PSM அறிக்கை – 12 ஜனவரி 2026
நோயாளிகள் நீண்ட காலமாக காத்திருக்கின்ற நிலையில், ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்படட்டும்
சுகாதார அமைச்சர் தத்தோʼ Dzulkefly Ahmad, ராக்கான் KKM திட்டம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளை ஏற்கத் தொடங்கும் என அறிவித்துள்ளார். இம்முயற்சி முதற்கட்டமாக சைபர்ஜெயா மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. நிபுணத்துவ மருத்துவர்களை தக்கவைத்துக் கொள்ளவும், குறுக்கு மானிய அமைப்பை உருவாக்கவும், "பிரீமியம்-பொருளாதார" மாதிரியாக இந்த ரகான் KKM சந்தைப்படுத்தப்படுகிறது.
எனினும், இத்திட்டம் ஒரு அடிப்படை பொதுக் கேள்விக்குப் பதிலளிக்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: தற்போது அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைக்காக மலேசிய மக்கள் எவ்வளவு காலம் காத்திருக்கின்றனர்?
இது தொடர்பாக ஏற்கனவே அறியப்பட்ட விஷயம் கவலையளிக்கிறது. பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட பதில்களின்படி, நாடு முழுவதும் சுமார் 15,000 நோயாளிகள் தேர்வுச் (elective) அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
காட்டரக்ட் அறுவைச் சிகிச்சைக்காக நோயாளிகள் சராசரியாக மூன்று மாதங்கள் காத்திருக்கின்றனர்.
சிறுநீரகக் கல் அகற்றும் செயல்முறைக்கு சராசரியாக 11 மாதங்கள் தேவைப்படுகிறது.
இதய அறுவைச் சிகிச்சைக்கு ஏழு மாதங்கள் ஆகும் நிலையில்,
இதய–மார்பக (cardiothoracic) அறுவைச் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் 21 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்நிலைமை, ஒரு முறைமைத் தோல்வியை (systemic failure) வெளிப்படுத்துகிறது. ராக்கான் KKM, அதிக கட்டணம் செலுத்த இயலும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வரிசையைத் தாண்டிச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இது அனைவருக்கும் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்குப் பதிலாக, சமத்துவமற்ற சுகாதார அணுகலை மேலும் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே மிக நீண்ட காத்திருப்பு காலத்தை எதிர்கொண்டு வரும் ஏழை மற்றும் குறைந்த வருமான நோயாளிகளின் நிலையை ராக்கான் KKM எவ்வாறு மேம்படுத்தும் என்பதை சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.
ராக்கான் KKM என்பது புதிய கொள்கை அல்ல. இது 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முழுக் கட்டண நோயாளர் சேவை (Perkhidmatan Pesakit Bayar Penuh – PPBP) திட்டத்தின் தொடர்ச்சியாகும். PPBP மூலம், இரட்டை நடைமுறை (dual practice) அமைப்பு தீவிரமான நலன் முரண்பாடுகளை உருவாக்குவதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
மூத்த நிபுணர்கள் — பெரும்பாலும் துறைத் தலைவர்கள் — அரசு நோயாளிகளின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே நேரத்தில், காத்திருப்பு பட்டியல் நீளமான அளவிற்கு, முழுக் கட்டண சேவையைத் தேர்வு செய்ய நோயாளிகள் தள்ளப்படுவதால், அந்த நிபுணர்கள் நேரடி நிதி லாபம் அடைகின்றனர்.
அதனால், திறம்பட செயல்படும் அரசு சுகாதார அமைப்பு, தனியார் கட்டண மாதிரிக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைகிறது.
இவ்வகை அபாயங்களை சுகாதார அமைச்சகம் தானே உணர்ந்துள்ளது. PPBP நடைமுறைப்படுத்திய மருத்துவமனைகளுக்கு, நோயாளி சிகிச்சை தரம், இளம் மருத்துவர்களின் பயிற்சி, மற்றும் பணியாளர் மனோபலத்தின்மீது அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்ய உள்துறை தணிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
பல முக்கியமான தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அப்படியானால், அவற்றின் முடிவுகளை அமைச்சகம் ஏன் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை? ராக்கான் KKM உண்மையில் முன்னர் எழுந்த பிரச்சினைகளைச் சரிசெய்கிறது எனில், PPBP தொடர்பான தணிக்கை அறிக்கைகளும், தேசிய அளவில் புதுப்பிக்கப்பட்ட காத்திருப்பு நேரத் தரவுகளும் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
மேலும் ஒரு முக்கியமான கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது:
நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு மருத்துவமனைகளை வணிகமயமாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சகத்தின்மீது ஏன் சுமத்தப்படுகிறது? அது நாட்டின் நிதிக் கொள்கையின் (fiscal policy) பொறுப்பாகும். அரசு சுகாதார சேவைகளுக்கான அணுகலை வருமான மூலமாக மாற்றுவது ஒரு தீர்வாக இருக்க முடியாது.
சிவில் சமூக அமைப்புகள் நீண்ட காலமாக மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து வருகின்றன; அதில் சுகாதாரச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 5% ஆக உயர்த்துதல் மற்றும் முன்னேற்றமான வரிவிதிப்பு முறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட காத்திருப்பு நேரத் தரவுகளும், PPBP தொடர்பான தணிக்கை முடிவுகளும் வெளியிடப்படும் வரை, ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையின்றி இத்திட்டம் தொடரப்படுவது, இரண்டு தனித்தனி சுகாதார அமைப்புகள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் —
பணம் செலுத்த இயலும் மக்களுக்கு விரைவான சிகிச்சை,
பணம் செலுத்த இயலாத மக்களுக்கு மேலும் நீடிக்கும் வேதனை.
வெளியிட்டவர்:
காந்திபன் நந்த கோபாலன்
மத்திய செயற்குழு உறுப்பினர்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM)
No comments:
Post a Comment