Tuesday, January 14, 2020

உழவர்களை வாழ வைப்போம் ! பிஎஸ்எம் பொங்கல் வாழ்த்து ...





லேசியா வாழ் அனைவருக்கும் மலேசிய சோசலிச கட்சியின் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் என்பது வெறும் ஒரு கலாச்சாரா நிகழ்ச்சியாக பார்க்கக்கூடாது. நமது முன்னோர்கள் பொங்கல் கொண்டடியதற்கு   அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்  பொருளாதாரத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அதன் பின்னணி மிக முக்கியமானது. ஆனால் இன்றைய சூழலில் நம் நாட்டில் பொங்கல் எனும் திருநாளை ஒரு கலை  மற்றும் கலாசார நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறோம். அதன் உண்மையான நோக்கமானது மறைக்கப்பட்டே வருகிறது.


இந்த நன்னாளில் பிஎஸ்எம் பொங்கல் குறித்த சில விஷயங்களை நினைவுபடுத்த விரும்புகிறது. முக்கியமாக உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை உழவர்களுக்கும்  கால்நடை வளர்ப்பவர்களுக்கும்  முதன்மை திருவிழாவாக இருக்கிறது.  ஆனால் மலேசியாவில் உணவு உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிஇருக்கிறது.

கடந்த ஆண்டு விவசாயம், விவசாயம் சார்ந்த துணையமைச்சர் சிம் சீ சின் ஓர் உரையில் தற்போது  32 மில்லியன் ஜனத்தொகையை கொண்டிருக்கும் மலேசியா பெரிய அளவில், விவசாயம் சார்ந்த  உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறது என்று கூறியிருந்தார். அதாவது நமது சொந்த நாட்டு மக்களுக்கு தேவையான உணவை நமது நாட்டிலேயே தயாரிக்க முடியாத சூழ்நிலையை அவரின் உரை   தெளிவாக உணர்த்தியிருந்தது. 52 பில்லியன் ரிங்கிட்டுக்கு அயல்நாட்டிலிருந்து நமக்கான உணவு பொருட்கள்  தருவிக்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமற்ற விஷயம் என்று சொல்வதைக் காட்டிலும் இது ஒரு ஆபத்தான விஷயமாகத்தான்   பிஎஸ்எம் பார்க்கிறது. இப்படி சொல்வதற்கான  காரணம்  1996/97 ஆம் ஆண்டுகளில் ஆசியா ரீதியில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது அடிப்படை உணவிலிருந்து எல்லா பொருட்களுமே விலை ஏற்றம் கண்டதை  மலேசிய மக்கள் அனைவருமே சந்தித்து கடந்து வந்திருக்கிறோம்.


எனவே நாம் விவசாயத்தை தொடர்ந்து புறம் தள்ளினால் கூடுதலாக பிற நாடுகளிலிருந்து பெறப்படும் உணவினால் நமது நாட்டு மக்கள் பாதிப்படைவார்கள் என்பது சாத்தியமான ஒன்று. அரசாங்கத்திட்டத்தில் சில தவறுகள் நடந்திருக்கிறது. 1970-ஆம் ஆண்டு விவசாயம் செய்வதற்கும் உணவு உற்பத்தி செய்வதற்குமான திட்டத்தை புறக்கணித்துவிட்டு, லாப நோக்கத்திற்காகவும் ஏற்றுமதிக்காகவும் செம்பனை, ரப்பர் உள்ளிட்ட  நடவுகளை செய்வதற்கு நிறைய நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அக்காலக்கட்டங்களில் செம்பனை நடவு செய்வது முதன்மையாக இருந்தது. மேலும் பெருநிறுவனங்கள் இந்த வணிகத்தில்  பெரிய அளவில்  ஈடுபட்டன. மக்களுக்கான உணவை தயாரிக்கக்கூடிய நிலங்கள் எல்லாம் செம்பனை எண்ணெய் செய்வதற்கான நிலங்களாக மாற்றப்பட்டன.

அப்போதே தொடங்கப்பட்ட அத்திடத்தின் தீவிரம் இன்று பூதாகரமாக உருமாறிவருவதை பார்க்க முடிகிறது. மீண்டு மீண்டும் அரசாங்கம் விவசாயத்தை புறக்கணிப்பது மிகப்பெரிய தவறாகும். பிஎஸ்எம் இதை வன்மையாக எதிர்க்கிறது.

பொங்கல் பண்டிகையான இந்த நாளில் அரசாங்கம் இப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மிக சமீபத்திய கண்ணோட்டத்தில் நிறைய விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு பேராக் மாநிலத்திலுள்ள சில விவசாய நிலங்கள் தனியார் மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவங்களால் கைப்பற்றப்பட்டு விவசாய மக்களை விரட்டியடித்த சம்பவங்களை கண்டித்து  பிஎஸ்எம்    போராட்டதில் ஈடுபட்டது.

விவசாயிகளுக்கு இம்மாதிரியான அநீதிகள் நடக்கக்கூடாது. காரணம்  இவர்கள் நாட்டுக்காகவும்  நாட்டு மக்களுக்காகவும் உணவு உற்பத்தி செய்யும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அரசு ஆதரித்து நிலங்களை வழங்க வேண்டும் மாறாக  இவர்களை விரட்டியத்து நிலங்களை பிடுங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது? 
கடந்த மாதம் கேமரன் மலையில் நடந்த இந்திய விவசாயிகளின் நில பிரச்சனை நாட்டையே பரபரப்பாக்கியது. ஒரு நிரந்தர நிலத்தை வழங்காமல் அவர்கள் விவசாயம் செய்திருந்த பயிர்களை அழித்து மிகவும் கடுமையாக நடந்துகொண்டது அதிர்ச்சியாக இருந்தது. விவசாய மக்களை இப்படி கடுமையாக நசுக்குவதில் என்ன நியாயத்தை கூற முடியும்.

அதுமட்டுமல்லாம் நாட்டில் முக்கியமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் கால்நடை வளப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல். பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும்  தோட்ட தொழிலார்களுக்கு  அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமான  சைம் டர்பி நிறுவனம் தற்போது பெரிய நெருக்குதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கால்நடைகளை தோட்டத்தில் வளர்க்க கூடாது என்று அறிவித்திருப்பதுடன், அத்தொழிலை முழுமையாக தொழிலார்கள் கைவிடக்கூடிய நெருக்கடியை அந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.
இம்மாதிரியான விஷயங்கள் பக்கத்தான் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான பார்வையை ஏற்படுத்துகிறது.

ஒரு நேரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு  விவசாய மக்களை விரட்டியடிப்பதும், கால்நடை வளர்பவர்களை வாழவிடாமல் துரத்துவதும் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. உழவர்கள் நல்லவிதமாக இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். எனவே விவசாய பிரச்சனையை நாட்டின் அனைத்து மக்களும் தனது சொந்த பிரச்சனையாக கருதி விவசாய மக்களுக்காக ஈடுபடும் போராட்ட்ங்களில் கைகொடுக்க வேண்டும் என பிஎஸ்எம் முக்கியமாக கேட்டுக் கொள்கிறது. 
இந்த நல்ல நாளில் பொங்கலை ஒரு கலாச்சார விழாவாக மட்டும்  பார்க்காமல் உழவு செய்யும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் சிந்தித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன் ஒவ்வொருவரும் இதற்காக தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பி எஸ் எம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.  

சிவராஜன் ஆறுமுகம்
பி எஸ் எம் தேசிய பொதுச்செயலாளர்.  


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...