Sunday, May 30, 2021

வெளிநாட்டினருக்குப் பொது மன்னிப்பு திட்டத்தைச் செயல்படுத்துக- ஷரன் ராஜ்



முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, முறையான ஆவணம் இல்லாத வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கும் திட்டத்தைக் குடிநுழைவுத் திணைக்களம் இரத்து செய்ய வேண்டுமென, மலேசியச் சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியச் செயற்குழு உறுப்பினரான ஷரன் ராஜ், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடினைக் கேட்டுக்கொண்டார்.

தடுத்து வைப்பதைவிட, அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும், ஏனெனில் தடுப்புக்காவல் மையங்களில் நெரிசலை அது கூட்டும் என்று ஷரன் ராஜ் கூறினார்.

“சிறைச்சாலைத் துறை கூடுதல் தடுப்பு மையங்களை ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஹம்ஸா கூறினார், ஆனால் சுஹாகாமின் கூற்றுப்படி, மலேசியச் சிறைச்சாலைகள் ஏற்கனவே மிகவும் நெரிசலில் இருக்கின்றன, மேலும் இது கோவிட் -19 பரவும் அபாயத்திற்கும் வித்திடும்.

“ஆவணமற்ற வெளிநாட்டினரைச் சிறைகளில் அடைப்பது கோவிட் -19 நேர்வுகளை அதிகரிக்கும், மேலும் கைதிகள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து பொது மக்களை விட 5.5 மடங்கு அதிகம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, தொற்றுநோய்களுக்கு மத்தியில், கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மேலும் சிக்கல் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிறைச்சாலையின் நெரிசலைக் குறைப்பதே ஹம்ஸாவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

“உள்துறை அமைச்சு கைதிகளின் எண்ணிக்கையை 80 விழுக்காடு குறைக்க முடியும், ஏனெனில் 25 விழுக்காடு கைதிகள் விசாரணைக்குக் காத்திருக்கிறார்கள், 55 விழுக்காடு கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பிரச்சினையைக் குற்றச்செயலாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை, போதைக்கு அடிமையாகியவர்களை நோயாளிகளாகக் கருதி சிகிச்சை அளிக்கலாம், அவர்கள் குற்றவாளிகள் அல்ல.


“பதிவு செய்யப்படாத வெளிநாட்டவர்கள் மீது வழக்குத் தொடராமல், அவர்களுக்குப்  பொது மன்னிப்பு வழங்கி, அவரவர் நாட்டிற்கேத் திருப்பி அனுப்பும் திட்டத்தை உள்துறை அமைச்சு செயல்படுத்தினால், அவர்கள் தயக்கமில்லாமல் முன்வருவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 1 முதல், முழு கதவடைப்பு அமலில் இருக்கும் இரண்டு வாரங்களில், கோவிட்-19 எஸ்ஓபி-க்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருவதாக நேற்று ஹம்சா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆவணமற்றப் புதிய வெளிநாட்டினரின் நுழைவைத் தடுப்பதற்காக, சட்டவிரோத பாதைகள் மற்றும் நீர் நிலைகளில் தடுத்து வைக்கப்படுவதும், நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டினர் குடியிருப்புகளில் சோதனைகள் நடத்துவதும் இதில் அடங்கும் என்று ஹம்சா கூறினார்.

“அனைத்து எஸ்ஓபி-க்களும் இறுக்கப்பட வேண்டும், குறிப்பாக வெளிநாட்டினர் தரையிறங்கும் முக்கிய இடங்கள்.

“நாங்கள் மலேசியக் குடிநுழைவுத் துறையுடன் நாங்கள் கலந்து பேசிவிட்டோம், தேசியப் பதிவுத் துறையுடன் இணைந்து சில நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். ஏனென்றால் எஸ்ஓபி, பி.கே.பி., எல்லாம் நடைமுறைக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது, முதல் கட்டத்தில் இருந்து, கட்டங் கட்டமாக, இருப்பினும் மக்கள், அதாவது வெளிநாட்டினர் இன்னும் பிடிவாதமான இருந்தால் நாம் அவர்களைக் கைது செய்வோம், சிறைச்சாலைகள் தயாராக இருப்பதை நாம் உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பி.கே.பி.யின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறித்த தகவலைத் தெரிவித்த ஹம்ஸா, இந்த முறை தனது தரப்பு சிறைச்சாலை மற்றும் செயற்கைக்கோள் கிடங்குகளுடன் தயாராக இருப்பதாகக் கூறினார்.

முழு கதவடைப்பின் போது, நாடு முழுவதும் 55,000 காவல்துறையினர் பணியில் நிறுத்தப்படுவார்கள், தற்போது 37,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

நேற்று, வடக்கு-தெற்கு முன்முயற்சி நிர்வாக இயக்குநர் அட்ரியன் பெரேரா, இக்காலகட்டத்தில் ஆவணமற்ற வெளிநாட்டினரை இலக்காகக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையும், நடப்பில் இருக்கும் தடுப்பூசி திட்டத்தைப் பாதிக்கும் என்று கூறினார்.

-நன்றி மலேசியாகினி


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...