Thursday, April 8, 2021

பாட்டாளிகள் சார்பில் போராட்டம் வெடிக்கும்; புக்கிட் பெருந்தோங் மக்கள் எச்சரிக்கை

நிலத்தை கையகப்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகிறது? -  புக்கிட் பெருந்தோங் மக்கள் கேள்வி?

  


சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற கனவில் வீடுகளை வாங்கிய ரவாங் புக்கிட் பெருந்தோங் தோட்ட பாட்டாளிகள் 20 ஆண்டுகள் கடந்தும் தங்களுக்குரிய வீடுகள் நிரந்தரமில்லாமல் இருப்பதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ரவாங் வட்டாரத்தின் மிகப்பெரிய தோட்டமாக புக்கிட் பெருந்தோங் விளங்கியது. ரப்பர் செம்பனை தோட்ட தொழிலாளர் குடும்பங்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தனர். புக்கிட் பெருந்தோங் தோட்டத்தை மேம்பாடு செய்வதற்கு மேம்பாட்டு நிறுவனம் ஒன்று வாங்கியது. அப்போது மேம்பாட்டு நிறுவனத்துடன் தேசிய தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் 54 தோட்டப்பாட்டாளிகளுக்கு தரைவீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக 1999-ஆம் ஆண்டில் 25,000 வெள்ளி மதிப்புள்ள தரைவீடுகளை கட்டிகொடுக்கும் ஒப்பந்தத்தில் மேம்பாட்டு நிறுவனத்துடன் தோட்டப்பாட்டாளிகள் ஒப்பந்தம் செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் தரைவீடுகள் கட்டிகொடுக்கப்படும்; வீட்டிற்கான முன்பணம் செலுத்தும்படி மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 54 தோட்டப்பாட்டாளிகளும் தங்களது வசதிக்கு ஏற்ப  பணத்தைக் கட்டினர் என்று புக்கிட் பெருந்தோங் தோட்டத்தின் மூத்த தொழிலாளையான பி.பச்சையப்பன் (70 வயது) தெரிவித்தார். இவரோடு ஜி.தமிழ்ச்செல்வன் (56 வயது), எம். மாணிக்கவாசகம் (57 வயது),  பெ.லட்சுமணன் (49 வயது) ஆகியோடு உடனிருந்தனர்.  

சொந்த வீடுகளை வாங்கும் மகிழ்ச்சியில் தோட்டப்பாட்டாளிகளும் பப்ளிக் வங்கியில் கடன் பெற்று பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த 54 தோட்டப்பாட்டாளிகளுக்கும் வீடுகள் உறுதியிள்ளாமல் இருக்கிறது என்று அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

புக்கிட் பெருந்தோங் தோட்டப்பாட்டாளிகளின் வீடமைப்புத் திட்டத்தை, சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் கைவிட்டுவிட்டது. தேவையென்றால் தொழிலாளர்கள் வீட்டிற்காக கட்டிய முன்பணத்தை திருப்பிக்கொடுத்து விடுகிறோம்; வீடுகளை கட்டித்தரமாட்டோம் என்று மேம்பாட்டு நிறுவனம் பொறுப்பற்ற முறையில் கையை விரித்துவிட்டது என்று பத்திரியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட மக்களின் சிலர் கூறினர்.

மேம்பாட்டு நிறுவனத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். ஆனால், மேம்பாட்டு நிறுவனம் பிடிவாத போக்கை கடைபிடிக்கிறது. வீட்டிற்காக வங்கியில் வாங்கிய பணத்தையும் பலர் கட்டி முடித்துவிட்டனர். மேலும் பல தோட்டப்பாட்டாளிகள் வீட்டிற்காக முன்பணத்தை 2,500 வெள்ளி முதல் 15,000 வெள்ளிவரை செலுத்தியுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே புக்கிட் பெருந்தோங் தோட்ட பாட்டாளிகளின் வீட்டுப் பிரச்னையில் பி.எஸ்.எம்  தொடர்ந்து ஆரம்பநிலையிலிருந்து உதவிவருகிறது. இவ்விவகாரத்தை பொதுவெளியிலும் இணையத்திலும் பேசியும் பகிர்ந்தும் வருகிறது. உண்மையில் இந்த வீட்டு விவகாரத்தை பி.எஸ்.எம் ஒரு தேசிய பிரச்னையாக பார்ப்பதாக கட்சியின் தேசிய பொது செயலாளர் ஆ.சிவராஜன் தெரிவித்தார்.

ஷஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில நில மேம்பாட்டு அதிகாரிகளையும் (7/4/2021) சந்தித்து சிவராஜன் தலைமையில் மகஜர் ஒன்றை தோட்ட பாட்டாளிகள் வழங்கினர்.

புக்கிட் பெருந்தோங் தோட்டப்பாட்டாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கான நிலம் இன்னமும் விவசாய நிலத்தின் பெயரில் உள்ளது. மேலும், இந்நிலத்திற்கான நிலவரியும் மேம்பாட்டு நிறுவனம் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு செலுத்தவில்லை.

எனவே, அந்நிலத்தை சிலாங்கூர் அரசாங்கம் கையகப்படுத்தி, ஏமாற்றப்பட்ட புக்கிட் பெருந்தோங் தோட்ட பாட்டாளிகளின் வீடுகளை கட்டிகொடுக்க, மாநில அரசு முன்வரும்படி சிவராஜன் தொடந்து கோரிக்கை வைத்துவருகிறார்.

புக்கிட் பெருந்தோங் தோட்ட மக்களுக்காக, முன்பு தொடங்கப்பட்டப் கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், அவ்வீடுகள் பாழடைந்து கிடக்கிறது. வீடுகளைச் சுற்றிலும் செம்பனை மரங்கள் நடப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, ஏமாந்து நிற்கும் 54 தோட்ட மக்களுக்கும் வீடுகள் கிடைப்பதற்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று சிவராஜன் கேட்டுகொண்டார்.

இவ்விவகாரம் தொடர்ந்தால் மிக விரைவில் மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக மிகபெரிய அளவில் பாட்டாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

      

  

 


No comments:

Post a Comment

5 தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு வெற்றி

உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ...