Sunday, October 26, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ஒரு திறந்த மடல் (கடிதம்)

PSM  தேசியத் தலைவர் ஜெயகுமார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எழுதிய திறந்த மடல் 


அன்புள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்,

அமெரிக்க அதிபரான நீங்கள், ஆசியான் உச்சிமாநாட்டை சிறப்பிக்க 26/10/25 அன்று மலேசியாவுக்கு வருகை தருவதைப் பற்றி அதிகம் விரும்பாத பல மலேசியர்கள் இருப்பதைக் கண்டு நீங்கள் குழப்பமடையக்கூடும் என்று நினைக்கிறேன். முடிந்தால், உங்களுக்காக இதைப் பற்றி நான் விளக்குகிறேன்.

உங்கள் வருகைக்கு மலேசியர்கள் உற்சாகமான ஆதரவு அளிக்காததற்கான முதல் காரணம், காசா பகுதியில் நிகழ்ந்து வரும் இனப்படுகொலை, அமெரிக்காவின் ஆதரவின்றி நடந்திருக்காது என்று பலர் நம்புவதுதான். அதிபர் அவர்களே, ஜனவரி மாதம் பதவியேற்றவுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களும்  வெடிமருந்துகளும் வழங்குவதை நிறுத்தியிருந்தால், அந்தக் கொடூரத்தை நீங்கள் தடுக்க முடிந்திருக்கும். அதனால், இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. அதன் விளைவாக, 2025 ஜனவரி மாதத்திலிருந்து மேலும் 20,000 முதல் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்தில் அமெரிக்கா நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாக மலேசியர்கள் பெரும்பாலோர் நம்புகின்றனர். 2023 அக்டோபர் மாதத்திலிருந்து, அமெரிக்கா இஸ்ரேலைக் குற்றம் சாட்டும் தீர்மானங்களை தடுக்க, பாதுகாப்பு கவுன்சிலில் தமது வீட்டோ அதிகாரத்தை ஆறு முறை பயன்படுத்தியுள்ளது; இது, அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆயுத மற்றும் வெடிகுண்டு ஆதரவுடன் சேர்ந்து, குற்றச்செயலைப் பாதுகாத்து வந்துள்ளது என்பதற்கான உறுதியான சான்றாகும்.


நிச்சயமாக, இறுதியில் நீங்கள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கச் செய்தது எங்களை நிம்மதியடையச் செய்தது. எனினும், இது  முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். காசா அல்லது மேற்கு கரை பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினால், அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.


மலேசியர்கள் பலர் உங்கள் மலேசியா வருகைக்கு அதிருப்தி அடைவதற்கான இரண்டாவது காரணம் என்னவெனில், அமெரிக்கா பிற நாடுகள் தமது சமூகங்களைத் தாம் விரும்பியபடி உருவாக்கிக் கொள்ளும் தன்னாட்சி உரிமையை ஒருபோதும் உண்மையாக அங்கீகரிக்கவில்லை என்பதேயாகும்.

கியூபா, வெனிசுவேலா, ஈரான், லிபியா, சீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், அமெரிக்கா தன்னிச்சையாக கடுமையான பொருளாதாரத் தடைச் சட்டங்களை விதித்ததையும், அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு  நிதியளித்ததையும் நாங்கள் பார்த்துள்ளோம். ஏனெனில் இந்த நாடுகள் தங்கள் சமூகங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தன.

மலேசியாவிலுள்ள நாங்கள், மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் கொள்கைகள் மற்றும் கண்ணோட்டங்களின் அனைத்து அம்சங்களுடனும் ஒத்துப்போகாமல் இருக்கலாம். எனினும், ஒவ்வொரு நாடும் — அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் — தமது சொந்த வளர்ச்சி பாதையைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ தலையீடுகள் அமெரிக்கா மற்றும் அதன் “தன்னார்வக் கூட்டணி” மூலம் அல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மை (super-majority) ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒருவர் எங்கள் நாட்டிற்கு வருவது குறித்து நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையாத மூன்றாவது காரணம் என்னவெனில், அமெரிக்கா மக்கள் குடியரசு சீனாவுடன் மேற்கொண்டு வரும் மோதலான (bellicose) தொடர்புகள் தென் சீனக் கடலில் இராணுவ மோதலைத் தூண்டும் என்ற எங்களது அச்சமே ஆகும்.

மலேசியா, எங்கள் ஆசியானின் (ASEAN) அயல்நாடுகளுடன் இணைந்து, இப்பகுதியை “அமைதி, சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மையின் மண்டலம்” (Zone of Peace, Freedom and Neutrality – ZOPFAN) என நீண்டகாலமாக அறிவித்துள்ளோம். இது இப்பகுதியைச் சார்ந்த எங்கள் கொள்கையாக இருந்து வந்துள்ளது, மேலும் ஆசியானின் பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்களை இப்பகுதிக்குக் கொண்டு வரக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளன. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்து, பெரிய அளவிலான போர்களைத் தவிர்த்துள்ளோம்.

