Tuesday, February 4, 2020

மாட்டுப் பண்ணையாளர்கள் குமுறல்..














எங்களுக்கு முறையான இடத்தை வழங்காமல்
வெளியேற்றுவதில் குறியாக இருக்காதீர்
மாட்டுப் பண்ணையாளர்கள் குமுறல்!!

கிள்ளான், பிப்.2-
   மூன்று தலைமுறையாக மாடுகள் வளர்த்து வரும் எங்களை வெளியேற்றுவதிலே குறியாக இருக்காதீர்கள். எங்களுக்கு முறையான இடத்தை அடையாளம் காட்டுங்கள். ஏதோ ஒரு இடத்தை காட்டிவிட்டு அங்கே போங்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது என மனம் குமுறுகின்றனர் அம்பாங் போட்டானிக் பகுதியில் மாடுகள் வளர்த்து வரும் பண்ணையாளர்கள்.
  முன்பு ஹைலண்ட்ஸ் என்ற தோட்டத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக மாடுகள் வளர்த்து வந்தோம். அப்போது தோட்ட நிர்வாகம் எங்களுக்கு இடையூறு கொடுத்ததில்லை. 2003 ஆண்டு தோட்டம் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொண்ட போது தங்களுக்கு இடம் இல்லாமல் போனதால் தற்காலிகமாக அம்பாங் போட்டானிக் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மாடுகள் வளர்த்து வருவதாக ‘சுசு ரவி’ என்ற தேவேந்திரன் ஆறுமுகம் கூறினார். சுமார் 160 மாடுகளை வளர்த்து வருவதாக குறிப்பிட்ட அவர்,
  கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் அவ்விடத்தை காலி செய்ய இடையூறு கொடுத்து வருகிறது. மாடுகளை வளர்க்க புதிய இடமாக பந்திங் வட்டாரத்தில் உள்ள ஓலாக் லெம்பிட் பகுதியில் வழங்குவதாகவும் அங்கு மாறிச்செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்களின் அன்றாட பால் வியாபாரம் மற்றும் இதர நடவடிக்கைகள் யாவும் கிள்ளான் வட்டாரத்தைச் சுற்றியே இருப்பதால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை அடையாளம் காட்டினாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால்,40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதோடு, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் காடாக இருக்கும் இடத்திற்கு மாறிப்போகச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.
  இதனிடையே, இவர்களின் நிலவரம் குறித்து மாநில மந்திரி பெசாரின் அலுவலகத்துடன் தொடர்புக்கொண்டு நல்ல பதில் கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் குறித்து 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் அனுப்பியும் எந்தவொரு கடிதத்திற்கும் பதிலும் அளிக்காத கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் இவர்களை வெளி அனுப்பவதில் முனைப்பு காட்டுவது ஏன் என பி.எஸ்.எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான சிவரஞ்சனி மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
  கிள்ளான் வட்டாரத்தில் பல இடங்களில் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இன்று தேவேந்திரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை மற்றவர்களுக்கு வராது என யார் சொன்னது. எனவே அவருக்கு ஆதரவு தரும் வகையில் மற்ற பண்ணையாளர்களும் அவருக்கு துணையாக குரல் கொடுத்தனர். புக்கிட் ராஜாவை சேர்ந்த கிருஷ்ணன் ரத்னம் 80 மாடுகளை வளர்த்து வருவதாக குறிப்பிட்டார். ஆனந்தாய் முனியாண்டி 50 மாடுகள் வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
   இந்த மாடு வளர்ப்புக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேண்டும். நினைத்தது போல் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என அம்பாங் போட்டானிக்கைச் சேர்ந்த  நிர்மலாதேவி பரசுராமன் குறிப்பிட்டார். ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கும் புதிய இடம் வாடகை அடிப்படையில் கொடுப்பதால் அதற்கு தாங்கள் சம்மதிக்க மாட்டோம் என கிள்ளான் ஜெயாவைச் சேர்ந்த அஞ்சலைதேவி ஆறுமுகம் தெரிவித்தார். அப்போதும் திடீரென இடத்தை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம். கால்நடை வளர்ப்புகளுக்கு ஆதரவு வழங்கி வரும் விவசாய அமைச்சும் மாநில மந்திரி பெசாரும் தாங்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுவிற்கு நல்ல பதிலை வழங்குவார்கள் என நம்புவதாக குறிப்பிட்ட சித்தி உமா, இன்றைய நவீன காலத்தில் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் குறைந்துக் கொண்டே வருவதால் ஆர்வத்தோடு பண்ணைத் தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் இடையூறு கொடுக்காமல் கைக்கொடுத்து தூக்கிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



செய்தியாளர் : பி.ஆர்.ஜெயசீலன்

பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை) 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...