Tuesday, June 24, 2025

மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும், இல்லையா?

 


சட்ட அமைச்சர் அசாலினா ஒத்மான் பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்த வேண்டும் என்றும், அது ஆசியான் நாடுகளுடன் ஒத்துவர வேண்டும் என்றும் கூறியதைக் குறித்தே நான் பேசுகிறேன். ஆனால், இது தேவையான கொள்கையா? நம்முடைய நாடு முன்னேறிக் கொண்டிருக்கையில், மக்கள் ஓய்வுபெற்ற பிறகு மேலும் ஓய்வு நேரம் பெற்றுவிட்டு சுலபமாக வாழக்கூடாதா?

ஏன் நம்முடைய உள்நாட்டு கொள்கைகளை ஆசியான் நாடுகளுடன் ஒத்துபோக வைத்தாகவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. சிங்கப்பூர் தவிர அனைத்து ஆசியான் நாடுகளும் பெரிய உலகளாவிய நிறுவனங்களால் மலிவான உழைப்பைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஒவ்வொரு ASEAN தொழிலாளியின் சேமிப்பும் குறைகிறது, இதனால் முதுமையில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இது அவர்களின் முதிய வயதில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க, பெரும் லாபங்களை வாங்கும் முதலாளிகளை நோக்காமல், ஊழியர்களை ஓய்வு பெறாமல் தள்ளிக்கொண்டு செல்ல அரசு முயற்சி செய்கிறது. இப்போது கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் உடல் நலமின்றி இருந்தாலும், வாழ்க்கையை நடத்த வேலை செய்யத் தவிர வேறெது வழியுமில்லை – ஏனெனில் அவர்களது பிள்ளைகளுக்கு கூட போதிய வருமானம் இல்லை.

முதலாளியின் நோக்கிலிருந்தும் பார்த்தால், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. முதிர்ந்த ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டி வருகிறது; இதனால் அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் வளர முடியாமல் போகிறது. பல நிறுவனங்கள், பதவி உயர்வுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதால், திறமையான ஊழியர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. ஓய்வு வயதை உயர்த்தினால் இளம் தலைமுறைக்கு மேலதிக பொறுப்புகளை பெறும் வாய்ப்பு தாமதமாகிறது.

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால், மலேசிய சோசலிசக் கட்சி பரிந்துரைக்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மாதத்திற்கு RM500 வழங்கப்படும் தொகை அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஓரளவு உதவும்.

இறுதியாக, வயதானவர்கள் ஓய்வெடுக்கட்டும். அவர்கள் கண்ணியமாக ஓய்வு பெறுவதற்கு போதுமான சமூகத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும். இளைய தலைமுறையின் வேலைவாய்ப்பை குறைத்து அவர்களை சுரண்டக்கூடாது.  வெளிநாடுகளில் இருந்து நாம் எடுக்கும் பாடம், நமது மக்களின் நலனுக்கேற்ப இருக்கட்டும்.

எழுத்து : தோழர் அர்வீந்த் கதிர்செல்வன் (பி.எஸ்.எம் மத்திய செயலவை உறுப்பினர்)

தமிழில் : யோகி




No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...