Thursday, April 8, 2021

கம்போங் மாணிக்கத்தில் இருந்த அங்காடி கடைகள் உடைத்தெரியப்பட்டன!


பாங்கி: பாங்கி லாமா கம்போங் மாணிக்கத்தில் இருந்த 12 அங்காடிக் கடைகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன. கிட்டதட்ட 30-35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதொழில் செய்துவந்த வியாபாரிகளின் கடைகள் உடைக்கப்பட்டது.

கடந்த மாதம் காஜாங் நகராண்மைக்கழகம் சுமார் 14 கடைகளுக்கு அங்கிருந்து அகற்றுவதற்கான நோட்டீசை வழங்கியது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் இந்த கடைக்கள் அமைக்கப்பட்டிருந்தபடியால் அதை அகற்றுவதற்கான வேலையில் காஜாங் நகராண்மைக்கழகம் இறங்கியது. கடந்த மாதத்திலிருந்து அங்கு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு நெருக்கடியையும் கொடுத்து வந்தது.


இந்தப் பிரச்னையின் உச்சக்கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை மண்வாரி இயந்திரங்களுடன் கம்போங் மாணிக்கத்தில் நுழைந்த காஜாங் நகராண்மைக்கழக அதிகாரிகள் கடைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 12 கடைகள் உடைபட்டன. அதே வேளையில் பச்சையப்பன் என்பவர் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றிருப்பதால் அவரின் கடை உடைபடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டது.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தை அறிந்து பி.எஸ்.எம் கட்சியின் தேசிய துணைத்தலைவரான அருட்செல்வன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துச்சென்று நகராண்மைக்கழக அதிகாரிகளை கடைகளை உடைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். காரணம், அவர்களின் வியாபாரத்திற்கு அல்லது வாழ்வாதரத்திற்கு ஒரு மாற்று வழியை ஏற்படுத்தாமல் கடைகளை உடைப்பது சரியல்ல என்று அருட்செல்வன் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கடைகள் உடைபடுவதற்கான நோட்டிஸ் கிடைக்கப்பெற்றவுடன், காஜாங் நகராண்மைக்கழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைகள் உடைபடாது என்று இரு நாட்களுக்கு முன்பு சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் மஸுவான் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடதக்கது. நகராண்மைக்கழகத்திடமும் பேச்சுவார்த்தை தொடரும் வேளையில் யாருக்கும் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இப்படி கடைகளை உடைப்பதில் எந்த ஞாயமும் இல்லை என்று அருள்செல்வன் மேலும் கூறினார்.

பூக்கடை, தையல்கடை, வெல்டிங் கடை என்று பல இந்தியர்கள் அங்கு சிறுதொழில் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மாற்றுக்கடைகளை வழங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் கடைகளை இழந்து தங்களின் வாழ்வாதரத்தை இழந்திருக்கும் சிறுதொழில் வியாபாரிகளின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

கடந்த வருடத்திலிருந்து கோவிட் நச்சுகிருமி தாக்கத்தினால், பெருங்கஷ்டத்தையும் நஷ்டத்தையும் சந்தித்துவரும் சிறுதொழில் தொழிலாளர்களுக்கு காஜாங் நகராண்மைக்கழகம் தற்போது இழைத்திருப்பது மாபெரும் கொடுமை என்று அங்கிருந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  



No comments:

Post a Comment

சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் !

பிஎஸ்எம் அறிக்கை – 4 நவம்பர் 2025 சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் நமது சமூகம் அதிகரி...