PSM அறிக்கை - 10 பிப்ரவரி 2026
அந்நிய தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில், இடைத்தரகர்களை நீக்குவது சரியான திசையில் எடுத்துவைக்கும் படிகட்டுகள்
புலம்பெயர் தொழிலாளர்களை நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதிலிருந்து இடைத்தரகர்களை நீக்கும் மனிதவள அமைச்சரின் திட்டங்களை Parti Sosialis Malaysia (PSM) ஆதரிக்கிறது. (தி ஸ்டார், 4/2/2026).
G2G (அரசிடமிருந்து அரசுக்கு) அந்நியத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு முறைகளில் இடைத்தரகர்களின் பங்கினை நீக்குவது, மேலும் தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முழுமையான கொள்கை — இவை அனைத்தும் 11-ஆவது மலேசியத் திட்டத்தின் (2016–2020) பகுதிகளாக இருந்தும், ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அந்நியத் தொழிலாளர்களை நாம் அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், ஒரு வளர்ந்து வரும் நாடாக நாட்டின் நற்பெயர் இவ்விவகாரத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், இதுபோன்ற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது சரியான நேரமாகும். ஆனால், ஆட்சேர்ப்பு செயல்முறையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறும் இடைத்தரகர்கள் யார்? இந்த முயற்சி உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், சிறிய முகவர்கள் மட்டுமின்றி, அரசியல் தொடர்புகள் கொண்ட முக்கிய நபர்களையும் இதில் சேர்த்தே நீக்க வேண்டும்; ஏனெனில் அவர்கள்தான் நமது நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் இந்த அளவுக்கு சீர்கெட்ட நிலைக்கு செல்லக் காரணமாக உள்ளனர்.
நீண்ட காலமாக மிக ஏழ்மையின்பாதிப்புகளில் இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்துவரும் இந்த முக்கியமான இடைத்தரகர்களை அகற்றுவது எளிதானது அல்ல. இதை வெற்றிகரமாக நிறைவேற்ற மனித வள அமைச்சகத்திற்கு (HRM) அமைச்சரவையும் பிரதமரும் வழங்கும் ஒருங்கிணைந்த ஆதரவு அவசியமாகும்.
எனினும், ஆட்சேர்ப்பில் இடைத்தரகர்கள் இல்லாதிருப்பது மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் சுரண்டலிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள் என்பதற்கான உத்தரவாதமல்ல என்பதை உணர்வது முக்கியம். 2023/2024 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒதுக்கீட்டு மோசடி (quota fraud) ஊழலை பார்த்ததுபோல், தொழிலாளர்களை ஏமாற்றும் சங்கிலிகளில் சில முதலாளிகளும் நேரடியாக ஈடுபடுகின்றனர். இவ்வாறான விஷயங்கள் முழுமையாகத் தெரிந்திருந்த போதிலும், HRM உட்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக தலையிட தேவையான அதிகாரமின்றி பலவீனமாக இருந்தன. எனவே, HRM உருவாக்கும் புதிய அமைப்பில், தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் ஏற்பாடுகளும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க பயனுள்ள புகார் அளிக்கும் வழிமுறைகளும் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
மலேசியா அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஊழல், சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சீர்செய்ய பல நடவடிக்கைகள் தேவை; அதில் முக்கியமானது, உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே புலம்பெயர் தொழிலாளர்கள் வரவேற்கப்பட வேண்டும் என்ற அதன் ஆரம்ப நோக்கத்திற்கு இந்த முறையை மீட்டெடுப்பதாகும் — அதாவது, உள்ளூர் தொழிலாளர்களுடன் போட்டியிடாமல், அவர்களுக்கு துணைபுரிவதற்காக என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் மொத்த செயல்பாட்டிலுள்ளமந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஆவணமற்ற தொழிலாளர்களையும் அகதிகளையும் (அவர்களும் பொருளாதாரத்தில் பங்களித்து வருகிறார்கள்) சேர்த்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை, அனைத்து தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நேரடி நியமனம் நிச்சயமாக சரியான திசையில் எடுக்கப்படும் ஒரு படி தான். ஆனால், அதற்கு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முழுமையான கொள்கை, அமலாக்கத்திற்கான போதுமான நிதி ஒதுக்கீடுகள், மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பயனுள்ள நிவாரணம் பெறும் உரிமை அமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
எழுதியவர்: ராணி ராசியா, PSM புலம்பெயர் தொழிலாளர் பிரிவு
No comments:
Post a Comment