சிறிது காலமாகவே ஐசேர்ட் (ICERD) எனப்படும் ஐக்கிய நாட்டு
சபையின் இனப்பாகுபாட்டை ஒழிக்கும் அனைத்துலக கொள்கையை ‘புதிய’ மலேசியாவும் கையெழுத்திட
வேண்டும் என்ற வேண்டுக்கோள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல எதிர்ப்புகள்
வந்த வண்ணம் உள்ளது.
ஆதரிக்கும் தரப்பு: இதன்வழி மலேசியாவை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நம்புகிறது.
எதிர்க்கும் தரப்பு: இதனால், மலாய்காரர்களின்
சிறப்புரிமை இழக்கப்படும் என கருதுகின்றானர்.
இவ்விரு தரப்பினரும் ஒருவர் மேல் ஒருவர் தாக்கியே
கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்தில், ஐசேர்ட் எதிர்ப்பு குழு, அமைச்சர் பி. வேதமூர்த்தியை
பதவி விலக சொல்லி கோரிக்கை வைத்தனர். ஆனால், இருதரப்பினரையும் அழைத்து ஒரு புரிந்துணர்வு
கலந்துரையாடல் செய்ய யாரும் முன்வரவில்லை.
மலேசியா, ஐசேர்டை கையெழுத்திட்டால், மலாய்காரர்களிடையே
இருக்கும் அவர்களின் சிறப்புரிமை இழக்கப்படும் எனும் பயத்தை அகற்றுவதுதான் பாக்காத்தான் ஹராப்பானின் மிகப்பெரிய சவால் ஆகும்
என பி.எஸ்.எம். கருதுகிறது. பாஸ், அம்னோ கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, 61 ஆண்டுகளாக சாமானிய
மலாய் மக்கள் மத்தியில் இன அரசியலை புகுத்தி ஆட்சி செய்யபட்டுள்ளதாலும், அவர்கள் இன்னமும்
பின்தங்கியுள்ளனர் என்பதாலும் இவர்களிடையே இந்த அச்சம் இருக்கிறது. இதில், நியாயம்
இல்லை என முழுமையாக நிராகரிக்க முடியாது.
கடந்த 61 ஆண்டு அம்னோ, பாரிசான் ஆட்சியில், 20% மேல்தட்டு மக்களே இலாபம் கண்டுள்ளனர்.
சாமானிய மலாய் மக்கள், இதர இனத்தவர் போலவே பின்தங்கியுள்ளனர். குறைந்த வருமானம் பெருபவர்கள்
அதிகரித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள், அரசியலமைப்பு சாசனம் வழி கிடைக்கும் கல்வி, லைசன்ஸ், நில உரிமை போன்ற சிறப்பு சலுகைகளை எதிர்பார்த்துதான்
வாழ்க்கை நடத்திக்கொண்டு வருகின்றனர். ஆகவே, ஐசேர்ட் வந்தால் இந்தச் சலுகைகள் கைவிட்டு
போகும் என்று பயப்படுகின்றனர். மலேசியாவில் இனப்பாகுபாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டு
முன்னோக்கி செல்வதையே பி.எஸ்.எம். கட்சியும் விரும்புகிறது. ஆனால், அதற்கு வர்க அடிப்படையிலான
வருமானம் குறைவான, இனப்பாகுபாடு இல்லாமல், கீழ்தட்டு மக்களை உயர்த்தும் வகையிலான, சமுக-பொருளாதார
இடைவெளியை குறைக்க கூடிய, இடைதரகர்கள் இல்லாத சிறப்பு சலுகை திட்டம் இருக்க வேண்டும்.
இதைத்தான் இடதுசாரி கட்சிகள் 71 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை செய்தனர். 1947
‘இல் புத்ரா-ஏ.எம்.சி.ஜே (PUTERA-AMCJA) இணைந்து ‘மக்கள் அரசியல்
அமைப்பு சாசனத்தில்’ கோரிக்கையாக வைக்கப்பட்டது. மேலும் அன்றைய மலாயாவில் பிறந்தவர்கள்
(மலாய், சீன இந்திய அல்லது எந்த இனமானாலும்)
அனைவரும் ‘மலாயு’ (Melayu) என்று அழைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவெண்டும் என்ற கோரிக்கையும்
முன்வைக்கப்பட்டது. இதனால், எந்த சிறப்பு சலுகைகளும் (இட ஒதுக்கீடு, லைசன்ஸ், மானியங்கள்)
இன அடிப்படையில் இல்லாமல், வர்க அடிப்படையில் எல்லா சாமானிய (பாட்டாளி, மீனவர்கள், விவசாயிகள்) மக்களுக்கு இடைத்தரகர்கள்
இல்லாமல் நேரடியாக உதவிகள் கிடைக்கப்பெறும்.
இந்த இடைத்தரகர்கள்
வேலையைத்தான் சுதந்திரத்திற்கு பிறகு அம்னோ தலைவர்களும் அவர்களின் சகாக்களும் மலாய்காரர்களின்
சிறப்பு உரிமை என்ற போர்வையில் தவறான வழியில் நாட்டின் வளத்தை அனுபவித்து வந்தனர்.
பெரும்பாலான சாமாநிய மலாய்காரர்களுக்கு இந்த
சிறப்பு சலுகைகள் முழுமையாக சென்றடையவில்லை.
மலாய்காரர்களிடையே ஏழை பணகாரர் பாகுபாடும் பெரிய இடைவெளிக்கும் இதுவே முக்கிய
காரணம்.
