Wednesday, January 1, 2020

குடியுரிமை பிரச்சனைகளை எதிர்கொள்ள பி.எஸ்.எம்.மின் பரிந்துரைகள்






மலேசிய குடியுரிமை பெறுவதில் ஏற்படும் பிரச்சனைகள்
 
கடந்த 20 ஆண்டுகளாக குடியுரிமை பெறுவதில் பிரச்சனைகளை எதிர்கொண்ட தனிப்பட்ட நபர்களுடன் பி.எஸ்.எம். தொடர்பு கொண்டுள்ளது. இந்த சிக்கலை எதிர்கொள்ள, சில நடவடிக்கைகளை நாங்கள் பரிந்துரைக்க விரும்புகின்றோம். பி.எஸ்.எம்மின் அனுபவத்திலிருந்து,  குடியுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களை இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கலாம்: 
 
குழு ஏ: பிறப்பு பதிவு செய்யாதவர்கள் அல்லது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களின் அலட்சியம் (வறுமை, தாய் மற்றும் தந்தை இடையிலான மோதல்கள், மது அல்லது போதை பழக்கம் போன்ற) காரணமாக அடையாள அட்டையை விண்ணப்பிக்காதவர்கள். தேவையான பாரங்களை பூர்த்தி செய்ய அவர்களை அருகாமையிலுள்ள தேசிய பதிவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வர முடியும் என்றால் அவர்களின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். 
 
குழு பி: இந்த குழுவில் உள்ள தனிப்பட்ட நபர்களுக்கு எஸ்.ஓ.பி. செயல்முறைகளுக்கு தேசிய பதிவுத் துறையில் மாற்றம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில், தேசிய பதிவு துறையின் எஸ்.ஓ.பி. செயல்முறை, இந்த குழுவில் உள்ளவர்களின் பிரச்சனைகளை கையாள முடியாத பட்சத்தில் ஒப்புதல் பெற அமைச்சரைப் பார்க்க வேண்டியுள்ளது. உள்துறை அமைச்சர் பல முக்கிய விஷயங்களில் மிகவும் ‘பிஸியாக’ இருப்பதால் அது குறித்து குறிப்பிடப்பட்ட பிரச்சனைகளை கையாளவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் போகிறது. சொந்தமாக ஒரு "நிர்வாக" முறையில் இந்த பிரச்சனைகளைத் தீர்க்க தேசிய பதிவுத் துறையினருக்கு அதிகாரத்தை வழங்கும் ஒரு தெளிவான எஸ்.ஓ.பி. நமக்குத் தேவை.

பி. குழுவில் காணக்கூடிய 6 வகை பிரச்சனைகளை விவரிப்பதோடு அவைகளை திறமையான முறையில் கையாள எஸ்.ஓ.பி.யை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்கு பரிந்துரை செய்கிறோம். “ரோட்ஷோ” (roadshow) எனப்படும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் நிகழ்வுகளும் அடிமட்ட பதிவு அமர்வுகளும் இந்த பி குழுவின் பிரச்சினைகளை தீர்க்காது. தேசிய பதிவுத் துறையின் எஸ்.ஓ.பி. செயல்முறையை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

 
1. குடியுரிமை உள்ள தந்தையும் குடியுரிமை இல்லாத தாயும், திருமணத்தை பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை

தற்போதைய காலகட்டத்தில், தேசிய பதிவுத்துறை கூட்டாட்சி அரசியலமைப்பின் இரண்டாம் அட்டவணை, பகுதி II, (1) (ஏ) இல் உள்ள விதிமுறைகளில் குறிப்பிட்ட “மலேசிய தினத்திற்குப் பிறகு கூட்டமைப்பு அரசியலமைப்பில், பெற்றோர்களில் ஒருவர் மலேசிய குடிமகனாக இருந்தால், அவருக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் சட்டத்தின் மூலம் ஒரு குடிமகன் ஆவார்” என்ற விதிக்கு தேசிய பதிவுத்துறை இணங்கவில்லை. பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் காரணம் என்னவெனில் பிரிவு 17, பகுதி III, கூட்டரசு அரசியலமைப்பின் அட்டவணை இரண்டில் குறிப்பிட்டிருக்கும் "ஒரு நபரின் பெற்றோர்கள் அல்லது அவரது பெற்றோர்களில் ஒருவர்,  சட்டவிரோதமான ஒருவருடன் உறவு வைத்திருந்தால், பெற்ற தாய் மட்டுமே குறிப்பு என பொருள் கொள்ள வேண்டும்” 

இந்த பிரிவு 17-ன் காரணமாக, தந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் இருந்தும் இரு பெற்றோர்களும் அவர் உண்மையில் குழந்தையின் தந்தைதான் என்று கூறினாலும், குழந்தையின் குடியுரிமை தாயின் நிலைப்பாட்டில் மட்டுமே உள்ளது. டி.என்.ஏ சோதனைகள் மூலம் அவர்தான் உண்மையில் ஒரு உயிரியல் தந்தை என்பதை நிரூபிக்கின்ற சந்தர்ப்பங்களில் கூட இந்த கட்டத்தில் தேசிய பதிவுத்துறை நடைமுறையில் ஒதுக்கி வைக்கிறது. இந்த அணுகுமுறை காரணமாக, இந்த வகையிலான அனைத்து பிரச்சனைகளும் கூட்டாட்சி அரசியலமைப்பின் சட்டம் 15 (ஏ) எனக் கருதப்படுகின்றன. "கூட்டரசு அரசாங்கம், இது போன்ற பொருத்தமான சூழ்நிலைகளில், 21 வயதிற்கு உட்பட்ட நபருக்கு ஒரு குடிமகனாக பதிவு செய்யப்படலாம்." என்று குறிப்பிடுகிறது. இருப்பினும் அவர்களில் பலரின் குடியுரிமை விண்ணப்பங்களை மீண்டும் மீண்டும் நிராகரிப்படுகின்றன.

பி.எஸ்.எம்மின் கருத்து:

ஏ. அம்மாவுக்கு தனிப்பட்ட ஆவணங்கள் இல்லை என்பதால், திருமணம் பதிவு செய்யப்படாத நிலை பலருக்கு உள்ளது. இந்த பிரிவில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏழைகள். குடியுரிமையைப் பெற தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அவர்களின் குழந்தைகளும் ஓரங்கட்டப்படுகிறார்கள். இருப்பினும் வேறு எந்த நாட்டிலும் இந்த குழந்தைகள் குடியுரிமையைப் பெற விண்ணப்பம் செய்யவும் முடியாது. எனவே அவர்கள் மலேசியாவில் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறமை இல்லாமல் இருப்பார்கள்.

பி. இந்த குழுவில் இரண்டாவது துணை பிரிவு என்னவெனில் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட மலேசிய ஆண்கள். காரணம் வேலை அனுமதி நிலைமைகளின் காரணமாக அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய முடியாது. (திருமண அனுமதிகளை அனுமதிக்காத வேலை அனுமதிகள்). 
பி.எஸ்.எம்மின் பரிந்துரை: பிரிவு 15 (ஏ)-ல் உள்ள கூட்டமைப்பு அரசின் அதிகாரம்- "கூட்டரசு அரசாங்கம், இது போன்ற பொருத்தமான சூழ்நிலைகளில், 21 வயதிற்கு உட்பட்ட நபருக்கு ஒரு குடிமகனாக பதிவு செய்யப்படலாம்." - பிறப்புச் சான்றிதழ் அல்லது டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவர்தான் தந்தை என்று அடையாளம் காணப்படுவதோடு, மலேசிய குடிமகனாக தந்தை இருக்கும் பட்சத்தில் மலேசியாவில் பிறந்த எந்த குழந்தைக்கும் குடியுரிமையை அங்கீகரிக்க புதிய எஸ்.ஓ.பி  பயன்படுத்தப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் தேசிய பதிவுத்துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். உள்துறை அமைச்சரின் விசேஷ முடிவுக்கு அனுப்பப்பட வேண்டிய அவசியம் இல்லை.

2. குழந்தையின் தாயார் மலேசிய குடிமக்கள் அல்ல, தந்தையின் குடியுரிமை தெரியவில்லை ஆனால் குழந்தையை தத்தெடுத்தவர்கள் மலேசிய குடிமக்கள்.


இந்த காலகட்டத்தில், மேலே விவரிக்கப்பட்டபடி பிரிவு 15 (ஏ) கீழ் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு காரணத்தையும் வழங்காமல் அவர்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறார்கள். கல்வி மற்றும் சுகாதார அணுகல்களுக்கு குடிமகன் அல்லாத குழந்தைகள் சிக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு இது மிகவும் சிரமமாக உள்ளது.
 பி.எஸ்.எம்மின்  பரிந்துரை: குழந்தை "நாடற்றது" என்பதால் வேறு எந்த நாட்டிற்கும் அனுப்பவும் முடியாது என்பதாலும் அவர்கள் மலேசிய குடும்பத்தின் ஒரு பாகமும் ஆகி விட்டதாலும், மலேசிய குடும்பத்தினரால் 5 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக தத்தெடுக்கப்பட்டிருந்தால், இந்த வகையின்கீழ் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் குடியுரிமை அங்கீகரிக்கப்பட தேசிய பதிவுத்துறையின் எஸ்.ஓ.பி மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனையை  “நிர்வாக” முடிவாக அங்கீகரிக்கும் அதிகாரம்  உயர் நிலை தேசிய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. பிரிவு 16-ன் கீழ் விண்ணப்பதாரர்

சுதந்திரத்திற்கு முன்னர் மலேசியாவில் பிறந்து, இதுவரை மலேசியாவில் வாழ்கின்றவர்களை உள்ளடக்கியது. மத்திய அரசியலமைப்பின் 16-வது பிரிவின் கீழ் பின்வருமாறு வாசிக்கப்பட்டது -"சுதந்திரத்திற்கு முன்னர் கூட்டமைப்பில் பிறந்த ஒருவர்  மத்திய அரசாங்கத்தை திருப்தி படுத்தினால் குடிமகனாக பதிவு செய்ய உரிமை உண்டு
ஏ. தனது விண்ணப்பத்திற்கு முந்திய 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்  நாட்டில் வசித்திருந்தால் 
பி. அவர் நிரந்தரமாக தங்க விரும்பினால்
சி. அவர் நல்ல குணாம்சம் கொண்டிருந்தால்
டி. அவர் மலாய் மொழி பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் ".

இந்த பிரிவில் "உரிமைகள்" என்ற வார்த்தை பொருந்தும் என்றாலும், இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் பலர்  காரணம் கூறாமல் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகின்றனர்.  இவர்களின் விண்ணப்பம் (ஏ) முதல் (டி) வரையிலுள்ள எந்த விதிமுறைகளால் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தையும் அவர்கள் கூறவில்லை. 

 பி.எஸ்.எம்.இன்  பரிந்துரை: 

பிரிவு 16-ன் கீழ் விண்ணப்பப் படிவத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதற்கான காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  மேல்முறையீடு செய்வதற்கான வசதியை திரிபுனல் (tribunal) எனப்படும் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) உருவாக்கித்தர வேண்டும். அந்த தீர்ப்பாயத்தில் தேசிய பதிவுத்துறையைச் சாராமல் வெளியில் இருந்து இரண்டு நபர்களுடன் 4 பேர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்களது வேண்டுகோளை செவிமடுத்து முடிவெடுக்க வேண்டும். ஒரு சிறிய "குற்றம்" உதாரணமாக, ஒரு வழக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து பதிவு செய்யப்பட்டு இருந்ததால் ஒரு நபரின் மனுவை நிராகரிக்க "(சி)" விதிமுறையை பயன்படுத்தப்படக்கூடாது. தேசிய பதிவுத்துறையால் நிராகரிக்கப்பட்ட காரணம் விதிமுறை (டி என்றால், விண்ணப்பதாரரின் மலாய் மொழி “அடிப்படை அறிவில்” உள்ளதா இல்லையா என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும்.

 4. பிரிவு 19-ன் கீழ் விண்ணப்பதாரர்

பிரிவு 19 கூற்றுப்படி -"திருப்திகரமாக இருந்தால், மத்திய அரசு ஒரு விண்ணப்பதாரருக்கு இயல்பான சான்றிதழை வழங்கலாம்.

ஏ. அவர் தேவையான காலத்திற்கு கூட்டமைப்பில் தங்கியிருந்து, நிரந்தரமாக தங்கவும் விரும்புகிறார் என்றால்
பி. அவர் நல்ல குணாம்சம் கொண்டிருந்தால்
சி. அவர் மலாய் மொழி பற்றிய போதுமான அறிவு இருந்தால் ".

அவர்களில் பலர் சிவப்பு அடையாள அட்டைதாரர்கள். இளம் வயதிலேயே மலேசியாவுக்கு வந்து தங்கி வேலையும் செய்து பதிவு ஓய்வும் பெற்றுவிட்டனர். ஆனால் அவர்களது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுகின்றன. அவர்களில் சிலர் மலேசியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு குடியுரிமைப் பெற்ற பிள்ளைகளும் பேரன், பேரத்திகளும் உள்ளனர். 

பி.எஸ்,எம்மின் பரிந்துரை: மலேசியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துள்ள விண்ணப்பதாரர், மேலே புள்ளி 3-ல் சுட்டிக்காட்டப்பட்ட தீர்ப்பாய குழு முன்னிலையில் தேசிய பதிவுத்துறையின் முடிவை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

 5. அனாதை இல்லங்களில் வளர்க்கப்பட்ட குழந்தைகள்.
தங்களது குடும்பங்கள் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதை இல்லங்களில் உள்ள விடுதி வளாகத்தில் வளர்க்கப்படுகின்றனர். வழக்கமாக அனாதை இல்ல நிர்வாகம்  அவர்களை தேசிய பதிவுத்துறையில் பதிவுசெய்து, அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் பெறுகின்றனர். ஆனால் பெற்றோர்களின் பெயர்களும் தேசியங்களும் பதிவு செய்யப்படுவதில்லை, எனவே அவர்கள் "குடிமக்களாக" வரையறுக்கப்படுவதில்லை. அவர்களில் சிலர் மலேசிய குடியுரிமைப் பெற்ற குடிமக்களால் பிரிவு 15 (ஏ)-ன் கீழ் தத்து எடுக்கப்படுகின்றனர். இருப்பினும் பலர் தத்து எடுக்கப்படுவதில்லை எனவே இந்த பகுதி பயன்படுத்த முடியாது. 

21 வயதை அடைந்தவர்களுக்கு பகுதி 15 (ஏ) பயனற்றது. தற்போதுள்ள தேசிய பதிவுத்துறையின் எஸ்.ஓ.பி இந்த பிரிவில் உள்ள தனிநபர்கள் கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 19 (2)-ன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருந்தாலும்  இத்தகைய விண்ணப்பங்கள் அரிதாகவே நிறைவேற்றப்படுகின்றன. குடியுரிமை இல்லாததால் இந்த அனாதைகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. பள்ளிக்கு செல்வதில் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். 

20 வயதை எட்டும் போது, அவர்கள் வேலை தேடுவதில் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவர்கள் இ.பி.எஃப் (EPF) எனும் சேமநிதி அல்லது சொக்சோ (Socso) போன்ற  வாரியங்களோடு  பதிவு செய்யவும் முடியாது. குறைந்த சம்பளத்துடன் "சட்டபூர்வமற்ற" ஒப்பந்த வேலைகள் மட்டுமே அவர்கள் தேட முடியும். அவர்கள் வங்கிக் கணக்கைத் திறக்கவோ அல்லது ஓட்டுநர் உரிமம் பெறவோ முடியாது. அவர்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்களது திருமணத்தை பதிவு செய்யவும் முடியாது, காரணம் ஒரு திருமணத்தை பதிவு செய்ய தேசிய பதிவுத்துறைக்கு விண்ணப்பதாரரின்  அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடப்பிதழ் வேண்டும். ஆகையால் இப்படி பதிவு செய்யப்படாத திருமண மூலம் பிறந்த அவர்களுடைய குழந்தைகள் “திருமணம் ஆகாமல்” பிறந்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். அடையாள அட்டை இல்லாத பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் தொடர்ந்து "குடிமக்கள் அல்லாதவர்கள்" என அங்கீகரிக்கப்படுகிறார்கள். 

