Sunday, May 2, 2021

மே 1, 2021 – பணி உத்தரவாதமே வாழ்க்கைக்கானத் தடுப்பூசி

 


நாட்டில், இவ்வாண்டு மே தினக் கொண்டாட்டம், பேரணிகள் ஏதுமின்றி அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றும் அவசரகாலப் பிரகடனமும் இக்கொண்டாட்டத்தை முழுவதுமாகத் தடைசெய்யவில்லை எனலாம். கோலாலம்பூர், பேராக், ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில், சிறிய அளவிலான குழுவினர் ஒன்றுகூடி மே தினக் கோரிக்கைகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேவேளை, ஆண்டு தோறும் இத்தினத்தை மிக விமரிசையாக, தலைநகரில் பேரணி நடத்தி கொண்டாடி வரும் மே தினச் செயற்குழு இம்முறை இயங்கலையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாண்டு மே தின அணுசரிப்பில், அவர்கள் வெளியிட்ட 2021 மே தினப் பிரகடனம் அறிக்கையின் சாரம் பின்வருமாறு :-

இவ்வாண்டு, நாம் மே தினக் கொண்டாட்டத்தில் இணைந்திருக்கும் போது, கோவிட் -19 தொற்று, அவசரகாலச் சட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நம் கண் முன்னே மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. கோவிட்-19 தொற்றின் விளைவு, பொது சுகாதார நெருக்கடியாக மட்டுமல்லாமல், பொருளாதாரம், தொழில் பாதுகாப்பு, வேலையின்மை, உணவு பாதுகாப்பு மற்றும் பசி போன்ற பல தாக்கங்களை உருவாக்கியுள்ளது.

முறைசாரா துறை சார்ந்த தொழிலாளர்கள், அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணிநீக்கம், ஊதியம் வழங்காமை, ஆட்குறைப்பு, ஒடுக்குமுறை போன்ற பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர். இந்தத் தொற்றுநோய் காலகட்டத்திலும், முதலாளிகள் தொடர்ந்து இலாபத்தை ஈட்டிவருகின்றனர், ஆட்சியாளர்கள் அவசரகாலப் பிரகடனத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். தொழிலாளர்களைப் பொறுத்தவரை, வேலை பாதுகாப்பு மட்டுமே வாழ்க்கைக்கானத் தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. குடும்பத்தை வழிநடத்தி செல்வதென்பது தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.

வேலை பாதுகாப்பு என்பது மத்திய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உரிமையாகும், இதுவே தொழிலாளரகளின் வாழ்வாதாரத்திற்கான தடுப்பூசி. மாறுபட்ட வகையில் கொண்டாடவிருக்கும் இந்த 2021-ன் தொழிலாளர் தினத்தில் நாங்கள் 15 கோரிக்கைகளை முன்வைக்கிறோம் :-

1.  வேலை உத்தரவாதத் திட்டத்தை அரசு நிறுவ வேண்டும்

-தேவையான பொது பயன்பாட்டு திட்டங்களை உருவாக்குங்கள், தரிசு நிலங்களைப் பயிரிட அனுமதியுங்கள், திவாலாகிவிட்ட தொழிற்சாலைகளைக் கையகப்படுத்துங்கள்.

-வருமானமே இல்லாதக் குடும்பங்களுக்கு, மாதத்திற்கு 1000 ரிங்கிட் என்ற அடிப்படை மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்.

-ஒப்பந்த முறையை நீக்கி, நிரந்தரப் பணி பாதுகாப்பு முறையை ஏற்படுத்துங்கள்.

- ‘GIG’ பொருளாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்குப், பாதுகாப்பு வழங்க தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சொக்சோவில் திருத்தங்களைச் செய்யுங்கள்.

-வேலை இழப்பு நேரத்தில் தொழிலாளர்களின் சுமைகளைக் குறைக்க, தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தில் (sip) அவர்கள் பயன்பெரும் வகையில் நிபந்தனையற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவாருங்கள்.

-அனைவருக்கும் உலகலாவியச் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதத்தை அமல்படுத்துங்கள், ஓய்வூதியத் திட்டம், முதியோருக்கான வசதிகள் உட்பட, மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

-முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய, கோவிட்-19 பாதுகாப்பு குழுவைப் பணியிடத்தில் செயல்படுத்த வேண்டும். சுகாதார அமைச்சின் நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

2. அவசரகாலப் பிரகடனத்தை இரத்து செய்து, நாடாளுமன்றத்தைக் கூட்ட வெண்டும்

தற்போதுள்ள சுகாதார நடைமுறை சட்டங்களில், கோவிட் -19 தொற்றுநோய்க்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருப்பதையும் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

3. அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, சிறந்த மற்றும் இலவச சேவையைப் பராமரிக்க, அதிக நிதி கொடுங்கள். பாரபட்சமின்றி அனைவருக்கும் சிறந்த சுகாதாரச் சிகிச்சை கிடைக்க தனியார் சுகாதார மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தி தேசியமயமாக்குங்கள். மருத்துவமனையின் முனைமுகத் ஊழியர்களுக்கான சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அடங்கும்.

4. அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல்

புலம்பெயர்ந்தோர் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்களின் கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கான வேலைவாய்ப்பு உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், சுரண்டல் இல்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். புலம்பெயர்ந்து அல்லது அகதிகளாக இங்கு வந்த தொழிலாளர்களை கைது செய்வதையோ அல்லது வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதையோ நிறுத்துவதோடு, அவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


5. தொழிலாளர் சங்கங்களுக்கு உரிமை

தொழிற்சங்கங்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில்துறை நல்லிணக்கத்தின் உணர்வை மதிக்க வேண்டும். தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் உறுதி செய்யப்படுவதற்கு வசதிகள் செய்துத்தரப்பட வேண்டும்.

6. பாலினம், பாலியல் சார்ந்த பாகுபாட்டை நிறுத்தவும். பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவும்.

பெண்கள், திருநங்கைககளுக்கு வேலையிடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை நிறுத்த வேண்டும். பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச மாநாட்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பாலினச் சமத்துவச் சட்டம் மற்றும் பாலினத் துன்புறுத்தல் சட்ட வரைவைக் கொண்டுவர வேண்டும். குழந்தைகள் சட்ட மாநாட்டு பரித்துறைகளைப் பின்பற்ற வேண்டும்.

7. பூர்வக் குடியினர் உரிமைகள்

மலேசியாவில், பழங்குடி மக்களின் பூர்வீக நிலங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதோடு, நிரந்தர நில பட்டாவையும் வழங்க வேண்டும். மலேசியாவில் (தீபகற்பம், சபா மற்றும் சரவாக்) பூர்வீக மக்களின் நிலம் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும்.

8. வசதியான குடியிருப்புகள் அமலாக்கம் மற்றும் கட்டாய வெளியேற்றத்தை நிறுத்துங்கள்

மக்கள் வீட்டு வசதி திட்டத்தை மலிவு விலையிலும், மக்களுக்கு வசதியான இடத்திலும் அமைக்க வேண்டும். கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் விளைந்துள்ள சிக்கல்களினால், வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுத்து கடன் ஒத்திவைப்பைச் (மோராதோரியம்) செயல்படுத்த வேண்டும்.


9. விவசாய உரிமைகள் மற்றும் உணவு உத்தரவாதம்

விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகளை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நிறுத்துங்கள். உள்ளூர் உணவு உற்பத்தி திறனை உறுதி செய்வதற்கு நீண்ட காலமாக விவசாயம் செய்து வருபவர்களுக்கு நிலப்பட்டா வழங்கவும் மானியங்களை அங்கீகரிக்கவும் வேண்டும்.


10. பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும்

அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, மக்களுக்கான அரசாங்கத்தின் உதவி பணம் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.


11. ஊடகச் சுதந்திர உத்தரவாதம்

மக்கள் குரலைக் கட்டுப்படுத்தும் தகவல் பல்லூடகம் மற்றும் பொய் பிரசாரச் சட்டம், பொக்கா, பொடா, சோஸ்மா மற்றும் நிந்தனைச்சட்டம் (1948) ஆகியவற்றைத் தடை செய்வதோடு, ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வெளியீட்டு மற்றும் அச்சக பத்திரிகை சட்டம்; மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 மற்றும் விசாரணையின்றி தடுப்புக்காவலை அங்கீகரிக்கும் அனைத்து சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும்.

12. மாணவர் உரிமைகள்

பல்கலைக்கழக, கல்லூரிச் சட்டம் (AUKU), சட்டம் 174, கல்விக் கடனுதவிச் சட்டம், திறன் மேம்பாட்டு நிதி நிறுவனம் (PTPKN) மற்றும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் இரத்துசெய்ய வேண்டும். புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.


13. அடிப்படை சேவைகளைத் தனியார் மயமாக்குதலை நிறுத்துங்கள்


நீர், மின்சாரம், சுகாதாரம், பொது போக்குவரத்து, கல்வி ஆகியவைத் தனியார் மயமாக்கப்படக்கூடாது, இவை ஓர் அரசாங்கம் தனது மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை தேவைகள் ஆகும்.

14. வளங்களைப் பகிர்தல், பன்னாட்டு நிறுவனங்கள் மீது சிறப்பு வரி

பெறுந்தொற்று காலங்களில், வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, ஏழை பணக்கார இடைவெளி அதிகரிக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளுக்கான செலவின் ஒரு பகுதியை ஈடுகட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவசர வரியை விதிக்கலாம்.


15. சுற்றுச் சூழல் அவசரகால நிலையை அறிவிக்கவும்

பாக்சைட் சுரங்கம், எரியூட்டிகள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் மலேசியர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பிறத் திட்டங்களை நிறுத்துங்கள். வெளிநாடுகளில் இருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதையும், விவசாய நிலங்களுக்குத் தீ மூட்டுவதையும் காட்டு மரங்களை வெட்டுவதையும் நிறுத்துங்கள்.  தூய்மையான மற்றும் மலிவான மாற்று ஆற்றலைப் பயன்படுத்துங்கள்.

நன்றி மலேசியாகினி 1/5/2021

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...