மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஊடக அறிக்கை – 28 ஜூலை 2025 - கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு-
அரசியல் களத்தில் மூன்றாம் அலையை வலுப்படுத்தி
21 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை மையப்படுத்துதல்.
மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசியப் பேராளர் அவையானது, ஆளும் மடானி அரசுக்கு 21 அம்ச கோரிக்கைகளை முன்வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேற்கண்ட விவரங்களின்படி, கட்சியின் 27-வது தேசியப் பேராளார் மாநாடு கடந்த ஜூலை 25-27-ஆம் தேதிகளில் பேராக், கோலா கங்சாரில் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 நாட்கள் நீடித்த இத்தேசியப் பேராளர் மாநாட்டில், சுமார் 150 கட்சி பிரதிநிதிகளும் எண்ணிலடங்கா பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்பேராளர் மாநாடானது இரு தனி அமர்வுகளாக அமையப்பெற்றது. அவற்றில் ஓர் அமர்வானது, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு, சோசலிச மாணவர் கூட்டமைப்பு (AKSI) மற்றும் மலாயா பல்கலைக்கழக இளைஞர் மன்றம் (UMANY) உடனிணைந்து; இவ்விளைஞர் கூட்டமைப்புகளின் கருத்தாளர்களை அணிவகுத்து, மலேசியாவில் பொதுவுடைமை நோக்குடைய மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கை மையமாகக் கொண்ட கருத்தாய்வாக அமைந்தது. கருத்தாய்வு அமர்வு மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் ஆக்ககரமான ஈடுபாடு, அரசியல் அறிவு, வர்க பகுப்பாய்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கான நடப்பு சட்ட விதிகள் (AUKU) ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது.
இரண்டாவது அமர்வானது பி.எஸ்.எம்.-இன் தேர்தல் உத்தியை மையமாக கொண்டு அமைந்தது. பி.எஸ்.எம்.-இன் தேசியப் பொருளாளரான சோ சூக் ஹ்வா (Soh Sook Hwa), அரசியல் ஆய்வாளரான வோங் சின் ஹுவாட் (Wong Chin Huat) மற்றும் MUDA கட்சியின் பேராக் மாநில தலைவரான VKK ராஜசேகரன் ஆகிய இரு புறநிலை வல்லுனர்களுடன் மேற்கண்ட கள விரிவாக்கம் பற்றி விவாதித்தார்.
இந்தக் கருத்தாய்வுக் களம் வழி, PAMU (Parti Aku Malas Mengundi) என்று விவரிக்கப்படும் வாக்காளர்களை மையமாகக் கொள்வதைக் கடந்து, மைய அரசியல் நீரோட்டத்தில் மூன்றாவது அரசியல் அலையைத் தொடர்ந்து கட்டியெழுப்புவதில் பி.எஸ்.எம்.-இன் பங்கையும் முனைப்பயும் மீட்டுருவாக்கம் கண்டது.
முன்மொழிவுகளும் தீர்மானங்களும்
தேசியப் பேராளர் அமர்வில், கட்சி பிரதிநிதிகளால் மொத்தமாக 19 திட்டங்கள் முன்மொழியபட்ட வேளையில், தீவிர விவாததிற்கு பிறகு, 7 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட வேளையில், மீதமுள்ளவை பேராளர் அவையால் நிராகரிக்கப்பட்டவையாகவோ, முன்மொழிந்தவர்களால் திரும்பப் பெறப்பட்டவையாகவோ கழிந்தது.
ஜூலை 27, 2025 அன்று நடந்த மூன்றாம் நாள் அமர்வில், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியப் பேராளர் அவை, நடப்பு MADANI அரசாங்கத்திடம் வழங்க கோரிக்கைகளாக 21 அம்சங்கள் கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பி.எஸ்.எம்-இன் தேசிய பேராளர் அவையில் முன்மொழியப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்துமாறு MADANI அரசாங்கத்தைப் பி.எஸ்.எம் வலியுறுத்தியது.
இவ்வாண்டின் கருப்பொருளான "மூன்றாம் அரசியல் அலையே, நமது பலம்!" என்ற முழக்கத்துடன் பி.எஸ்.எம்.-இன் தேசிய பேராளர் மாநாடு நிறைவுற்றது.
பி.எஸ்.எம்-இன் 27-வது தேசிய பேராளர் மாநாட்டின் தீர்மானம்
1. நடப்பு அரசாங்கம் இந்நாட்டிலுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் மாதம் RM500 மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2. அரசு, பொது சுகாதார அமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனைத்து குடிமக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகள் சென்று சேரும்படி பொது சுகாதாரச் சேவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்:
· உலகச் சுகாதார அமைப்பு (WHO)-இன் பரிந்துரையின் படி, பொதுச் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3%-இலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
· அரசு, பொதுச் சுகாதாரத் சேவைகளைத் தனியாருக்கு புறத்திறனீட்டம் செய்ய கூடாது.
· தனியார் சுகாதாரக் காப்பீட்டிற்கான கட்டணத்திற்கு EPF சேமிப்பைத் திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது.
3. குடியிருப்பு வசதிகள் B40 தரப்புக்கும் சென்று சேரும் வகையிலும், வீடுகளை வாங்கும் வகையிலும், அரசு RM100,000 க்கும் குறைவான விலையில் மலிவு விலை வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.
4. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், B40 தரப்பாலும் நுகரும் வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆக்ககரமானக் கொள்கை உருவாக்கம் வழி, அரசு அடிப்படைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் பெட்ரோல் மானியங்களை அரசு நிறுத்தாமல் தொடர்வதும் அடங்கும்.
5. மலேசியாவின் உணவு உற்பத்தியினைப் பாதுகாக்க அரசாங்கம் தெளிவான கொள்கைகளையும் உறுதியான நடவடிக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:
· விவசாய நிலங்களில் நீண்ட காலமாக வேளாண்மை செய்து, உணவு உற்பத்தி செய்து பராமரித்து வரும் விவசாயிகளையும் கால்நடை வளர்ப்பாளர்களையும் வெளியேற்றுவதை அரசு நிறுத்த வேண்டும்.
· சிறு, குறு விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் துறைசார் மற்றும் நிதி ஆதரவுகளை அரசு வழங்கி, அவ்வேளாண் நடவடிக்கைகளின் நீட்சியை உறுதி செய்ய வேண்டும்.
· அதிகரித்து வரும் கால்நடை தீவனச் செலவுகளைச் சமாளிக்க கால்நடை தீவன மானியங்களை அரசு வழங்க வேண்டும்.
6. அரசு, கல்வியைத் தனியார்மயமாக்குவதை நிறுத்தி, உயர்நிலைப் பள்ளி வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை வழங்க வேண்டும். மேலும், அரசு தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தை (PTPTN) ஒழிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை விட கற்றல் அடைவுமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூடுதலாக, அரசுப் பள்ளிகளில் நரம்பியல் நிலைத்தன்மையற்ற ஆட்டிசம், கவனக்குறைவு, மிகைச்சுறுதி (ADHD) போன்ற சிக்கல்கள் கொண்ட மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகளை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.
7. சுற்றுச்சூழல் பராமரிப்பு, துணை பாதுகாப்பு துறைகள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், தேசிய பொருளாதாரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதையும் அரசாங்கம் குறைக்க வேண்டும்.
8. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும், அமலில் உள்ள சட்டங்களுக்கு இணங்கவும், அரசு துறை தொழிலாளர்களுக்கான ஒப்பந்த முறையை அரசாங்கம் ஒழிக்க வேண்டும்.
9. ஜனநாயகத்தின் குரல்வளையைக் கட்டுப்படுத்தும் தேசத்துரோகச் சட்டம் (Akta Hasutan 1948), தேச பாதுகாப்பு குற்றங்களுக்கான (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (SOSMA), மற்றும் அச்சு, அச்சகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டம் 1984 போன்ற அரசின் அடக்குமுறை செயல்களை ரத்து செய்ய வேண்டும்.
10. அரசு, பல நிறுவன சீர்திருத்தங்களைப் போர் கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இதில், அரசு முதன்மை ஆதரவுரைஞர் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு இடையேயான அதிகாரப் பகிர்வை முறைப்படுத்த வேண்டும். இதுபோல, பிரதமர் மற்ற அமைச்சரவைப் பதவிகளை வகிப்பதைத் தடுக்க வேண்டும். உடன், சிறைச்சாலைகளையும், தடுப்பு காவல் மையங்களை மேம்படுத்த வேண்டும்.
11. அரசு வளர்வீரிய வரிவிதிப்பு முறையினை நிலைநிறுத்த வேண்டும். பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகள் மீதான விற்பனை மற்றும் சேவை வரியை (SST) ரத்து செய்ய வேண்டும். தரவு மையங்களிலிருந்து வரும் வரி வசூல் SOCSO நிதிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
12. அரசு, தொழிற்சங்கங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அவற்றுள், நிதி நன்கொடை பகிர்வு, கூட்டு பிரச்சார உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவும் பிரச்சாரமும் செய்யும் உரிமைகளையும் வழங்க வேண்டும்.
13. அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் அரசு பாதுகாக்க வேண்டும். ஆவணமற்ற, புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர்களாக தங்கள் உரிமைகளைப் பெறவும் நீதியை இலகுவாக அணுகுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். குடியேற்ற விதிமீறல்கள் காரணங்களுக்காக விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு முன்பு, ஒரு தொழிலாளியாக, புலம்பெயர் தொழிலாளியின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை அரசு உறுது செய்ய வேண்டும்.
14. பெரு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLCs) ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும், வலைத்தள மோசடிகள் மற்றும் AI நெறிமுறைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சென்றடையும் வகையில் அனைத்து மொழிகளிலும் பிரச்சாரப் செய்தி வழங்கப்பட வேண்டும்.
15. தரவு மையங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு, அவற்றின் கட்டுமானம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு மதிப்பீட்டின் (EIA) ஒப்புதல் பெறப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரவு மையங்களின் ஆற்றல் நுகர்வு மற்றும் நீர் நுகர்வை அரசு கண்காணிக்க வேண்டும், இதனால் சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு நிலையான, உகந்த சூழலுக்குள் இருக்கும்படியாக அமையும். மேலும் தரவு மையங்களின் கட்டுமானம், மற்றும் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த சட்ட திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
16. ஆணாதிக்க பிரச்சாரங்கள், பெண்ணுடல் மோகம், பெண் வெறுப்பு போன்ற பாலின வன்முறைகளை உள்ளடக்கிய சமூக ஊடக பதிவுகள் மற்றும் பகிர்வின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குற்றங்களை களையவும் அரசு, குடும்ப வன்முறைச் சட்டத்தில் (1994) திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
17. அரசு, பழங்குடி சமூகத்தின் வாழ்விட நிலங்களை அங்கீகரித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.
18. மக்களாட்சியை மீட்டெடுக்க உதவும் உள்ளாட்சித் தேர்தல்களை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும், வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் (KPKT) கீழ், மக்களுக்கு சற்றும் பயனளிக்காத மைகியோஸ்க் வணிக தளங்கள் (MyKiosk) வாடகை திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடன், சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடி மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நகர சபையிலும் குறைந்த வாடகை கொண்ட ஒரு விளையாட்டு மையத்தை நிறுவ வேண்டும்.
19. பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பை அரசு மேம்படுத்த வேண்டும்:
• நெடுஞ்சாலைகளில் வலப்புற பாதையைப் பயன்படுத்தும் கனரக வாகனங்கள், விதிமீறிய சுமை ஏற்றுதல், வேக வரம்பை மீறுதல் ஆகிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் போக்குவரத்து நிறுவனங்கள் மீது உடனடியாக கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
• அனைத்து உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், தளவாட நிறுவனங்களும் லாரிகள் மற்றும் பேருந்துகளில் வேக வரம்பு சாதனங்களை பொறுத்த வேண்டும் என்ற சட்ட விதியை அரசு இயற்ற வேண்டும்.
• கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்தை (PUSPAKOM) ஆக்ககரமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற நிறுவன சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
• பொதுப் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தும் முயற்சியில், அரசானது ஓட்டுநர்கள் உள்ளடங்கிய தொழிலாளர்களின் நலனை, அத்துறை மேம்பாட்டு முயற்சிகளின் முக்கிய அம்சமாக மாற்ற வேண்டும்.
• நெடுஞ்சாலையில் வாகனங்களால் மோதப்பட்டு உயிரிழக்கும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டமிடல் செயல்முறையை அரசு மேம்படுத்த வேண்டும்.
• பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் அதிக சாலைப் பாதுகாப்பு பிரச்சாரங்களை அரசு நடத்த வேண்டும்.
20. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு இலவச வாகன நிறுத்துமிட வசதியை வழங்க வேண்டும்.
21. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு குரல் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை மலேசியாவில் அமெரிக்க தூதர் இருப்பதை அரசு ஏற்க கூடாது. உடன், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச ஒற்றுமையை உருவாக்க, பண்டுங் (Bandung) மாநாடு போன்ற உலகளாவிய தென் நாடுகளின் கூட்டமர்வை நடத்துவதற்கான முயற்சிகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
வெளியிட்டவர்,
எம். சிவரஞ்சனி
தேசிய பொதுச் செயலாளர்
மலேசிய சோசலிசக் கட்சி
தமிழாக்கம் : பிரிவின்குமார் ஜெயவாணன்
No comments:
Post a Comment