Saturday, December 27, 2025

2025- PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம்

2025-ஐ திரும்பிப் பார்க்கும்போது: PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம்

2025 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இந்நேரத்தில், 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் புதிய துவக்கத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டத்தில் Parti Sosialis Malaysia (PSM) மேற்கொண்ட முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் மீளாய்வு செய்வது முக்கியமானதாகும்.

இந்த ஆண்டின் பல்வேறு சவால்களையும் சமூக அநீதி நிலைகளையும் எதிர்கொண்டு, மக்களின் குரலை மேலோங்க, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க, மற்றும் சமூக நீதியை நிலைநாட்ட PSM தொடர்ந்து முனைப்புடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி சுருக்கம், நாம் கடந்து வந்த வருடத்தில் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் மக்கள் நலனை மையமாகக் கொண்டதையே வலியுறுத்துகிறது — அதுவே எங்கள் பயணத்தின் உள்ளார்ந்த சக்தியாக இருந்தது.

 


1. பொது சுகாதார அமைப்பைக் காப்பாற்றும் பிரச்சாரம்

 

Parti Sosialis Malaysia (PSM), 13 ஆகஸ்ட் 2025 அன்று “பொது சுகாதார அமைப்பைக் காப்பாற்றுங்கள்” எனும் முக்கியமான தேசிய பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மக்கள் நலன், சுகாதார சமத்துவம் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை உறுதிசெய்ய, இந்தப் பிரச்சாரம் கீழ்காணும் நான்கு அடிப்படை மற்றும் அவசர கோரிக்கைகளை முன்வைக்கிறது. KKM திட்டம் (Skim Rakan KKM) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இத்திட்டம் பொது சுகாதார சேவையின் தனியார்மயத்தைக் துரிதப்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதிய தனியார் மருத்துவமனைகளுக்குத் தற்காலிகத் தடை (Moratorium) விதிக்கப்பட வேண்டும், இதன் மூலம் தனியார் மருத்துவ வர்த்தகத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தைத் தடுக்கவும், பொது மருத்துவ அமைப்பை நிலைநிறுத்தவும் முடியும்.

 

மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (KDNK) 5% ஆக உயர்த்த வேண்டும், மக்கள் பயன்படும் பொது மருத்துவ சேவைகளுக்கு போதுமான வளங்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்க இது அவசியமானது. தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டணங்களுக்கு உச்ச வரம்பு (ceiling) நிர்ணயிக்கப்பட வேண்டும், இது மக்கள் மீது ஏற்படும் அதிகப்படியான மருத்துவச்செலவுச் சுமையை குறைக்கும் முக்கியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகம். இந்தப் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், PSM உறுப்பினர்கள் நாடு முழுவதும் பிரசுரங்கள் விநியோகம், கையெழுத்து சேகரிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சுகாதார உரிமையை பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு குரலும் வலிமையாகும்.

 

இந்த முயற்சிக்கு ஆதரவாக,ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டு உங்கள்   ஆதரவையும் பதிவு செய்யுங்கள் மக்களே.

 


2. கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்களின் கட்டாய வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டம்

சிலாங்கூர், கிள்ளான், ண்டமாரான் பகுதியில் உள்ள கம்போங் ஜாலான் பாப்பான்  நகரப்  குடியிருப்பாளர்களுக்கு, மாற்று வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், மேம்பாட்டாளர்கள் தரப்பால் கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொண்டனர். 2025 நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெற்ற கட்டாய வீட்டுடைப்பு நடவடிக்கையின்போது, குடியிருப்பவர்களின் வீடுகளை பாதுகாக்க முயன்ற PSM செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் உட்பட 23 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்கம்போங் ஜாலான் பாப்பான்  குடியிருப்பாளர்கள், தங்களது வீட்டு உரிமைக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட மாற்று வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் சிலாங்கூர் மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 


3. SD Guthrie தோட்டத்திலிருந்து கட்டாய வெளியேற்றத்திற்கு எதிராக கால்நடை விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம்

 

தேசிய மார்ஹைன் கால்நடை விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (Gabungan Penternak Marhaen Nasional), SD Guthrie Berhad நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் சிறிய அளவில் மாட்டுப்பண்ணை நடத்தி வரும் சிறு கால்நடை விவசாயத் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. 2025 பிப்ரவரி 12ஆம் தேதி, சபாக் பெர்ணம் தோட்டப் பகுதியில், அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகமும் இணைந்து அவர்கள் வளர்த்து வந்த மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட போது, இரு கால்நடைத் தொழிலாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, 2025 ஜனவரி 22-ஆம் தேதி, SD Guthrie Berhad நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து சிறிய அளவில் மாடு வளர்க்கும் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிலாங்கூர் முதல்வரின் (Menteri Besar) தலையீட்டை கோரி, 2025 அக்டோபர் 2ஆம் தேதி இன்னொரு மகஜர் (memorandum) அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.




4. தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு உரிமையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் – தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை

 

தோட்ட சமூக ஆதரவு குழு (Jawatankuasa Sokongan Masyarakat Ladang – JSML), தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமையை உறுதி செய்யும் பாதுகாப்பதற்காக “தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி திட்டச் சட்டம் (Akta Skim Perumahan Pekerja Ladang)” இயற்ற வேண்டும் என வலியுறுத்தி, 2025 ஆகஸ்ட் 13-ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பு ஒரு போராட்ட நடவடிக்கையை நடத்தியது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, PSM துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி காவல்துறையால் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு, 2025 ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தன்னை கைது செய்ய உத்தரவு இருப்பதாக காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்து, அருட்செல்வன் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD Dang Wangi) “சுயமாக ஆஜராக” சென்றார். அவர் சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் அதே இரவு விடுவிக்கப்பட்டார்.

 

 


5. ஆயேர் கூனிங் இடைத்தேர்தலில் PSM போட்டியிட்டது

 

2025 ஏப்ரல் 26-ஆம் தேதி பேராக் மாநிலம் ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான (DUN Ayer Kuning) இடைத்தேர்தலில் (PRK), PSM  துணை பொதுச் செயலாளர் மற்றும் பேராக் மாநில PSM தலைவர் பவானி K.S. அவர்களை வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) அந்த சட்டமன்றத் தொகுதியை மேலும் அதிகமான பெரும்பான்மையுடன் மீண்டும் தக்கவைத்தது. ஆனால், இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் 15-வது பொதுத் தேர்தலை (PRU-15) விட குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இரண்டு பெரிய அரசியல் கூட்டணிகளை எதிர்கொண்டதால், PSM இந்தத் தேர்தலில் வெற்றி பெறவும், வைப்புத் தொகையை (deposit) காப்பாற்றவும் முடியாமல் போனாலும், PSM ஒரு ஊக்கமளிக்கும் முடிவைப் பெற்றது. பவானி, PRU-15யை ஒப்பிடுகையில், தனக்கான வாக்கு ஆதரவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி, 1,106 வாக்குகளை (சரியான வாக்குகளின் 6.1%) பெற்றார். ஆயேர் கூனிங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பவானி மற்றும் PSM  தோழர்கள் நடப்பில் இருக்கும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பரப்புரை செய்தனர்.

 


6. Kledang Saiong-கின் வனத் தோட்டத் திட்டத்திற்கு எதிர்ப்பு

 

பேராக், கிளெடாங் சையோங் வனப்பகுதியில் வனத் தோட்டத் திட்டத்தை எதிர்க்கும், சிவில் சமூக வலையமைப்பின் முயற்சிகளுக்கு PSM தொடர்ந்து ஆதரவளிக்கிறது. வனத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி நவம்பர் 18, 2025 அன்று சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.



7. டிரம்பின் மலேசியா வருகைக்கு எதிர்ப்பு

 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி நிலை மாநாட்டுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கு வருகை தருவதை எதிர்த்து 2025 அக்டோபர் 26 அன்று சிவில் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் PSM ஆர்வலர்கள் பங்கேற்றனர். டிரம்பை மலேசியாவிற்கு அழைக்க மலேசிய அரசாங்கத்தின் முடிவை PSM கண்டிக்கிறது.



