சோசலிசம் 2024, “யாருக்காக மாடானி”? தோலுரிக்கும் கேள்வி.
மலேசிய
சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), 2024 சோசலிசம்
மாநாட்டை “யாருக்காக மாடானி”? என்ற கருப்பொருளுடன் கடந்த வாரம் நவம்பர்
30 மற்றும் டிசம்பர்
1-ஆம் தேதி தலைநகரில் ஏற்பாடு செய்திருந்தது. 2005-ஆம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்ட
இந்த மாநாடு, இந்த ஆண்டோடு சுமார் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இன்னும் தெளிவாக
சென்னால், இந்த மாநாட்டு தொடர் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் மாறி மாறி ஏற்பாடு
செய்யப்படுகிறது. சோசலிச மாநாடு இடதுசாரிகளின் அரசியல் முன்னோக்கத்தையும், மக்களுக்கு
ஆதரவான - முதலாளித்துவத்திற்கு எதிரான தற்போதைய பிரச்சினைகள் ஆகியவற்றை பகுப்பாய்ந்து,
விவாதத்தை முன்வைத்து நடத்தப்படுகிறது. இந்த
மாநாட்டில் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
மக்கள் கலந்து கொண்டனர்.
இம்முறை நடத்தப்பட்ட சோசலிச மாநாடு தேசிய அளவிலான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது தொடர்பாக பெறப்பட்ட வரவேற்ப்பும் மிகவும் ஊக்கமளிக்கும் வகையிலேயே அமைந்தது. சிலாங்கூர் சீன மண்டபத்தில் (KLSCAH) நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் சுமார் 70-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு பேச்சாளர்களாக கலந்துக்கொண்டவர்களிடம் கேள்வி-பதில் அங்கமும், பார்வையாளர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அறிவுசார் தொடர்பான சூழலில் மாநாட்டை மேலும் சுவாரசியப்படுத்தியது.
2024 சோசலிச
மாநாடு PSM பொதுச்செயலாளரான சிவரஞ்சனி மாணிக்கம் அவர்களின் தொடக்க உரையுடன் தொடங்கியது.
“மடானி அரசு இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில், மடானி அரசு
உண்மையில் மக்களின் அபிலாஷைகளை உயர்த்தி, தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும்
நிறைவேற்றியதா? இதைத்தான் இந்த முறை சோசலிச மாநாட்டில் ஆராய உள்ளோம்" என்றார்
சிவரஞ்சனி. "சோசலிசம் 2024 பற்றிய விவாதம் அனைத்து தோழர்களின் மனதையும் கூர்மைப்படுத்தும்
என்றும், நம் நாட்டில் மக்கள் சக்தியைக் தட்டியெழுப்ப தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்
என்றும் நாங்கள் நம்புகிறோம்." என்று சிவரஞ்சனி தனது நம்பிக்கையை வெளிபடுத்தினார்.
“யாருக்காக
மாடானி”? என்ற தலைப்பில் முதல் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வு BFM இன் வானொலி தொகுப்பாளர்
தஷ்ரன் யோகன் தலைமையில் நடைபெற்றது, PSM இன் தேசியத் தலைவர் டாக்டர்
ஜெயக்குமார் , மற்றும் டிஏபி கட்சியின் முன்னாள் கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போது தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) தலைவராகவும்
உள்ள சார்லஸ் சாண்டியாகோ ஆகிய இருவரும், இன்றைய அரசாங்கம் மற்றும் இன்றைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும்
பொருளாதாரக் கொள்கைகள் உண்மையில் மர்ஹேன் மக்களுக்கு நன்மையளிக்கிறதா என்பது பற்றிய
தங்கள் பகுப்பாய்வை முன்வைத்து பேசினர்.
இன்று அரசாங்கத்தால்
முன்னெடுக்கப்படும் கொள்கைகள் பற்றி பேசிய டாக்டர். ஜெயக்குமார், " மக்களின் பிரச்சினைக்கான
உண்மையான காரணத்தை அடையாளம் காண நடப்பு அரசாங்கம் தவறிவிட்டது என்று கூறினார். டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, முந்தைய அரசாங்கத்தில் நடைமுறையில் இருந்த
நவதாராளவாதக் கொள்கைகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. புதிய
தாராளமயக் கொள்கையின் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய பொருளாதாரக் கட்டமைப்பும் திசையும்,
வறுமையை ஒழிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் முரண்படுகிறது” என்றார் அவர்.
"மடானியும்
இயற்கையும்" என்ற தலைப்பிலான அடுத்த
அமர்வு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் கொள்கைக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையிலான உறவைத் தொட்டு பேசப்பட்டது. கிரீன்பீஸ் (Greenpeace) அமைப்பின் ஹமிசா ஷம்சுதீன் இந்த அமர்வை
வழிநடத்தினார். தீபகற்ப மலேசியாவின் பூர்வக்குடிகள் செயற்பாட்டுக்குழு (JKOASM) ஒருங்கிணைப்பாளரும்
பூர்வக்குடியுமான தோழர் Tijah Yok Chopil , KUASA அமைப்பைச் சேர்ந்த தோழர் ஷகிலா ஜென்
மற்றும் PSM இன் சுற்றுச்சூழல், காலநிலை நெருக்கடி மற்றும் பழங்குடி மக்கள் செயற்பாடு
ஒருங்கிணைப்பாளர் தோழர் சுரேஷ் பாலசுப்ரமணியம் ஆகியோர் பேச்சாளர்களாக களம் கண்டனர்.
