Wednesday, July 30, 2025

மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஊடக அறிக்கை – 28 ஜூலை 2025 - கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு-

அரசியல் களத்தில் மூன்றாம் அலையை வலுப்படுத்தி

21 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை மையப்படுத்துதல்.

மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசியப் பேராளர் அவையானது, ஆளும் மடானி அரசுக்கு 21 அம்ச கோரிக்கைகளை முன்வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


மேற்கண்ட விவரங்களின்படி, கட்சியின் 27-வது தேசியப் பேராளார் மாநாடு கடந்த ஜூலை 25-27-ஆம் தேதிகளில் பேராக், கோலா கங்சாரில் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 நாட்கள் நீடித்த இத்தேசியப் பேராளர் மாநாட்டில், சுமார் 150 கட்சி பிரதிநிதிகளும் எண்ணிலடங்கா பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்பேராளர் மாநாடானது இரு தனி அமர்வுகளாக அமையப்பெற்றது. அவற்றில் ஓர் அமர்வானது, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு, சோசலிச மாணவர் கூட்டமைப்பு (AKSI) மற்றும் மலாயா பல்கலைக்கழக இளைஞர் மன்றம் (UMANY) உடனிணைந்து; இவ்விளைஞர் கூட்டமைப்புகளின் கருத்தாளர்களை அணிவகுத்து, மலேசியாவில் பொதுவுடைமை நோக்குடைய மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கை மையமாகக் கொண்ட கருத்தாய்வாக அமைந்தது. கருத்தாய்வு அமர்வு மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் ஆக்ககரமான ஈடுபாடு, அரசியல் அறிவு, வர்க பகுப்பாய்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கான நடப்பு சட்ட விதிகள் (AUKU) ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது.

இரண்டாவது அமர்வானது பி.எஸ்.எம்.-இன் தேர்தல் உத்தியை மையமாக கொண்டு அமைந்தது. பி.எஸ்.எம்.-இன் தேசியப் பொருளாளரான சோ சூக் ஹ்வா (Soh Sook Hwa), அரசியல் ஆய்வாளரான வோங் சின் ஹுவாட் (Wong Chin Huat) மற்றும் MUDA கட்சியின் பேராக் மாநில தலைவரான VKK ராஜசேகரன் ஆகிய இரு புறநிலை வல்லுனர்களுடன் மேற்கண்ட கள விரிவாக்கம் பற்றி விவாதித்தார்.

இந்தக் கருத்தாய்வுக் களம் வழி, PAMU (Parti Aku Malas Mengundi) என்று விவரிக்கப்படும் வாக்காளர்களை மையமாகக் கொள்வதைக் கடந்து, மைய அரசியல் நீரோட்டத்தில் மூன்றாவது அரசியல் அலையைத் தொடர்ந்து கட்டியெழுப்புவதில் பி.எஸ்.எம்.-இன் பங்கையும் முனைப்பயும் மீட்டுருவாக்கம் கண்டது.


முன்மொழிவுகளும் தீர்மானங்களும்

தேசியப் பேராளர் அமர்வில், கட்சி பிரதிநிதிகளால் மொத்தமாக 19 திட்டங்கள் முன்மொழியபட்ட வேளையில், தீவிர விவாததிற்கு பிறகு, 7 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட வேளையில், மீதமுள்ளவை பேராளர் அவையால் நிராகரிக்கப்பட்டவையாகவோ, முன்மொழிந்தவர்களால் திரும்பப் பெறப்பட்டவையாகவோ கழிந்தது.

ஜூலை 27, 2025 அன்று நடந்த மூன்றாம் நாள் அமர்வில், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியப் பேராளர் அவை, நடப்பு MADANI அரசாங்கத்திடம் வழங்க கோரிக்கைகளாக 21 அம்சங்கள் கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பி.எஸ்.எம்-இன் தேசிய பேராளர் அவையில் முன்மொழியப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்துமாறு MADANI அரசாங்கத்தைப் பி.எஸ்.எம் வலியுறுத்தியது.

இவ்வாண்டின் கருப்பொருளான "மூன்றாம் அரசியல் அலையே, நமது பலம்!" என்ற முழக்கத்துடன் பி.எஸ்.எம்.-இன் தேசிய பேராளர் மாநாடு நிறைவுற்றது.

பி.எஸ்.எம்-இன் 27-வது தேசிய பேராளர் மாநாட்டின் தீர்மானம்

1.    நடப்பு அரசாங்கம் இந்நாட்டிலுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் மாதம் RM500 மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. அரசு, பொது சுகாதார அமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனைத்து குடிமக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகள் சென்று சேரும்படி பொது சுகாதாரச் சேவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்:

·   உலகச் சுகாதார அமைப்பு (WHO)-இன் பரிந்துரையின் படி, பொதுச் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3%-இலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.

·   அரசு, பொதுச் சுகாதாரத் சேவைகளைத் தனியாருக்கு புறத்திறனீட்டம் செய்ய கூடாது.

·   தனியார் சுகாதாரக் காப்பீட்டிற்கான கட்டணத்திற்கு EPF சேமிப்பைத் திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது.

3. குடியிருப்பு வசதிகள் B40 தரப்புக்கும் சென்று சேரும் வகையிலும், வீடுகளை வாங்கும் வகையிலும், அரசு RM100,000 க்கும் குறைவான விலையில் மலிவு விலை வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.

4.  அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், B40 தரப்பாலும் நுகரும் வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆக்ககரமானக் கொள்கை உருவாக்கம் வழி, அரசு அடிப்படைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் பெட்ரோல் மானியங்களை அரசு நிறுத்தாமல் தொடர்வதும் அடங்கும்.

5.  மலேசியாவின் உணவு உற்பத்தியினைப் பாதுகாக்க அரசாங்கம் தெளிவான கொள்கைகளையும் உறுதியான நடவடிக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:

·  விவசாய நிலங்களில் நீண்ட காலமாக வேளாண்மை செய்து, உணவு உற்பத்தி செய்து பராமரித்து வரும் விவசாயிகளையும் கால்நடை வளர்ப்பாளர்களையும் வெளியேற்றுவதை அரசு நிறுத்த வேண்டும்.

·  சிறு, குறு விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் துறைசார் மற்றும் நிதி ஆதரவுகளை அரசு வழங்கி, அவ்வேளாண் நடவடிக்கைகளின் நீட்சியை உறுதி செய்ய வேண்டும்.

·  அதிகரித்து வரும் கால்நடை தீவனச் செலவுகளைச் சமாளிக்க கால்நடை தீவன மானியங்களை அரசு வழங்க வேண்டும்.

6.  அரசு, கல்வியைத் தனியார்மயமாக்குவதை நிறுத்தி, உயர்நிலைப் பள்ளி வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை வழங்க வேண்டும். மேலும், அரசு தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தை (PTPTN) ஒழிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை விட கற்றல் அடைவுமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூடுதலாக, அரசுப் பள்ளிகளில் நரம்பியல் நிலைத்தன்மையற்ற ஆட்டிசம், கவனக்குறைவு, மிகைச்சுறுதி (ADHD) போன்ற சிக்கல்கள் கொண்ட மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகளை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.

7. சுற்றுச்சூழல் பராமரிப்பு, துணை பாதுகாப்பு துறைகள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், தேசிய பொருளாதாரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதையும் அரசாங்கம் குறைக்க வேண்டும்.

8. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும், அமலில் உள்ள சட்டங்களுக்கு இணங்கவும், அரசு துறை தொழிலாளர்களுக்கான ஒப்பந்த முறையை அரசாங்கம் ஒழிக்க வேண்டும்.

9. ஜனநாயகத்தின் குரல்வளையைக் கட்டுப்படுத்தும் தேசத்துரோகச் சட்டம் (Akta Hasutan 1948), தேச பாதுகாப்பு குற்றங்களுக்கான (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (SOSMA), மற்றும் அச்சு, அச்சகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டம் 1984 போன்ற அரசின் அடக்குமுறை செயல்களை ரத்து செய்ய வேண்டும்.

10. அரசு, பல நிறுவன சீர்திருத்தங்களைப் போர் கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இதில், அரசு முதன்மை ஆதரவுரைஞர் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு இடையேயான அதிகாரப் பகிர்வை முறைப்படுத்த வேண்டும். இதுபோல, பிரதமர் மற்ற அமைச்சரவைப் பதவிகளை வகிப்பதைத் தடுக்க வேண்டும். உடன், சிறைச்சாலைகளையும், தடுப்பு காவல் மையங்களை மேம்படுத்த வேண்டும்.

11. அரசு வளர்வீரிய வரிவிதிப்பு முறையினை நிலைநிறுத்த வேண்டும். பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகள் மீதான விற்பனை மற்றும் சேவை வரியை (SST) ரத்து செய்ய வேண்டும். தரவு மையங்களிலிருந்து வரும் வரி வசூல் SOCSO நிதிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.

12. அரசு, தொழிற்சங்கங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அவற்றுள், நிதி நன்கொடை பகிர்வு, கூட்டு பிரச்சார உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவும் பிரச்சாரமும் செய்யும் உரிமைகளையும் வழங்க வேண்டும்.

13. அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் அரசு பாதுகாக்க வேண்டும். ஆவணமற்ற, புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர்களாக தங்கள் உரிமைகளைப் பெறவும் நீதியை இலகுவாக அணுகுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். குடியேற்ற விதிமீறல்கள் காரணங்களுக்காக விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு முன்பு, ஒரு தொழிலாளியாக, புலம்பெயர் தொழிலாளியின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை அரசு உறுது செய்ய வேண்டும்.

14. பெரு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLCs) ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும், வலைத்தள மோசடிகள் மற்றும் AI நெறிமுறைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சென்றடையும் வகையில் அனைத்து மொழிகளிலும் பிரச்சாரப் செய்தி வழங்கப்பட வேண்டும்.

15. தரவு மையங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு, அவற்றின் கட்டுமானம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு மதிப்பீட்டின் (EIA) ஒப்புதல் பெறப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரவு மையங்களின் ஆற்றல் நுகர்வு மற்றும் நீர் நுகர்வை அரசு கண்காணிக்க வேண்டும், இதனால் சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு நிலையான, உகந்த சூழலுக்குள் இருக்கும்படியாக அமையும். மேலும் தரவு மையங்களின் கட்டுமானம், மற்றும் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த சட்ட திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

16. ஆணாதிக்க பிரச்சாரங்கள், பெண்ணுடல் மோகம், பெண் வெறுப்பு போன்ற பாலின வன்முறைகளை உள்ளடக்கிய சமூக ஊடக பதிவுகள் மற்றும் பகிர்வின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குற்றங்களை களையவும் அரசு, குடும்ப வன்முறைச் சட்டத்தில் (1994) திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

17. அரசு, பழங்குடி சமூகத்தின் வாழ்விட நிலங்களை அங்கீகரித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

18. மக்களாட்சியை மீட்டெடுக்க உதவும் உள்ளாட்சித் தேர்தல்களை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும், வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் (KPKT) கீழ், மக்களுக்கு சற்றும் பயனளிக்காத மைகியோஸ்க் வணிக தளங்கள் (MyKiosk) வாடகை திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடன், சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடி மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நகர சபையிலும் குறைந்த வாடகை கொண்ட ஒரு விளையாட்டு மையத்தை நிறுவ வேண்டும்.

19. பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பை அரசு மேம்படுத்த வேண்டும்:

நெடுஞ்சாலைகளில் வலப்புற பாதையைப் பயன்படுத்தும் கனரக வாகனங்கள், விதிமீறிய சுமை ஏற்றுதல், வேக வரம்பை மீறுதல் ஆகிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் போக்குவரத்து நிறுவனங்கள் மீது உடனடியாக கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், தளவாட நிறுவனங்களும் லாரிகள் மற்றும் பேருந்துகளில் வேக வரம்பு சாதனங்களை பொறுத்த வேண்டும் என்ற சட்ட விதியை அரசு இயற்ற வேண்டும்.

கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்தை (PUSPAKOM) ஆக்ககரமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற நிறுவன சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

பொதுப் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தும் முயற்சியில், அரசானது ஓட்டுநர்கள் உள்ளடங்கிய தொழிலாளர்களின் நலனை, அத்துறை மேம்பாட்டு முயற்சிகளின் முக்கிய அம்சமாக மாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலையில் வாகனங்களால் மோதப்பட்டு உயிரிழக்கும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டமிடல் செயல்முறையை அரசு மேம்படுத்த வேண்டும்.

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் அதிக சாலைப் பாதுகாப்பு பிரச்சாரங்களை அரசு நடத்த வேண்டும்.

20. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு இலவச வாகன நிறுத்துமிட வசதியை வழங்க வேண்டும்.

21. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு குரல் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை மலேசியாவில் அமெரிக்க தூதர் இருப்பதை அரசு ஏற்க கூடாது. உடன், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச ஒற்றுமையை உருவாக்க, பண்டுங் (Bandung) மாநாடு போன்ற உலகளாவிய தென் நாடுகளின் கூட்டமர்வை நடத்துவதற்கான முயற்சிகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 


வெளியிட்டவர்,

எம். சிவரஞ்சனி

தேசிய பொதுச் செயலாளர்

மலேசிய சோசலிசக் கட்சி

 

தமிழாக்கம் : பிரிவின்குமார் ஜெயவாணன்


Wednesday, July 23, 2025

மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசிய மாநாடு


மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) 27-வது தேசிய மாநாடு, திட்டமிடப்பட்டபடி, எதிர்வினையற்ற முறையில் நாளை தொடங்கவுள்ளது.  27-வது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்த மாநாடு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை, பேராக் மாநிலம் கோல கங்சாரில் நடக்க உள்ளது.

உலகளாவிய அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டிற்குள்ளேயான நிச்சயமற்ற நிலைகள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது மிக முக்கியமானதாகும். இந்நிலையில், சமூக நீதிக்காகப் போராடும் PSM உறுப்பினர்கள், கட்சியின் கட்டமைப்பையும் செயற்பாடுகளையும் இன்னும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இணையவிருக்கின்றனர். மேலும், முற்போக்கான அரசியல் மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்தில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் வழிமுறைகளை வகுக்கவும் இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக ஒவ்வொரு ஆண்டும் அமைகிறது.


பி.எஸ்.எம்  முதல் மாநாடு 

1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, PSM இதுவரை 26 தேசிய மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது.  தொடக்க ஆண்டில், கேமரன் மலையில் நடைபெற்ற முதல் மாநாடு, கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய தொடக்கக் கட்டமாக இருந்தது. அந்த ஆரம்பக் கூட்டத்தில், டாக்டர் நசீர் ஹாஷிம், எம். சரஸ்வதி, டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், எஸ். அருட்செல்வன், ராணி ராசையா, வி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட இடதுசாரிப் பார்வையுடன் கூடிய 12 அர்ப்பணிப்பு மிக்க முன்னோடிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

12 பேர் கொண்ட அந்த சிறியச் சந்திப்பிலிருந்து, இன்று PSM, மலேசிய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதியும் ஜனநாயகமும் நிரம்பிய ஒரு நாடு உருவாகவும் தொடர்ந்து பாடுபடும் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது.

பிரதான கட்சிகளுடன் மலேசிய சோசலிசக் கட்சியை ஒப்பிடும்போது, உறுப்பினர் எண்ணிக்கையில் PSM இன்னும் ஒரு சிறிய அரசியல் கட்சியாக இருந்தாலும், அது நிறுவப்பட்டதிலிருந்து 27 ஆண்டுகளாக, மார்ஹேன் மக்களின் அதாவது பாமர மக்களுக்கான நல்வாழ்வுக்காக போராடுவதில் PSM முக்கிய பங்கு வகித்துள்ளது.  மார்ஹேன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முக்கியமான சமூக சீர்திருத்தங்களைக் கோரி PSM பல்வேறு மக்கள் பிரச்சாரங்களை நடத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்துதல், வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை போன்ற முடிவுகள் அதில் அடங்கு. அதோடு COVID-19 தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது தேசிய மீட்பு பிரச்சாரம், முதியோர்களுக்கான RM500 மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் மற்றும் மற்றும் சந்தை சார்ந்த கொள்கைகளால் பாதிக்கப்படாத பொது சுகாதார அமைப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகள். போன்ற பல்வேறு பிரச்சாரங்களை PSM தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.

மேலும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகள் என்பது PSM கட்சியின் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும். உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், மக்கள் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் மூலம், PSM ஒரு உண்மையான முற்போக்குக் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.



"மூன்றாவது சக்தி, நமது சக்தி" – 2025 தேசிய மாநாட்டின் கருப்பொருள்


2025ஆம் ஆண்டுக்கான PSM தேசிய மாநாட்டின் கருப்பொருளாக, "மூன்றாவது சக்தி, நமது சக்தி" எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் ஏமாற்றத்துக்கு நேரடியான பதிலாகவும், மாற்றத்த கொடுக்க வேண்டிய நேரம் என நேரடி பதிலாகவும் அமைகிறது.

15-வது பொதுத் தேர்தலுக்குப்  பிறகு, பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) ஆகியவை கூட்டணியாக "ஒற்றுமை அரசாங்கமாக" இயங்கத் தொடங்கிய நிலையில், பல ஆண்டுகளாக சிவில் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தக் கோரிக்கைகள் பலவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், பெரிகாதான் நேஷனல் (PN) தனது இனவாத அரசியல் அணுகுமுறையுடன் விளையாடிக் கொண்டே இருக்கிறது.

இந்த அரசியல் சூழலில், பொதுமக்கள் மாற்றத்திற்கான உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வலிமையான மூன்றாவது சக்தி அவசியமாக இருக்கிறது.


மூன்றாவது சக்தியின் உண்மையான அர்த்தம்


"மூன்றாவது சக்தி" என்பது வெறும் முதல்-பின்-பின் தேர்தல் முறைமை (First-Past-the-Post System) மூலம் தோன்றும் மூன்றாவது தேர்வாக மட்டுமே இருக்கக் கூடாது. மாறாக, அது முக்கியமான கொள்கைப் வேறுபாடுகளைக் கொண்ட, மக்கள் நலனுக்கேற்ப தீர்வுகளை முன்வைக்கும், துடிப்பான மாற்றுவாத அரசியலாக இருக்க வேண்டும்.

இன அடிப்படையிலான அரசியலை நம்பிக்கை பெறும் உத்தியமாகக் கையாளும் கட்சிகள், "மூன்றாவது சக்தி" என்ற பெயரை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் திட்டமிட்டு அமைந்த, சமூகநலவாத பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கத் தவறுகிறார்கள் என்றால், அவர்கள் தற்போதைய இரண்டு பிரதான அரசியல் முகாம்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல.

PSM மட்டும் தான், அதன் வரலாறிலும் செயற்பாடுகளிலும், உண்மையான மாற்றத்துக்காக, மக்களிடம் நேரடியாகக் கை சேர்க்கும் அரசியல் போக்கை எடுத்துக்காட்டி வருகிறது.


மூன்றாவது சக்திதான் மக்கள் சக்தி


மலேசிய சோசலிசக் கட்சி (PSM) உருவாக்க விரும்பும் “மூன்றாவது சக்தி”, உண்மையான ஜனநாயகமும், சமூக நீதியும் நிலைபெறும், அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மலேசிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆழமான விருப்பத்தில் அமைகிறது.

இது ஒரு சுலபமான இலக்கு அல்ல. இது வெறும் தேர்தல்களில் இடங்களை வெல்வதற்கான முயற்சியாக அல்ல; மாறாக, மலேசிய சமூகத்தைக் ஒன்றிணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் முனைப்பாகும்.

அந்த நோக்கத்தில், இந்த ஆண்டுக்கான PSM தேசிய மாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக, "இளைஞரும் மூன்றாவது சக்தியும்" என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் அமர்வு நடைபெறுகிறது.

இந்த அமர்வின் மூலம், மூன்றாவது சக்தியை உருவாக்குவதற்கான புதிய யோசனைகள் மற்றும் பார்வைகளை இளைஞர்களிடமிருந்து நேரடியாக பெறுவது முக்கிய நோக்கமாகும்.

தேசிய மாநாடு – மக்கள் ஜனநாயகத்தோடு நடைபெறும்

PSM அமைப்பில், தேசிய காங்கிரஸ் அல்லது தேசிய மாநாடு என்பது கட்சியின் மிக முக்கிய முடிவுகளை முடிவெடுக்கும் காரணியாக உள்ளது. இங்கு, முக்கிய முடிவுகள் சில தலைவர்களால் மட்டுமே எடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசிய மாநாட்டிலும், தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்படும் உள் விவாத அமர்வுகளிலும், உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்டு, விவாதித்துத் தீர்மானிக்கின்றனர்.

இந்த ஜனநாயக நடைமுறை, PSM இன் அரசியல் நேர்மைக்கும், உறுப்பினர் பங்கேற்புக்குமான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், கட்சியின் செயற்பாடுகளை மதிப்பாய்வு செய்து, புதிய திசைகளை வகுக்கும் செயல்முறையாகவும் இந்த மாநாடு அமைகிறது.

மாற்றத்துக்கான தீர்மானங்கள் – 38 புதிய யோசனைகள்

இந்த ஆண்டு PSM தேசிய மாநாட்டில், PSM கிளைகள் முன்வைத்த 38 தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

அவற்றில் முக்கியமானவைகள் பின்வருமாறு:

மலிவு வீடுகள் தொடர்பான பிரச்சினையில் கவனம் செலுத்துதல்

மாற்று வரிவிதிப்பு முறைகள் குறித்த ஆய்வு

கட்சியின் கிளை பெயர்களின் தரப்படுத்தல்

விளம்பர மற்றும் பிரசாரப் பணிகளில் மேம்பாடு

தலைமைத்துவப் பயிற்சி திட்டங்கள்

தேர்தல் உத்திகள் மற்றும் உள் தேர்தல் செயல்முறைகளின் மேம்பாடு

செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் சாத்தியக்கூறுகள்

இந்த யோசனைகள், PSM தனது இயக்கத்தை முன்னோக்கி நகர்த்தும் திசை மாற்றக் கோடுகளை வரையறுக்கின்றன.

ஒரு முற்போக்கான மாற்றத்திற்கான உறுதி


மலேசியாவில் ஒரு சோசலிச மாற்றத்தை கட்டியெழுப்பும் தனது நிலைத்த அர்ப்பணிப்புடன், PSM உறுப்பினர்கள் வழக்கம்போல் இந்த ஆண்டும் தேசிய மாநாட்டில்  உறுதியுடன் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இந்த மாநாடு, கட்சியின் கொள்கைகளை துல்லியப்படுத்துவதும், செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதுமாய்,

மக்களுக்கான மாற்றத்தை நோக்கிய உறுதியான பயணத்தில் இன்னொரு முக்கிய கட்டமாக அமைகிறது.

வாழ்க பாட்டாளி வளர்க வர்க போராட்டம்!


எழுத்து : தோழர் யோகி

(சூ சோன் காய் கட்டுடையை தரவாக கொண்டு எழுதப்பட்டது)


Tuesday, July 22, 2025

குறைந்தபட்ச சம்பளம் RM1,700 போதுமா?

குறைந்தபட்ச சம்பளம் RM1,700 போதுமா?

அக்டோபர் 18, 2024 அன்று மக்கள் மன்றத்தில்  2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாதம் ஒன்றுக்கு RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். பிப்ரவரி 1, 2025 முதல்,  ஐந்து தொழிலாளர்களுக்குக் குறைவான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் RM1,700 ஊதியத்தை அமுல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

மனிதவள அமைச்சரான ஸ்டீவன் சிம், டிக்டோக்கில் ஒரு பிரச்சார வீடியோவில் ,சமீபத்திய குறைந்தபட்ச ஊதிய உயர்வை "நல்ல செய்தி" என்று விவரித்தார், தற்போது இருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை சரிசெய்தல் மலேசியாவில் 4.37 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்றும் அவர்களில் 80% பேர் மலேசிய குடிமக்கள் என்றும் அவர் கூறியிருந்தார். மனிதவளத்துறை அமைச்சர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் 4 தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு தொழிலாளி மட்டுமே குறைந்தபட்ச ஊதிய சம்பளம் பெறுகிறார்.

மிகக் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதாலும், அதோடு அதிகரித்து வரும் வாழ்க்கை அழுத்தத்தை சமாளிக்கவும், அவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள், மேலும் இந்த குறைந்தபட்ச சம்பளத்தை சரிசெய்தல் காரணமாக, அவர்கள் பல மாதங்களாக இந்த "நல்ல செய்திக்காக" காத்திருக்கிறார்கள். முன்னதாக தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சில் சட்டத்திற்கு அரசாங்கம் இணங்கியிருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறைந்தபட்ச ஊதிய ஆணையை மதிப்பாய்வு செய்யும் 25-வது பிரிவு சட்டத்தின் கீழ்,  கடந்த மே 2024 இல் இந்த ஊதிய தாதிகரிப்பு நடந்திருக்க வேண்டும், என்பதை தெளிவாகக் கூறுகிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை RM200 ரிங்கிட் அதிகரிப்பு என்ற அறிவிப்பு செய்து 5 மாதங்கள் தாமதமாகத்தான் அதை செயற்பாட்டுக்கு கொண்டுவரும் அதே வேளையில்,  ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை  இது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அத்தொழிலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அவ்வூதியத்தை பெற 9 மாதங்கள் காலதாமத கெடு வைப்படுக்கிறது. அப்படியென்றால் அவர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு 15 மாதங்கள் இழக்கப்படும் என்பதையும் அறிக!

குறைந்தபட்ச ஊதியத மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதைத் தவிர, நாம் எழுப்ப வேண்டிய மற்றொரு கேள்வி: குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM1,700 போதுமா? இந்த குறைந்தபட்ச ஊதியத்தில் நம் நாட்டில் உள்ள கீழ்நிலைத் தொழிலாளர்கள் எளிமையாகவும் கண்ணியமாகவும் வாழ முடியுமா?

 

தற்போதைய குறைந்தபட்ச ஊதிய விகிதம், இன்றைய வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை

 

மலேசியா சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய விவகாரத்தில்,  தனியார் துறை தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்ததாக விமர்சித்திருக்கிறார்.

நாட்டின் வறுமைகோட்டில்  உள்ள தொழிலாளர்கள், அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணப்பால், தாங்கள்  ஏமாந்து போய்விட்டதாக உணருகிறார்கள்,'' என்றார் அவர். மேலும் அவர் பேசுகையில் "9 மாத காலத் தாமதத்துடன் செயல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதியமான RM1,700 வெள்ளி, தற்போதைய பணவீக்கத்தின் உண்மையான அதிகரிப்பின் விளைவை ஈடுசெய்ய முடியாது" என்று தெரிவித்தார். 

பட்ஜெட் 2025 சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாதத்திற்கு குறைந்தபட்சம் RM2,000 ஆக உயர்த்துமாறு PSM பலமுறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

"மலேசியாவில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான  பட்ஜெட் வழிகாட்டி 2022/2023", மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையத்துடன் (SWRC) இணைந்து,  பணியாளர்களின் சேம நிதி வாரியம் (EPF) வெளியிட்ட அறிக்கையை ஆராய்ந்தால், கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும், பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தும் ஒரு நபரின் மதிப்பிடப்பட்ட மாதாந்திர செலவுகள் RM1,930 ஆகும், மேலும் அவர் கார் வைத்திருந்தால், மாதாந்திர செலவுகள் RM2,700 ஆக இருக்கும். குழந்தை இல்லாத திருமணமான தம்பதிக்கு மதிப்பிடப்பட்ட மாதச் செலவுகள் RM4,630 ஆகும். தம்பதியரில் இருவருமே வேலை செய்தால், ஒவ்வொரு நபரும் வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்க அவர்கள் மாதத்திற்கு RM2,315 சம்பளம் பெற வேண்டும் என்று அர்த்தம். திருமணமான தம்பதியருக்கு ஒரு குழந்தை இருந்தால், அவர்களுக்குத் தேவைப்படும் மாதச் செலவு RM5,980, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு மாதம் RM6,890 தேவை என்கிறது அந்த அறிக்கை.

கிள்ளான் பள்ளத்தாக்கு ஒரு பெருநகரப் பகுதியாக இருப்பதால் அங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக இருக்கலாம்.  சிறிய நகரங்களைக் குறித்து அந்த ஆய்வு சொல்வது என்ன? இரண்டு குழந்தைகளுடன் திருமணமான தம்பதியினர் கோலதிரங்கானுவில் வசிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு மாதத்திற்கு RM5,610 தேவை; அவர்கள் அலோர்ஸ்டாரில் வசிப்பவர்கள் என்றால், அவர்களுக்கு மாதம் 5,430 ரிங்கிட் தேவைப்படும் (இணையாக, கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் ஒரு நபருக்கு ரிம2,715 சம்பளம் பெற வேண்டும்).

கோலதிரங்கானுவில் (மாதம் 1,630 ரிங்கிட்) அல்லது அலோர்ஸ்டாரில் (மாதம் 1,530 ரிங்கிட்) வசிக்கும், சொந்த வாகனம் இல்லாத ஒரு தனி நபருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு RM1,700 போதுமானது. பிரச்சனை என்னவென்றால், கோலதிரங்கானு மற்றும் அலோர்ஸ்டார் நகரங்களில் பரவலாக வேலை வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அங்குள்ள இளம் பிரமச்சாரிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது வேறு பெரிய நகரங்களுக்கு வேலை தேட வேண்டிய அவசியமில்லை அல்லவா? மேலும், அங்கு வசிப்பவர்கள் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தேவையில்லாத அளவுக்கு உள்ளூர் பொதுப் போக்குவரத்து அமைப்பு மிகவும் சரியானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளதா?

 

பேங்க் நெகாரா மலேசியா 2018-ல் வெளியிடப்பட்ட ஆய்வில்,  அந்தக் காலக்கட்டத்தில் கோலாலம்பூரில் வசிக்கும் தனிநபர் ஒருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் மாதத்திற்கு RM2,700 ஆக இருக்கிறது என்றது, இரண்டு குழந்தைகள் கொண்ட திருமணமான தம்பதியருக்கு மாதத்திற்கு RM6,500 தேவைப்படும் என்றது. அதன் பிறகான 6 ஆண்டுகளில், வாழ்க்கைச் செலவு சிறிதும் அதிகரிக்கவில்லை என்று கருதினால்கூட, தற்போது அறிவித்திருக்கும் குறைந்தபட்ச சம்பளம் RM1,700, திருமணம் ஆகாத ஒருவருக்கு எளிமையான வாழ்க்கை வாழ  இன்னும் மாதம் ஒன்றுக்கு 1,000 ரிங்கிட் பற்றாக்குறையாக இருக்கிறது அல்லவா?

 

கோலாலம்பூரில் பேங்க் நெகாராவின் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்தின் மதிப்பீடு மிக அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிடுவதில் தேசிய ஊதிய ஆலோசனை தொழில்நுட்பக் குழு பயன்படுத்தும் சூத்திரத்தையும்  ஆய்வுக்கு உட்படுத்தலாம். இந்த குறைந்தபட்ச ஊதியக் கணக்கீட்டு சூத்திரம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வருமானம் (PGK), சராசரி ஊதியம், உற்பத்தித்திறன் வளர்ச்சி, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மற்றும் வேலையின்மை விகிதம் போன்றவற்றை நிர்ணயிக்கும் காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இந்த சூத்திரத்தின்படி, குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM2,444 ஆக இருக்க வேண்டும் என்கிறது.

நகர்ப்புறங்கள் மற்றும் நகர்புறங்கள் அல்லாத இடங்களை ஒப்பிட்டால், நகர்ப்புறங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும்; அங்கு குறைந்தபட்ச ஊதியம் RM2,568 ஆக இருக்க வேண்டும். நகர்புறங்கள் அல்லாத இடங்களில் குறைந்தபட்ச ஊதியம் RM1,884 ஆக இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், இது இன்னும் நடைமுறைக்கு வராத 2025-ல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விட RM184 அதிகமாக உள்ளது.

மக்களுக்கு உண்மையாக தேவைப்படும் மாத வருமானம் தொடர்பாக பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்த பிறகு, இந்தக் காலக்கட்டத்தில் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் ஊதிய உயர்வுகளை வழங்க முதலாளிகள் தயக்கம் காட்டுவதையும் கண்டு கொண்ட பி.எஸ்.எம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ஒன்றுக்கு RM2,000 என்ற விகிதத்தில் நிர்ணயம் செய்வதில் கொஞ்சம்கூட சமரசம் செய்துக்கொள்ளாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருப்பினும், ஏமாற்றம் என்னவென்றால், "மக்களின் வறுமையை ஒழிக்க" விரும்புவதாகக் கூறப்படும் மடானி அரசாங்கம், மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700 மட்டுமே அறிவித்திருக்கிறது.

இ.எஸ்.எம்-மின் கோரிக்கையான குறைந்தபட்ச ஊதியம் RM2,000

முன்மொழிவு "பழமைவாத" கருத்தாகக் கூறப்பட்டால், மடானி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700 ஆக உயர்த்திய "நல்ல செய்தியும்" நிச்சயமாக தீவிர பழமைவாதமானதுதான்.

அன்வார் இப்ராஹிம் அறிவித்த அதே 2025 வரவுசெலவுத் திட்டத்தில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு RM2,115 ஆக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதத்துடன் ஒப்பிடும்போது, தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM1,700 என்பது மிகவும் குறைவாகும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச வருமானமாக மாதம் 2,115 ரிங்கிட்டை அரசு நிர்ணயம் செய்யுமானால், ஒரே நாட்டில் வசிக்கும் மற்ற தொழிலாளர்களுக்கு அது ஏன் இருக்க முடியாது? இது ஆதரவா அல்லது தொழிலாளர்களிடம் ஏற்றத்தாழ்வா?

இந்த நேரத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற அரசுக் கட்டிடங்களில் துப்புரவுத் தொழிலாளர்களாகவும், காவலாளிகளாகவும் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களை மறந்துவிடாதீர்கள். அவர்கள் நமது அரசாங்க வளாகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க சேவை செய்கிறார்கள், ஆனால் அதே கட்டிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை விட அவர்களுக்கு மிகவும் குறைந்த,  குறைந்தபட்ச ஊதியம்தான் வழங்கப்படுகிறது, ஏனெனில் அவர்கள் அரசாங்கத்திற்காக செய்யும் வேலை தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு குத்தகை முறையில் வேலை செய்கிறார்கள்.

1990 களில் மகாதீர் 1.0 நிர்வாகத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கல் கொள்கையால், வேலை பாதுகாப்பு இல்லாதது மற்றும் குறைந்த ஊதியத்துடன் தொடர்ந்து அழுத்தம் கொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள். இதற்கும் "மக்கள் நலனுக்கும்" எந்த சம்பந்தமும் இல்லை.

 

மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியத்தின் சுருக்கமான வரலாறு:

குறைந்தபட்ச ஊதியம் என்பது அரசாங்கத்தின் மரியாதை அல்ல, ஆனால் தொழிலாளர்களால் போராடி பெறப்பட்ட அடிப்படை வேலை பாதுகாப்பு

நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.

குறைந்த பட்ச ஊதியம் என்பது இன்று நம் நாட்டின் சட்டத்தின்படி கட்டாயமாக இருக்க வேண்டும், இந்த சட்டமானது வானத்தில் இருந்து விழுந்த ஒன்றல்ல, அரசாங்கத்தில் உள்ள உயரதிகாரிகள் திடீரென தூக்கத்திலேயே உணர்ந்து எழுந்து கொடுத்ததல்ல.  கார்ப்பரேட் முதலாளிகள் திடீரென்று தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்காக வருந்தி அல்லது குற்ற உணர்ச்சியடைந்து கொடுத்ததும் அல்ல. தொழிலாளர்கள் உட்பட, தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வந்ததால்தான், 2013ம் ஆண்டு, முதன் முதலாக நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த முடிந்தது.

நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸால் (MTUC) 1990-களிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. 1999-ல் MTUC-யின் பொதுக் கூட்டத்தில் பேசிய அப்போது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், தொழிலாளர்களுக்கு மாதம் 1,200 ரிங்கிட் சம்பளம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.  ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர். மகாதீர் தனது தொழிலாளர் தின செய்தியில், அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஊதியமாக RM1,200 மாதம் நிர்ணயம் செய்ய முடியாது, ஏனெனில் ஊதியத்தை மிக அதிகமாக உயர்த்துவது நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க வழிவகுக்கும் என்றார் அவர். 1999-ம் ஆண்டு டாக்டர் மகாதீர் சொன்ன அந்த வார்த்தைகளின் வழி ஒன்று தெளிவாகிறது, யு-டர்ன்களில் நிபுணத்துவம் பெற்ற நம் நாட்டின் நம்பர் ஒன் அரசியல்வாதியாக அவர் அந்த நேரத்தில் பொதுத் தேர்தலுக்கு முன் தொழிலாளர்களை ஏமாற்ற பேசிய வெறும் தந்திரமாகும். ஏனெனில் அவர் 4-வது பிரதமராக இருந்த 22 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறைந்த பட்ச ஊதியம் நம் நாட்டில் போட்டித்தன்மையை இழக்கச் செய்யும், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், பொருளாதாரம் பாதிக்கப்படும் மற்றும் இது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்த மறுத்தது அரசு. அதே நேரத்தில், அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வந்தது. உதாரணத்திற்கு கார்ப்பரேட் வரி விகிதம் 1970 களில் 40% ஆக இருந்து 1980 களில் 35% ஆகவும், பின்னர் 1990 களில் 30% ஆகவும் 2001 க்குள் 28% ஆகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டது, கார்ப்பரேட் வர்க்கம் நல்ல லாபம் ஈட்டவும் ஆனால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க  தளம் இல்லாமலும் வைத்திருந்தது.

 

ஏப்ரல் 19, 1999 அன்று, தோட்ட பாட்டாளிகள் ஒருங்கிணைப்பு குழு (JSML) ஆதரவுடன் 2,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியம் 750 ரிங்கிட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு அணிதிரண்டனர். மே 1, 1996 முதல்  தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் கோரி  பிரச்சாரத்தைத் தொடங்கியது தோட்ட பாட்டாளிகள் ஒருங்கிணைப்பு குழு.

ஜூன் 1999, நாடாளுமன்றத்தின் முன் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய 2 மாதங்களுக்குப் பிறகு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி (MIC) அதோடு அந்த காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாரிசான் நேஷனல் (BN) கட்சி, ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு RM900 முதல் RM1,000 வரை மாத சம்பளம் கோரி அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்தன. அதனைத்தொடர்ந்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  அரசாங்கம் தோட்டத் துறையில் மாதாந்திர சம்பளத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதாக அறிவித்தது.

இருப்பினும், பிப்ரவரி 8, 2001 அன்று, மலாயன் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் (MAPA) மற்றும் பண்ணை தொழிலாளர்களின் தேசிய சங்கம் (NUPW) இடையேயான கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளர்களின் மாத ஊதியக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்தது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் RM325 மட்டுமே, இது வறுமைக் கோட்டின் வருமானத்திற்கும்  கீழே உள்ளதாகும்.

 

பல்வேறு தரப்புகளின் பிரச்சாரங்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு, தேசிய அளவில் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் வழிமுறையை ஏற்படுத்துவதற்காக, தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சில் சட்டம் 2011 (சட்டம் 732) இறுதியாக அரசாங்கம் இயற்றியது. ஜனவரி 1, 2013 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஆணையை 16 ஜூலை 2012 அன்று  அரசு வெளியிட்டது.  தீபகற்ப மலேசியாவிற்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றுக்கு RM900 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு மாதம் 800 ரிங்கிட் ஆகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 5 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்துவது ஜூலை 1, 2013 அன்று தொடங்கியது, இது 6 மாதங்களுக்குப் பிறகாகும், தவிர அதை செயல்படுத்துவதற்கான காலத் தாமதம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அப்போதிருந்து, 5 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் மற்ற தொழிலாளர்களை விட மிக தாமதமாகவே குறைந்தபட்ச ஊதிய உயர்வைப் பெற்றுவருகின்றனர்.

2013-ல் குறைந்தபட்ச ஊதியம் RM900 என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென தொழிற்சங்கங்கள், JERIT மற்றும் PSM போன்ற சமூக அமைப்புகளால் குரல் எழுப்பப்பட்டன. ஏனென்றால், 2013 இல் கோரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாதத்திற்கு RM1,200 ஆக இருந்தது (2008 முதல் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை இது), மேலும் அந்த விகிதம் முழு நாட்டிற்கும் தரப்படுத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்திய பிறகு முதல் மதிப்பாய்வு மற்றும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை சரிசெய்தல் 1 ஜூலை 2016 அன்றுதான் நடைமுறைக்கு வந்தது. இது நிலுவைத் தேதியை விட 18 மாதங்கள் தாமதமாகும். குறைந்தபட்ச ஊதிய ஆணை 2016, தீபகற்ப மலேசியாவிற்கு மாதத்திற்கு RM1,000 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு மாதத்திற்கு RM920 ஆகவும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை நிர்ணயித்தது. இது கடந்த 8 ஆண்டுகளில்  கோரப்பட்ட மாதத்திற்கு RM1,200 என்ற குறைந்தபட்ச சம்பள விகிதத்தை இன்னும் எட்டாத நிலையாகும். ஆனால், சமூக குழுக்களிடமிருந்து குறைந்தபட்ச ஊதிய கோரிக்கைகள் ஏற்கனவே அந்த காலக்கட்டத்தில்  மாதத்திற்கு RM1,500 ஆக அதிகரித்திருந்தன.

 

2018-ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஊதிய மறுசீரமைப்பு,  6 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னனியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம், குறைந்தபட்ச ஊதியத்தை ரிம50 மட்டுமே உயர்த்தி ரிம1,050 ஆக அறிவித்தது. இந்த அறிவிப்பு MTUC, சமூக குழுக்கள் மற்றும் PSM உட்பட தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைத் தூண்டியது. MTUC மற்றும் PSM ஒரு கூட்டணியாக இணைந்து17 அக்டோபர் 2018 அன்று நாடாளுமன்றத்தின் முன் RM1050 ரிங்கிட் எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்தன. மக்களின் வற்புறுத்தலின் விளைவாக, அந்த நேரத்தில் PH அசாங்கம் குறைந்தபட்ச ஊதிய (திருத்த) ஆணை 2018 மூலம் RM50 உயர்த்தி RM1,100 ஆக சம்பளத்தை  உயர்த்தியது. அதன் புதிய விகிதம் ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய மாற்றத்தில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவென்றால், குறைந்தபட்ச ஊதிய விகிதம் முழு நாட்டிற்கும் தரப்பட்டது, மேலும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் அது வேறுபாடு வைக்கவில்லை.  அடுத்த குறைந்தபட்ச ஊதிய சீரமைப்பு 1 பிப்ரவரி 2020 அன்று ‘குறைந்தபட்ச ஊதிய ஆணை 2020’ மூலம் நடைமுறைக்கு வந்தது, RM100 ரிங்கிட் ஏற்றப்பட்டு மாதத்திற்கு RM1,200 -டாக அதிகரிக்கப்பட்டது.  ஆனால் மாநகர மன்றம் அல்லது மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 57 பகுதிகளுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்னும் குறைந்தபட்ச ஊதியமாக RM1,100 மட்டுமே வழங்கப்படுகிறது.

