Thursday, December 25, 2025

2025- ஐ நினைவுகூரல்: சர்வதேச நிலை

2025 ஆம் ஆண்டு முழுவதும் உலகம் பல்வேறு நெருக்கடிகளால் தொடர்ந்து சிக்கித் தவித்தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, காலநிலைச் சிக்கல் முதல் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, முடிவற்ற போர் மோதல்கள் (உக்ரைன் போர், கம்போடியா–தாய்லாந்து எல்லை மோதல், இந்தியா–பாகிஸ்தான் மோதல் போன்றவை) மற்றும் பல இடங்களில் உருவாகும் போர் அச்சுறுத்தல்கள் வரை, உலகம் ஆழ்ந்த நெருக்கடியில் மூழ்கியுள்ளது.

இந்த உலகளாவிய ஆழமான நெருக்கடிகள், உலகளாவிய மூலதனவாத (கேபிடலிஸ்ட்) அமைப்பில் உள்ள தீவிர முரண்பாடுகளின் விளைவாகவே உருவாகின்றன. உலகின் பெரிய சக்திகளுக்கிடையிலான போட்டி, உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் அதிகரிக்கும் புவியியல் அரசியல் குழப்பங்களை (geopolitical turmoil) உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில், பல நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகள், இந்த நெருக்கடிகளை பயன்படுத்தி வெறுப்பு, இனவாதம், வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனப்பான்மை (xenophobia), சமலிங்க விரோதம் (homophobia), பெண்கள் மீது வெறுப்பு (misogyny) போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி, ஆளும் உயர்குடி சிறுபான்மையின் நலன்களை பாதுகாக்கும் அரசியல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால், இதையெல்லாம் மீறி, உலகின் பல பகுதிகளில் மக்கள் இந்த ஆழ்ந்த நெருக்கடிகளில் இருந்து வெளியேறும் வழிகளைத் தேடி போராட்டங்களைத் தொடர்கின்றனர். பல நாடுகளில், இளம் தலைமுறையான “ஜென் Z” (Gen Z) எழுச்சி பெற்று, நிலவும் அதிகார அமைப்புகளுடன் சவாலில் நின்று , அர்த்தமுள்ள சமூக மாற்றங்களை கோருகிறது.

இது, உலகெங்கும் மக்கள் விடுதலை, ஜனநாயகம் மற்றும் சமூக நீதி நோக்கி மேற்கொண்டு வரும் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியே.
மூலதனவாதம் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வரையில், மக்களின் போராட்டம் ஒருபோதும் நிற்காது…

2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் கலவரங்களையும் மக்களின் போராட்டங்களையும் இப்போது மீண்டும் நினைவுகூர்வோம்:


பாலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கு: சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சியின் கொடுமை தொடர்கிறது

சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சி, காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளும் இனப்படுகொலை குற்றங்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. 2025 ஜனவரியில் எட்டப்பட்ட அமைதி நிறுத்த ஒப்பந்தம், 2025 மார்சில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் காசாவை தாக்கத் தொடங்கியதன் காரணமாக முறியடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபரில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (AS) அரசு முன்வைத்த “காசா சமாதானத் திட்டத்தின்” (Gaza Peace Plan) முதல் கட்டத்தை செயல்படுத்த ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், மற்றொரு அமைதி நிறுத்த ஒப்பந்தம்  செய்யப்பட்டது.
எனினும், இந்த புதிய “சமாதானத் திட்டம்” கூட, சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சியின் கீழ் நிலவும் அநீதி மற்றும் அடக்குமுறையையே தொடரச் செய்கிறது.

அமெரிக்க பேராதிக்க சக்தியின் முழுமையான ஆதரவுடன் செயல்படும் சியோனிஸ்ட் இஸ்ரேல் ஆட்சி, மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் வன்முறைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதில், 2025 ஜூன் மாதத்தில் ஈரான்மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டதோடு, சிரியாவின் தென்மேற்கு பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது.

பாலஸ்தீன மக்கள்மீது நடைபெறும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக, உலகெங்கும் மக்கள் இயக்கங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதில், காசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க முயன்ற ‘ஃப்ளோட்டிலா சுமுத் குளோபல்’ (Flotila Sumud Global) கடற்பயணம், மற்றும் இத்தாலியில் நடைபெற்ற பெருமளவிலான தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.



இந்தோனேசியா: பிரபோவோ ஆட்சியின் அடக்குமுறை மற்றும் அமைப்புசார் தோல்விகளுக்கு எதிராக இளைஞர்கள் எழுச்சி

இந்தோனேசியாவில், இளைஞர்களை முன்னணியில் கொண்ட பெருமளவான போராட்ட அலை, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் ஆட்சியை எதிர்த்து வெடித்தெழுந்தது. இந்த ஆட்சி, சமூக அநீதியை மேலும் தீவிரப்படுத்துவதோடு, ஜனநாயக இடைவெளிகளையும் சுருக்குகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி, Affan Kurniawan எனும் இளைஞர் ஒருவர் போலீஸ் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவம், மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்த போராட்டங்களின் போது, பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, வழக்குகளுக்குள்ளாக்கப்பட்டனர்.



நேபாளம்: Gen Z இளைஞர் போராட்டங்கள் பிரதமரை பதவியிலிருந்து விலகச் செய்தன

நேபாளத்தில், “Gen Z” எனப்படும் இளம் தலைமுறையினர், ஊழலை சமாளிக்கத் தவறிய அரசை எதிர்த்து, அதே நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்தும் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் போது, சுமார் 76 பேர் உயிரிழந்த சம்பவங்கள் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதன் பின்னர்,  நேபாளத்தின் பிரதமரான K. P. சர்மா ஒலி பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, நேபாள பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டு, 2026 மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.




வெனிசூலா மற்றும் லத்தீன் அமெரிக்கா: அமெரிக்க பேராதிக்க அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன

பொலிவேரியன் குடியரசான வெனிசூலா, அமெரிக்க பேராதிக்க சக்தியிடமிருந்து இராணுவத் தாக்குதலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. மருந்து கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதென்ற பெயரில், அமெரிக்க அரசு தனது இராணுவ இயந்திரங்களை கரீபியக் கடலுக்கு அனுப்பியுள்ளது. எனினும், அதன் உண்மையான நோக்கம், நிக்கோலாஸ் மதுரோ தலைமையிலான வெனிசூலா அரசை கவிழ்ப்பதே என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதேவேளை, லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் இயக்கங்கள் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டன. 2005ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற Movimiento al Socialismo (MAS) கட்சி, பொலிவியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்தது. அதேபோல், ஹொண்டூராஸ் நாட்டில், அமெரிக்க அரசு தனது ஆதரவுடன் இருந்த வலதுசாரி வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவோம் என மிரட்டியதன் பின்னணியில், ஆளும் இடதுசாரி கட்சியின் வேட்பாளர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.


அமெரிக்கா: ட்ரம்ப் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நியூயார்க் நகர முதல்வர் தேர்தலில் மம்தானி வெற்றி

அமெரிக்காவில், டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் ஜனநாயக இடைவெளிகளை குறைக்கும் கொள்கைகளுக்கு எதிராக பெரும் போராட்ட அலை வெடித்தது.
மற்றும், புலம்பெயர்ந்தோர் (migrants) மீது நடந்த பரவலான கைது மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை எதிர்த்தும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த மக்களின் வெறுப்பு நியூயார்க் நகர முதல்வர் தேர்தலில் வெளிப்பட்டது. Zohran Mamdani, நகரின் அதிகாரப்பூர்வ ஆதரவாளர் வேட்பாளர்களை வென்று, மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் வெற்றியை பெற்றார்.


மடகாஸ்கர்: இளைஞர் போராட்டங்கள் அரசைக் கவிழ்த்தன

மின்சாரம் மற்றும் நீர் விநியோக இடையூறுகள் வாழ்க்கையை கடினமாக்குவதால் மக்கள் கோபமடைந்தார்கள்.  செப்டம்பர் 25, 2025 அன்று இளைஞர்கள் தலைமையில் வெகுஜன போராட்டங்கள் அங்கு அலையாக வெடித்தன. ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஆரம்பத்தில் அரசாங்கத்தை கலைப்பதன் மூலம் நிலைமையைத் தணிக்க முயன்றார், ஆனால் போராட்டங்கள் அதிகரித்ததால், மடகாஸ்கர் ஆயுதப்படைகள் அக்டோபர் 13, 2025 அன்று ஆண்ட்ரி ராஜோலினாவின் அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கின.


