Thursday, January 2, 2020

அனைவருக்குமான வீட்டுறிமை!



நாடு தேசிய முன்னணியின் வீழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்களின் உரிமைகளும் தேவைகளும் ஆக்கப்பூர்வமாக, உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைந்திடும் எனும் நம்பிக்கையையும் மக்கள் கொண்டுள்ளனர்.

வீடு, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவையாக இருந்தும், மலேசியர்கள் பெரும்பகுதியினர் இதுவரை சொந்த வீடோ அல்லது வாடகை முறையிலான வாங்கும் வீடுகளை கொண்டிருக்கவில்லை. மாறாக, வீடு ஒரு மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது, அதிக லாபம் ஈட்டும் முதலீடாக அமைந்துவிட்டது. இதற்கு முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில்வீடமைப்பு நிறுவனங்கள் மற்றும் சொத்துடமை முதலீட்டு நிறுவனங்களின் ஆளுமைகள் நாட்டில் அதிகமாகவே இருந்ததோடு மட்டுமின்றி அவர்களின் தேவைகளுக்கு ஒப்ப வீடமைப்பு கொள்கைகளும் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆட்சியில் அமர்ந்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னமும் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இந்த மேம்பாட்டாளர் அல்லது முதலீட்டாளர்களுக்கு சார்புடைய கொள்கை மற்றும் சட்டத்தை அகற்றூவதில் தோல்வி அடைந்திருப்பதை நாம் காண்கிறோம். புத்ராஜெயாவைவின் அரசாங்கம் இன்னமும் புதிதாக இருந்தாலும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர அவர்கள் வீட்டுவசதி  பிரச்னை தொடர்பில் கையாண்ட விதங்கள் மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்புகிறது. மக்களின் கேள்விகளில் சில:


    *வீடுகளின் விலை ஏற்றம்

வீட்டு வசதி மக்களின் அடிப்படை தேவை எனும் ரீதியில் முடிவு செய்யப்படுகிறதா அல்லது மேம்பாட்டாளர்களின் லாபத்தை முதன்மையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறதா?இவ்வாண்டு உலக வாழ்வியல் தினம் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மலேசிய சோசலிசம் கட்சி (பி.எஸ்.எம்) இந்நாளை 30 செப்டம்பர் 2018இல் அனைவருக்கும் மலிவு வீட்டு வசதிகான விழிப்புணர்வை எடுத்துரைக்கும் வகையிலும்  மலேசியாவில் வறுமை கோட்டில் வாழ்பவர்கள், கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்தும் நினைவுறுத்தும் வகையில் கொண்டாடப்பட்டதுஇவ்வாண்டு பி.எஸ்.எம் கட்சி அனைவருக்கும் வீட்டுவசதி எனும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவிருக்கும் நிலையில் இப்பிரச்சாரத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் அல்லது அனுபவிக்கும் வீட்டு பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வும் தெளிவும் எடுத்துரைக்கப்படும்.

1. நிலம் மற்றும் சொத்துடைமையின் ஊகத்தின் அடிப்படையில் நகரம் மற்றும் மாநகரங்களின் வீட்டு விலை அதிகரிக்கிறது.

அன்மை காலமாய் தொடர்ந்து அதிகரித்து வரும் வீட்டுவிலைகள் அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக அமைந்துள்ளது. மக்கள் கொண்டிருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படியில் புதிதாக கட்டப்பட்ட மலிவு விலை வீட்டைக்கூட வாங்கும் சக்தியை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறு நகரங்களில் தரை வீடு ஒன்றின் விலை வெ.250,000 எட்டியுள்ள நிலையில் கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு போன்ற மாநகரங்களில் அவை வெ.500,000யையும் தாண்டி உயர்ந்துள்ளது. சாதாரண தொழிலாளி ஒருவர் பெறும் வெ.1000எனும் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் வங்கியின் வரையறையில் வீட்டு  வங்கி கடனை பெற இந்த குறைந்தபட்ச ஊதியம் தகுதியற்றுப் போகிறது. இதில் புதிய அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தில் வெ.50ஐ உயர்த்தி காமெடி செய்துக் கொண்டிருக்கிறது. வீட்டு வசதி என்பது மக்களுக்கான அடிப்படை தேவை என்பதை ஆளும் வர்க்கம் உணரவில்லை என்பதை இது நன்கு புலப்படுத்துகிறது. மேலும், மக்களுக்கு வீட்டு வசதியை உருவாக்க வேண்டிய அவசிய உணர்வையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. போதிய ஊதியம் இல்லாத காரணத்தினால் சாதாரண மக்கள் சொந்த வீடுகளை வாங்குவதில் பெரும் பின்னடைவினை எதிர்நோக்குகிறார்கள்.

2.    கடன் செலுத்தப்படாத வீடுகளை ஏலத்தில் விடுதல்.

வங்கியில் கடன் பெற்று வாங்கிய வீட்டின் கடனை செலுத்த முடியாமல் போகும் நிலையில் அவ்வீட்டை ஏலத்தில் விட்டு கடனை பெரும் வங்கிகளின் செயல்பாடுகளை கவனிப்போம். நடப்பு சூழலில் மக்களை நெறுக்கும் பொருளாதார சூழல், விலையேற்றம், சம்பளம் பற்றாக்குறை, வேலையில் இருந்து நிறுத்துதல் உட்பட இதர சுமைகள் ஆகியவற்றை சமூக உணர்வோடும் பொறுப்போடும் சீர்த்தூக்கிப் பார்ப்பதில் வங்கிகள் ஆக்கறையின்மையோடு நடந்துக் கொள்கின்றனர். வீட்டு கடனை திருப்பி பெருவதில் வங்கி கொண்டிருக்கும் ஒரே வியூகம் வீட்டை ஏலமிடுவதாகும். வீட்டு கடனை திரும்ப பெறுவதற்கு வீட்டை ஏலம் இடுவதை காட்டிலும் வேறு விவேகமான நடவடிக்கைகள் வங்கி வரையறுக்க அரசாங்கமும் பணிப்பதில்லை. குறிப்பாக, கடனை மறுசீரமைப்பு செய்தல் அல்லது கடனை திருப்பி செலுத்தும் வகையில் குறிப்பிட்ட காலத்தில் குறைந்த நிதியை கடனாக திருப்பி செலுத்துவது போன்றவை அதில் அடங்கும்.

3. இன்றும்தொடரும் நகர்ப்புற குடியேற்றக்காரர்களும் தோட்டத்தொழிலாளர்களும் கட்டாயமாக வெளியேற்றப்படுவது

அரசாங்கம் மாறியிருந்தாலும் அன்மையில்  கம்போங் பாடாங் ஜாவா கட்டாய வெளியேற்றத்தின் விளிம்பில் இருந்தது. நமது தேசிய நில விதிமுறையானது torrens அடிப்படையிலான வரையறைக் கொண்டது. அதன்படி இங்கு நீண்டக்காலமோ அல்லது தலைமுறை கடந்தோ ஒரு நிலத்தில் மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் நிலத்திற்கு எவ்வித உரிமையும் கொள்ள முடியாது. நிலத்தின் பட்டாவை வைத்திருப்பவரே அதன் உரிமையாளர். அவர் அதனை யாருக்கு வேன்டுமானாலும் விற்கலாம். யாரிடம் நிலப்ட்டா உள்ளதோ அவர் சம்மதப்பட்ட நிலத்தில் வசித்து வந்தவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யலாம். கட்டாய வெளியேற்றம் செய்ய வழக்கமாய் நீதிமன்ற நோட்டிஸ் மூலம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இம்மாதிரி கட்டாயமாய வெளியேற்றப்படுபவருக்கு எவ்வித இழப்பு தொகையோ அல்லது மாற்று  தேவைகளையோ வழங்குவதற்கு சட்டரீதியில் வரையறை இல்லை. அம்மாதிரியான வரைவுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் முன் ரவில்லை.

4. குறைந்த விலை அடுக்குமாடி வீட்டுப் பிரச்னைகள்

குடியிருப்பு நிர்வாகக் குழு, கூட்டு முகாமைத்துவக் குழு (JMB) ஆகியவை பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக பராமரிப்புக்கான கட்டணத்தை குடியிருப்பாளர்களிடமிருந்து பெறுவதில். இந்நிலையால் சம்மதப்பட்ட வீடமைப்பு பகுதி முறையாக கவனிக்கப்படாமலும் பாழடைந்தும் கிடக்கிறது. மேலும், கூரை மற்றும் கட்டிடத்தை பராமரித்தல் போன்ற பெரும் செலவினங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் போதுமானதாகவும் இல்லை. அதுமட்டுமின்றி, குறைந்த விலை அடுக்குமாடி வீடமைப்பில் அடிப்படை பொது சேவை தேவைகள் மற்றுமொரு பிரச்னையாக விளங்குகிறது. இதில், முறையாக குப்பை வீசும் இடம் இல்லாமை, பொது மண்டபம், பயன்படுத்த முடியாத நிலையிலான விளையாட்டு பூங்கா, கார் நிறுத்தம் வசதி ஆகியவை இல்லாமல் இருப்பதோடு கூட்டு முகாமைத்துவக் குழு செயல்பட அலுவலகம் கூட இல்லாத நிலைதான் நடப்பில் உள்ளது. அதே வேளையில், குடியிருப்பாளர் தத்தம் சொத்துரிமை நிலையை பெறுவதற்கும் சட்ட சிக்கல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

5.    தோட்டத் தொழிலாளர்கள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டாலும் அவர்கள் பணி ஒய்வு பெறும் போது அவ்வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். நகர்புற குடியேற்றக்காரர்களின் சிக்கலுக்கு இதுவொரு காரணியமாக அமைந்திருக்கும் சூழலில் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசாங்கமும் உன் வருவதில்லை. 1970க்களில் துன் ரசாக் அவர்களால் கொண்டு வரப்பட்ட  தொட்ட சமூக வீடமைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் மௌனம் நகர்புற குடியேற்றவாசிகளின் பிரச்னைக்கு காரணியம் எனலாம். சைம் டார்பி போன்ற பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஜி.எல்.சி அடிபடையிலானது எனும் நிலையில் அதுசார்ந்த தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை அமல்படுத்த அரசாங்கத்திற்கு எவ்வி சிக்கலும் இல்லை.

6. அந்நியநாட்டுத் தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு  எதிரான அடக்குமுறை.

புலம்பெயர்ந்த அல்லது அந்நியநாட்டுத் தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு மனிதாபிமானம் அடிப்படையில் வீட்டு வசதியை ஏற்படுத்துவது நமது கடமையாகும். ஆனால், அவர்களுக்கான வீட்டு வசதி சேவை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாய், அலட்சியம் செய்யப்படுகிறது. அவர்கள் சார்ந்த முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தால் கைவிடப்படும் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் கடைவீடுகளில் கூட்டகூட்டமாக பெரும் நெரிசலோடு வாழ்கிறார்கள். நடப்பில் பிபிஆர் வாடகை வீடுகளிலிருந்தும் அவர்கள் விரட்டப்படுகிறார்கள்.

மக்களின் கோரிக்கைகள்
சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு இணங்க மக்களின் சமூகநல்வாழ்வு எவ்விதத்திலும் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்யவும் மக்களிடையே அமைந்திருக்கும் ஏற்றத்தாழ்வு பூதகரமான பிரச்னையாக விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னதாக அரசாங்கம் கீழ்கண்ட விடயங்களில் பெரும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1. மலிவு வீட்டுவசதி / அனைவருக்கும் வாடகை