 

தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் கீழ் உள்ள தேசிய ஊதியக் கலந்தாய்வு தொழில்நுட்பக் குழுவிடம் ஜூலை 2021 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பாணையில் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,800 ஆக உயர்த்த வேண்டும் என்று PSM பரிந்துரைத்தது. 2022 இல் குறைந்தபட்ச ஊதிய சரிசெய்தல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் கணிசமான அதிகரிப்பைக் கண்டது,  RM300 ரிங்கிட் அதிகரிக்கபட்டு மாதம் RM1,500 ஆக குறைந்த பட்ச ஊதியம் அதிகரித்ததுடன் அது 1 மே 2022 முதல் நடைமுறைக்கும் வந்தது. இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய விகிதமான RM1,500ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இன்னும் பல்வேறு நெகிழ்வுத்தன்மையை முதலாளிகளுக்கு வழங்கியது.

 

உண்மையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது காரணம்  அரசுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான ஒப்பந்தம்  புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

சமீபத்திய குறைந்தபட்ச ஊதிய மாற்றம் மே 2024 இல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் 9 மாதங்கள் தாமதம் ஆனது. PSM மற்றும் அரசாங்க ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருகிணைப்பு குழு (JPKK),  பரிந்துரைத்த RM2,000 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது சமீபத்திய குறைந்தபட்ச சம்பளம்.

 

மக்களின் நல்வாழ்வுக்கும் பொருளாதார மீட்சிக்கும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் முக்கியமானது.

 

குறைந்த பட்ச ஊதியம்,  மிகக் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கும் நபர்கள் நம்மிடையே இருக்கலாம், ஏனென்றால் குறைந்தபட்சம் என்பது "குறைவானது", பின்னர் குறைந்தபட்ச ஊதியத்தை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பது ஒரு பிரச்சனையல்ல என்று அவர்கள் நினைக்கின்றனர். இது ஒரு தவறான அனுமானம் மட்டுமல்ல மனிதாபிமானமற்றது. அதோடு சமூகத்தை முன்னேற்றும் எண்ணம் அது கொண்டிருக்கவில்லை.

குறைந்த பட்ச ஊதியம் என்பது, தொழிலாளர்கள் எளிமையான வாழ்க்கையை வாழவும், தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவர்களின் ஆற்றலை மீண்டுருவாக்கவும் செய்யும் ஒரு படிநிலையாகும். எனவே, ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் அவரது வாழ்க்கை மற்றும் குடும்பத்தை ஆதரிக்க போதுமானதாக இருக்க வேண்டும், வாழ்க்கையை பாதிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஊதியமாக இருக்ககூடாது.

மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் அல்லது அவர்களின் சொற்ப வருமானத்தை ஈடுகட்ட மற்ற பகுதி நேர வேலைகளைக் கண்டறிவார்கள். இது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும், அதனால் அவர்கள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும், மேலும் கடுமையான சோர்வு காரணமாக திடீரென இறக்கக்கூடும். அதுமட்டுமின்றி, ஊழியர்களின் அற்ப ஊதியத்தை ஈடுகட்ட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால், அவரது உடல்நிலை மோசமடைந்தால், பணியாளர் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படும். "வேலை-வாழ்க்கை சமநிலை" என்பது குறைந்தபட்ச ஊதியத்தை மட்டுமே பெறும் கீழ்நிலைத் தொழிலாளர்களிடையே இருக்க வாய்ப்பில்லை, மேலும் இது சில உயர் வருமானக் குழுக்களின் "சலுகையாக" மட்டுமே உள்ளது.

குறைந்தபட்ச ஊதிய விகிதம் அதிகமாக இருந்தால், முதலாளிகள் நஷ்டம் அடைவார்கள், முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள் என்று சிலர் கூறலாம். இந்த பார்வையை ஒரு உண்மைக் கதையுடன் எதிர்க்கலாம்.

ஹென்றி ஃபோர்டு என்ற பெயரை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தை நிறுவிய ஒரு பெரிய தொழிலதிபர். 1914 ஆம் ஆண்டில், அதாவது 110 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கார் உற்பத்தி நிறுவனத்தின் முதலாளி, தான் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 2.34 அமெரிக்க டாலர்களில் இருந்து 5 அமெரிக்க டாலர்களாக (இன்று சுமார் 152 அமெரிக்க டாலர்கள் அல்லது RM660 க்கு சமம்) உயர்த்த முடிவு செய்தார். 114% மடங்கு அதிகரிப்பு. ஃபோர்டு தாராள மனப்பான்மையாலும், தொண்டு  அல்லது தனது தொழிலாளர்களை நேசித்தோ அவ்வாறு செய்யவில்லை; மாறாக, பொருளாதாரக் கொந்தளிப்பு காரணமாக தனது நிறுவனம் திவாலாவதைத் தடுக்க அவர் அவ்வாறு செய்தார். லாப நோக்குடைய முதலாளி, திவால் விளிம்பில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியர்களின் ஊதியத்தை இன்னும் அதிகரிப்பு செய்வது கொஞ்சம் விந்தையல்லவா? இருப்பினும், தனது வணிகத்தை காப்பாற்ற பெரிய முதலாளிகளின் சூட்சமம் மிகவும் எளிமையானது: அவர் தனது தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் போது, அதிக வருமானம் பெறும் ​​அவருடைய தொழிலாளர்களே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் கார்களை வாங்குவதற்கு  விரும்புவார்கள்  என்று அர்த்தம். இதனால் அவரது கார்களை விற்க ஒரு பெரிய சந்தை உருவாகிறது. மேலும், அதிகப்படியான சம்பள உயர்வு அந்த ஃபோர்டு தொழிற்சாலையில் அதிக ஊழியர்கள் வேலைக்கு வருவதற்கு முட்டிமோதிக்கொண்டிருந்தனர். அதிகமான தொழிலாளர்களால் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அதிகரிக்க முடிந்தது.  சம்பள உயர்வின் விளைவாக, ஃபோர்டு நிறுவனத்தின் வணிகம் வளர்ந்து வந்தது, மேலும் அவரது ஊழியர்களின் ஊதிய உயர்வு காரணமாக அவரது வணிகத்தின் விரிவாக்கத்தில் இருந்து ஹென்றி ஃபோர்டு என்ற முதலாளியின் லாபத்தில் பெறும் பணக்காரர் ஆனார்.

 

 


மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஊடக அறிக்கை – 28 ஜூலை 2025 - கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு- அரசியல் களத்தில் மூன்றாம் அலைய...