Thursday, October 9, 2025

தோட்டங்களில் மாடுகள்: வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான போராட்டம்

தோட்டங்களில் மாடுகள்: 

வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான போராட்டம் !



தலைமுறை தலைமுறையாக, தோட்டத் தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நடைமுறை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மிகவும் குறைந்திருந்த காலத்தில் தொடங்கியது. அப்போது, மறைந்த பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்கள் “புக்கு ஹிஜாவ்” (Buku Hijau) என்ற முயற்சியை அறிமுகப்படுத்தி, தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க காய்கறி பயிரிடவும், கால்நடைகளை வளர்க்கவும் ஊக்குவித்தார்.

பல தசாப்தங்களாக, சில தோட்டக் குடும்பங்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறியிருந்தாலும், சில குடும்பங்கள் இன்னும் தோட்டங்களின் எல்லைப் பகுதிகளில் மாடுகளை வளர்த்துவருகிறனர். கத்ரி (Guthrie) உள்ளிட்ட பல தோட்ட மேலாண்மைகள் வரலாற்றில்,  இத்தகைய சிறு அளவிலான கால்நடை வளர்ப்போருக்கு இடம் மற்றும் ஆதரவினை வழங்கியிருந்தன.

எனினும், சமீப ஆண்டுகளில், குறிப்பாக 2019ஆம் ஆண்டில், சைம் டார்பி (Sime Darby) நிறுவனம் “கால்நடைகள் இல்லாத கொள்கை” (Zero-Cattle Policy) என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி, மூன்று மாதங்களுக்குள் அனைத்து கால்நடைகளையும் உடனடியாக அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்த திடீர் தீர்மானம், தங்கள் கால்நடைகளை வேறு இடத்திற்கு மாற்ற இடமில்லாமல் இருந்த கால்நடை வளர்ப்போருக்கு கடுமையான பாதிப்பையும் பொருளாதார துன்பத்தையும் ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் வெடித்தன. அதில், 2019 ஆகஸ்ட் 8-ஆம் தேதி சைம் டார்பி தலைமையகத்தின் முன்பாகவும், 2019 செப்டம்பர் 19-ஆம் தேதி விவசாய அமைச்சகத்தின்  முன்பாகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

அப்போது விவசாய அமைச்சராக இருந்த மறைந்த சலாவுதீன் அயூப்பின்  தலையீட்டின் பேரில், வெளியேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த பிரச்சினை 2024 - ஆம் ஆண்டில் மீண்டும் எழுந்தது, மேலும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் (MAFS)  மீண்டும் உதவி கோரி, மாட்டு வளர்ப்போர் அணுகினர்.

இதனையடுத்து பல சந்திப்புகள் நடத்தப்பட்டன. மாட்டு வளர்ப்போர் குழு, வெளியேற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது. எனினும், சைம் டார்பி நிறுவனம் தங்கள் மேல்நிலை நிர்வாகிகளை அந்தக் கூட்டத்திற்கு அனுப்ப மறுத்து, செயலாக்க (enforcement) அதிகாரிகளை மட்டுமே அனுப்பியது.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்புகளின் நிலைப்பாடுகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்:

  • சைம் டார்பி தோட்ட உரிமையாளர்கள்: மாடுகள் தொந்தரவு விளைவிப்பதாகவும், அவை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைந்து  செம்பனை நாற்றங்கால்கள் மற்றும் நர்சரிகளை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

  • மாடு வளர்ப்போர்: தாங்கள் அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியையும் நாடவில்லை; மாறாக, தங்களின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் மட்டுமே தேவைப்படுகின்றது, ஆனால் அதற்கான இடங்கள் மிகவும் குறைவாக உள்ளன என்று வலியுறுத்தினர். மேலும், பால் மற்றும் இறைச்சி வழங்குவதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பில் பங்களிப்பு செய்வதையும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மாடுகள் நுழையாதவாறு முழு பொறுப்பும் ஏற்கத் தயாராக இருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

  • கால்நடைத் துறை (Veterinary Department): கால்நடைகளும் செம்பனை சாகுபடியும் இணைந்து செயலாற்ற முடியும் என்பதை ஒப்புக்கொண்டனர். மாடுகள் தோட்டங்களில் இருப்பது செம்பனை  விளைச்சலை மேம்படுத்தும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும், சாவித் சபா (Sawit Sabah) போன்ற நிறுவங்கள் மாடு–செம்பனை ஒருங்கிணைப்புக்காக ஊக்கத்தொகை வழங்குவதாகவும் குறிப்பிட்டது.

