Tuesday, June 30, 2026

மரினாவைப் போல சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் - ஸ்கூடாய் வேட்பாளர் அமீர்

PSM-இன் ஒரே வேட்பாளர் அமீருக்கு, ஒரு செயற்பாட்டாளராகப் பெற்ற அனுபவம்,  வாக்காளர்களின் இதயங்களைக் கவர உதவுகிறது..


ஜொகூர் பாரு – கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம், ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வெற்றி பெறுவதற்கான சிறப்பான பலமாக திகழ்கிறது என்று Parti Sosialis Malaysia (PSM) கட்சியின் ஒரே வேட்பாளரான அமீர் ஷாஃபிக் அமீர் சோக்ரே கருதுகிறார்.

ஸ்குடாய் மாநில சட்டமன்றத் தொகுதியில் (DUN Skudai) போட்டியிடும் 40 வயதான அமீர்ஷாஃபிக், இந்த அனுபவத்தை அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான ஒரு நுழைவுச்சீட்டாகவும் கருதுகிறார்.

“ஸ்குடாய் தொகுதியில் மூன்று புதிய முகங்களை எதிர்கொண்டாலும், சமூக ஆர்வலராகவும் அடிப்படை மக்கள் பணிகளில் ஈடுபட்டவராகவும் இருந்த அனுபவம் எனக்கு முன்னிலை அளிக்கிறது.

“வேட்பாளராக இது எனது முதல் தேர்தல். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்குடாய் மக்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முயன்றுள்ளேன்.

“நாம் செயல்படுத்தக்கூடிய பல முறைகள் ஏற்கனவே உள்ளன. மக்களைச் சந்திப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

“மற்ற வேட்பாளர்களும் புதிய முகங்களே. எனவே இது ஆரோக்கியமான போட்டியாகும். ஆனால் இதற்கு முன் நாம் செய்த பணிகளைப் பார்க்கும்போது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அந்த அனுபவமே என்னை மேலும் முன்னேற்றும். இறுதியில் மக்கள் தான் மதிப்பீடு செய்வார்கள்,” என்று  ஸ்குடாய் பாரு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

PSM சார்பில் போட்டியிடும் அமீர் , தற்போது Pakatan Harapan (PH) சார்பில் மரினா இப்ராஹிம் வகித்துவரும் ஸ்குடாய் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் மேலும் மூன்று வேட்பாளர்களை எதிர்கொள்கிறார்.

அந்தத் தொகுதியில் Barisan Nasional (BN) சார்பில் நிக்கோல் @ ஆ கீ, PH சார்பில் கார்த்தியாயினி ஜெயபாலன் மற்றும் Parti Bersama Malaysia (Bersama) சார்பில் யூஜின் சுவா மேங் சோங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜோகூர் PSM செயலாளராகவும் இருக்கும் அமீர் ஷாஃபிக், மேற்குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில்தான், போட்டியிடுவதற்கான ஒரே மாநிலத் தொகுதியாக ஸ்கூடாயை PSM தேர்ந்தெடுத்தது என்றும் தெளிவு படுத்தினார்.

“2022 ஆம் ஆண்டில் நாம் கோத்தா இஸ்கந்தரில் போட்டியிட்டோம். ஆனால் இந்த முறை ஸ்குடாயைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் இங்கு PSM நீண்டகாலமாக அடிப்படை மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

“இங்கு ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பி.எஸ்.எம் பல உதவிகளை வழங்கியுள்ளோம். எனவே தேர்தல் வந்தபோது, மர்ஹேன் மக்களின் குரல்களை எழுப்புவதற்கான ஒரு தளமாக இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம்," என்று அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் நான்காவது நாளில், பல நேர்மறையான வரவேற்புகளைப் பெற்றதாகவும், மக்களின் குறைகளையும் கவலைகளையும் கவனமாகக் கேட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவற்றை பொறுப்புடன் கையாளுவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சாரத்திற்காக சமூக ஊடகங்களில் செயல்படுவதுடன், நேரடியாக மக்களைச் சந்தித்து உரையாடும் முறையையே அதிகம் விரும்புவதாகவும் அமீர் கூறினார்.

“இங்குள்ள மக்கள் கூறும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பானது. குறிப்பாக சாலைகள் தொடர்பானவை. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; பல சாலைகள் சேதமடைந்தும் உள்ளன.

“ஒரு வயதான பெண்மணியை சந்தித்தேன். இங்கு வீட்டு வாடகை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். அவர் ஒரு கடை உதவியாளராக மட்டுமே வேலை செய்கிறார். வாடகை தொடர்ந்து உயர்ந்தால் அதைச் சமாளிக்க முடியாது என்றார். இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் முயற்சிப்போம்,” என்றார்.

ஸ்கூடாய் மக்களுக்கு உண்மையாக சேவை செய்த மக்களவை பிரதிநிதியான மரினாவை “இழந்தது” குறித்து தானும் மக்களுடன் சேர்ந்து வருத்தப்படுவதாக அமீர்  கூறினார்.

அவர் சந்தித்த பெரும்பாலான ஸ்கூடாய் மக்கள், மரினாவே தாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த மக்களவை பிரதிநிதி என்று தெரிவித்ததாக அவர் கூறினார்.

“PSM அவரை (மரினா) மதிக்கிறது. ஆனால் மக்களால் நேசிக்கப்பட்டு, சிறப்பாகப் பணியாற்றிய ஒரு பிரதிநிதி DAP கட்சியின் உட்கட்சிச் சூழ்ச்சிக்கு 'பலியானார்' என்பது வருத்தமளிக்கிறது.

“ஆனால் ஒரு வேட்பாளராக, மரினா இங்கு விட்டுச் சென்ற சேவை மனப்பான்மையை நான் உணர்கிறேன். அதனால் நானும் மிகச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பை வழங்கி, நாங்களும் மரினாவைப் போல சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நன்றி — MalaysiaGazette

No comments:

Post a Comment

இனவெறி எதிர்ப்புக்கு வேட்பாளரின் உறுதி மொழி

நான், அமீர் ஷாஃபிக், ஜொகூர் மாநிலத் தேர்தலில் N.48 ஸ்கூடாய் தொகுதிக்கான மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர். இன அடிப்படையிலான பாகுபாடு...