Friday, February 14, 2020

பஹாங் மாநில அரசாங்கமே நிலத்தை வழங்க வேண்டும்..




தனியார் நிறுவனங்கள் தலையீடு வேண்டாம்!
பஹாங் மாநில அரசாங்கமே நிலத்தை வழங்கலாம்..
-பிஎஸ்எம் வலியுறுத்துகிறது

கோலாலம்பூர்: பிப்ரவரி 14

அண்மையில் கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள்  அழிக்கப்பட்டது தொடர்பான விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததுதான். அந்த சம்பவத்தை முன்னிட்டு பல எதிர்வினைகளையும் மனக் குமறல்களையும் பலதரப்பினர் வெளிப்படுத்தியிருந்தனர். மலேசிய சோசலிசக் கட்சியும் தனது எதிர்வினையை பதிவு செய்திருந்தது.

தற்போது மாநில மந்திரி பெசார்  வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கேமரன் மலையில் உள்ள விவசாய நிலங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டத்தை கூறியுள்ளார். இத்திட்டதின் வழி 1018 காய்கறி விவசாயிகளிடம்  TOL உரிமத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றும் இனி விவசாயிகளின் TOL உரிமம் ரத்து செய்யப்பட்டு அது வாடகை ரீதியாக செயற்படவுள்ளது என்றும் அறிவித்தார்.



இதற்கு முன்பு இந்த TOL உரிமம் வருடத்திற்கு ஒரு முறைதான் வழங்கப்பட்டு வந்தது. அந்த வருடாந்திர முறையில்  ஒரு காய்கறி பயிரிடும் விவசாயிக்கு அந்த நிலம் நிரந்தரமில்லாத சூழலையும் அச்சத்தையும் ஏற்படுதியது. மேலும், அவர்கள் பெரிய அளவில் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பு முறையிலான  விவசாயத்தை நடைமுறைப்படுத்தவும் மேலும், விவசாயத்தில் ஏற்படும் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்வதற்கான பொருளாதார வசதியை செய்ய முடியாமலும் இருந்தது. காரணம் நிரந்தரமில்லாத ஓராண்டு உரிமத்தில் அவர்கள் துணிந்து பணத்தை முதலீடு செய்வதற்கு சாத்தியமில்லாமல் இருந்தனர்.  

தற்போது மாநில மந்திரி பெசார் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த வாடகை முறையிலான புதிய திட்டம், மூன்றாண்டுக்கு நீட்டித்திருப்பது வரவேற்கவேண்டிய ஒன்று. அந்த வகையில்  கேமரன்மலையில் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய நிலம் 5526.219 ஹெக்டராக இருக்கிறது. மாநில மந்திரி பெசாரின் அறிவிப்பின்படி இந்த நிலங்கள் மொத்தம் 78 தொகுதியாக பிரிக்கவிருக்கிறார்கள். அதாவது உலு தெலும்கில் 58 தொகுதிகளையும், ரிங்லெட்டில் 14 தொகுதிகளையும், தானா ராத்தாவில் 6 தொகுதிகளையும் பிரிக்கவிருக்கிறார்கள். நிலங்களைப் பிரித்தப் பிறகு இந்த நிலங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும்.




இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசாங்கம் எவ்வாறு முனைகிறது என்றால் இவர்களுக்கு இடையில் புதிய நிறுவனமான மாநில அரசு செயலக வாரியம் (perbadanan setiusaha kerajaan) நியமித்து அவர்களிடம் இந்த விவசாய நிலங்களின் உரிமத்தை ஒப்படைப்பார்கள். அதன் பிறகு இந்த மாநில அரசு செயலக வாரிய நிறுவனம், வேறொரு நிறுவனமான கேமரன் மலை மேம்பாடு/ வளர்ச்சி வாரியத்திடம்(perbadanan kemajuan cameron highland)  குறிப்பிட்ட நிலம் சம்பந்தபட்ட உரிமத்தை வழங்கும். அதன்பிறகு இவர்கள் பஹாங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் அந்த உரிமத்தை வழங்குவார்கள். இந்த நிறுவனம்தான் விவசாயிகளுக்கு நிலத்தை பிரித்து வழங்கும் பணியை செய்வார்கள்.     

இந்நிலையில் பிஎஸ்எம் வழியுறுத்துவது என்னவென்றால், மாநில அரசு நிலத்தை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கும் அதே வேளையில், எதற்காக விவசாயிகளை தனியார் நிறுவனங்களின் வழியாக நிலத்தை பெற வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண விரும்புகிறது.
அதுமட்டுமின்றி ஏன் - எதற்காக இத்தனை நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் உள் நுழைகின்றன? இத்தனை நிறுவங்கள் ஈடுபடுவதற்கான காரணம்தான் என்ன? அரசாங்க நிலத்தை, உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு எதற்காக இத்தனை நிறுவங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டும்? இந்நிறுவங்கள் அனைத்தும் அரசு சார்ந்தவைதானா? 



பிஎஸ்எம் பார்வைக்கும் பொது மக்களின் பார்வைக்கும் அவை தனியார் நிறுவங்களாக தெரிவதால்தான் இக்கேள்வியினை நாங்கள் முன்வைக்கிறோம். ஏன் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு இடம்மாறி இறுதியாக விவசாயிகளின் கைகளில் இந்தத் திட்டம் சேர்கிறது. ஏன் நேரடியாகவே இத்திட்டமானது விவசாயிகளிடம் வரக்கூடாது? மேலும், பல நிறுவங்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் வாடகைப்பணம் அதிகமாகத்தானே இருக்கும்? இது எப்படி சிறு தொழில் விவசாயிகளுக்கு லாபகரமாக அமையும்? விவசாயத்தை மற்ற தொழில்களோடு ஒப்பிடுவது சரியானதில்ல. 

நாட்டிற்கு முதுகெழும்பாகவும் நாட்டு மக்களின் உணவுக்கு காப்பாளர்களாகவும் இருக்ககூடிய விவசாயுகளுக்கும் கால்நடை விவசாயிகளுக்கும் ஏன் அரசு வசதியான சலுகையினை வழங்கக்கூடாது?.   தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடுவது எவ்வகையிலும் விவசாயிகளுக்கு பிரச்னையான ஒன்றாக அமையும் என்று பிஎஸ்எம் கருதுகிறது.  

சிவராஜன் ஆறுமுகம்
தேசியத் தலைமைச் செயலாளர்
மலேசிய சோசலிசக் கட்சி
      

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...