Friday, November 4, 2022

15 - வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை


 முன்னுரை 

வருகின்ற  15-வது பொதுத்தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மலேசியாவில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு உயிர்ப்பூட்ட வல்ல  புதிய சுவாசத்தை வழங்க மலேசிய சோசலிசக் கட்சி (PSM) தயாராக உள்ளது. 

இக்காலக்கட்டத்தில் நம் நாடு உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பொது மக்களை ஆழமாக பாதித்த கோரணி நச்சில் தொற்றுநோயால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி, மனிதகுலத்தை அச்சுறுத்தும் உலகளாவிய காலநிலை நெருக்கடி, பாதுகாப்பின்மை, உழைக்கும் வர்க்கத்தின்  வாழ்க்கை செலவினம், அதிகரித்து வரும் பொருளாதார இடைவெளி, தற்போதுள்ள தேசிய நிர்வாக அமைப்பின் மீது மக்கள் அடைந்துள்ள நம்பிக்கையின்மை, மக்களைப் பிரிக்கும் அடிப்படைவாத அரசியலின் அச்சுறுத்தல்  போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், மாணவர்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், B40 மற்றும் M40 குடிமக்கள் மற்றும் பல தரப்பினரை உள்ளடக்கிய சாமானிய மக்கள், அதாவது பாமர மக்கள், இந்த நெருக்கடியின் அனைத்து விளைவுகளையும் எதிர்நோக்கும் சமூகமாக ஆக்கப்பட்டுள்ளனர்.

நிலை இப்படி இருப்பினும், இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் திறம்படச் சமாளிக்கவும், நிலையான வழியை வழங்கவும் அரசாங்கத்தால் இன்னும் இயலவில்லை.

இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தீர்க்கமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறியதாலேயே இது நடந்தது. இன்றும் தொடர்கிறது.

எனவே, பாமர மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய புதிய அரசியல் சக்தி நமது நாட்டுக்குத் தேவை. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் பாமர மக்களை உண்மையாகவும் உளச்சான்றுடனும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு குரல் நமக்குத் தேவை.

பாமர மக்களின் போராட்டத்திலிருந்து பிறந்த, பாமரனின் குரலை எப்பொழுதும் நிலைநிறுத்தி வந்த PSM, பாமர மக்களின் குரலை நம் நாட்டின் சட்டமன்றத்தில் நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவையிலும் சீர்திருத்தத்திற்காகப் போராடும் உரத்த குரலின் இருப்பு, எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் சமூகத்தின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வலியுறுத்தும் சக்தியாக செயல்படும். பாமர மக்களின் குரலைத் தேர்ந்தெடுங்கள்!  

 

          மலேசியர்களுக்கான பி.எஸ்.எம் தேர்தல் அறிக்கை

          6 தராசுகள் 

 

  •     வேலை உத்தரவாதத் திட்டம்
  •     உணவு உத்தரவாதம்
  •    சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்
  •    மக்களுக்கான வீட்டுரிமை
  •    பேரிடர் காலத்தை கையாளுதல
  •    தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் 

 இந்த கூறுகளானது எங்கள் போராட்டத்திற்கு அடிப்படையாக விளங்கும். மேலும், பாராளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களவையிலோ உங்கள் பிரதிநிதியாக நாங்கள் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இவற்றை செயல்படுத்தும் வேலைகளைச் செய்வோம்.   

 1வேலை உத்தரவாதத் திட்டம்

1. மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வேலை உத்தரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

2. முதியோர்களை பாதுகாப்பதற்கும், பாலர் பள்ளி குழந்தைகளை பராமரிப்பதற்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். மேலும், ஊனமுற்றோர்களுக்கும் ஏழைகளுக்கும் நேரடியாக உதவுவதற்கு சமுக வேலையாட்களை அதிகரிக்க வேண்டும்.

3. சுகாதார துறையில் வேலையாட்களை அதிகரிக்க வேண்டும். அதாவது தாதியர், டாக்டர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் மற்றும் பல சுகாதார பகுதியில் தொழிலாளர்களை அதிகரிக்க வேண்டும்.