“ஓராங்
அஸ்லி சமூகம் தங்களின் வழக்கமான நில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான
முயற்சிகள் அவர்களின் பொருளாதார வாழ்வுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒராங் அஸ்லி சமூகத்தின் சுற்றுச்சூழலையும் ஆன்மீகத்தையும் பாதுகாப்பதற்கே” என்று திஜா வாதிட்டார். ஓராங்
அஸ்லிக்கு நிலம் என்பது அவர்களின் சமூகத்திற்கு சொந்தமானது என்பதால், நிலத்தின் தனியார் உடைமை என்ற கருத்து ஒராங்
அஸ்லி வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போவதில்லை என்றும் திஜா கூறினார்.
மாநாட்டில் பின்னர் "மடானி, இனம் மற்றும் மதம்" என்ற தலைப்பில் அடுத்த அமர்வு தொடர்ந்தது. இந்த விவாதத்தின் தலைப்பு மிகவும் செறிவானதாகவும் பல விடயங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. இன்றைய அரசாங்கத்தின் நிர்வகிப்பில் ஏற்பட்டுள்ள இன மற்றும் மத துருவமயமாக்கல், இன மற்றும் மத உறவுகளில் ஏற்பட்ட பிளவுகளை எவ்வாறு கையாள்வது, மேலும் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதில் இடதுசாரி அரசியல் கருத்துக்கள் எவ்வாறு உதவ முடியும் என்பன போன்ற விடயங்கள் இதில் அடங்கும்.
30 நவம்பர் இரவு அன்று பாலஸ்தீன விடுதலைக்கு ஓர் இரவு என்ற ஆதரவு நிகழ்ச்சியை GEGAR Amerika என்ற அமைப்பு திறம்பட நடத்தியது. பாலஸ்தீனத்தைப் பற்றிய பல குறும்படங்களின் திரையிடலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது, அதைத் தொடர்ந்து ஒரு விவாதப் பயிற்சிப் பட்டறை மற்றும் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு நடவடிக்கையுடன் (மெழுகுவர்த்தி ஏற்றி) முடிவடைந்தது. இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு வலுவான ஆதரவைக் கட்டியெழுப்பவும், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியப் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு அம்சங்களை முன்னிலைப்படுத்தவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மாநாட்டின் இரண்டாம், "மடானியா அல்லது திரானியா?" (மேன்மையா-கொடுங்கோலா) என்ற தலைப்பில் மாநாடு தொடர்ந்தது. இந்த அனல் பறக்கும் தலைப்பை அலசுவதற்கு Lawyers for Liberty அமைப்பிலிருந்து ஜைத் மாலேக், Borneo Komrad அமைப்பைச் சேர்ந்த வான் ஷகிலா மற்றும் பி.எஸ்.எம்-மிலிருந்து நளினி ஏழுமலை ஆகியோர் விவாதித்தனர். இந்த அமர்வுக்கு PSM சோசலிச இளைஞர் குழு உறுப்பினர் முஹம்மது யாசித் முகம்மது நைம் தலைமை தாங்கினார்.
தேசத் துரோகச் சட்டம் போன்ற பிற்போக்குச் சட்டங்கள் இன்னும் உள்ளன என்பதையும், சட்டத்தை ரத்து செய்ய எந்த முயற்சியும் இங்கு இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் மற்றும் மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் இன்றைய அரசாங்கம் உண்மையிலேயே நேர்மையாக இருக்கிறதா என்று இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.
"மனித உரிமைகள் மீறப்படும் வரை, பாலினம், வர்க்கம், மதம், இனம் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருக்கும் வரை, அடிப்படை உரிமைகளை மதிக்கத் தவறிய நிறுவனங்கள் இருக்கும் வரை, ஒரு நாட்டில் பேசுவதற்கு நாம் பயப்படும் வரை, உண்மையை எழுதுவதற்கும், தகவல்களைத் தெரிவிப்பதற்கும் ஊடகங்கள் அச்சுறுத்தப்படும் வரை,நாம் இன்னும் சுதந்திர மனிதர்களாக இல்லை" என்று நளினி தனது விவாதத்தில் கூறினார். "அன்வார் இப்ராஹிமின் வார்த்தைகளில் இருந்து எடுத்துக் கொண்டால், மனித உரிமை மீறலில் இருந்து நம் மக்களை விடுவிப்பதற்கான ஒரே வழி 'எதிராளி எதிரியாகவே இருப்பதே!'.
சோசலிசம் 2024 மாநாட்டின் கடைசி அமர்வு "மாடானியும் எதிர்காலமும்" என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் முழுக்கவே இளைஞர்களாக பங்கெடுத்தது பார்வ்வையாளர்களை கவர்ந்தது. MUDA கட்சியைச் சேர்ந்த வோங் குகுய், HARAM அமைப்பிலிருந்து ஜைம் சுல்கிஃப்லி மற்றும் PSM கட்சியிலிருந்து ஹூய் திங் ஆகியோர் இந்த அமர்வின் பேச்சாளர்களாக இருந்தனர். இன்றைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளதா, அதோடு முற்போக்கான மலேசியாவை அடைய என்ன அபிலாஷைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் விவாதித்தனர். இந்த அமர்வை மாதவி நெறிப்படுத்தினார்.
எழுதியவர்: Muhamad Irfan bin Rusmin, Penyelaras
Sosialisma 2024
தமிழில் : தோழர் யோகி
No comments:
Post a Comment