தீமோர்-லெஸ்டே: இளைஞர்கள் ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எழுச்சி

2025 செப்டம்பர்  இல் மூன்று நாள் இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் வெற்றிகரமாக திமோர்-லெஸ்டே தேசிய நாடாளுமன்றத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய சொகுசு கார்களை வாங்கும் திட்டங்களை ரத்து செய்ய கட்டாயப்படுத்தியது.


மக்ரிபி: Gen Z இளைஞர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக போராடுகின்றனர்

மக்ரிபியில் “Gen Z” இளைஞர்கள், அரசாங்க கல்வி மற்றும் பொதுச் சுகாதார சேவைகளை மேம்படுத்த போராட்டம் நடத்தினர்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டங்களில் பணத்தை வீணடிப்பதைக் கேள்விக் கேட்டனர்.  இந்த போராட்ட அலைக்கு பதிலலிக்கும் விதமாக , மக்ரிபி அரசு, பொதுமக்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், சமூக சேவைகளை மேம்படுத்துவதற்கும் சில புதுமைகளை அறிமுகப்படுத்தியது.


இந்தியா: தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக 250 மில்லியன் தொழிலாளர்களும் விவசாயிகளும் வேலைநிறுத்தம் செய்தனர்

ஜூலை 9, 2025 அன்று இந்தியா முழுவதும் நடைபெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்தனர், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர்.


பிலிப்பீன்ஸ்: ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிலிப்பீன்ஸ், பிரசிடெண்ட் பாங்பாங் மார்கோஸ் ஆட்சியில், அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வெள்ளம் மேலாண்மை திட்டங்களில் ஏற்பட்ட ஊழல் மற்றும் திருட்டு விவகாரங்கள் காரணமாக, 2025 செப்டம்பர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை பெருமளவான போராட்ட அலை வெடித்தது.


மால்டீவ்ஸ்: பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம்

2025 செப்டம்பர் மாதம், மீடியாவைக் கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், மக்கள் ஊழல் மற்றும் ஜனாதிபதி மொஹமெட் முயிசு தலைமையிலான அரசின் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க இயலாததுக்கு எதிராகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


மங்கோலியா:  ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் பிரதமரை ராஜினாமா செய்ய வைத்தது

பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனின் மகனின் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பரமான செலவினங்களை அம்பலப்படுத்தும் சமூக ஊடகப் பதிவுகள், ஊழல், பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்த மங்கோலியாவில் இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் வெடித்தது.  ஓயுன்-எர்டேனே, மங்கோலியாவின் பாராளுமன்றத்தில் நம்பிக்கையற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர், 2025 ஜூன் 3 அன்று பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.


பெரு: ஊழல் மற்றும் குற்றம் மீதான பொதுமக்களின் கோபம்

தொடர்ந்து நடைபெறும் ஊழல் மற்றும் குற்றங்கள் மீதான பொதுமக்களின் கோபத்தின் காரணமாக, செப்டம்பர் 2025 இல் பெருவில் போராட்டங்களின் அலை வெடித்தது. பிரசிடெண்ட் டினா போலுவர்டே, ஆதரவு இல்லாமல், பெரு காங்கிரஸ் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இது அரசின் சிறுபான்மைக் குழுவினரின் அதிகாரத்தைக் காப்பாற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


பராகுவே: Gen Z இளைஞர்கள் மாற்றத்தை கோருகின்றனர்

பெருவின் போராட்ட அலைக்கு ஆதரவாக, பராகுவேயில் Gen Z இளைஞர்கள், 2025 செப்டம்பர் மாதம் முதல், ஜனாதிபதி சாண்டியாகோ பெண்யா தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

No comments:

Post a Comment

2025- ஐ நினைவுகூரல்: சர்வதேச நிலை 2025 ஆம் ஆண்டு முழுவதும் உலகம் பல்வேறு நெருக்கடிகளால் தொடர்ந்து சிக்கித் தவித்தது. உலகளாவிய பொருளாதார நெர...