4. புதிய தொழிற்துறையான மின்சார பஸ் கட்டுமானம் மற்றும் ஹைட்ரஜன் பஸ் போன்ற துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதோடு நின்று விடாமல், நாட்டின் பொது போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

 

5. சுத்தமான ஆற்றல் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு தோதுவான துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காடுகள் பாதுகாப்பு, ஆறுகளை சுத்தமாக வைத்திருக்க, உள்நாட்டு கழிவு செயலாக்க தொழில்நுட்பம் மேலும் மறுபயநீடு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

2.உணவு உத்தரவாதம் (பாதுகாப்பு)

1.அரசாங்க நிலத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் ( GLC அரசாங்க தொடர்புடைய நிறுவனங்கள் ) அன்றாட உணவு உற்பத்தி பொருட்களை கடுமையான முறையை கையாள்வதோடு, விவசாய நிலபரப்பை அதிகரித்து உணவு இறக்குமதி எதிர்பார்ப்பை குறைக்கின்றன.

2. நடைமுறையில் உள்ள உணவு உற்பத்தி பொருட்கள் நிரந்தரமாக்க வேண்டும் :

_  அரசாங்க நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்

_  மண் தூர்வாரும் (திருடும் , சுரண்டும் ) திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

_  தோட்டங்களில் கால்நடை வளர்ப்பு அனுமதிக்கப்பட வேண்டும்

_ நில அபகரிப்பு /  சட்டவிரோத வெளியேற்றம் மற்றும் கடல் நிலங்களின் ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.

3) உணவுபொருட்களின் அதிகபட்ச விலை கட்டுபாடு நிர்ணயித்தல். மற்றும் நெல் பயிரிடுபவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதின் மூலம் விவசாய / உற்பத்தி  செலவுகளை  குறைக்கலாம்.

4 ) சர்வதேச அமைதி உடன்படிக்கை முயற்சியை ஆதரிப்பதோடு உக்ரைன் - ரஷ்யா  போரினால் ஏற்படும் உணவு இறக்குமதி செலவு  அதிகரிப்பை தவிர்க்கலாம்.

 

3.சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்

1. அரசாங்க ஓய்வூதியம் அல்லது சொக்சொ போன்ற பிற சலுகைகளைப் பெறாத அனைத்து முதியவர்களுக்கும் (>65வயதுக்கு மேற்பட்டவர்கள்) RM500 மாதாந்திர ஓய்வூதியம்.

2. ஒப்பந்தத் தொழிலாளர்கள், ரப்பர் விவசாயிகள், நெல் விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சொக்சொ திட்டத்தின் பலன்கள் கிடைக்க வேண்டும். இந்த பங்களிப்பு 100% அரசாங்கம் ஏற்க வேண்டும்.

3. உணவுப் பொருட்களின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை அனைத்து B40 குடும்பங்களுக்கும் மாதத்திற்கு RM200 பண உதவி

4. பூர்வீக குடியினர், ஊனமுற்ற நபர்கள் (OKU) மற்றும் பாலியல் சிறுபான்மையினருடன், அவர்களின் தேவைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் அணுகுமுறையின் மூலம் அனைத்து நியாயமற்ற கொள்கைகள், கையாளுதல்களை நிறுத்துங்கள்.

இனம், மதம், பாலின அடையாளம் மற்றும் உடல் அல்லது மன திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடுகளையும் தடுக்க, பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை இயற்றவும்.

4.மக்களுக்கான வீட்டுரிமை

1. B40 மக்களுக்காக வாடகைக்கு ஆண்டுக்கு 100,000 PPR வீடுகளை கட்டுவதே இதன் இலக்காகும். ஒரு யூனிட்-டுக்கு RM100,000 க்கும் குறைவான விலையில் மலிவு வீடுகளை குறிப்பாக B40 மற்றும் M40 நபர்களுக்கு கட்டவும் மற்றும் விற்கவும் சிறப்பு வீட்டுவசதி வாரியம் (இலாப நோக்கற்ற நிறுவனம்) உருவாக்க வேண்டும்.   

2. குறைந்த விலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணியை நகராட்சி / நகர சபை ஏற்க வேண்டும். மாநகர மன்றத்திற்கு உதவ வருடத்திற்கு RM2 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிக்கப்படும்.  

3. நகர முன்னோடிகளுக்கு அவர்கள் குடியிருக்கும் கிராமத்திலேயே நியாயமான பிரீமியத்துடன் நில உரிமை வழங்க வேண்டும்.

