கடந்த டிசம்பர் 2018-ல், நமது பிரதமர் டாக்டர்.மஹாதீர் முகமட் ஒரு
பத்திரிக்கை செய்தியில் கூறியதாவது நமது நாட்டில் ஊராட்சிமன்ற தேர்தல்
நடத்தப்பட்டால் அது மதவாதக் குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்தும் என்ற செய்தி மலேசிய
சோசியலிச கட்சிக்கு மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்கியது. இதே நொண்டிச் சாக்கை
மறுபடியும் மறுபடியும் கூறி நாட்டின் அடிமட்ட நிர்வாகத்தை மக்களே தேர்ந்தெடுக்கும்
உரிமை நிராகரிக்கப்படுகிறது.
பிரதமரின் பொறுப்பில்லாத
இந்த அறிக்கை, அவரின் அமைச்சரவையிலுள்ள இன்னொரு அமைச்சருக்கே எதிர்ப்பாக உள்ளது.
அதாவது, வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்ற அரசு அமைச்சரான சுரைடா கமாருடின் மூன்று
ஆண்டு காலகட்டத்தில் ஊராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்ற கூறியிருந்தும்,
அதற்கு எதிர்ப்பாக பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஊராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அது மதவாத குழப்பத்தை
ஏற்படுத்தும் என்று நாட்டின் தலைவர் சொல்லும் சாக்கு, முந்தைய ஆட்சியில் பல்லாண்டு
காலமாக மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் மதவாத அரசியலிலிருந்து இவர்களும் முழுயாக
வெளியாகவில்லை என்பதையே இது காட்டுகிறது. எப்போதுதான் நமது அரசியல்வாதிகள் ஒரு
ஜனநாயகமான நியாயமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியை தடுக்க மதவாத அரசியலை
கையிலெடுப்பதை நிறுத்தப் போகின்றார்கள்?
ஊராட்சிமன்ற தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதிகள்
சமுதாயத்தின் இன கலவையை, அதாவது பல்லின மக்களின் பிரதிநிதிகளாக அமையாமல், ஏதாவது
ஓர் இனம் ஆதிக்கம் செய்துவிடுமோ என்ற பயம் இந்த அரசாங்கத்திற்கு எழுமாயின், அதற்கு
தீவீர நடவடிக்கை எடுத்தால், அதாவது ஊராட்சிமன்ற தேர்தல் முறையில் சீரமைப்பு
செய்வதன் வழியும் இந்த தீர்வு காணலாம். விகிதாசார பிரதிநிதித்துவம் அமைப்பு முறையை அறிமுகம் செய்தால் அது
வாக்காளர்களின் சிறந்த, சரியான தேர்வை பிரதிபலிக்கும். அல்லது வாக்காளர்கள் இன
அடிப்படையில் ஓட்டுப் போட்டால், அந்த வாக்குகள் இன விகித வாரியாக
பகிர்ந்தளிக்கப்பட்டு ஊராட்சி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
இதைவிடுத்து, மற்றுமொரு தேர்தல் முறையும் பயன்படுத்தலாம், அதாவது
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குழு பிரதிநிதிகள் போட்டியிடுவது – இந்த முறையில் பல
பிரச்சனைகளும் உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் சில விதிமுறைகளையும் வரையலாம், அதாவது பாலின
சமநிலையை உறுதி செய்ய கண்டிப்பாக பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும் மற்றும்
பல்லினத்தை சேர்ந்த வேட்பாளர்களும் (இன சமநிலையை உறுதி செய்ய) அந்தக் குழுவில்
இடம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் முறையை சீரமைப்பது மட்டுமல்லாமல், இதை செய்வதால் மற்றுமொரு
பெரிய நன்மையும் உண்டு. அதாவது ஊராட்சிமன்ற தேர்தல் வைத்தால் அது இனவாத பதற்றத்தை
உருவாக்கும் என்ற பயத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். இனவாத அரசியலுக்கும்
சாவு மணி அடிப்பதே அரசு மற்றும் அரசியல்வாதிகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டுமே
அதை விடுத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நன்மை தரும் விஷயங்களை இனவாத பெயரில்
தள்ளிப்போடக்கூடாது.
புதிய மலேசியால் சீரான ஜனநாயகத்தை உருவாக்க ஊராட்சிமன்ற தேர்தல்
மிக முக்கியம். ஜனநாயக முறையில் ஊராட்சிமன்ற தேர்தல் முறையை மறுசீரமைப்பு
செய்வதும், அதன் மூலம் பொறுப்புள்ள ஊராட்சி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும். அதன் மூலம், அரசியலில் அடிமட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கப்பட வேண்டும்.
இதுவே ஒரு சிறந்த ஜனநாயக அரசியலாகும்.
இனவாத அரசியலை நிறுத்த வேண்டும்!
ஊராட்சி ஜனநாயகத்தை வென்றெடுக்க
வேண்டும்!
எழுத்து: சூ சுன் காய்
மொழிப்பெயர்ப்பு: சிவரஞ்சனி
No comments:
Post a Comment