 

8. செழிப்பான மற்றும் உள்ளடக்கமான (Inclusive) ASEAN நோக்கி PSM கோரிக்கை

 

PSM, 55 சமூகநிலை அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட மகஜரை (memorandum) 2025 ஜனவரி 21-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்தது. இந்த மகஜரில், மலேசிய அரசு, ASEAN தலைவராக செயல்பட்டு, தென்கிழக்கு ஆசியா பிராந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ASEAN வளர்ச்சிக்கான தலைமைப் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 


9. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் குரல்களை அடக்கும் அச்சுறுத்தும் வழக்குகளைக் கையாள்வதற்காக அவதூறு வழக்குச் சட்டத்தில் திருத்தம் செய்ய PSM வலியுறுத்துகிறது

 

அவதூறு வழக்குகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி, PSM மே 19, 2025 அன்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (SUHAKAM) ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. இதனால், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்துவதில் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த சில கட்சிகள் அவதூறு வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்தமுடியாது.

 


10. மர்ஹைன் வீடுகளை, வங்கிகள் ஏலம் விடுவதற்கு எதிரான போராட்டம்

 

மர்ஹைன் மக்களின் வீடுகளை வங்கிகள் தன்னிச்சையாக ஏலம் விடுவதை PSM தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக மே 14, 2025 அன்று ‘ஆம் பேங்க்’ தலைமையகத்தின் முன் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது,  உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு வீட்டுக் கடன் பெற்றவரின் வீட்டு ஏலத்தை ஒத்திவைக்க ஆம் பேங்க் ஒப்புக்கொண்டது.

 


11.Flotila Sumud Global- லுக்கு ஆதரவு அளித்ததற்காக பாலஸ்தீன ஆர்வலர்கள் கைது

 

2025 அக்டோபர் 2ஆம் தேதி, கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இரு பாலஸ்தீன் ஆதரவு செயற்பாட்டாளர்கள் போலீசார் கைது செய்தனர். அவர்கள், இஸ்ரேல் சயோனிஸ்ட் ஆட்சியால் தடையீடு செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட Flotilla Sumud Global க்கு ஆதரவு காட்டியதை வெளிப்படுத்த போராடினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kamal Aarif, PSM சோசலிச இளைஞர் பிரிவு உறுப்பினர் மற்றொருவர் GEGAR உறுப்பினர் ஆவார். இருவரும் அதே இரவில் விடுவிக்கப்பட்டனர்.


 


12. CCUS மசோதாவுக்கு எதிர்ப்பு

 

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்ட PSM மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் மார்ச் 19, 2025 அன்று தேசிய சட்டமன்றத்தை காலநிலை நெருக்கடிக்கு தவறான தீர்வைக் கொண்டு வந்து சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு மசோதாவை (CCUS மசோதா) நிறைவேற்ற அவசரப்பட வேண்டாம் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



13. பேராக் விவசாயிகளின் உரிமை மற்றும் உணவு பாதுகாப்புக்கான போராட்டம்

 

சிறு உணவு உற்பத்தியாளர்களின் வாழ்வாதார ஆதாரத்தையும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாக்க, சிறு விவசாயிகளின் விவசாய உரிமையை PSM தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. கோலா பிகாமில் உள்ள விவசாயிகள் உட்பட, பேராக்கில் உள்ள சிறு விவசாயிகளுக்கு எதிரான பல வெளியேற்ற வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

 


14. நீதி சுதந்திரத்தை பாதுகாக்க வழக்கறிஞர்கள் பேரணி – PSM ஆதரவு

 

PSM செயற்பாட்டாளர்கள், 2025 ஜூலை 14 ஆம் தேதி நடத்தப்பட்ட மலேசிய வழக்கறிஞர் சங்கத்தால் (Bar Council) ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஆதரவு வழங்கினர்.  இந்தப் பேரணியில் சுமார் 1,200 வழக்கறிஞர்கள் கலந்து, நீதி சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சியில் பங்கேற்றனர்.

 


15. 2025 சோசலிச மாநாடு 

 

PSM, 2025 நவம்பர் 15–16 அன்று கோலாலம்பூர் நகரில்சோசலிசமாநாட்டை நடத்தி, சர்வதேச அரசியல் அதிர்வுகள் மற்றும் மக்கள் சக்தியை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியோனேசியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து  தோழர்கள் கலந்துகொண்டனர்.