4. தோட்ட உரிமையாளர்கள், தோட்டப்புற தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகளை உருவாக்கத் தவறினால், அவர்களுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

5. நீண்ட நாட்களாக ஆட்கள் வசிக்காத வீடு/ அபார்ட்மெண்ட் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள்/அபார்ட்மெண்ட் வைத்திருப்பவர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் ஆதாய வேட்டை செயல்பாடுகளை குறைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தலாம்.

5பேரிடர் காலத்தை கையாளுதல்

1. காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தினால், சமூகம் மற்றும் அரசு விழிப்புடன் இருப்பதோடு உடனடியாக செயலாற்ற முடியும்.

2. நிரந்தர வனப் பகுதியில் மரம் வெட்டுவதையும் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் (NGO) இணைந்து காடுகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

3. செம்பனை ஆலை கழிவு மற்றும் சாக்கடை கழிவுகளைக் கொண்டு, சோலார் பேனல்கள், மின்சாரம்/மீத்தேன் உள்ளிட்ட உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை விரைவுபடுத்துங்கள்.

4. ஆடம்பர புதிய கார் வாங்குபவர்களுக்கு பெர்மிட் கட்டணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சேகரிக்கப்படும் வருவாய் பணத்தை மலேசியா முழுவதும் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சார/ஹைட்ரஜன் பேருந்துகளின் இயக்கச் செலவுகளுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

5. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல்/டீசல் மானியத்தை வெற்றியடையச் செய்வதற்காக B40 வாகனப் பயனர்களுக்கு மாதத்திற்கு RM300 மானியத்தை நேரடியாக வழங்க வேண்டும்.

6. 2028 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே மின்சார உற்பத்திக்கான எரிபொருளாக நிலக்கரியைப் பயன்படுத்துவதை நிறுத்த இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

7. கடல் மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி மற்றும் வெப்பமயமாதல் ,  பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்காக, மக்களிடையே , குறிப்பாக விளிம்புநிலை மக்களிடையே  வசதிகள் மற்றும் திறனை அதிகரித்தல்.

 6.தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்

1. தலைமை நீதிபதி, ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர், தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சுஹாகம்) நியமனத்தில் தேசிய நிர்வாக நிர்வாகியின் (பிரதமரின்)  தலையீட்டைத் தவிர்க்க வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் வேண்டும். அரசுசாரா சமூக அமைப்புகளின் ஈடுபாடு மற்றும் கருத்துகள், மற்றும் இரு கட்சி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு நியமனக் குழு உருவாக்கம்.

2. அரசியல் கட்சிகளுக்கான பொது நிதியுதவிச் சட்டம். ஒவ்வொரு கட்சியும் பெற்ற தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் ரிங்கிட் நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும்.

3. தேசத்துரோகச் சட்டம், அச்சகம் மற்றும் வெளியீட்டுச் சட்டம், பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சொஸ்மா சட்டம் (SOSMA) மற்றும் பல அரசாங்கத்தின் அரசியல் அடக்குமுறையின் கருவிகளான செயல்களை/சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சுயற்சை போலீஸ் நடத்தை ஆணையத்தை (IPCC) நிராகரித்து, சுயற்சை   போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (IPCMC) உடனடியாக நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கவும்.

4. ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட் பொது நிதி கசிவைத் தடுப்பதில் தீர்க்கமாகச் செயல்பட தேசிய தணிக்கை தலைவருக்கு (ஆடிட்டர் ஜெனரலுக்கு) அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

5. பிரதமர் மற்றும் மந்திரி பெசாரின் பதவிக் காலத்தை 2 தவணைகளாக (10 ஆண்டுகள்) வரம்பிடவும்.

6. உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு உள்ளாட்சி பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் கொண்டு வாருங்கள்.




பி.எஸ்.எம் வேட்பாளர்களின் உறுதிமொழி 

1.நான் எந்த நேரத்திலும், எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இன உணர்வுகளை வைத்து விளையாட மாட்டேன்.

2. நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட சொத்துக்களை குவிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

3.  தேர்தலில் நான் வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் எனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பேன்.

4. நான் எப்போதும் களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன், நாடாளுமன்றம்/ சட்டமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

5. மக்கள் பிரதிநிதி பதவி என்பது மக்களின் புனிதமான நம்பிக்கையாகும். அப்பதவியை பொது நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை நான் கடைப்பிடிப்பேன். தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன். 


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...