Wednesday, October 20, 2021

குறைந்தபட்ச சம்பள உயர்வு பற்றி நல்ல செய்தி வரும் - டத்தோஶ்ரீ சரவணன்


 யதார்த்தம் VS  நம்பிக்கை- இரண்டாம் நாள் மார்ஹேன் கலந்துரையாடல்

 கூடிய விரைவில் குறைந்தபட்ச  சம்பள உயர்வு பற்றி நல்ல செய்தி வரும்     - டத்தோஶ்ரீ சரவணன்

இன்று, உலகின் அனைத்து நாடுகளும் தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் நம் நாட்டில், இப்பிரச்னைகளோடு  அரசியல் நெருக்கடியும் இணைந்துள்ளது  என்று  மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.  மர்ஹான் குழுவினரோடு தொழிலாளர்கள் தொடர்புடைய மேலும் 4 குழுக்களான மலேசிய சர்வதேச தொழிற்சங்க கவுன்சில் (UNI-MLC), அரசு மருத்துவமனை தொழிலாளர் சங்கம், தெற்கு மண்டல மின்னணுவியல் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு (JPKK) ஆகிய இயக்கங்களுடன் இணைந்து, தொழிலாளர் குரல்: யதார்த்தம் மற்றும் நம்பிக்கை என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசினார்.  

முன்னதாக வறுமை ஒழிப்பு தினத்தை பாமர மக்களுக்கான ’ தொடர் கருத்தரங்கில் 7 வெவ்வேறு பிரிவுகளில் மெய்நிகர் வழியாகவும் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில், முகநூல் தளத்திலும் zoom வழியாகவும் இணைவதற்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

 


UNI-MLC-யைச் சேர்ந்த  டத்தோ முகமது ஷாஃபி மம்மாலின் உரையோடு நிகழ்ச்சி தொடக்கம் கண்டது. கோவிட் பெறுந்தொற்று காரணத்தினால்    வணிக நடவடிக்கைகள் முடக்கியதோடு  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தால் ஓர் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் டத்தோ ஷஃபி பரிந்துரைத்தார். தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் அவர்.

பின்னர்  டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது அதிகாரப்பூர்வமான  உரையை நிகழ்த்தினார்.  உரையின்  போது தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்திருக்கும் தொழில்துறைக்கு உதவுவதற்காக அவரது அமைச்சகம் நடத்திய பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இருப்பினும், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்களை சமநிலைப்படுத்தும் ஒரு முக்கியமான பணி தனக்கு இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார், ஏனெனில் இந்த இக்கட்டான காலகட்டத்தில்  ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதால் நாட்டில் எந்த தொழிற்துறையும் முடங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பும் அவருக்கு உள்ளது என்பதை அவர் தெளிவு படுத்தினார்.

ஆன்லைன் வழியாக பெறப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள்  விண்ணப்பத்தை அமைச்சகம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்றும், ஊழியர்களின் அடையாளத்தை பாதுகாக்க இது சிறந்த நடவடிக்கை என்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். பல வழக்குகளை இந்த வழியில் தீர்க்க முடிந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

குறைந்தபட்ச ஊதிய விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்திலும், ‘பாமர மக்களுக்கான’ கலந்துரையாடல் முதல் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் கூடிய விரைவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்த நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் கூறினார். குறைந்தபட்ச ஊதியத்தின் மறு மதிப்பீடு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் கவலைகளைக் கேட்டறிய அவரது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடக்க அமர்வுக்குப் பிறகு, தொடர்ந்து 4 குழு உறுப்பினர்களின் குழு விவாதம் நடைபெற்றது. முதல் குழு உறுப்பினரான தெற்கு மண்டல மின்னணுவியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முகமது சாலே, சில முதலாளிகளின் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் குழப்பமான அதே வேளையில் சிக்கலான SOP-களின் காரணமாக பல தொழிலாளர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர் என்று கூறினார். தொழிற்சங்க உறுப்பினர்களை 30% அதிகரிப்பை அடைய முந்தைய அரசாங்க முன்மொழிவுக்கு என்ன நடந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார். காரணம்  இன்று 7%-க்கும் குறைவான தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, சபா மாநிலத்தின் வங்கிகள் தொழிற்சங்கத்தின் தலைவரான மார்கரெட் சின், பேசியபோது, அவர் வங்கி ஊழியர்களின் பிரச்சனையை விவரித்தார், குறிப்பாக தொற்றுநோய்களின் போது டிஜிட்டல் மயமாக்கல் வங்கியின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும், இது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அதே நேரத்தில் ஊழியர்களின் பணிச்சுமையையும் அதிகரிக்கும். இதனால் பணியாளர்களை இந்தத் திட்டம் பாதிக்கிறது. இந்த நிலை பல்வேறு பணிகளை (பல்பணி) சுமக்கும் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

அடுத்து, அரசு மருத்துவமனை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழில்துறை தொடர்பு அதிகாரியான தோழர் செல்வம் பேசுகையில், 1960 களில் ஒரு முறை ரயில்வே தொழிலாளர் சங்கம் (KTMB) எதிர்த்த ஒப்பந்த அமைப்பின் வரலாறு குறித்து விவரித்தார். 1981 இல் பிரதமராக இருந்த தனியார்மயமாக்கலின் தந்தை டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால்தான்  தொழிலாளர்  ஒப்பந்த முறை பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நிரந்தர பணியாளர்கள் எவ்வாறு தங்கள் வேலை பாதுகாப்பு உரிமைகளை இழக்கிறார்கள் என்றும் ஒப்பந்த முறையின் கீழ் நிரந்தர பணியாளர்கள் எவ்வாறு வைக்கப்படுகிறார்கள் என்பதையும் தோழர் செல்வம் சுட்டிக்காட்டினார். ஒப்பந்த வேலை தற்காலிக அல்லது இடைக்கால வேலைக்கு மட்டுமே இருக்கும் வேலைவாய்ப்பு சட்டம் 1955 இன் கீழ் இது விதி மீறல் ஆகும் என்று அவர் மேலும் விளக்கம் கொடுத்தார்.

இறுதி பேச்சாளராக ஒப்பந்த தொழிலாளியான புவான் வர்தா இப்ராகிம் பேசினார். பெர்லிஸ் மாநிலத்தில் பள்ளி துப்புரவு தொழிலாளியாக வேலை செய்யும் அவர், குறைந்த சம்பளம் மற்றும் சம்பள உயர்வு இல்லாத பிரச்சினையை பகிர்ந்து கொண்டார். EPF செலுத்தாதது, சட்டவிரோத ஊதியக் குறைப்பு போன்ற ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர் சட்ட மீறல்களையும் புவான் வர்தா வெளிப்படுத்தினார்.  ஒப்பந்த முறையை ஒழித்தால் மட்டுமே இந்த B40 தொழிலாளர்களை வறுமையிலிருந்து விடுவிக்க முடியும் என்று தமது உரையில் அவர் வாதிட்டார்.

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவை பறிபோகாமல் இருக்க ஒரு சிறந்த சூழலை உருவாக்க தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்ற உறுதியுடன், சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...