இந்த பிரச்சினை ஒரு புதிய "குடிமக்கள் அல்லாதவர்கள்" தலைமுறைக்கு தொடர்கிறது. அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சிகிச்சை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். மலேசிய மக்களை விட பல மடங்கு அதிகமான விகிதத்தில் அரசாங்க மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

பி.எஸ்.எம்மின் பரிந்துரைகள்: தங்கள் பெற்றோரை அறியாதவர்கள் என்ற நிலைமையின் காரணத்தினால் இந்த அனாதைகளை குற்றம் சாட்ட முடியாது மற்றும் மலேசியாவில் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு வேலையும் செய்யவிருக்கிறார்கள். எனவே இந்த நாட்டின் உயர் நீதி மன்றம் உடனடியாக அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்

பிரிவு 19 (2)-ன் கீழ் தேசிய பதிவுத்துறைக்கு குடியுரிமை விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள ஒரு புதிய எஸ்.ஓ.பி  வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் பெற்றோர்களை அடையாளம் காண முடியாதபோதிலும், சிறுவயதில் இருந்து அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படவேண்டும். இந்த பிரச்சனையை  “நிர்வாக” முடிவாக அங்கீகரிக்கும் அதிகாரம்  உயர் நிலை தேசிய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 
 
6. மத்திய அரசியலமைப்பின் பிரிவு 15 (1) மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு அனுமதி இல்லை. 
பிரிவு 15 (1) கூறுவது -" எந்தவொரு திருமணமான பெண்ணின்  கணவன் ஒரு குடிமகனாக இருந்தால், அந்த பெண்ணுக்கு குடியுரிமைமைப் பெற உரிமை உண்டு.

ஏ. தனது விண்ணப்பத்திற்கு முந்திய 2 ஆண்டுகள்  கூட்டமைப்பு அரசில் தங்கியிருந்து, நிரந்தரமாக தங்கவும் விரும்புகிறார் என்றால்
பி. அவர் நல்ல குணாம்சம் கொண்டிருந்தால்
துரதிருஷ்டவசமாக தேசிய பதிவுத்துறையின் செயல்பாட்டில் இந்த வழியை எடுக்க விரும்புபவருக்கு திருமண சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் தேசிய பதிவுத்துறை அடையாள அட்டைகள் (நீலம் அல்லது சிவப்பு) அல்லது வெளிநாட்டு கடப்பிதழ்களை வைத்திராத எந்த பெண்ணுக்கும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்காது. பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களின் பெயர்கள் சில குழந்தைகளின் பிறந்த சான்றிதழ்களில் சில இடங்களில் உள்ளன. ஆனால் அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறார்கள்.
பி.எஸ்.எம்மின் பரிந்துரைகள்: இத்தகைய பெண்கள் தங்களின் பிறப்பு சான்றிதழை உபயோகித்து தங்களின் திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.     
          
குடியுரிமை இல்லாத பிரச்சனை நாட்டுக்கு நட்டம்.

குடியுரிமை இல்லாத பிரச்சனை சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல. இது நாட்டிற்கு அதிக செலவும் ஆகும். அவர்களை ஓரங்கட்டுவது சமுதாயத்திற்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவொரு நன்மையையும் கொண்டு வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வேறு எந்த நாட்டிற்கும் செல்லவும் முடியாது. நாம் அவர்களுக்கு எவ்வளவுதான் சிரம் கொடுத்தாலும் அவர்கள் இங்குதான் தங்கியிருப்பார்கள். ஏனென்றால் மலேசியாவில் தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்கிறார்கள், இந்த நாடு தான் அவர்களின் "தாயகம்". அவர்களின் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மலேசியாவில் உள்ளன. அவர்களைத் தொந்தரவு செய்து, அவர்களை இன்னும் ஏழைகள் ஆக்குவது யாருக்கும் அல்லது நாட்டிற்கும் எந்தவொரு பயனையும் கொடுக்காது.


