ஊடக அறிக்கை
PSM நெகிரி செம்பிலான் கிளை:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், Bandar Enstek -க்கில் புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பது தொடர்பாக சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை Parti Sosialis Malaysia (PSM) நெகிரி செம்பிலான் மாநிலக் குழு மிகவும் கவனத்துடன் கண் காணிக்கிறது.
PSM இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு எதிரானதல்ல. மாறாக, மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நெகிரி செம்பிலானில் பொது சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இவ்வளவு முக்கியமான அறிவிப்பு, மக்கள் புதிய மாநில அரசைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் ஏன் வெளியிடப்படுகிறது என்பதே எங்களுக்கு எழும் கேள்வியாகும்.
தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆளும் கட்சிகள் அடிக்கடி கையாளும் வளர்ச்சி அரசியலின் மற்றுமொரு உதாரணமாக இந்த அறிவிப்பை மக்கள் கருதினால், அவர்களைக் குறை கூற முடியாது. தேர்தல் காலங்களில் பொதுநிதியை பயன்படுத்தி பெரிய திட்டங்களை அறிவிப்பது ஆட்சியில் இருப்போருக்கு அரசியல் ஆதாயத்தை வழங்குகிறது; மேலும் அது நியாயமான ஜனநாயகப் போட்டியின் நோக்கத்திற்கு முரணானதாகும்.
உண்மையில், இந்த மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தால் கட்டப்படுகிறது; எந்த அரசியல் கட்சியின் பணத்தாலும் அல்ல. எனவே, பொதுத் திட்ட அறிவிப்புகளை அரசியல் லாபம் பெறவோ அல்லது வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கவோ அரசு பயன்படுத்தக் கூடாது.
PSM-இன் கருத்துப்படி, பொது வளர்ச்சி திட்டங்கள் மக்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும்; தேர்தல் கால அட்டவணையின் அடிப்படையில் அல்ல. இந்தத் திட்டம் உண்மையிலேயே முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தால், அரசியல் சூழல் உச்சத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் ஏன் அது அறிவிக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் — ஒப்புதல் நிலை, கட்டுமானச் செலவு, நிதி ஆதாரம், செயலாக்க காலக்கட்டம் மற்றும் நிறைவு செய்யப்படும் இலக்கு தேதி உள்ளிட்ட விவரங்களை — அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். மக்கள் வெறும் வாக்குறுதிகள் அல்லது நடைமுறைக்கு வராமல் போகக்கூடிய அறிவிப்புகளால் ஏமாற்றப்படாமல் இருக்க வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமாகும்.
நெகிரி செம்பிலான் மக்கள், அரசியல் மதிப்பீடுகளைச் செய்வதில் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைந்து வருகின்றனர் என்பதை PSM நினைவூட்ட விரும்புகிறது. அவர்கள் விரும்புவது தேர்தலுக்கு முன் திடீரென வரும் அறிவிப்புகள் அல்ல; மாறாக நிலையான கொள்கைகள், வெளிப்படையான திட்டமிடல் மற்றும் மக்களின் நலனுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பாகும்.
பொது மருத்துவமனை என்பது மக்களின் உரிமையாகும். அது தேர்தலுக்கான பரிசோ தேர்தல் பிரச்சார கருவியோ அல்ல. மேலும், அது அரசியல் மூலதனமும் அல்ல.
நெகிரி செம்பிலான் மக்களின் நலனுக்காக, வலுவான பொது சுகாதார அமைப்பு, சமமான சுகாதார அணுகல் மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்திற்காக PSM தொடர்ந்து போராடும்.
“பொது வசதிகள் மக்களுக்கானது; வாக்குகளைப் பெறுவதற்கானது அல்ல.”
வெளியிட்டவர்: தினகரன் சுப்பிரமணியம், மாநிலச் செயலாளர், PSM நெகிரி செம்பிலான்
No comments:
Post a Comment