Tuesday, September 14, 2021

‘பேரம் பேசுவதை’ நிறுத்திவிட்டு, கோவிட் -19 நெருக்கடியைச் சமாளிக்கவும்"- பிஎஸ்எம்

அடுத்த மாதம், மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் “பேரம் பேசுவதில்” மும்முரமாக இருக்கிறார்கள் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கருதுகிறது.

பிஎஸ்எம் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன், நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகளை அந்நடவடிக்கை பாதிக்கக்கூடாது என்றார்.

அந்த ஒரு மாத காலம், இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோருக்கு, அம்னோவில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள இடமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

“அநேகமாக, அம்னோவையும் அதன் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடியையும் நிலைகுலைக்கும் முயற்சிகள் நடக்கலாம் அல்லது அவரை ஆதரிப்பவர்கள், பிரதமருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் செய்யலாம்.


“என்ன நடந்தாலும், மக்கள் கோவிட் -19 நெருக்கடி முடிவடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் நேரத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

“இந்த அரசியல்வாதிகள், மக்களை வீட்டில் உட்காரச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்துகிறார்கள், எந்தவொரு விளைவுகளையும் சிந்திக்காமல் எஸ்.ஓ.பி.க்களை மீறுகிறார்கள்.

“அரசியல் நெருக்கடி மற்றும் அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளால், மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்பது உண்மைதான். தொற்றுநோயைச் சமாளிக்க தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். இறுதியில், கோவிட் -19 இந்த அரசாங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சியில், பொது நிறுவனங்கள் மற்றும் சேவைகளை மீற வேண்டாம் என்று அரசுக்கு அருட்செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

“போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் சுகாதார அமைச்சு போன்ற அனைத்து பொது நிறுவனங்களும் சேவைகளும் நடுநிலையாக இருப்பதாகவும் ஜனநாயகத்தின் கொள்கைகளை நசுக்க அவை உதவாது என்றும் பிஎஸ்எம் நம்புகிறது.

“ஆளும் கட்சி நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, ஜனநாயகத்தின் கொள்கை எப்போதும் பலிகடாக்கப்படுகிறது. முந்தைய நிர்வாகங்களில் இது நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று நேரடி ஒளிபரப்பான சிறப்பு செய்தியில், முஹைதீன் இன்னும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும், மக்களவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது நிர்வாகத்தின் சட்டபூர்வமான தன்மையைத் தீர்மானிக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

முஹைதீனுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற “போதுமான” அம்னோ எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்று ஜாஹிட் அறிவித்ததைத் தொடர்ந்து இது வெளியானது.

சாஹிட் தவிர, 10 அம்னோ எம்.பி.க்கள் அச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.


நன்றி: மலேசியா இன்று (ஆகஸ்ட் 5) 

No comments:

Post a Comment

5 தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு வெற்றி

உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ...