Thursday, June 18, 2026

ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்திற்கு எதிரான வட்டமேசை கலந்துரையாடல்

 PSM பத்திரிகை அறிக்கை – 16 ஜூன் 2026

PSM, MUDA மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து உரையாடியதில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தேசிய நிறுவனங்களைச் சீர்திருத்தும் முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்று கருதுகின்றோம். காரணம், அப்போது ஆட்சியைப் பொறுப்பேற்ற பாகத்தான் ஹரப்பான், முழுமையான செயல் திட்டத்தை முன்கூட்டியே தயாரிக்காமல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டது.

அந்த நேரத்தில், ஊழல் நிறைந்த அரசை அகற்றினால் அனைத்து பிரச்சினைகளும், குறிப்பாக ஊழலும், எளிதில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. ஆனால் உண்மை நிலை வேறுபட்டதாக அமைந்திருக்கிறது. 

அரசாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்கும் முன் முழுமையான திட்டம் இல்லாவிட்டால், புதிய நிர்வாகம் பழைய அமைப்பின் செயல்முறைகளால் பாதிக்கப்படும். அதன் விளைவாக, பழைய அமைப்பு தன்னைத்தானே தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும். இதுவே பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. இன்று அவர்கள், 2018-க்கு முன் பாரிசான் நேஷனல் வழிநடத்திய அமைப்பிலிருந்து பெரிதாக மாறாத ஒரு சூழலில் சிக்கியுள்ளனர்.

இதனால், மலேசிய மக்களுக்கு அர்த்தமுள்ள மாற்று அரசியல் தேர்வை வழங்கும் நோக்கில் ஒரு புதிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க விரும்பும் நாங்கள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தொடர் கலந்துரையாடல்களை நடத்தி, நாட்டின் நிர்வாகத்தை மக்கள் மயமாகவும் தூய்மையானதாகவும் மாற்றுவதற்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்க முன்வருகிறோம்.

இந்த முயற்சியின் கீழ் விவாதிக்கப்படவுள்ள முக்கிய தலைப்புகள்:

• ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்தைத் தடுக்கும் உத்திகள்
• காலநிலை அவசரநிலையை எதிர்கொள்ளும் வழிமுறைகள்
• அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
• இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்
• அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் தேசியக் கடனை நிர்வகித்தல்

இந்தப் பட்டியல், கலந்துகொள்ளும் தரப்புகளின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரிவுபடுத்தப்படவோ மாற்றப்படவோ செய்யப்படும்.


இந்த வட்டமேசை கலந்துரையாடல் அமர்வு 13 ஜூன் 2026 அன்று KLSCAH-ல் தொடங்கியது. ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்தை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் MUDA, PSM, ஓராங் அஸ்லி கட்சி, PRM மற்றும் பல அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 41 பேர் பங்கேற்றனர்.

இந்த அமர்வு, இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இருவரின் உரையுடன் தொடங்கியது — C4-வின் முன்னாள் CEO திரு புஷ்பன் முருகையா மற்றும் Projek SAMA-வைச் சேர்ந்த திருமதி நியோ சோ யிங் ஆகியோர். அவர்கள் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கசிவு சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கினர். அதைத் தொடர்ந்து வட்டமேசை விவாத அமர்வு நடைபெற்றது, பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்கள் / பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த விவாதத்தின் குறிப்புகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்களது அமைப்புகளுடன் மேலதிக ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், அடுத்த வட்டமேசை கலந்துரையாடலுக்கான தேதி அறிவிக்கப்படும்.


வெளியிட்டவர்: மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், PSM தேசியத் தலைவர்

No comments:

Post a Comment

ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்திற்கு எதிரான வட்டமேசை கலந்துரையாடல்

  PSM பத்திரிகை அறிக்கை – 16 ஜூன் 2026 PSM, MUDA மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து உரையாடியதில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தே...