- முறையான வீட்டு வசதிகளை உறுதிப்படுத்தும் ஒரு தேசிய வீட்டு வசதி கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களுடனும் இணைந்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுதல்.
- அரசாங்கத்தின் தலைமையில் மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் முதல் வீட்டை கொண்டிருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுதலோடு நடப்பியல் விலையை கண்காணிக்க வேண்டும். மேலும், மக்களுக்கு தேவையான வீட்டு வசதியை உருவாக்குவதோடு வீட்டு வசதியை லாபகரமான முதலீடாக இல்லாமல் மக்களுக்கு உகர்ந்த அடிப்படை தேவையாகவும் சேவையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
 - ஏழைகளுக்கான வீட்டுவசதிகள் நியாயமான வங்கி கடன் உத்தரவாதங்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன் வழங்க வேண்டும், இதன்மூலம் மக்கள் குறைந்த செலவில் வீடுகளை வாங்க முடியும்.
 - விற்கப்படும் அனைத்து வீடுகளுக்கும் MRTA காப்புறுதி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
 - மலிவு விலையிலான வாடகைக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பரிதாபமான நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட வீடுகளில் வசிக்க முடியும்.

2. நகர்புற குடியேறிகளை அங்கீகரித்தல் மற்றும் கட்டாய வெளியேற்றத்தை தடுத்தல்.

- நகர்புற குடியேற்றவாசிகள் மற்றும அவர்களால் உருவாக்கப்பட்டு அவர்கள் வசிக்கும் கிராமங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆக்கிரமித்த நிலம் அரசாங்கதுடையதாக இருந்தால் அதனை சம்மதப்பட்டவர்களே விற்க அரசாங்கம் முன் வரவேண்டும். அதைவிடுத்து அதிக லாபத்திற்காக மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அல்ல.

-அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தில் குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மத்திய மாநில அரசுகள் மாற்று வீடுகள் அல்லது மாற்றுத் திட்டங்களை வழங்கிடும் நிலையிலான வரையறையை உருவாக்குதல் வேண்டும்.

 -தனியார் நிலம் மேம்பாட்டு அபிவிருத்தி சூழலில் குடியேற்றவாசிகளுக்கு வீட்டு வசதி அல்லது இழப்பீடு ஆகியவை மேம்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும். குடியேற்றவாசிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை சம்மதப்பட்ட மேம்பாட்டு திட்டம் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

 -தோட்டத் தொழிலாளார்களுக்காக துன் அப்துல் ரசாக் கொண்டு வந்த சொந்த வீட்டுரிமை திட்டத்தை சட்டமாக்குதல் வேண்டும்.

3. ஏழைகளுக்கு எதிரான வங்கியின் கொடுரநடவடிக்கைகள் நிறுத்தப்படனும்.

- ஒரு கடன் காப்புறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும். அதாவது வீட்டை வாங்கியவர் குடும்பம் அதன் வருமானத்தை இழந்துவிட்டால் மாதந்திர டன்களை திருப்பிச் செலுத்துவதற்கு உதவியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் அக்காப்புறுதி வழிசெய்ய வேண்டும். மொத்த கடன் தொகையில் 10%, பொருளாதார  சூழல் காரணத்தால் வீட்டு கடனை செலுத்த  ஏதுவாக அக்காப்புறுதி உதவிட வேண்டும்.

- வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் தொழிலாளார் தங்களின் பொருளாதார சூழலை சமாளிக்கவும் வீட்டுக்கடனை செலுத்தவும் உதவிடும் வகையில் பி.எஸ்.எம் கட்சியும் ஜெரிட் அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தொழிலாளர் உதவிநிதியத்தை உடனடியாக அமல்படுத்துதல் வேண்டும்.

 - பொருளாதார நெருக்கடி சுழலில் வீட்டை வாங்குவோர் அச்சூழலில் இருந்து மீண்டுவரும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஏதுவான மறுசீரமைப்பை உருவாக்குதல் வேண்டும். இது குறைந்தது ஓராண்டு வரை நீடிக்க வழி செய்வதோடு முந்தைய திருப்பி செலுத்தும் கடனை காட்டிலும் இது சற்று குறைந்த நிலையில் இருத்தல் வேண்டும். இக்காலக்கட்டத்தில் அவர்களுக்கு உதவிடும் வகையில் காப்புறுதி திட்டமும் தொழிலாளர் உதவிநிதியம் பங்காற்றும்.

 4. மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்புகளை ஊராட்சித்துறை  பராமரிக்க வேண்டும்.

- மலிவு விலை வீடுகளை போல் மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்களும் நிலவரி (ஆண்டுக்கு ஒரு முறை) மற்றும் வீட்டுவரி (மாதம் ஒரு முறை) செலுத்துகிறார்கள்.

- இதற்கான கட்டணத்தை மாநகரமன்றம் மற்றும் நில அலுவலகத்தில் நேரடியாக செலுத்த வேண்டும். வழங்கப்படும் ரியின் மூலம் குப்பை அகற்றுதல், தாழ்வாரம் சுத்தம் செய்தல், வடிகால் சுத்தம் செய்தல், விளையாட்டுப் பூங்கா, குடியிருப்பு பகுதியின் தெருவிளக்கு மற்றும் சாலை ஆகியவையின் செயல்பாட்டிற்கு அடங்கும்.

5. முற்போக்கு மற்றும் வியூகமிக்க சொத்துடமை வரி

 - ஆடம்பர சொகுசு வீடுகள் கொண்டிருப்போர், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வீடு வைத்திருப்போர் மற்றும் முதன்மை சொத்து விற்பனையாளர்களுக்கான மூலதன ஆதாய வரி ஆகியவற்றின் மீது முற்போக்கு மற்றும் வியூகமிக்க சொத்துடமை வரியை விதிக்க ஆலோசனை வழங்குகிறோம்.

- இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியிலிருந்து மலிவு விலை வீட்டு வசதிகளை உருவாக்க முடியும்.

6. அந்நியநாட்டுத் தொழிலாளர்களின் வியர்வையை மதிப்பதோடு அகதிகளாய் தஞ்சம் புகுந்தவர்களுக்கும் உதவுதல் வேண்டும்.

 - நாட்டின் மேம்பாட்டிற்கு அந்நியநாட்டுத் தொழிலாளர்கள் பெரும் பங்காற்றுவதை நாம் உணர வேண்டும். மேலும், சொந்த நாட்டில் ஒதுக்கப்பட்டு அல்லது ஒடுக்கப்பட்டு நம் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளுக்கு நமது ஆதரவு அவசியமாகிறது.

 - அகதிகளுக்கும் அந்நியநாட்டுத் தொழிலாளர்களுக்கும் மலிவான வாடகை வீட்டுவசதியை ஏற்படுத்த வேண்டும்.

 - பி.பி.ஆர் வீடுகளில் வாழும் அந்நியநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை வேண்டாம். அவர்கள் வாழ்வதற்கு மனிதாபிமான முறையில் மாற்று வீட்டுவசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

- அவர்களுக்கான வீட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வரை அவர்களை counsil housing இல் தற்காலிகமாய் தங்க வைப்பதே நன் தீர்வு.

இக்கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்திடாத வீடுகளை வாங்குவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. முதலாளித்துவம், கைப்பாவையான அரசாங்கம் மற்றும் முதலீட்டாளர்கள் மக்களுக்கான வீட்டுரிமை திட்டத்தை எதிர்க்கிறார்கள். சாதாரண மக்களின் வீட்டுரிமையை பறிக்கிறார்கள். இருப்பினும், புதிய அரசாங்கம் மலிவு வீட்டுவசதி மக்களின் வாழ்வாதார மனித உரிமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். மேலும், மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதையும் அறிந்திருக்க வேண்டும். சாதாரண மக்களின் வீட்டுவசதியை முதலீட்டாளர்களின் பெரும் லாபத்திற்கான மூலதனமாக இருத்தல் கூடாது. மலிவு விலை வீட்டுத்திட்டத்தை சந்தை விலையிலிருந்து அகற்ற வேண்டும்.

வீடு மக்களின் வாழ்வாதார உரிமை;
அவை இலாபத்திற்கான விற்பனை பொருள் அல்ல!!


No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...