Wednesday, January 14, 2026

சடங்குக்காகப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். இதில் நமக்குப் பெருமை என்ன?


 

பொங்கல் ஒரு விவசாயத் திருநாள். விவசாயிகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவற்றுக்கு நன்றி கூறும் வகையில் இத்திருநாள் கொண்டாடத் தொடங்கியதாக ஒரு வரலாறு உள்ளது. நாம் இன்று கொண்டாடும் இந்தப் பொங்கல், இந்திய நாட்டிலிருந்து நமக்குப் பரவியதாகும். காலப்போக்கில் இது தமிழர் பெருநாள், கலாச்சாரத் திருநாள் எனப் பல வடிவங்களைப் பெற்றுள்ளது.

ஆனால் அடிப்படையில், இது விவசாயிகளின் உணவு உற்பத்திக்கு நன்றி கூறும் ஒரு நாளாகும். இந்த விவசாயத் திருநாள் உலகெங்கும் பல நாடுகளில், பல சமுதாயங்களில், பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மலேசியாவின் சரவாக்கில் வாழும் டாயாக் சமுதாயம் இதை காவாய் பெருநாள் எனக் கொண்டாடுகிறது; நேபாளத்தில் மாகா சங்க்ராந்தி (Maghe Sankranti), ஜப்பானில் நீனாமேசாய் (Niinamesai), தாய்லாந்தில் ராயல் பிளவுயிங் பெருநாள் (Royal Ploughing) எனவும், இன்னும் பல நாடுகளில் விவசாயிகள் இதை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இன்று மலேசியாவில் நாம் கண்கூடாகப் பார்த்தால், விவசாயிகள் இந்தப் பெருநாளை கொண்டாடுவதில்லை; விவசாயிகளையோ, விவசாயத்தையோ வாழ வைக்கவும் நாம் இத்திருநாளை கொண்டாடுவதில்லை. மாறாக, இதை ஒரு சமூக கலாச்சார நிகழ்வாக ஒரு தரப்பினரும், ஒரு இனத்தின் அடையாளமாக மற்றொரு தரப்பினரும், ஒரு சமயச் சடங்காக ஒரு குழுவும், அரசியல் நிகழ்வாக அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு, வரலாற்றை மறந்து பொங்கலைக் கொண்டாடி வருகிறோம்.

நாம் எப்படி விவசாயத் தினத்தை கொண்டாடுகிறோம்? நமது நாட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் என்ன மரியாதை அளிக்கப்படுகிறது? நாம் சாப்பிடும் பெரும்பாலான அடிப்படை உணவுகளே இறக்குமதி மூலமாகத்தானே கிடைக்கின்றன.  இருக்கும் விவசாயிகளை அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி, அந்த நிலங்களில் அடுக்குமாடிக் கட்டடங்கள் எழுப்ப தான் நமது அரசாங்கம் ஆதரவு வழங்கி வருகிறது. இந்நிலையில், விவசாயத்தைப் பாதுகாக்க ஒன்றும் செய்யாமல், வெறும் சடங்குக்காகப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். இதில் நமக்குப் பெருமை என்ன?

நமது நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பு வெறும் 7.5 மில்லியன் ஹெக்டர்கள்தான். அதில் செம்பனை  பயிரிடுவதற்கு 5.8 மில்லியன் ஹெக்டர், ரப்பர் தோட்டங்களுக்கு 0.7 மில்லியன் ஹெக்டர், நாம் சாப்பிடும் அரிசி நெல் உற்பத்திக்கு 0.5 மில்லியன் ஹெக்டர், மற்ற காய்கறி பயிர்களுக்கு 0.1 மில்லியன் ஹெக்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், நமது அன்றாட உணவுத் தேவைக்கான உற்பத்திக்கு ஒதுக்கப்படுவது வெறும் 8% மட்டுமே. மீதமுள்ள அனைத்தும் இறக்குமதியைச் சார்ந்ததே.

இதுவே போதாதென்று, உள்ள கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து பறித்து வருகிறது. பேராக் மாநிலத்தில் நடைபெற்று வரும் மிகப்பெரிய விவசாய நிலப்பரப்பு தொடர்பான பிரச்சினைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. (இதுகுறித்த மேலதிக தகவல்களை இங்கு படிக்கலாம்:
https://sosialis.net/2021/04/19/gabungan-petani-perak-lancar-kempen-kekalkan-tanah-untuk-pertanian-demi-jaminan-makanan-rakyat/)

இந்த நிலைமையை மாற்ற எத்தனை பேர் துணிந்து முன்வருகிறோம்? இதை மாற்றவில்லை என்றால், காலப்போக்கில் ஒரு நாள்,  உணவுப் பற்றாக்குறையால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே, பொங்கலன்று இந்த முக்கிய விஷயத்தை கருத்தில் கொள்ளுங்கள். வெறுமனே பொங்கலைக் கொண்டாடுவதால், பொங்கல் பொருட்களை விற்பவர்களின் லாபத்திற்கே நீங்கள் துணை போகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வியாபார லாபம் நமது நோக்கமல்ல; உணவுப் பாதுகாப்பை நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை ஆகும்.

நன்றி.   

         சிவரஞ்சனி மாணிக்கம்                                                                                                         மலேசிய சோசலிசக் கட்சி                                                                                               தேசிய பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment

சடங்குக்காகப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். இதில் நமக்குப் பெருமை என்ன?

  பொங்கல் ஒரு விவசாயத் திருநாள் . விவசாயிகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவற்றுக்கு நன்றி கூறும் வகையில் இத்திருநாள் கொண்டாடத் தொடங்கியதா...