 


16. 2025 தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போராட்டம்

 

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்காக கோலாலம்பூரில் மே 1, 2025 அன்று சுமார் 1,500 பேர் “Pekerja Tiang Seri Negara – Naikkan Gaji, Bukan Bebanan”. என்ற கருப்பொருளுடன் கலந்து கொண்டனர்

Thursday, December 25, 2025

சர்வதேச அலவில் நடந்தது என்ன? PSM பார்வை

2025- ஐ நினைவுகூரல்: சர்வதேச நிலை

2025 ஆம் ஆண்டு முழுவதும் உலகம் பல்வேறு நெருக்கடிகளால் தொடர்ந்து சிக்கித் தவித்தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, காலநிலைச் சிக்கல் முதல் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, முடிவற்ற போர் மோதல்கள் (உக்ரைன் போர், கம்போடியா–தாய்லாந்து எல்லை மோதல், இந்தியா–பாகிஸ்தான் மோதல் போன்றவை) மற்றும் பல இடங்களில் உருவாகும் போர் அச்சுறுத்தல்கள் வரை, உலகம் ஆழ்ந்த நெருக்கடியில் மூழ்கியுள்ளது.

இந்த உலகளாவிய ஆழமான நெருக்கடிகள், உலகளாவிய மூலதனவாத (கேபிடலிஸ்ட்) அமைப்பில் உள்ள தீவிர முரண்பாடுகளின் விளைவாகவே உருவாகின்றன. உலகின் பெரிய சக்திகளுக்கிடையிலான போட்டி, உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் அதிகரிக்கும் புவியியல் அரசியல் குழப்பங்களை (geopolitical turmoil) உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில், பல நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகள், இந்த நெருக்கடிகளை பயன்படுத்தி வெறுப்பு, இனவாதம், வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனப்பான்மை (xenophobia), சமலிங்க விரோதம் (homophobia), பெண்கள் மீது வெறுப்பு (misogyny) போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி, ஆளும் உயர்குடி சிறுபான்மையின் நலன்களை பாதுகாக்கும் அரசியல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால், இதையெல்லாம் மீறி, உலகின் பல பகுதிகளில் மக்கள் இந்த ஆழ்ந்த நெருக்கடிகளில் இருந்து வெளியேறும் வழிகளைத் தேடி போராட்டங்களைத் தொடர்கின்றனர். பல நாடுகளில், இளம் தலைமுறையான “ஜென் Z” (Gen Z) எழுச்சி பெற்று, நிலவும் அதிகார அமைப்புகளுடன் சவாலில் நின்று , அர்த்தமுள்ள சமூக மாற்றங்களை கோருகிறது.

இது, உலகெங்கும் மக்கள் விடுதலை, ஜனநாயகம் மற்றும் சமூக நீதி நோக்கி மேற்கொண்டு வரும் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியே.
மூலதனவாதம் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வரையில், மக்களின் போராட்டம் ஒருபோதும் நிற்காது…

2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் கலவரங்களையும் மக்களின் போராட்டங்களையும் இப்போது மீண்டும் நினைவுகூர்வோம்:


பாலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கு: சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சியின் கொடுமை தொடர்கிறது

சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சி, காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளும் இனப்படுகொலை குற்றங்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. 2025 ஜனவரியில் எட்டப்பட்ட அமைதி நிறுத்த ஒப்பந்தம், 2025 மார்சில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் காசாவை தாக்கத் தொடங்கியதன் காரணமாக முறியடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபரில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (AS) அரசு முன்வைத்த “காசா சமாதானத் திட்டத்தின்” (Gaza Peace Plan) முதல் கட்டத்தை செயல்படுத்த ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், மற்றொரு அமைதி நிறுத்த ஒப்பந்தம்  செய்யப்பட்டது.
எனினும், இந்த புதிய “சமாதானத் திட்டம்” கூட, சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சியின் கீழ் நிலவும் அநீதி மற்றும் அடக்குமுறையையே தொடரச் செய்கிறது.

அமெரிக்க பேராதிக்க சக்தியின் முழுமையான ஆதரவுடன் செயல்படும் சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சி, மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் வன்முறைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதில், 2025 ஜூன் மாதத்தில் ஈரான்மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டதோடு, சிரியாவின் தென்மேற்கு பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது.

பாலஸ்தீன மக்கள்மீது நடைபெறும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக, உலகெங்கும் மக்கள் இயக்கங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதில், காசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க முயன்ற ‘ஃப்ளோட்டிலா சுமுத் குளோபல்’ (Flotila Sumud Global) கடற்பயணம், மற்றும் இத்தாலியில் நடைபெற்ற பெருமளவிலான தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.



இந்தோனேசியா: பிரபோவோ ஆட்சியின் அடக்குமுறை மற்றும் அமைப்புசார் தோல்விகளுக்கு எதிராக இளைஞர்கள் எழுச்சி

இந்தோனேசியாவில், இளைஞர்களை முன்னணியில் கொண்ட பெருமளவான போராட்ட அலை, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் ஆட்சியை எதிர்த்து வெடித்தெழுந்தது. இந்த ஆட்சி, சமூக அநீதியை மேலும் தீவிரப்படுத்துவதோடு, ஜனநாயக இடைவெளிகளையும் சுருக்குகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி, Affan Kurniawan எனும் இளைஞர் ஒருவர் போலீஸ் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவம், மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்த போராட்டங்களின் போது, பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, வழக்குகளுக்குள்ளாக்கப்பட்டனர்.



நேபாளம்: Gen Z இளைஞர் போராட்டங்கள் பிரதமரை பதவியிலிருந்து விலகச் செய்தன

நேபாளத்தில், “Gen Z” எனப்படும் இளம் தலைமுறையினர், ஊழலை சமாளிக்கத் தவறிய அரசை எதிர்த்து, அதே நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்தும் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் போது, சுமார் 76 பேர் உயிரிழந்த சம்பவங்கள் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதன் பின்னர்,  நேபாளத்தின் பிரதமரான K. P. சர்மா ஒலி பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, நேபாள பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டு, 2026 மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.




வெனிசூலா மற்றும் லத்தீன் அமெரிக்கா: அமெரிக்க பேராதிக்க அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன

பொலிவேரியன் குடியரசான வெனிசூலா, அமெரிக்க பேராதிக்க சக்தியிடமிருந்து இராணுவத் தாக்குதலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. மருந்து கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதென்ற பெயரில், அமெரிக்க அரசு தனது இராணுவ இயந்திரங்களை கரீபியக் கடலுக்கு அனுப்பியுள்ளது. எனினும், அதன் உண்மையான நோக்கம், நிக்கோலாஸ் மதுரோ தலைமையிலான வெனிசூலா அரசை கவிழ்ப்பதே என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதேவேளை, லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் இயக்கங்கள் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டன. 2005ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற Movimiento al Socialismo (MAS) கட்சி, பொலிவியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்தது. அதேபோல், ஹொண்டூராஸ் நாட்டில், அமெரிக்க அரசு தனது ஆதரவுடன் இருந்த வலதுசாரி வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவோம் என மிரட்டியதன் பின்னணியில், ஆளும் இடதுசாரி கட்சியின் வேட்பாளர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.


அமெரிக்கா: ட்ரம்ப் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நியூயார்க் நகர முதல்வர் தேர்தலில் மம்தானி வெற்றி

அமெரிக்காவில், டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் ஜனநாயக இடைவெளிகளை குறைக்கும் கொள்கைகளுக்கு எதிராக பெரும் போராட்ட அலை வெடித்தது.
மற்றும், புலம்பெயர்ந்தோர் (migrants) மீது நடந்த பரவலான கைது மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை எதிர்த்தும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த மக்களின் வெறுப்பு நியூயார்க் நகர முதல்வர் தேர்தலில் வெளிப்பட்டது. Zohran Mamdani, நகரின் அதிகாரப்பூர்வ ஆதரவாளர் வேட்பாளர்களை வென்று, மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் வெற்றியை பெற்றார்.


மடகாஸ்கர்: இளைஞர் போராட்டங்கள் அரசைக் கவிழ்த்தன

மின்சாரம் மற்றும் நீர் விநியோக இடையூறுகள் வாழ்க்கையை கடினமாக்குவதால் மக்கள் கோபமடைந்தார்கள்.  செப்டம்பர் 25, 2025 அன்று இளைஞர்கள் தலைமையில் வெகுஜன போராட்டங்கள் அங்கு அலையாக வெடித்தன. ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஆரம்பத்தில் அரசாங்கத்தை கலைப்பதன் மூலம் நிலைமையைத் தணிக்க முயன்றார், ஆனால் போராட்டங்கள் அதிகரித்ததால், மடகாஸ்கர் ஆயுதப்படைகள் அக்டோபர் 13, 2025 அன்று ஆண்ட்ரி ராஜோலினாவின் அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கின.


