2025-ஐ திரும்பிப் பார்க்கும்போது: PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம்
2025 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இந்நேரத்தில், 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் புதிய துவக்கத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டத்தில் Parti Sosialis Malaysia (PSM) மேற்கொண்ட முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் மீளாய்வு செய்வது முக்கியமானதாகும்.
இந்த ஆண்டின் பல்வேறு சவால்களையும் சமூக அநீதி நிலைகளையும் எதிர்கொண்டு, மக்களின் குரலை மேலோங்க, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க, மற்றும் சமூக நீதியை நிலைநாட்ட PSM தொடர்ந்து முனைப்புடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி சுருக்கம், நாம் கடந்து வந்த வருடத்தில் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் மக்கள் நலனை மையமாகக் கொண்டதையே வலியுறுத்துகிறது — அதுவே எங்கள் பயணத்தின் உள்ளார்ந்த சக்தியாக இருந்தது.
1. பொது சுகாதார அமைப்பைக் காப்பாற்றும் பிரச்சாரம்
Parti Sosialis Malaysia (PSM), 13 ஆகஸ்ட் 2025 அன்று “பொது சுகாதார அமைப்பைக் காப்பாற்றுங்கள்” எனும் முக்கியமான தேசிய பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மக்கள் நலன், சுகாதார சமத்துவம் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை உறுதிசெய்ய, இந்தப் பிரச்சாரம் கீழ்காணும் நான்கு அடிப்படை மற்றும் அவசர கோரிக்கைகளை முன்வைக்கிறது. KKM திட்டம் (Skim Rakan KKM) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இத்திட்டம் பொது சுகாதார சேவையின் தனியார்மயத்தைக் துரிதப்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதிய தனியார் மருத்துவமனைகளுக்குத் தற்காலிகத் தடை (Moratorium) விதிக்கப்பட வேண்டும், இதன் மூலம் தனியார் மருத்துவ வர்த்தகத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தைத் தடுக்கவும், பொது மருத்துவ அமைப்பை நிலைநிறுத்தவும் முடியும்.
மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (KDNK) 5% ஆக உயர்த்த வேண்டும், மக்கள் பயன்படும் பொது மருத்துவ சேவைகளுக்கு போதுமான வளங்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்க இது அவசியமானது. தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டணங்களுக்கு உச்ச வரம்பு (ceiling) நிர்ணயிக்கப்பட வேண்டும், இது மக்கள் மீது ஏற்படும் அதிகப்படியான மருத்துவச்செலவுச் சுமையை குறைக்கும் முக்கியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகம். இந்தப் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், PSM உறுப்பினர்கள் நாடு முழுவதும் பிரசுரங்கள் விநியோகம், கையெழுத்து சேகரிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சுகாதார உரிமையை பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு குரலும் வலிமையாகும்.
இந்த முயற்சிக்கு ஆதரவாக,ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டு உங்கள் ஆதரவையும் பதிவு செய்யுங்கள் மக்களே.
2. கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்களின் கட்டாய வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டம்
சிலாங்கூர், கிள்ளான், பண்டமாரான் பகுதியில் உள்ள கம்போங் ஜாலான் பாப்பான் நகரப் குடியிருப்பாளர்களுக்கு, மாற்று வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், மேம்பாட்டாளர்கள் தரப்பால் கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொண்டனர். 2025 நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெற்ற கட்டாய வீட்டுடைப்பு நடவடிக்கையின்போது, குடியிருப்பவர்களின் வீடுகளை பாதுகாக்க முயன்ற PSM செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் உட்பட 23 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்கள், தங்களது வீட்டு உரிமைக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட மாற்று வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் சிலாங்கூர் மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
3. SD Guthrie தோட்டத்திலிருந்து கட்டாய வெளியேற்றத்திற்கு எதிராக கால்நடை விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம்
தேசிய மார்ஹைன் கால்நடை விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (Gabungan Penternak Marhaen Nasional), SD Guthrie Berhad நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் சிறிய அளவில் மாட்டுப்பண்ணை நடத்தி வரும் சிறு கால்நடை விவசாயத் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. 2025 பிப்ரவரி 12ஆம் தேதி, சபாக் பெர்ணம் தோட்டப் பகுதியில், அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகமும் இணைந்து அவர்கள் வளர்த்து வந்த மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட போது, இரு கால்நடைத் தொழிலாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, 2025 ஜனவரி 22-ஆம் தேதி, SD Guthrie Berhad நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து சிறிய அளவில் மாடு வளர்க்கும் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிலாங்கூர் முதல்வரின் (Menteri Besar) தலையீட்டை கோரி, 2025 அக்டோபர் 2ஆம் தேதி இன்னொரு மகஜர் (memorandum) அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
4. தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு உரிமையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் – தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை
தோட்ட சமூக ஆதரவு குழு (Jawatankuasa Sokongan Masyarakat Ladang – JSML), தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமையை உறுதி செய்யும் பாதுகாப்பதற்காக “தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி திட்டச் சட்டம் (Akta Skim Perumahan Pekerja Ladang)” இயற்ற வேண்டும் என வலியுறுத்தி, 2025 ஆகஸ்ட் 13-ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பு ஒரு போராட்ட நடவடிக்கையை நடத்தியது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, PSM துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி காவல்துறையால் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு, 2025 ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தன்னை கைது செய்ய உத்தரவு இருப்பதாக காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்து, அருட்செல்வன் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD Dang Wangi) “சுயமாக ஆஜராக” சென்றார். அவர் சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் அதே இரவு விடுவிக்கப்பட்டார்.
5. ஆயேர் கூனிங் இடைத்தேர்தலில் PSM போட்டியிட்டது
2025 ஏப்ரல் 26-ஆம் தேதி பேராக் மாநிலம் ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான (DUN Ayer Kuning) இடைத்தேர்தலில் (PRK), PSM துணை பொதுச் செயலாளர் மற்றும் பேராக் மாநில PSM தலைவர் பவானி K.S. அவர்களை வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) அந்த சட்டமன்றத் தொகுதியை மேலும் அதிகமான பெரும்பான்மையுடன் மீண்டும் தக்கவைத்தது. ஆனால், இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் 15-வது பொதுத் தேர்தலை (PRU-15) விட குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இரண்டு பெரிய அரசியல் கூட்டணிகளை எதிர்கொண்டதால், PSM இந்தத் தேர்தலில் வெற்றி பெறவும், வைப்புத் தொகையை (deposit) காப்பாற்றவும் முடியாமல் போனாலும், PSM ஒரு ஊக்கமளிக்கும் முடிவைப் பெற்றது. பவானி, PRU-15யை ஒப்பிடுகையில், தனக்கான வாக்கு ஆதரவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி, 1,106 வாக்குகளை (சரியான வாக்குகளின் 6.1%) பெற்றார். ஆயேர் கூனிங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பவானி மற்றும் PSM தோழர்கள் நடப்பில் இருக்கும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பரப்புரை செய்தனர்.
6. Kledang Saiong-கின் வனத் தோட்டத் திட்டத்திற்கு எதிர்ப்பு
பேராக், கிளெடாங் சையோங் வனப்பகுதியில் வனத் தோட்டத் திட்டத்தை எதிர்க்கும், சிவில் சமூக வலையமைப்பின் முயற்சிகளுக்கு PSM தொடர்ந்து ஆதரவளிக்கிறது. வனத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி நவம்பர் 18, 2025 அன்று சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
7. டிரம்பின் மலேசியா வருகைக்கு எதிர்ப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி நிலை மாநாட்டுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கு வருகை தருவதை எதிர்த்து 2025 அக்டோபர் 26 அன்று சிவில் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் PSM ஆர்வலர்கள் பங்கேற்றனர். டிரம்பை மலேசியாவிற்கு அழைக்க மலேசிய அரசாங்கத்தின் முடிவை PSM கண்டிக்கிறது.
