூறினார். 


இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும், தாங்கள் முறையாக எங்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மனிதவள அமைச்சு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அங்கு வந்திருந்தார்

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...