PSM பத்திரிகை செய்தி – 29 செப்டம்பர் 2025 -
நாட்டின் சுகாதாரத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற போர்வையில் பெரிய நிறுவனங்கள் தங்கள் தனியார் மருத்துவமனை சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தி வருகின்றன. இது குறித்து மலேசிய சோசலிசக் கட்சி (PSM) தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM18.1 பில்லியன்) மதிப்புள்ள ஜெஃப்ரி சியாவுக்குச் சொந்தமான சன்வே ஹெல்த்கேர் ஹோல்டிங்ஸ், ஜோகூரில் உள்ள இஸ்கண்டார் புத்திரியில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டுவது உட்பட RM1.6 பில்லியன் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆரம்ப பொது தரகு (IPO)க்கான திட்டங்களை சமீபத்தில் அறிவித்தது.
கடந்த மாதம், 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM8 பில்லியன்) மதிப்புள்ள சிங்கப்பூரர் பீட்டர் லிம்முக்குச் சொந்தமான தாம்சன் மருத்துவக் குழுமம், ஜோகூரில் ஒரு பெரிய அளவிலான தனியார் மருத்துவமனையைக் கட்டுவதை உள்ளடக்கிய RM18 பில்லியன் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தையும் அறிவித்தது. Forbes இன் கூற்றுப்படி, தாம்சன் இஸ்கந்தரியா மருத்துவமனை பெரிய அளவில் திட்டமிடப்படுள்ளது. முதல் கட்டத்தில் 500 படுக்கைகள் கொள்ளளவுடன் தொடங்கி, பின்னர் 1,000 படுக்கைகள் வரை விரிவாக்கப்படக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக அது இருக்கும்.
இந்த நிலைமை மிகுந்த கவலைக்குரியது. அரசாங்கம் உடனடியாக குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு புதிய தனியார் மருத்துவமனைகள் தொடங்குவதற்கு தற்காலிகத் தடையுத்தரவு (moratorium) விதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை PSM வலியுறுத்துகிறது.
நமது அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர்களில் 70% பேர் இப்போது தனியார் துறையில் உள்ளனர், அதே நேரத்தில் வார்டுகளில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் 70% பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவ நிபுணர் பற்றாக்குறை என்பது அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பொதுமக்களாலும் நன்கறியப்பட்ட பிரச்சினையாகும்.
ஒவ்வொரு முறையும் புதிய தனியார் மருத்துவமனை ஒன்று தொடங்கப்படும் போது, அரசு மருத்துவமனைகளில் இருந்து நிபுணத்துவ மருத்துவர்கள் வெளியேறும் நிகழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட சன்வே மெடிக்கல் செண்டர் (ஈப்போ) நிர்வாகம், முதல் ஆண்டுக்கான சேவைக்காக மாதம் RM70,000 வரை வழங்கப்படும் “டாப் அப்” திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 12 நிபுணர் மருத்துவர்களை வெற்றிகரமாக நியமித்துள்ளது. இவ்வாறான கவர்ச்சிகரமான அல்லது இலாபகரமான சலுகைகள், மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசு மருத்துவமனைகளிலிருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்பது திண்ணம்.
இந்த நிலைமை ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக காத்திருக்கும் காலத்தை நீட்டித்து நோயாளிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், புதிய தனியார் மருத்துவமனைகளைத் திறப்பது சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் PSM வலியுறுத்துவது என்னவெனில், அரசின் முழு கவனம் நிபுணர்களை அரசுப் பணியில் நிலைநிறுத்துவதில்தான் இருக்க வேண்டும்; பொதுமக்களின் சுகாதார அமைப்பிலிருந்து நிபுணர்களை “கவர்ந்து” சென்று லாபம் ஈட்டுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி அளிப்பதில் அல்ல. மேலும், நிபுணர்களை அரசுத் துறையில் நிலைநிறுத்துவதற்கான தீர்வாக அரசு skim Rakan KKM திட்டத்தை முன்வைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில், skim Rakan KKM திட்டம் ஒரு தீர்வு இல்லை, மாறாக நிலைமையை மேலும் மோசமாக்கும்.
சுகாதாரம் என்பது மக்களின் உரிமை, அது வணிகப் பொருள் அல்ல. மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை பிரச்சினையை உண்மையிலேயே தீர்க்கவும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் சுகாதார அமைச்சகத்திற்கான ஆண்டு ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.
எழுதியவர்:
காந்திபன் நந்த கோபாலன்
மலேசிய சோசலிசக் கட்சி
மத்திய செயற்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment