Wednesday, January 1, 2020

ஒரு குத்தகை தொழிலாளியின் கதை



அரசாங்க பள்ளியில் துப்புரவு பணி செய்யும்

ஒரு குத்தகை தொழிலாளியின் கதை


சரோஜா, தேசிய பள்ளி ஒன்றில் துப்புரவு பணி செய்யும் ஒரு குத்தகை தொழிலாளி ஆவார். இவருக்கு சம்பளம் கொடுக்கும் குத்தகையாளர் அரசாங்கத்தில், அதாவது கல்வி அமைச்சின் கீழ் சுத்தம் செய்யும் வேலைகளுக்கு குத்தகை எடுத்துள்ள ஒரு நிறுவனமாகும். சரோஜா இந்த பள்ளியில் 5 வருடமாக வேலை செய்து வருகிறார். இதற்கு முன், 10 வடங்களாக வேறு குத்தகையாளரிடம் இதே பள்ளியில் துப்புரவு செய்யும் வேலைதான் செய்தார்.  பழைய குத்தகையாளரின் குத்தகை அரசாங்கத்தால் துண்டிக்கப்பட்டு புதிதாக இப்போதுள்ள குத்தகை நிர்வாகம் பொறுப்பேற்றது.
பள்ளியில் பாதுகாவலர்களாக பணி புரிபவர்கள் வாரத்தில் 7 நாட்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆனால் சரோஜா இவர்களைப் போல வேலை செய்ய அவசியமில்லை. அவரின் வேலை 8 மணி நேரம்தான். அவர் காலையில் 7 மணிக்கு வேலை தொடங்கி 4 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். இதற்கிடையில் ஒரு மணி நேரம் ஓய்வு. சனிக்கிழமைகளில் அரை நேரம் வேலை. ஞாயிறு விடுமுறையாகும். சரோஜாவின் மாத சம்பளம் வெறும் RM1000 தான்.
சரோஜா ஒரு தனித்து வாழும் தாய்மார். இவருக்கு இரண்டு குழந்தைகள், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். சரோஜா கொஞ்சம் அதிஷ்டசாலி, அவருக்கு அரசாங்க வீட்டில் (பி.பி.ஆர்) மாதம் RM120 வாடகையில் தங்கியிருக்கிறார். ஆயினும், இவரின் RM1000 வெள்ளி சம்பளத்திலிருந்து சேமநிதி மற்றும் சொக்சோ வெட்டிய பிறகு RM900 கூட ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. சரோஜாவுக்கு சேமிப்பு என்று எதுவும் கிடையாது. 
RM1000 வெள்ளியை குறைந்தபட்ச சம்பளமாக அரசாங்கம் நிர்ணயம் செய்து அமலாக்கம் தொடங்கியது ஜூலை 2018-ல் ஆகும். அதற்கு முன் அடிப்படை சம்பளம் RM900 மட்டுமே. இன்னும் இரண்டு மாதத்தில் அரசாங்கம் புதிய அடிப்படை சம்பள தொகையை அமலாக்கம் செய்யப் போகும் செய்தியை கேட்டு மிகவும் பூரித்துப் போனாள். அவர் ஒரு கனிசமான சம்பள உயர்வை எதிர்ப்பார்த்தார். ஏனெனில், இதற்கு முன் பல வருடமாக துப்புரவு வேலை செய்திருந்து, அவருக்கு சம்பள உயர்வே கிடைத்ததில்லை. 
சரோஜா இன்னும் கொஞ்ச அதிஷ்டசாலி என்றும் கூறலாம், ஏனென்றால் அவரின் குத்தகையாளர் தொழிலாளர் சட்டத்தின் விதிகளை பின்பற்றுபவராக இருந்தார் – சேமநிதி, சொக்சோ மற்றும் தொழிலாளர் காப்புறுதி திட்டம் அனைத்தும் வெட்டப்படுகிறது. முதலாளி சட்டப்படி சம்பளம் கொடுத்தார், அதாவது அடிப்படை சட்டத்தின் கீழ் குறைந்த சம்பளத்தை!
மேலும், ஒரு மாதத்தில் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு சென்றால், இவரின் உழைப்புக்கு நன்றி கூறும் வண்ணம் ஒவ்வொரு மாதமும் ஒரு RM50 வெள்ளி தொகையும் கொடுக்கப்படுகிறது. ஆம் வெறும் RM50 வெள்ளிதான். இது எல்லா துப்புரவு தொழிலாளிக்கும் கிடைக்காது!
நாம் பள்ளி படிக்கும் போது, ஆசிரியர் நம்மை எப்போதும் பொறுப்போடு இருக்கச் சொல்வார். அதே போல், நம் சரோஜாவும் செய்யும் தொழிலில் மிகவும் பொறுப்போடு வேலை செய்வார். ஆனால், அவர் இன்னும் ஏழையாகத்தான் இருக்கிறார். அவர் ஏழையாக இருப்பதற்கு குறைவான சம்பளமே காரணம். இவர் ஏழையாக இருப்பதற்கும், இன்னும் ஏழையாக ஆக்கபடுவதற்கும் காரணம் இந்த குத்தகை தொழில் முறைதான்.
பள்ளிகளில் இருக்கும் துப்புரவு வேலைகள் யாவும் நிரந்தர வேலைகள், ஆனால் இது போன்ற தொழில்களை குத்தகைக்கு விட்டு, 3 வருடத்திற்கு ஒருமுறை குத்தகையாளர் மாறவும் செய்கின்றனர். அரசாங்க வளாகங்களில் பணி புரிந்தாலும், இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி தனியார் நிறுவன குத்தகையாளர்தான். நிரந்தர வேலையாக இருந்தும், குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டு வேலை உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை.
ஒவ்வொரு பள்ளியிலும் அல்லது அரசாங்க வளாகங்களிலும் எல்லா நேரத்திலும் துப்புரவு சேவை தேவைப்படுகிறது. ஆயினும், இந்த சேவை தனியாரிடம் குத்தகை விடப்படுகிறது, இந்த சூழ்நிலைக்கு காரணமானவர் நமது 4-ஆவது பிரதமரும், தற்போதைய பிரதமரான மகாதீர்தான்.
நிரந்தர வேலைகளான துப்புரவு பணி மற்றும் பாதுகாவலர்கள் போன்ற வேலைகள் குத்தகைக்கு விடப்படுவதால் இது வேலை உத்தரவாத பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, மேலும் 40% வருமானம் குறைந்த மக்களை மேலும் வறுமைக் கூட்டில் தள்ளுக்கிறது. 
அரசாங்க வளாகத்தில் பணி புரியும் இதுபோன்ற துணைத் தொழிலாளர்களின் சேவைகளை தனியாரிடம் குத்தகை விடும் முறையினால் தொழிலாளிகள் மேலும் ஏழ்மையாக்கப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அரசாங்கம், முதலில் அரசாங்க வளாகத்தில் பரவிக் கிடக்கும் இது போன்ற குத்தகை முறையை ஒழிக்க வேண்டும்; தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கப்பட வேண்டும். அரசாங்கம் நேரடியாக இவர்களுக்கு சம்பளமும் மற்ற நியாயமான சலுகைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
எழுத்து: சூ சுன் காய்
மொழிப்பெயர்ப்பு: சிவரஞ்சனி


No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...