விவசாயம் மற்றும் உணவுக் காப்புறுதி அமைச்சகத்தின் (Kementerian Pertanian dan Keterjaminan Makanan) கீழ் செயல்படும் கால்நடைத் துறை, 2023 ஆம் ஆண்டில் “மாட்டிறைச்சி உற்பத்திக்கான ஒருங்கிணைந்த முறையான கால்நடை வளர்ப்பு வழிகாட்டி நூல் (Buku Panduan Menternak Lembu Pedaging Secara Integrasi Bersistematik)” எனும் 66 பக்க வழிகாட்டி ஆவணத்தை தயாரித்தது.

இந்த ஆவணம், மாடு வளர்ப்பு மற்றும் செம்பனைச் சாகுபடி இணைந்து இயங்கும் நடைமுறையை அதிகாரபூர்வமாக அமைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. எனினும், சைம் டார்பி இந்நெறிமுறையை பின்பற்ற மறுத்துள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்களின் செயலாக்க அதிகாரிகள், தாங்கள் விவசாய அமைச்சகத்தின் கீழ் அல்லாமல், பொருட்கள் அமைச்சகத்தின் (Ministry of Commodities) கீழ் வருவதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அமைச்சகங்களுக்கிடையிலான அதிகாரப் பிரிவு (jurisdictional divide) காரணமாக, இந்த விவகாரம் முன்னேற்றமின்றி நின்றுள்ளது —  சைம் டார்பி அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனமாக- (Government-Linked Company) (GLC) இருந்தபோதிலும், இந்த அதிகார வரம்பு  முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது, இது, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை எளிதாக்க வேண்டும்.



சிலாங்கூரில் நிலைமை மோசமடைந்துள்ளது

சிலாங்கூரில், உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையும், சைம் டார்பி நிறுவனத்துக்கு உதவி செய்து, மாடுகளை வலுக்கட்டாயமாக அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நடவடிக்கையின் போது,  இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் கவலையளிக்கும் விதமாக, நில அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் ஏலம் விடப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்கள் சொந்த கால்நடைகளை மீட்டெடுக்க அபராதம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் அதே தோட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன, அங்கிருந்தே அவை முன்பு அகற்றப்பட்டிருந்தன. இத்தகைய நடைமுறை, ஒரு வகையில் வருவாய் ஈட்டும் திட்டமாக (revenue-generating scheme) மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நடவடிக்கைகளின் போது, ​​பல கால்நடைகள் இறந்துவிட்டன அல்லது காணாமல் போயின, மேலும் அவை சம்பந்தப்பட்ட சில நபர்களால் விற்கப்பட்டதா அல்லது நுகரப்பட்டதா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்தச்  செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாததால் (lack of transparency) கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது — இரவில் விவசாயிகளின் மேற்பார்வை இல்லாமல்  நடத்தப்படுகின்றன, மேலும் இது குறித்து கால்நடை வளர்ப்போர் சமூகம் முழுமையாக கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, கால்நடை வளர்ப்போர் சுமார் 120 போலீஸ் புகார்களை பதிவு செய்துள்ளனர்; ஆனால் அதற்கு இதுவரை அதிகாரிகளிடமிருந்து எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இன வன்முறையும் அரசியல் தோல்விகளும்

இந்தப் பிரச்னை, சில உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களால் தவறாக இனப் பிரச்சினையாக மாற்றப்பட்டது. அவர்கள், இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் மாடுகள் ஒரு மலாய் கிராமவாசியை கொன்றன என்று தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கிராமவாசிகளை தோட்டங்களுக்கு சென்று அந்த மாடுகளைப் பிடிக்கத் தூண்டினர்.

எந்தவிதமான ஆதாரங்களோ கைது நடவடிக்கைகளோ இல்லாதபோதிலும், இந்தச் சம்பவம் தேவையற்ற வகையில் இனச் சச்சரவுகளைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில், PSM மட்டுமே தலையீடு செய்து, மாநில அரசை நிலைமைக்குச் சமாதானம் ஏற்படுத்தி, தீர்வுகளைத் தேடுமாறு வலியுறுத்தியது.

மாநில முதல்வர் (Menteri Besar) அலுவலகத்துடன் பலமுறை உரையாடலுக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தாலும், வழக்கம்போல் வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டன; ஆனால் எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2025 ஜனவரி 22 அன்று,  Gabungan Penternak Marhaen அமைப்பு  சிலாங்கூர் மாநில முதல்வருக்கு ஒரு மகஜரை சமர்ப்பித்தது. அதில் சுமார் 100 கால்நடை வளர்ப்போர்கள் கலந்து கொண்டனர்.  அப்போது Encik Daing Muhammad Reduan என்ற மாநில முதல்வரின் உதவியாளர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் இணைத்து ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

ஆனால், ஒன்பது மாதங்கள் கடந்தும், அந்தச் சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை.

தற்போது மீண்டும், 2025 அக்டோபர் 2-ஆம் தேதி, மேலும் ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது; இம்முறை Firdaus என்ற அதிகாரி அதேவிதமான வாக்குறுதியையே வழங்கியுள்ளார்.

இதுவரை நடந்த அனைத்தையும் பொருத்து பார்க்கையில், இந்த பிரச்சினையை தீர்க்க அரசியல் விருப்பமோ உறுதிப்பாடோ இல்லாதது தெளிவாகத் தெரிகிறது.


தீர்வுகள் கண்முன் இருக்கின்றன — ஆனால் உறுதிமொழிகள்?

மலேசியா தற்போது தன்னுடைய மாட்டிறைச்சி மற்றும் பால் தேவைகளில் பெரும் பகுதியை இறக்குமதியையே நம்பியிருக்கிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியாவின் மாட்டிறைச்சி/கால்நடை இறைச்சிக்கான  தன்னிறைவு விகிதம் (Self-Sufficiency Ratio – SSR) வெறும் 15.9% ஆக இருந்தது. அதேசமயம், புதிய மாட்டுப் பாலுக்கான SSR சுமார் 57.3% மட்டுமே; இதன் பொருள், நாட்டின் பால் தேவையின் 42–43% வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த கால்நடை விவசாயிகள் உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு உள்நாட்டு தீர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், இருப்பினும்  அவர்கள் தற்போது  திட்டமிட்ட இடமாற்றம் மற்றும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதற்கான ஒரே நடைமுறை தீர்வு

  • சைம் டார்பி உடனடியாக கால்நடை வளர்ப்போருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிறுத்த வேண்டும்,
  • சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடனும் அர்த்தமுள்ள உரையாடலை ஏற்படுத்த வேண்டும். 
  • அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை எளிதாக்கி, கொள்கை முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • மேலும், மாடுவளர்ப்பு–செம்பனை ஒருங்கிணைப்பு தொடர்பான கூட்டாட்சி வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், உணவு சுயாட்சியை (Food Sovereignty)  மேம்படுத்தவும், நீதியை நிலைநிறுத்தவும் தங்கள் கொள்கைகளை சீரமைக்க வேண்டும்.


இது மிகுந்த முரண்பாடாகும்: மத்திய மடானி அரசாங்கம் கால்நடை வளர்ப்பும் தோட்டச் சாகுபடியும் இணைந்து இயங்கும் கொள்கையை ஆதரிக்கிறது; ஆனால் அதே சமயம், மாநில மடானி அரசு மற்றும் கூட்டாட்சியுடன் இணைந்த ஒரு GLC நிறுவனம் (சைம் டார்பி) இதே கொள்கையை தகர்க்கும் விதத்தில் செயல்படுகின்றன.


எஸ். அருட்செல்வன்

PSM துணைத் தலைவர் மற்றும் 

Gabungan Marhaen ஒருங்கிணைப்பாளர்

9 அக்டோபர் 2025


No comments:

Post a Comment

சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் !

பிஎஸ்எம் அறிக்கை – 4 நவம்பர் 2025 சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் நமது சமூகம் அதிகரி...