இத்தகைய உணர்வையும் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்துதான், பி.எஸ்.எம். கட்சியின்
முன்னாள் சுங்கை சிப்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் மார்ச் மாதம்
2014’இல் தனிநபர் ‘சமூக/சமுதாய உள்ளடக்கம்’ அல்லது Social Inclusion Act
2014 சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் சாராம்சம்
என்னவென்றால்;
· ஏழ்மையை ஒழிக்க இன மற்றும்
கட்சி அடிப்படை இல்லாத பொதுவான, எல்லா ஏழை மக்களுக்கான சிறப்பு சலுகைகள் திட்டம் இருக்க
வேண்டும்.
· இடைத்தரகர்கள், கட்சி தலைவர்களும்
அவர்களின் சகாக்களும் மாலாய்காரர்களின் சிறப்பு உரிமைகளை தவறான வழியில் எடுக்க முடியாது.
· இத்திட்டத்தின் பலனை முழுமையாக
தேவைபடும் ஏழை பூமிபுத்ராக்களுக்கும் பூமிபுத்ரா அல்லாத சிறுபான்மை மக்களுக்கும் அனுபவிக்கும்
வண்ணம் செய்ய வேண்டும்.
ஆகவே, பாக்காத்தான் அரசாங்கம், பழைய அம்னோ அரசாங்கம் செய்த தவறையே மறுபடியும் செய்யக்கூடாது.
பாக்காத்தான் அரசாங்கத்திற்கு கடந்த 14வது
பொதுத்தேர்தலில், மலாய்கார்களின் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.
மலாய்காரர்களின் இதர ஒட்டுகள் அம்னோ மற்றும் பாஸ் அகிய இரு கட்சிகளுக்கும் கிடைத்தன.
சாமானிய, தோட்ட பாட்டாளிகள், சிறு தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள்,
சிறு வியாபாரிகள் போன்ற மக்களை சந்தித்து, (பாட்டாளி, மீனவர்கள், விவசாயிகள்) மற்றும் சலுகைகள் நிறுத்தப்படாது என்றும் ஏன் வர்க
அடிப்படையிலான சிறப்புரிமை தேவைபடுகிறது என்றும் பக்காத்தான் ஹராப்பான் அரசு, மக்களை
சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என பி.எஸ்.எம். கருதுகிறது. பாக்காத்தான் ஹராப்பான்
அரசாங்கம், இது போன்ற திட்டங்கள் செய்து வெற்றி கண்டால், இன அடிப்படையிலான சிறப்பு உரிமை திட்டங்களில் எவ்வளவு குறைகள் உள்ளன என்பதை
பெருன்பான்மையான மலேசிய மக்கள் புரிந்துக்கொள்வார்கள். இனபாகுபாடு அற்ற அடிதட்டு மக்களுக்கான
சிறப்பு உரிமை திட்டங்களை இந்த அரசாங்கம் உறுதியாக, உண்மையான தேவைகளை கொண்ட மக்களின்
பங்கேற்போடு கொள்கைகளை அமுல்படுத்தினால் ஐசேர்ட் தேவையா?
இல்லையா? என்ற பிரச்சனை எழுந்திருக்காது. பல நாடுகள் ஐ.நா.வின் அனைதுலக ஐசேர்ட் ஒப்பந்தத்தை
கையெழுத்து போட்டு பல ஆண்டுகள் கடந்தும் முறையான இன பாகுபாடு அற்ற கொள்கைகளை அமுலுக்கு
கொண்டுவர தவறியுள்ளன.
ஐசேர்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தள்ளிவைத்து, இந்த விவகாரத்தையும் அதனால்
வரும் விவாதங்களையும் களைய கூடுதல் பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்படும்
எனும் அமைச்சரின் திட்டம் குறுகிய கால தீர்வாகவே இருக்கும். உறுதியான, தூரநோக்கு சிந்தனையோடு
இப்பிரச்சனையை கையாளவில்லையென்றால், பாஸ் மற்றும் அம்னோ தொடர்ந்து இதுபோன்ற இன மத விசயங்களை
முன்னிறுத்தி அரசியல் இலாபம் காண தொடர்ந்து முயல்வார்கள். அரசியல் ஆதாயத்திற்காக இன
அடிப்படையிலான பிரச்சனைகளை தூண்டிக்கொண்டே இருப்பர்.
நாட்டு மக்களின் ஏழ்மையை உண்மையாக களைய பக்காத்தான் ஹராப்பான்
எண்ணம் கொண்டால், வர்க அடிப்படையிலான தீர்வை மேற்கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வாதாரத்தையும்
வாழ்க்கை தரத்தையும் பாகுபாடு இல்லாமல் உயர்த்தினால்தான், மலேசிய மக்களை இன மத பாகுபாடு
அற்ற ஒற்றுமைமிக்க மக்களாக உயர முடியும்.
ஆனால், பாக்காத்தான் ஹராப்பானின் உறுப்பினர்கள் இன மற்றும் மத அடிப்படையிலான சிந்தனைகளை
களைந்து இப்படிப்பட்ட வர்க அடிப்படையிலான மாற்று கொள்கைகளும் திட்டங்களும் போட்டு மக்களை
தெளிவுபடுத்தினால்தான் உண்மையான மாற்றம் வரும். சாமாநிய மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
டாக்டர் நாசிர் ஹஷிம்
-மலேசிய சேஷலிச கட்சி (பி.எஸ்.எம்.)
தலைவர்
No comments:
Post a Comment