8. செழிப்பான மற்றும் உள்ளடக்கமான (Inclusive) ASEAN நோக்கி PSM கோரிக்கை
PSM, 55 சமூகநிலை அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட மகஜரை (memorandum) 2025 ஜனவரி 21-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்தது. இந்த மகஜரில், மலேசிய அரசு, ASEAN தலைவராக செயல்பட்டு, தென்கிழக்கு ஆசியா பிராந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ASEAN வளர்ச்சிக்கான தலைமைப் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
9. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் குரல்களை அடக்கும் அச்சுறுத்தும் வழக்குகளைக் கையாள்வதற்காக அவதூறு வழக்குச் சட்டத்தில் திருத்தம் செய்ய PSM வலியுறுத்துகிறது
அவதூறு வழக்குகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி, PSM மே 19, 2025 அன்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (SUHAKAM) ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. இதனால், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்துவதில் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த சில கட்சிகள் அவதூறு வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்தமுடியாது.
10. மர்ஹைன் வீடுகளை, வங்கிகள் ஏலம் விடுவதற்கு எதிரான போராட்டம்
மர்ஹைன் மக்களின் வீடுகளை வங்கிகள் தன்னிச்சையாக ஏலம் விடுவதை PSM தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக மே 14, 2025 அன்று ‘ஆம் பேங்க்’ தலைமையகத்தின் முன் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது, உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு வீட்டுக் கடன் பெற்றவரின் வீட்டு ஏலத்தை ஒத்திவைக்க ஆம் பேங்க் ஒப்புக்கொண்டது.
11.Flotila Sumud Global- லுக்கு ஆதரவு அளித்ததற்காக பாலஸ்தீன ஆர்வலர்கள் கைது
2025 அக்டோபர் 2ஆம் தேதி, கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இரு பாலஸ்தீன் ஆதரவு செயற்பாட்டாளர்கள் போலீசார் கைது செய்தனர். அவர்கள், இஸ்ரேல் சயோனிஸ்ட் ஆட்சியால் தடையீடு செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட Flotilla Sumud Global க்கு ஆதரவு காட்டியதை வெளிப்படுத்த போராடினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kamal Aarif, PSM சோசலிச இளைஞர் பிரிவு உறுப்பினர் மற்றொருவர் GEGAR உறுப்பினர் ஆவார். இருவரும் அதே இரவில் விடுவிக்கப்பட்டனர்.
12. CCUS மசோதாவுக்கு எதிர்ப்பு
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்ட PSM மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் மார்ச் 19, 2025 அன்று தேசிய சட்டமன்றத்தை காலநிலை நெருக்கடிக்கு தவறான தீர்வைக் கொண்டு வந்து சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு மசோதாவை (CCUS மசோதா) நிறைவேற்ற அவசரப்பட வேண்டாம் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
13. பேராக் விவசாயிகளின் உரிமை மற்றும் உணவு பாதுகாப்புக்கான போராட்டம்
சிறு உணவு உற்பத்தியாளர்களின் வாழ்வாதார ஆதாரத்தையும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாக்க, சிறு விவசாயிகளின் விவசாய உரிமையை PSM தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. கோலா பிகாமில் உள்ள விவசாயிகள் உட்பட, பேராக்கில் உள்ள சிறு விவசாயிகளுக்கு எதிரான பல வெளியேற்ற வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
14. நீதி சுதந்திரத்தை பாதுகாக்க வழக்கறிஞர்கள் பேரணி – PSM ஆதரவு
PSM செயற்பாட்டாளர்கள், 2025 ஜூலை 14 ஆம் தேதி நடத்தப்பட்ட மலேசிய வழக்கறிஞர் சங்கத்தால் (Bar Council) ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஆதரவு வழங்கினர். இந்தப் பேரணியில் சுமார் 1,200 வழக்கறிஞர்கள் கலந்து, நீதி சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சியில் பங்கேற்றனர்.
15. 2025 சோசலிச மாநாடு
PSM, 2025 நவம்பர் 15–16 அன்று கோலாலம்பூர் நகரில்சோசலிசமாநாட்டை நடத்தி, சர்வதேச அரசியல் அதிர்வுகள் மற்றும் மக்கள் சக்தியை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியோனேசியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து தோழர்கள் கலந்துகொண்டனர்.
16. 2025 தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போராட்டம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்காக கோலாலம்பூரில் மே 1, 2025 அன்று சுமார் 1,500 பேர் “Pekerja Tiang Seri Negara – Naikkan Gaji, Bukan Bebanan”. என்ற கருப்பொருளுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment