Tuesday, May 13, 2025

வாசிப்பும் அது தொடர்பான விவாதமும் குற்றம் அல்ல (PSM அறிக்கை)

PSM அறிக்கை - வாசிப்பும் அது தொடர்பான விவாதமும் ஒரு குற்றம் அல்ல: அறிவை வளர்க்கும்  புத்தகங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், அச்சுறுத்தப்படக்கூடாது.

டந்த சனிக்கிழமை  டத்தாரான் மெர்டேகாவில் நடந்த,  Buku Jalanan என்ற வாசிப்பு தொடரில், வாசிப்பு கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும், அது தொடர்பான விவாத நடவடிக்கையை தடுக்கும் விதத்திலும் காவல்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) நடந்துக்கொண்டது கண்டிக்கதக்கது என மலேசிய சோசலிஸ்ட் கட்சி (PSM) அறிவுறுத்துகிறது. 

(NYF எனும் தேசிய இளைஞர் கூட்டமைப்பு குழு இது குறித்து கூறுகையில்.... 

காவல்துறையும் DBKL- அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இளைஞர்களை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கலைந்து செல்ல உத்தரவிட்டதாக கூறினர்.  இந்த நடவடிக்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் அதோடு கூட்டம் கூடும் சுதந்திரம் மற்றும் சிந்தனை சுதந்திரம் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது  நிரூபிக்கிறது என்றும் அந்த இளைஞர்கள் கருத்துரைத்திருக்கின்றனர். 

டத்தாரான் மெர்டேகா போன்ற பொது இடங்களில் அனுமதியின்றி ஒன்றுகூடுவது, விவாதிப்பது மற்றும் அறிவுசார் செயல்பாடுகளை மேற்கொள்வது மக்களின் உரிமை என்பதை இவ்வேளையில் PSM வலியுறுத்த விரும்புகிறது. வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நடவடிக்கைகளுக்காக "அனுமதி அல்லது தகவல் கடிதங்களை" கோரும் காவல்துறையின் நடவடிக்கை சட்டப்படி  அடிப்படையற்றது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியை நிறுத்தியதோடு,  கண்காணிக்கவும் செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் DBKL அதிகாரிகளின் செயலானது, இளைஞர்களுக்கு எதிராக விடுத்த ஒரு வகையான மிரட்டலாகும். உண்மையில், இது கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (KILF) 2023 இன் தொடக்க உரையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பிலிருந்து நேரடியாக முரண்படுகிறது, 

"என்னை நம்புங்கள், நீங்கள் ஒரு மனிதனாகவும், மனித இரக்கத்தைப் பற்றிப் பேசுபவராகவும், மதிப்புகள், ஒழுக்கங்கள் மற்றும் அறிவு கொண்டவராகவும் இருக்க விரும்பினால், நீங்கள் தீவிரமாக வாசிக்கும் மரபைத் தொடங்க வேண்டும்." என்றார் அவர். 

இத்தகைய வெளிப்பாடுகள் வெறும் அலங்கார வார்த்தைகளாக இருப்பது கவலையளிக்கும் ஒரு முரண்பாடாகும், அதே நேரத்தில் இந்த அழைப்புகளுக்கு ஆதரவளிக்கும் இளைஞர்களை அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படுகிறார்கள்.

புத்தகங்களைப் படிக்க அனுமதி கோரும் சட்டப்பூர்வ அதிகாரத்தையும், வாசிக்கும் இளைஞர்களை 10 மணிக்கு கலைந்து செல்ல உத்தரவிடுவதற்கான காரணத்தையும் காவல்துறையும் DBKL-ம் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது இடங்களில் அறிவுசார் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதை காவல்துறையும் DBKL-ம் நிறுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் சீர்திருத்தவாதி என்று பெருமைப்பட்டுக் கொண்ட அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், இப்போது அதன் புதிய கூட்டாளியான பாரிசான் நேஷனல் பயன்படுத்திய அடக்குமுறை மற்றும் தந்திரங்களை மீண்டும் மீண்டும் செய்துகொன்டிருக்கிறது. இம்மாதிரியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இளைஞர்களுடன் PSM  கை கோர்த்து நிற்கிறது, மேலும் அனைத்து மலேசியர்களும் கலந்துரையாடல், வாசிப்பு மற்றும் விவாதங்களுக்கு பொது இடங்களைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும் PSM   கேட்டுக் கொள்கிறது. 

எழுதியவர்: காந்திபன் நந்த கோபாலன் (மத்திய செயற்குழு உறுப்பினர்)

தமிழில் : யோகி

No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...