சீனாவுடன் “ஒன்பது கோடு வரி” (Nine Dash Line) தொடர்பான சில பிரச்சனைகள் இருப்பது உண்மை. எனினும், அவை காலப்போக்கில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்படலாம் என்றும், அவ்வாறே தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்கா தொடர்ந்து சீனாவைத் தூண்டி வருவது, ஏதாவது தவறான கணிப்பின் விளைவாக, இராணுவ மோதலாக மாறிவிடுமோ என்ற பெரும் கவலை எங்களுக்கு உள்ளது. உலகம் இதற்கு ஒத்த நிகழ்வை கிழக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே கண்டுள்ளது — 1990களிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை நேட்டோ (NATO) அமைப்பு ரஷ்ய எல்லைகளுக்கு தன் செல்வாக்கை இடையறாது விரிவுபடுத்தியதன் விளைவாக, அவர்கள் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நம்பி, இராணுவ ரீதியாக பதிலளிக்க முடிவு செய்யும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது. உக்ரைன் போரின் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமைகள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால் இது நினைவில் கொள்ளப்பட வேண்டும் — இந்த மோதலின் பெரும்பகுதி சுமையைக் சுமந்தவர்கள் ஐரோப்பாவின் சாதாரண குடிமக்கள்தான். உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் ஊனமுற்றுள்ளனர். ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் பொருளாதார துன்பங்கள் மோசமடைந்துள்ளன, ஏனெனில் மலிவு விலையிலான எரிவாயுவை வழங்கிய நோர்டிக் குழாய் மர்மமான முறையில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால் உருவான பொருளாதார நெருக்கடியும், குடிமக்கள்மீது திணிக்கப்பட்ட மதவாதக் கொள்கைகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் “சமூக ஒப்பந்தத்தை” சிதைத்துவிட்டன. இதன் விளைவாக, மேற்கத்திய சமூகங்களை துண்டாடும் வலதுசாரி பேரினவாதக் கட்சிகள் எழுச்சிப் பெற்றுள்ளன. இல்லை, அதிபரே, எங்கள் உலகப் பகுதியில் அத்தகைய நிலைமைகள் உருவாக வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை.

திரு. அதிபர் அவர்களே, அமெரிக்கக் கொள்கையில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரும்பாலும் அமெரிக்க அரசியல் உயரடுக்கினரிடம்தான் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அமெரிக்காவின் சாதாரண குடிமக்களுடன் எங்களுக்கு முழு அனுதாபம் உள்ளது; அவர்கள் தங்களின் சொந்த அரசியல் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு, போதுமான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதே எங்களின் கருத்து.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க அரசியல்  உயரடுக்கினர், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து திணித்த “சுதந்திர வர்த்தகக் கொள்கைகள்”, நன்கு சம்பளம் வழங்கும் உற்பத்தி வேலைகளை ஆசியாவிற்கு இடம்பெயர்ந்தன. இதனால், அமெரிக்காவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவுக்கும் அது வழிவகுத்தது.

முன்னாள் தொழிலாளர் வர்க்கத்தினர் பலர் உங்கள் “Make America Great Again (MAGA)” என்ற வாக்குறுதியை நம்பி உங்களுக்கு வாக்களித்தனர், ஆனால் அவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர். 

நீங்கள் மில்லியன் கணக்கான ஏழை அமெரிக்க குடிமக்களுக்கு மருத்துவம் மற்றும் உணவு  சலுகைகளைக் குறைத்து, பெருநிறுவன வரிகளைக் குறைத்துள்ளீர்கள்.  நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் விதிக்கப்பட்ட உங்கள் இறக்குமதி வரிகள், அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இன்று, அமெரிக்க மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பிரிந்து, கடுமையான எதிர்ப்போடு வாழ்கின்றனர்!

சாதாரண அமெரிக்க குடிமக்களுக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம். அவர்கள் தங்களின் உண்மையான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் தலைவர்களை அறிவோடும் ஒற்றுமையோடும் தேர்ந்தெடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

திரு. அதிபரே, ஏன் இத்தனை மலேசியர்கள் உங்கள் கோலாலம்பூர் வருகையால் பெரிதும் உற்சாகமடையவில்லை என்பதை நீங்களும் உங்கள் ஆலோசகர்களும்  ஆராய்ந்து,  “அதிகப்படியான வலிமைமிக்க” வெளிநாட்டு கொள்கை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சர்வதேச கொள்கைகளுக்கான அடிப்படையாக “அமெரிக்காவின் தனிச்சிறப்பு” என்ற கருத்தை மேற்கோள் காட்டுவதை நிறுத்தவும், உலக நாடுகளின் குடும்பத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக நடந்து கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால், அமெரிக்காவின் கண்ணியமும் தாக்கமும் குறையும் வேகம் நிச்சயமாக மேலும் அதிகரிக்கும்.









எழுதியவர் :                                                                                                                                              டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்                                                                                            மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர்                                                    26 அக்டோபர் 2025

No comments:

Post a Comment

மக்களின் பிரச்சனைகளை 100 ரிங்கிட் தீர்த்துவிடுமா?

“நாட்டிலுள்ள அடிதட்டு மக்களின் மனங்களைக் கவருவதற்கு 100 ரிங்கிட் போதும் என பிரதமர் அன்வார் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஏழைச் சமூகத்தின் ப...