பி.எஸ்.எம் பரிந்துரைகளின் சுருக்கம்

1. மலேசியாவில் பிறந்த எந்த குழந்தைக்கும் மற்றும் ஒரு தந்தை பிறப்புச் சான்றிதழ் அல்லது டி.என்.ஏ. (DNA) சோதனை மூலம் மலேசியர் என்று  அடையாளம் காணப்பட்டால், குடியுரிமை வழங்குவதற்கு ஒரு புதிய எஸ்.ஓ.பியை உருவாக்குதல் வேண்டும். இந்த விண்ணப்பம் தேசிய பதிவுத்துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். உள்துறை அமைச்சரின் விசேட முடிவுக்கு அனுப்பப்பட வேண்டிய அவசியம் இல்லை.

2. மலேசிய குடும்பத்தினரால் 5 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக தத்தெடுக்கப்பட்டிருந்தால், இந்த வகையின்கீழ் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் குடியுரிமை அங்கீகரிக்கப்பட தேசிய பதிவுத்துறையின் எஸ்.ஓ.பி மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனையை  “நிர்வாக” முடிவாக அங்கீகரிக்கும் அதிகாரம்  உயர் நிலை தேசிய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
 
3. பிரிவு 16 அல்லது 19-ன் கீழ் விண்ணப்பப் படிவத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதற்கான காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  மேல்முறையீடு செய்வதற்கான வசதியை திரிபுனல் (tribunal) எனப்படும் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) உருவாக்கித்தர வேண்டும். அந்த தீர்ப்பாயத்தில் தேசிய பதிவுத்துறையைச் சாராமல் வெளியில் இருந்து இரண்டு நபர்களுடன் 4 பேர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டு மற்றும் அவர்களது வேண்டுகோளை செவிமடுத்து முடிவெடுக்க வேண்டும். 

4. பிரிவு 19 (2)-ன் கீழ் தேசிய பதிவுத்துறைக்கு குடியுரிமை விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள ஒரு புதிய எஸ்.ஓ.பி  வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் பெற்றோர்களை அடையாளம் காண முடியாதபோதிலும், சிறுவயதில் இருந்து அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்ட அனைத்து அனாதைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படவேண்டும். இந்த பிரச்சனையை  “நிர்வாக” முடிவாக அங்கீகரிக்கும் அதிகாரம்  உயர் நிலை தேசிய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

5. சிறுவயது முதல் மலேசியாவில் வசித்து வரும் ஆனால் முழுமையான தனிப்பட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள், பிறப்புச் சான்றிதழ் அல்லது தேசிய பதிவுத்துறை வழங்கிய பிற சிறப்பு ஆவணங்களை பயன்படுத்தி தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

6. இந்த வழக்குகளைச் சமாளிக்க போதுமான தேசிய பதிவுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை செயல்படுத்தப்பட வேண்டும்.

 7. மேலே விவரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்களின் பிரிவுகளை கையாள்வதில் தேசிய பதிவுத்துறையின் செயல்திறனை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு நிறுவப்பட வேண்டும்

மேலே விவரிக்கப்பட்ட குடியுரிமை பற்றிய விவகாரங்களுக்கான பரிந்துரைகள் மலேசிய அரசாங்கத்தால் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதைய எஸ்.ஓ.பிகளை மாற்றி அமைக்காமல் இருக்கும் பட்சத்தில், கிட்டத்தட்ட வாழ் நாட்கள் முழுவதும்  மலேசியாவில் வாழ்பவர்களின் குடியுரிமை பிரச்சனையை தீர்க்க முடியாது.
 
 
 நன்றி
 
ஜெயக்குமார் தேவராஜ்
27 ஜூன் 2018

No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...