தீமோர்-லெஸ்டே: இளைஞர்கள் ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எழுச்சி

2025 செப்டம்பர்  இல் மூன்று நாள் இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் வெற்றிகரமாக திமோர்-லெஸ்டே தேசிய நாடாளுமன்றத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய சொகுசு கார்களை வாங்கும் திட்டங்களை ரத்து செய்ய கட்டாயப்படுத்தியது.


மக்ரிபி: Gen Z இளைஞர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக போராடுகின்றனர்

மக்ரிபியில் “Gen Z” இளைஞர்கள், அரசாங்க கல்வி மற்றும் பொதுச் சுகாதார சேவைகளை மேம்படுத்த போராட்டம் நடத்தினர்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டங்களில் பணத்தை வீணடிப்பதைக் கேள்விக் கேட்டனர்.  இந்த போராட்ட அலைக்கு பதிலலிக்கும் விதமாக , மக்ரிபி அரசு, பொதுமக்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், சமூக சேவைகளை மேம்படுத்துவதற்கும் சில புதுமைகளை அறிமுகப்படுத்தியது.


இந்தியா: தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக 250 மில்லியன் தொழிலாளர்களும் விவசாயிகளும் வேலைநிறுத்தம் செய்தனர்

ஜூலை 9, 2025 அன்று இந்தியா முழுவதும் நடைபெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்தனர், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர்.


பிலிப்பீன்ஸ்: ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிலிப்பீன்ஸ், பிரசிடெண்ட் பாங்பாங் மார்கோஸ் ஆட்சியில், அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வெள்ளம் மேலாண்மை திட்டங்களில் ஏற்பட்ட ஊழல் மற்றும் திருட்டு விவகாரங்கள் காரணமாக, 2025 செப்டம்பர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை பெருமளவான போராட்ட அலை வெடித்தது.


மால்டீவ்ஸ்: பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம்

2025 செப்டம்பர் மாதம், மீடியாவைக் கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், மக்கள் ஊழல் மற்றும் ஜனாதிபதி மொஹமெட் முயிசு தலைமையிலான அரசின் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க இயலாததுக்கு எதிராகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


மங்கோலியா:  ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் பிரதமரை ராஜினாமா செய்ய வைத்தது

பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனின் மகனின் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பரமான செலவினங்களை அம்பலப்படுத்தும் சமூக ஊடகப் பதிவுகள், ஊழல், பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்த மங்கோலியாவில் இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் வெடித்தது.  ஓயுன்-எர்டேனே, மங்கோலியாவின் பாராளுமன்றத்தில் நம்பிக்கையற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர், 2025 ஜூன் 3 அன்று பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.


பெரு: ஊழல் மற்றும் குற்றம் மீதான பொதுமக்களின் கோபம்

தொடர்ந்து நடைபெறும் ஊழல் மற்றும் குற்றங்கள் மீதான பொதுமக்களின் கோபத்தின் காரணமாக, செப்டம்பர் 2025 இல் பெருவில் போராட்டங்களின் அலை வெடித்தது. பிரசிடெண்ட் டினா போலுவர்டே, ஆதரவு இல்லாமல், பெரு காங்கிரஸ் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இது அரசின் சிறுபான்மைக் குழுவினரின் அதிகாரத்தைக் காப்பாற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


பராகுவே: Gen Z இளைஞர்கள் மாற்றத்தை கோருகின்றனர்

பெருவின் போராட்ட அலைக்கு ஆதரவாக, பராகுவேயில் Gen Z இளைஞர்கள், 2025 செப்டம்பர் மாதம் முதல், ஜனாதிபதி சாண்டியாகோ பெண்யா தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

Friday, December 12, 2025

செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களின் வீட்டுரிமை போராட்டத்திற்கு வெற்றி விழா

 


செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் 34 பேருக்கு, இன்று வீட்டு சாவி கையளிப்பு விழா

21 ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் செமெனி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சைம் டார்பி (Sime Darby) இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்துக்கு 8 ஆண்டுகள் கழித்து, இறுதியாக முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கான நிரந்தர வீடுகளின் சாவிகளை பெறவுள்ளனர். விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

தேதி: 13 டிசம்பர் 2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.30
இடம்: Unit Pameran, No.1, Jalan Tenera Semenyih 3, Taman Tenera Semenyih,

Semenyih, Selangor.  (அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில்)

இந்தப் போராட்ட வரலாற்றின் சுருக்கமான பின்னணி

2004 ஏப்ரல் 1ஆம் தேதி, 11-ஆவது பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் கழித்து, தோட்ட நிர்வாகம் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை வழங்கியது. ஆனால் அந்த நாளில் அதைவிட அதிர்ச்சிகரமான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. தோட்ட மக்கள் தொடர்பான
 செயல்களில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க செயலாளர் மற்றும் கோவில் தலைவர் மாதுரவீரன், பணிநீக்கம் அறிவிப்பு பெற்ற அதே நாளில் இதயக் கோளாறால் உயிரிழந்தார். இது தொழிலாளர்களுக்கு இரட்டையான வேதனையாக அமைந்தது.

2008- ஆம் ஆண்டுக்குள், செமெனி தோட்டம் சைம் டார்பி நிறுவனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தோட்டத்தைச் சுற்றிய நிலங்கள் Tiara Timur மற்றும் Bandar Mewah Diamond City போன்ற புதிய திட்டங்களுக்காக விற்கப்பட்டன. இவை Kueen Lai Group of Companies, Mayland மற்றும் Country Garden Development ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டன. பல தலைமுறைகளாக தோட்டத்திற்காக தியாகம் செய்த தொழிலாளர்கள், இந்த வீடுகளைப் பார்த்து கனவு காண்பதற்கே மட்டுமே முடிந்தது.

தண்ணீர் பிரச்சினை, சேறு, காற்று மாசுபாடு மற்றும் மிரட்டல்கள் போன்ற பல சிரமங்களை கடந்து, செமெனி தோட்டத்தின் 17 முன்னாள் தொழிலாளர் குடும்பங்கள், தங்களுக்கான சொந்த வீடு விவகாரத்தில் உறுதியாக நிலைத்திருந்ததன் விளைவாக2017 பிப்ரவரி 28-ஆம் தேதி (பணிநீக்க அறிவிப்பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு) காஜாங், சௌஜானா இம்பியான் கோல்டு அண்ட் கண்ட்ரி ரிசோர்ட் பகுதியில் Sime Darby Properties & Plantations நிறுவனத்துடன் சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சமரசத்தின் அடிப்படையில், ஒவ்வொரு முன்னாள் தோட்டத் தொழிலாளர் குடும்பத்திற்கும் 1½ மாடி கொண்ட குறைந்த செலவிலான வரிசை வீடு (Rumah Teres Kos Rendah)18’ x 55’ (990 சதுர அடி) அளவில் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 34 குடும்பங்களுக்கு இந்த வீட்டு சலுகை வழங்கப்பட்டது.
இதில், போராட்டத்தை முன்னெடுத்த 17 குடும்பங்களுக்கு பல்வேறு மானியங்களுடன் வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டன,
மற்ற 17 குடும்பங்களுக்கு RM 42,000 என்ற மானிய விலையில் வீடுகள் வழங்கப்பட்டன.

2017 முதல், இந்த 17 குடும்பங்களுக்கு மாதம் RM 500 வாடகை பணம் உதவியாக வழங்கப்பட்டன. இறுதியாக, இந்தச் சனிக்கிழமை,
செமெனி தோட்டத்தின் 34 முன்னாள் தொழிலாளர் குடும்பங்கள் தங்களுக்கான வீட்டு சாவிகளைப் பெறவுள்ளனர்.


நன்றி தெரிவிப்பு

இந்த நீண்ட போராட்டத்திற்கு தொடர்ச்சியான ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய CDCதோட்ட சமூக ஆதரவு குழு (JSML) மற்றும்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM) ஆகிய அனைவருக்கும் எங்களது உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஊடகங்கள் நேரில் வந்து செய்தியளிப்பார்கள் என நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


எஸ். அருட்செல்வன்
மக்கள் சேவை மைய மேற்பார்வையாளர்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM), செமெனி
&
PSM தேசிய துணைத் தலைவர்

நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

 PSM அறிக்கை – 16 மார்ச் 2026 நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல. நிகோவை உடனடியாக விடுதலை செய்யுங்கள்! Parti Sosialis Malaysia (PSM), பஜாவ...